படித்தோம் சொல்கின்றோம்: “தங்கத்தாரகை” – தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 200 ஆண்டு கால வரலாறு! வடக்கின் கல்விப்பாரம்பரியத்தை ஆவணப்படுத்தியிருக்கும் முன்னாள் அதிபர் கதிர். பாலசுந்தரம் படைப்பிலக்கியவாதியுமாவார்!

அதிபர் கதிர். பாலசுந்தரம் கல்லிலிருந்து கணினி வரைக்கும் பாய்ந்திருக்கும் மொழிகளில் தமிழ் தொன்மையானது. இந்தத்தொன்மையிலிருந்து உருவான பழந்தமிழ் இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், என்பவற்றின் ஊடாக தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சியில் தமிழர்களின் வேட்கையையும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆசியாக்கண்டத்திலேயே முதல் முதலில் தோன்றிய இருபாலாரும் கல்வி என்னும் செல்வத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் தமிழ் சமுதாயம் அறிவார்ந்த தளத்தில் நடப்பதற்கு வெளிச்சம் வழங்கிய கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்த இலங்கையின் வடபுலத்தின் தெல்லிப்பழையில் தோன்றிய யூனியன் கல்லூரியின் வரலாற்று ஆவணம் தங்கத்தாரகை எம்மவரின் வாழ்க்கைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகவே அமைந்துள்ளது. மைல் கல் எனக்குறிப்பிடுவதற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இதனையும் நாம் கடந்துசெல்லவேண்டும். மற்றும் சில மைல்கற்களை கடக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. “எல்லாம் கடந்துபோகும்” என்பது வாழ்வின் தத்துவம். கடந்த அரைநூற்றாண்டு காலமாக படைப்பிலக்கியம், ஊடகம், சமூகப்பணி முதலான மூன்று தளங்களில் இயங்கிவருவதனால் இந்த மூன்று தளத்திலும் நின்றுதான் இந்த ஆவணத்தை அவதானிக்கின்றேன். இரண்டு நூற்றாண்டுகளையும் கடந்து இயங்கிக்கொண்டிருக்கும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியை இதுவரையில் நான் பார்க்கவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் இதுவரையில் எனக்கு கிட்டவில்லை. அதே பிரதேசத்திலிருக்கும் மகாஜனாக்கல்லூரிக்கும் ஒரே ஒரு தடவைதான் சென்றுள்ளேன். அங்கு பணியாற்றிய எழுத்தாளர் கோகிலா மகேந்திரனின் முரண்பாடுகளின் அறுவடை நூலின் வெளியீட்டுவிழா 1984 இல் அங்கு அதிபர் த. சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தபோது உரையாற்றச்சென்றேன். இந்தக்கல்லூரிக்களுக்கும் எனக்கும் இருந்த மற்றும் ஒரு தொடர்பு நாம் அவுஸ்திரேலியாவிலிருந்து மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக இயக்கும் இலங்கை மாணவர் கல்விநிதியத்தின் ஊடாக இக்கல்லூரிகளில் பயின்ற சில மாணவர்களுக்கும் உதவியிருக்கின்றோம்.

இந்த இரண்டு கல்லூரிகளுடனும் எனக்குள்ள மற்றும் ஒரு முக்கியமான உறவு: இங்கு பயின்றவர்கள், இங்கு அதிபர்களாக, ஆசிரியர்களாக இருந்த பலர் எனது நீண்ட கால இலக்கிய நண்பர்கள். இன்றும் தொடர்பிலிருப்பவர்கள். இரண்டு கல்லூரிகளினதும் வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் சுவாரஸ்யமான நிழல் யுத்தங்களையும் கேள்வி ஞானத்தில் அறிந்துவைத்திருக்கின்றேன். இந்தப்பின்னணிகளுடன்தான் எனக்கு கிடைத்திருக்கும் தங்கத்தாரகை பற்றிய எனது ரஸனைக்குறிப்புகளை பதிவுசெய்கின்றேன். எமது தமிழ் மக்கள் சந்தித்த ஐந்து காலகட்டங்களையும் இந்த ஆவணம் பேசுகிறது. சுதந்திரத்திற்கு முன்னரும் அதற்கு பின்னர் வந்த காலமும், போர்க்காலமும், அதற்குப்பிற்பட்ட சமகாலமும், மக்கள் அந்நியம் புலம் பெயர்ந்த காலமும் அதன் பின்னர் தொடரும் காலமும் சித்திரிக்கப்படுகிறது. 425 பங்கங்களில் இக்காலங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வரலாற்று ரீதியில் அவற்றை ஆவணப்படுத்தியுமிருக்கிறது. இதனைத்தொகுத்திருக்கும் பாரிய பணியை மேற்கொண்டிருப்பவர் யூனியன் கல்லூரியின் முன்னாள் அதிபர், எழுத்தாளர், ஆய்வாளர், அரசியல் பிரக்ஞையுள்ளவர். 90 வயதிலும் அயராது இயங்கிக்கொண்டிருப்பவர். இதுவரையில் நான் நேரில் பார்த்திருக்காத பேசியுமிருக்காத மின்னஞ்சலில் மாத்திரம் தொடர்பில் இருக்கும் நண்பர், மதிப்பிற்குரிய கதிர். பாலசுந்தரம் அவர்கள். அவரது படைப்பிலக்கியங்களின் வரிசையில் எழுதியிருக்கும் நாவல்கள், தமிழ் அரசியல் தலைவர்களின் வரிசையில் எழுதியிருக்கும் நூல்களையும் ஏற்கனவே படித்திருக்கின்றேன். சிலவற்றைப்பற்றி எனது அவதானக்குறிப்புகளும் எழுதியிருக்கின்றேன்.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு அமெரிக்க வெள்ளை இன  அதிபர்களுக்குப்பின்னர்  அதிபராக பதவியேற்றவர்    ஐ.பி.துரைரத்தினம் எனவும், அதன்பின்னர்  நான்காவது அதிபராக வந்தவர் திரு.  கதிர்.பாலசுந்தரம் எனவும் அறிந்துள்ளேன்.  இவர் யாழ் குடாநாட்டிலிருந்து முன்னர் வெளியான ‘Saturday Review’  ஆங்கிலவார இதழின்  ஆசிரிய தலையங்கத்தில் யாழ் குடாநாட்டின் அதிசிறந்த கல்லூரி அதிபர் என வர்ணிக்கப்பட்டவர்.  கல்விப்பணியுடன் கலை, இலக்கியப்பணியும் இவரது ஏனைய பக்கங்கள்.  கதிர். பாலசுந்தரம் அவர்களின் எழுத்துக்கள் எப்போதும் – அது நாவலாக இருந்தாலென்ன, வாழ்க்கைச்சரிதமாயிருந்தால் என்ன அனைத்திலும் தேடலும் தெளிவும், சுவாரஸ்யங்களும், அங்கதமும் வெளிப்பட்டிருக்கும். தங்கத்தாரகையில் இடம்பெற்றிருக்கும் ஏனையவர்களின் ஆக்கங்களை தவிர்த்துவிட்டுப்பார்த்தால், கதிர். பாலசுந்தரம் அவர்களின் தேடலின் ஆழம், அதில் இழையோடும் தேசத்தின் வரலாறு, அதற்குள்ளும் இழையோடும் பல கதைகள், அவற்றிலும் இழையோடும் செய்திகள், சுவாரஸ்யங்கள், அவற்றுக்குள் இழையோடும் அங்கதம் என அனைத்துமே இந்த ஆவணத்திற்கு மெருகூட்டுகின்றன.

இலங்கையில் முதலில் தோன்றிய உதயதாரகை என்ற தமிழ்ப்பத்திரிகையின் அறிமுகத்திற்கும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகம் அமைந்த இடம்தான் காரணம். ஈழத்தில் அச்சு எழுத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ப்பத்திரிகை ‘உதயதாரகை’. 1841 இல் இருந்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்திலிருந்து தொடர்ந்து வெளிவந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் (Morning Star)  வெளிவந்த இருமொழிப்பத்திரிகை. இந்தத்தகவல்களும் தங்கத்தாரகையில் இடம்பெற்றுள்ளன. 

யூனியன் கல்லூரி வளாகம் அக்காலப்பகுதியில் ஒன்று இரண்டு அல்ல பல முட்கிரீடங்களை சுமந்துகொண்டே ஊருக்கும், மக்களுக்கும், மாணவர் சமுதாயத்திற்கும் பணியாற்றியுள்ளது என்ற வரலாற்று உண்மையையும் தங்கத்தாரகை சொல்கிறது.

இந்த ஆவணத்தில் முதலாவது அங்கமாக ” கட்டியக்காரன் பேசுகிறேன்” என்ற தலைப்பில் பதிவாகியிருக்கும் கட்டுரை எனக்கு மிகவும் நெருக்கமாகவே இருக்கிறது. அதனால் இந்த ஆவணத்துடன் எளிதாக நுழைந்துகொள்ள முடிந்தது. அவ்வாறு ஒரு பெரிய ஆவணம் வாசகரை கவர்வதாயின் அதன் தொடக்கம் மிக முக்கியமானது.  கூத்து என்ற கலை வடிவத்தில் முதலில் தோன்றுபவர்தான் கட்டியக்காரன். இந்த நூலின் கட்டியக்காரன் இலங்கைக்கு 60 சதவீதமான அந்நியசெலாவணியை ஈட்டுத்தந்த பசுமை படர்ந்த மலையகத்தின் தேயிலைத்தோட்டங்களிலிருந்து கரிக்கோச்சியில் தெல்லிப்பழை நோக்கி புறப்படுகிறார். அந்த முதல் அங்கத்திற்கு அணிசேர்க்கும் வகையில் கல்லூரிக்கீதம். யார் இயற்றியிருக்கிறார்கள் எனப்பார்த்தால், அவரும் ஒரு இலக்கியவாதி! யூனியன் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் கவிஞர் அம்பிகை பாகர். 

தீர்க்கதரிசி என்ற தலைப்பில், 16 ஆம் பக்கத்திலிருக்கும் சிறிய குறிப்பு இங்கு மிக முக்கியமானது.

” கொழும்பிலிருந்து யாழ். குடாநாடு வந்த டானியல் பூ அர், யாழ் நகரில் சில நாட்கள் தங்கிநின்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே வந்து வாடிபோட்டிருந்த கிறீத்துவ சமயம் பரப்பும் மெதடிஸ்த மிசனைச்சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் சமயம் பரப்பும் எத்தனத்தில் தோல்வியைத்தழுவிய வெப்பிராயத்தில் வாழ்வதை அவதானித்தார். அந்த, மெதடிஸ்த சபையார்களின் கசப்பான அனுபவமே, டானியல் பூ அர் பாடசாலைகள் அமைத்து ஆங்கிலக்கல்வி வழியாக யாழ்.குடிமக்களை சமயம் மாற்ற, புதிய மாற்றுவழியை மேற்கொள்ளக்காரணம். அவர் மக்கள் ஆங்கிலம் கற்று, சிறியளவில் பொருளியல் லாபம் பெறுவர். அதனால் தூண்டப்பட்டுத் தமது சமயத்தில் சேருவர் என்று எதிர்பார்த்தார். அவரது சிறியளவு எதிர்பார்ப்புகள், யாழ். மண்ணில் பூதாகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.”

அந்த விளைவுகள் எவ்வாறு படிப்படியாக சமூகமாற்றங்களை உருவாக்கின என்பதையும் தங்கத்தாரகை சொல்கிறது.

இதில் வரும் வாடிபோட்டிருந்த என்ற சொற்பிரயோகத்தை முகாமிட்டிருந்த எனவும் சொல்லமுடியும். ஆனால், கதிர் பாலசுந்தரம் அவர்கள் இயல்பிலேயே ஒரு கதை சொல்லி என்பதால், யாழ்ப்பாணப்பேச்சு வழக்கில் பல சொற்களையும் இந்த ஆவணத்தில் ஆங்காங்கே தூவியிருக்கிறார். பூதாகரம் – வெப்பிராயம் – சகபாடிகள் – அக்கப்பாடு பட்டனர் – சுக்கானைப்பிடித்தல் – உது புளிக்கும் . இவ்வாறு பல சொற்பிரயோகங்கள். படைப்பிலக்கியத்தில் பிரதேச மொழிவழக்கும் இடம்பெறும். அந்த மொழிவழக்குகள் யதார்த்த இலக்கியப்படைப்புகளில் மேலோங்கியிருக்கும். ஒரு பிரதேச மொழிவழக்கு மற்றுமோர் பிரதேசத்திற்கு அந்நியமானது. உதாரணமாக படலை என்ற சொல். இதனை தமிழக வாசகர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். எங்கள் ஊரிலும் இந்தச்சொல் வழக்கில் இல்லை. ஆனால், வாடிபோட்டிருந்த சொல் எமது ஊரில் புழக்கத்திலிருக்கிறது. எங்கள் ஊர் மீனவர்கள் கடற்கரையோரங்களில் குடிசைகள் அமைத்து தமது கடற்றொழிலை விருத்தி செய்வர். வெளியூர் சென்றும் கடற்கரையோரங்களில் அவ்வாறு வாடிபோடுவர். தற்போது இலங்கையில் வடமராட்சி கடலோரத்தில் தென்னிலங்கை மீனவர்கள் அவ்வாறு அத்துமீறி வாடிபோட்டு தொழில் செய்வது இன்று அரசியலாகியிருக்கிறது.

200 வருடங்களின் முன்னர், அமெரிக்க பாதிரிமார் வந்து வாடிபோட்டனர். ஆனால், அது அன்று அத்துமீறலாகப் பார்க்கப்படவில்லை. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம்! அதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களையும் மறுமலர்ச்சிகளையும் ஆண்டு வாரியாக ஆதாரங்களுடன் இந்த நூல் பேசுகிறது.  அந்த மறுமலர்ச்சி காலத்தில் நுட்பமான காரியங்களும் நடந்தேறியிருக்கின்றன. டானியல் பூ ஆர் என்ற அந்த அமெரிக்க பாதிரியார் பாடசாலையை ஆரம்பித்தபோது முதலில் சேர்ந்தவர்கள் ஆறு பிள்ளைகள்தான் அதில் ஐந்துபேர் பெண்கள்! அதில் ஒரு பெண் மிராண்டா செல்லத்துரை. அவரை நூலாசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “வளம் வாய்க்கப்பெறாத மாணவி ” அக்காலத்திலிருந்த சமூக அமைப்பின் ஏற்றதாழ்வு இந்த வரிகளில் துலக்கமாகிறது.

அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்திருக்கும் பாதிரிமாருக்கு இருந்த நோக்கம் நாங்கள் அனைவரும் அறிந்ததே! அந்த நோக்கத்திலிருந்து வடக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மறுமலர்ச்சிகள் பற்றி பேசுகிறது இந்த ஆவணம். பாடசாலை தொடங்கிய காலத்தில் அங்கு புழக்கத்திலிருந்த நாணயம் அரைச்சல்லியும், துட்டும்தான். ஒரு காலத்தில் எமது முன்னோர்கள் சொல்லும் வசனம் அறிவீர்கள்: துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு! இன்று நாம் வெளிநாட்டில் நாணயத்தை டொலர் என்கின்றோம்.

ஆறு மாணவர்களுடன் தொடங்கிய பாடசாலை ஐந்து ஆண்டுகளில் 1821 இல் 14பேருடன் வளர்ச்சி அடைகிறது. அரைச்சல்லியும் துட்டும் மறைந்து ரூபாய் தாள் அறிமுகமாகிறது. மணிஓடர் பொருளாதாரம் மக்களிடம் வருகிறது. இதற்கெல்லாம் வித்திட்டிருக்கிறார் பாதிரியார் டானியல் பூ அர். அவரது பயணங்கள் அவருடன் இணைந்துவந்தவர்கள் எதிர்நோக்கிய சிரமங்கள், சந்தித்த நோய் உபாதைகள் மரணங்கள், தியாகங்கள் அவற்றுக்குள்ளும் இழையோடிய சுவாரஸ்யமான கதைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன.

டானியல் பூ அர் முதலில் ஆங்கிலத்தில் கற்பித்துவிட்டு பின்னர் அவரும் தமிழ் கற்கிறார். மொழிபெயர்க்கிறார். இதற்கிடையில் பரிசுத்த வேதாகமம் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் சைவசமயத்திற்கு தொண்டாற்றிய ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலரும் வேதாகமத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ( அவரது காலம் 1822-1879)

படித்தோம் சொல்கின்றோம்: "தங்கத்தாரகை" - தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 200 ஆண்டு கால வரலாறு! வடக்கின் கல்விப்பாரம்பரியத்தை ஆவணப்படுத்தியிருக்கும் முன்னாள் அதிபர் கதிர். பாலசுந்தரம் படைப்பிலக்கியவாதியுமாவார்!

 

யூனியன் கல்லூரிக்கு பெஞ்சமின் சி.மாய்க்ஸ் என்பவரும் அதிபராக வருகிறார். அவர் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை: அவர் பயணிப்பது ஒரு மட்டக்குதிரையில் அது நோய்வந்து இறக்கிறது. அதன்பின்னர் மற்றும் ஒரு மட்டக்குதிரையை வாங்குகிறார். அதிலும் பயணிக்கிறார். அதுவும் நோயுற்று இறக்கிறது. அவ்வாறு குதிரைகளில் பயணம் செய்வதற்கு முன்னர் அவர் பல்லக்கில்தான் சென்று வந்திருக்கிறார். பல்லக்கு பற்றி உங்களுக்குத் தெரியும். அதனை சிவிகை எனவும் அழைப்பர். பல்லக்கு சுமப்பவர்களுக்கு கூலி கொடுத்திருக்கிறார். அவ்வாறு அவர்களுக்கு கூலி கொடுப்பதைவிட ஒரு மட்டக்குதிரை வாங்கி பயணிக்கலாம் என்ற முடிவுக்கு பெஞ்சமின் சி. மாய்க்ஸ் வருகிறார். ஏன் தெரியுமா..? குதிரைக்கு கூலி கொடுக்கத்தேவையில்லை. வேளாவேளைக்கு கொள்ளும் புல்லும் போட்டால் போதும். இதனை அவதானித்த பல்லக்குத் தூக்கிகள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா..? அந்த மட்டக்குதிரைகளுக்கு அவருக்குத்தெரியாமல் விஷம் வைத்திருக்கிறார்கள். ஏன் தனது குதிரைகள் அடுத்தடுத்து இறக்கின்றன? என்று ஒரு மிருக வைத்தியரிடம் சென்று விசாரிக்கிறார். இறந்த குதிரைகளை பரிசோதித்தித்தபோது உண்மை தெரியவருகிறது! அவற்றுக்கு நஞ்சுவைத்தவர்கள் அந்த பல்லக்குத்தூக்கிகள். எப்படி இருக்கிறது அந்தக்கதை! பல சமகாலச்செய்திகளுடன் அக்காலச்செய்திகளை ஒப்புநோக்குவதற்கும் யூனியன் கல்லூரியின் வரலாறு கதவுகளை திறக்கிறது.

அன்று வாழ்ந்த மக்களின் பொருளாதாரம் தோட்டத்தையும் வயல்வெளிகளையும் நம்பியிருந்தது, பின்னர் எவ்வாறு மாறியது என்பதையும் இந்த நூல் பல அரிய தகவல்களுடன் எடுத்துரைக்கிறது.  யூனியன் கல்லூரியில் ஆங்கிலத்தில் படித்த பலர் இங்கிலாந்து பரீட்சைகளுக்கும் தோற்றுகின்றனர். தென்னிலங்கைகக்கும் சிங்கப்பூர், மலேசியாவுக்கும் செல்கின்றனர். இன்றும் சிங்கப்பூர் – மலேசிய பென்ஷனியர்கள் என்ற ஒரு சமூகம் எமது மத்தியில் வாழ்வதை அறிவோம்.
இவ்வாறு வடமாகாண தமிழ் சமூகத்தில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார, சமய, கலாசார மாற்றங்களை இந்த நூல் சம்பவங்கள் ஊடாக பதிந்துசெல்கிறது.

இதற்கிடையில் உதயதாரகையின் தோற்றம் பற்றியும் இந்நூல் சொல்கிறது.  விடியல் – உதயம் முதலான சொற்பதங்கள் இயற்கையுடன் சம்பந்தப்பட்டிருந்தாலும் மனிதவாழ்வு மீதான நம்பிக்கையையும் சார்ந்திருக்கிறது. உதயதாரகைக்குப்பின்னர், ஈழகேசரி, ஈழநாடு, ஈழநாதம், ஈழமுரசு, முரசொலி என்பன வந்து மறைந்தன.  சமகாலத்தில் அங்கிருந்து வெளியாகும் உதயன் – வலம்புரி – யாழ். தினக்குரல் – காலைக்கதிர் – எதிரொலி ஆகியனவற்றுக்கும் அன்று பல தசாப்தங்களுக்கு முன்னர் அச்சு ஊடகமாக வெளியான உதயதாரகைக்கும் இடையே பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன! நாம் தற்போது மின்னூடகங்களின் காலத்தில் வாழ்கின்றோம். இணையத்தளங்கள், வலைப்பூக்கள் பெருகிவிட்டன. கையிலிருக்கும் கைத்தொலைபேசி ஊடாகவும் உடனுக்குடன் உலகச்செய்திகளை பார்க்கின்றோம்.

உள்நாட்டுப்போரின் தரிசனம்! இந்த அங்கம் நூலின் 19 ஆவது அத்தியாயத்தில் தொடங்குகிறது. இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை பாரிய நெருக்கடியாகும் காலம் யாழ்ப்பாணம் மேயர் அல்பிரட் துரையப்பாவின் கொலை, மற்றும் உரும்பராய் சிவகுமாரனின் தற்கொடை மரணத்துடன் தொடங்குகிறது என்பதுதான் வரலாற்று ஆசிரியர்களின் கூற்று!

தெல்லிப்பழையில் கட்டுவன் பிரதேசம் அறிவீர்கள். இங்கிருந்து உமா மகேஸ்வரனும் காங்கேசன்துறையிலிருந்து பத்மநாபாவும், வல்வெட்டித்துறையிலிருந்து வேலுப்பிள்ளை பிரபாகரனும் ஏனைய வடபுல பிரதேசங்களிலிருந்து பாலகுமாரனும் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனும் இரத்தினசபாபதியும் தோன்றினர்.  மேலும் சில தலைவர்கள், தளபதிகள் வந்தனர். இவர்களின் அழைப்பிலும் வற்புறுத்தலிலும் பல மாணவர்களும் இவர்களின் இயக்கங்களில் இணைந்த கதைகளையும் அறிவோம். இறுதியில் இந்தத் தலைவர்களுக்கும் தளபதிகளுக்கும் நேர்ந்த கதை அறிவோம். அவர்களும் இன்றில்லை. அவர்களை நம்பிச்சென்ற மாணவர்கள் பலரும் இன்றில்லை. கல்லூரிகள் இன்றும் இயங்குகின்றன. யூனியன் கல்லூரியில் வகுப்புகள் நடக்கும் வேளைகளில் வரும் இயக்கத்தினர் பற்றியும் இந்த நூல் பேசுகிறது! ஆசிரியர்கள் பாடசாலைப்பாடம் நடத்தும் நேரத்தில் இயக்கத்தினர் வந்து தங்கள் பாடம் எடுத்த கதையும் வருகிறது.  கண்ணி வெடிகளில் கவச வாகனங்கள் சிக்கினால் என்ன நடக்கும்? ஆயுதப்படையினர் மட்டுமா கொல்லப்படுவர். உடனே அங்கு வரும் படையினர் கண்மூடித்தனமாக சுடுவார்கள். அப்பாவி மக்களும் கொல்லப்படுவர். தேடுதல் வேட்டை தொடங்கும். மாணவர்கள் கைதாவர். தடுத்துவைக்கப்படுவர். காணாமல் போவர்! அக்காலகட்டத்தில் இருதலைக்கொள்ளி எறும்புகளாக – பாக்குவெட்டிக்குள் அகப்பட்ட பாக்குகளாக அதிபர்கள் – ஆசிரியர் பட்ட அவஸ்தைகளையும் இந்த நூலில் ஒரு செய்தியாளனாக கதிர். பாலசுந்தரம் பதிவுசெய்துள்ளார்.

191 முதல் 196 ஆம் பக்கம் வரையில் யூனியன் கல்லூரி வளாகத்திலும் அதனைச்சூழவுள்ள பிரதேசங்களிலும் நிகழ்ந்த சித்துவிளையாட்டுக்கள் பற்றிய அதிர்ச்சியான தகவல்களை பதிவுசெய்துள்ளார். யூனியன் கல்லூரியில் ஒரு ஆசிரியர். பெயர் பாலசுப்பிரமணியம். அவரது முழங்கைகள் இரண்டும் காய்ச்சியிருந்தன. எமது முஸ்லிம் சகோதரர்களின் நெற்றியில் நீங்கள் அவதானிக்கும் தழும்பின் பின்னால் அவர்களின் ஐந்து வேளை தொழுகையின் கதை இருப்பதுபோன்று பெரும்பாலான ஆசிரியர்களின் முழங்கைகளில் தோன்றியிருக்கும் தழும்புக்கும் ஒரு கதை இருக்கிறது. அந்தக்கதை அந்த ஆசிரியர்கள் அமர்ந்து பாடம் நடத்தும் மேசைகளிலிருந்து தொடங்குகிறது. மேசையில் முழங்கைகளை ஊன்றி பாடம் நடத்துவதனால் வரும் தழும்புதான் அது. ஒருநாள் விமானப்படையினர் யூனியன் கல்லூரியிலும் தேடுதல் நடத்துகிறார்கள். பாலசுப்பிரமணியம் ஆசிரியரின் முழங்கைகளை தடவிப்பார்க்கிறார்கள். அன்பினால் அல்ல! அவரும் இயக்கத்தில் சேர்ந்து, பயிற்சிக்குப்போயிருக்கிறார் என்ற சந்தேகம் வருகிறது. முகாமுக்கு அழைத்துச்செல்லப்படுகிறார். தீவிர விசாரணை நடக்கிறது. கல்லூரியின் ஆசிரியர் வரவு இடப்பு பதிவேடு ஆராயப்படுகிறது. அதில் அந்த ஆசிரியர் கல்லூரிக்கு தினமும் காலையில் வந்து – மாலையில் வீடு திரும்பிய நேரம் தெரிகிறது. பின்னர் அவர் விடுவிக்கப்படுகிறார்.

எஸ்.பி. முத்துராமன் என்ற திரைப்பட இயக்குநரின் படம்தான் ‘மயங்குகிறாள் ஒரு மாது’. அதில் கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடல் இயற்றியிருப்பார். ” ஒரு புறம் வேடன் – ஒருபுறம் நாகம் – இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்! அன்றைய இனவிடுதலைப்போராட்டத்தின் கோலங்களை சித்திரிக்கும் உள்நாட்டுப்போரின் தரிசனம் என்ற அத்தியாயம் இவ்வாறு முடிகிறது: ” போராளி ஒருவன் வந்து, துப்பாக்கியை ஆட்டியபடி, ” வா விசாரணை இருக்கு” என்றால், அதற்கு மறுபேச்சு இல்லை. ஆசிரியர் என்றால் என்ன அதிபரென்றால் என்ன? ஆண்டி என்றால் என்ன? எதிர்பேச்சு பேசாமல் போகவேண்டிய சூழ்நிலை.” இறுதியில் இரண்டு சொற்களில் நச்சென்று முடிக்கிறார் கதிர். பாலசுந்தரம். அச்சொற்கள்: ” மௌனம் கை தந்தது”.  ஆம், உண்பதற்கும் கொட்டாவி விடுவதற்கும் மாத்திரம் வாய்திறந்த காலம் அல்லவா அந்தப்போர்க்காலம். எமது ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றின் பக்கங்களில் அழிக்கமுடியாத செய்திகளை தங்கத்தாரகை பதிவுசெய்துள்ளது.

அன்று இருநூறு வருடங்களின் முன்னர் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த நிலையை சொல்லும் இந்த ஆவணம், அதன் பின்னர் நேர்ந்த மாற்றங்களையும் போருக்குப்பின்னர் உருவான மாற்றங்களையும் சொல்கிறது. இன்று நாம், ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த பின்னர், அவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் இவர்களால் ஈழத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல், கல்வி, பொருளாதாரம், சமூக மாற்றங்களையும் அவதானிக்கின்றோம். சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தைபேச வைப்பதுமே ஊடகவியலாளர்கள் படைப்பாளிகள், கல்விமான்களின் பிரதான பணி. அதனையே தங்கத்தாரகை ஊடாக கதிர். பாலசுந்தரம் அழகாகவும் நேர்த்தியாகவும் கனதியாகவும் செய்துள்ளார். அவருக்கும் இதனை வெளியிட்டிருக்கும் யூனியன் கல்லூரி பழையமாணவர் சங்கத்தினரும் பாராட்டப்படவேண்டியவர்கள்.

letchumananm@gmail.com