– இன்று , மே 15, 2016, பருத்தித்துறை ஞானாலயத்தில் வ.ந.கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவலின் அறிமுக நிகழ்வும், கலந்துரையாடலும் நடைபெற்றது. அதனை மருத்துவர் திரு. எம்.கே.முருகானந்தன் தனது வலைப்பதிவில் பதிவு செய்திருந்தார் ( http://suvaithacinema.blogspot.ca/?view=classic ). அதனைப் ‘பதிவுகள்’ வாசகர்களுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். – பதிவுகள் –
பதிவுகள் இணைய இதழ் ஆசிரியர் வ.ந.கிரிதரன் அவர்களது புதிய நூலான குடிவரவாளன் நாவலுக்கான அறிமுக நிகழ்வு இன்று ஞாயிறு மாலை (15.05.2016) பருத்தித்துறை ஞானாலயத்தில் நடைபெற்றது. நீண்ட கடும் வெக்கையின் பின்னரான மழை காரணமாக 3.30 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய கூட்டம் சற்று தாமதமாகவே ஆரம்பித்தது.
குப்பிளான் சண்முகம் அவர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மௌன அஞ்சலியின் பின் கூட்டம் ஆரம்பமானபோது திரு.சு.குணேஸ்வரன் நூல் அறிமுகவுரையை நிகழ்த்தினார். கிரிதரன் அவர்களின் படைப்புலகம் பற்றியதாகவும், அவரது இணைய இதழான பதிவுகள் பற்றியும் குணேஸ்வரன் விபரமாகக் கூறினார். கிரிதரனின் ஐந்து குறுநால்கள் பற்றிக் குறிப்பட்டு அவை ஒவ்வொன்றும் மிகவும் வித்தியாசமான படைப்புகள் என்று கூறினார். அதில் ஒன்று வவுனியா அருகான கிராமம் ஒன்றில் வாழும் ஒரு சிங்கள குடும்பத்துடனான தமிழ் குடும்பத்தின் நட்பு பற்றியும், அந்தக் சிங்கள குடும்பம் போராட்ட அமைப்பொன்றினால் கொலை செய்யப்பட்ட கொடுரம் பற்றியும் பேசியதைக் குறிப்பிட்டு நூலாசிரியரின் பரந்த நோக்கை சிலாகித்தார். வன்னி மண்ணின் வளத்தை மிக விபரமாக சித்தரிப்பது மற்றொரு குறுநாவல் என்றும் குணேஸ்வரன் குறிப்பிட்டார். கிரிதரன் தான் முன்னர் எழுதிய அமெரிக்கா என்ற நூலின் தொடர்ச்சி போன்றதுதான் இந்த புதிய நாவல் என அதை அறிமுகப்படுத்தும் போது குறிப்பிட்டார்.
கிரிதரனின் பதிவுகள் இணையத் தளத்தின் விசாலித்த இலக்கியப் பரப்பு வெளி பற்றியும் 2000 ஆண்டு முதலான அதன் தொடர் வருகை பற்றியும் குறிப்பட்டபோது, இணையத்தில் எனது எழுத்துப் பயணம் பதிவுகள் தளத்திலேயே ஆரம்பித்ததை நினைத்ததும் அதற்கு கிரிதரன் வழங்கிய ஒத்துழைப்பையும் ஆதரவும் நினைத்து மகிழ்ந்தேன்.
குப்பிளான் சண்முகம் தனது தலைமையுரையில் தமிழ் நாவல் இலக்கியத்தின் வளர்ச்சி மற்றும் இன்றைய போக்குகள் பற்றி தொட்டுப் பேசினார். புலம் பெயர் அகதி வாழ்வின் இருண்டதும் சவால் மிக்கதுமான பக்கங்கள் பற்றிய கிரிதரனது நாவல் நுணுக்கமாகவும் விரிவாகவும் பேசுவதாக குறிப்பிட்டார்.
நூல் பற்றிய மதிப்புரையை திரு.வேல் நந்தகுமார் மிகவும் சிறப்பாக செய்திருந்தார். அவரது கணீரென்ற குரலும் தெளிவான உச்சரிப்பும் விரிவான மதிப்பீடும் குறிபிடத்தக்கதாக இருந்தது. கனடா செல்லும் கனவோடு புறப்பட்டவன் அமெரிக்காவில் இறக்கப்பட்டு படும் அவஸ்தைகளையும் அங்கு தொழில் பாரக்க முயன்ற போது சந்தித்த சவால்களையும், பாரபட்சங்களுக்கு ஆளாவதையும் அனுபவபூர்வமாக சித்திரித்து இருப்பதாகக் கூறினார்.
83 கலவரத்தின் போது கொழும்பு மாநகரில் அரங்கேறிய இனக்கொலை கொடுரங்கள் பற்றிய குறிப்புகள், அந்த நேரத்தில் பிறந்தே இருக்காத தனக்கு புதியவையாக இருந்தன என்றும் புலவற்றை அறிந்து கொள்ளக் கூடியதாகவும் இருந்ததாகவும் கூறினார். மிகவும் விரிவாக எழுதியிருப்பது சொந்த வரலாற்றை சொல்வது போல அமைந்தாலும் பழமொழிகள், கவிதைகள், எடுத்துக்காட்டல்கள் என வித்தியாசமான படைப்பாக இருந்தது என்றார்.
ஒரு ஊடகவியலாளன் அல்லது பத்திரிகையான் போல புலம்பெயர் அகதி வாழ்வு பற்றிய பல தகவல்களை மிகவும் விரிவாகவும் அனுபவ பூர்வமாகவும் கிரிதரன் தனது நாவலில் சொல்லியிருப்பதாக ஜி.ரி.கேதாரநான் தனது கருத்துரையின் போது குறிப்பட்டார். ஆயினும் நாவல் என்ற வகையில் பார்க்கும்போது அதன் மொழிநடையும் விஸ்தரிப்பு முறைமையும் செழுமைப்படுத்த வேண்டியிருப்பதாக குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்த கலந்துரையாடல் மிகவும் காத்திரமாக அமைந்திருந்தது. நூலை ஏற்கனவே படித்திருந்த சித்ராதரன், குப்பிளான் சண்முகம், குணேஸ்வரன், தமிழினி புகழ் ஜெயக்குமரன் ஆகியோர் காத்திரமான பல கருத்துக்களை முன் வைத்தனர்.
வேல் நந்தகுமார் 83 ஜீலை கலவரம் பற்றிய சித்தரிப்பு சிறப்பாக இருந்ததாக குறிப்பட்ட போதும், அது அவரது அனுபவத்தின் ஊடாக மட்டுமே பார்க்ப்பட்டதாகவே இருக்கிறது. இதைவிட வேறு பல படைப்புகள் 83 இனக் கலவரம் பற்றிய விரிவானதும் கலாபூர்வமானதுமான பல படைப்புகள் வந்திருப்பதை பலரும் சுட்டிக் காட்டினார்கள்
ஜெயக்குமரன் முக்கிய ஒரு கருத்தை முன் வைத்தார். அமெரிக்க புகலிடம் கோருபவர்களை இரண்டாம் தர நிலையில் அடக்கி வைக்க முனைகிறது என இளங்கோ கருதி கனடா புறப்படுகிறான். ஆனால் பல்வேறு நாடுகளை சேர்ந்து அகதிகளாக வந்தவர்கள் அமெரிக்காவில் கடுமையான உழைப்பின் பின்னர் உயர் நிலைகளை அடைந்திருக்கிறார்கள். உயர் பதவிகைள எட்டிப் பிடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இளங்கோ கனடா போக முடிவெடுக்கும்போது அவனது நண்பனான அருள்ராசா அமெரிக்கரிவிலேயே தங்கியிருக்க முடிவு செய்கிறான். எனவே அமெரிக்கா மாற்று கருத்துக்களையும் அந்நாட்டில் எதிர்காலம் பற்றிய மாற்று சாத்தியங்களும் இருப்பதைக் காட்டுவதற்கான குறியீடாக இருக்கலாமா என்ற கேள்வியை எழுப்பினார்.
அந்தக் கருத்தை வலியுறுத்துவதற்காகவே கிரிதரன் அருள்ராசா என்ற கற்பனைப் பாத்திரத்தை உருவாக்கியிருக்கறார் என்று எடுத்துக் கொண்டால் அது கிரிதரனின் படைப்பாற்றலின் உச்சம் எனக் கூறலாம். வாசகனுக்கு புதிய கற்பனை சாத்தியங்களை திறந்துவிடுகிறது என்றார் கேதாரநாதன்.
மழை காரணமாக கூட்டத்திற்கு வந்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் சிறப்பான பேச்சுக்களும் தொடர்ந்த கனதியான கலந்துரையாடலுமாக இந்த ஞாயிறு மாலை ஒரு பயனுள்ள பொழுதாகக் கழிந்தது.
நன்றி: http://suvaithacinema.blogspot.ca/?view=classic