‘சொப்கா’வின் (SOPCA) கனடா தினக் கொண்டாட்டம் – 2011

கனடாவின் 144வது பிறந்த தினக் கொண்டாட்டத்தை ‘பீல்’ பிரதேசத்தில் வசிக்கும் கனடிய குடிமக்கள் ‘மிசசாக்கா’வில் உள்ள ‘ஸ்குயர்வண்’ (Square One) பார்வையாளர் மண்டபத்தில் சென்ற வியாழக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். கனடிய தேசிய கீதம், தமிழ் வாழ்த்து ஆகியவற்றைத் தொடர்ந்து கனடிய தேசியக்கொடியை மூத்த உறுப்பினர்களில் ஒருவரான திரு. எம். சோமசுந்தரம் ஏற்றிவைத்தார். அடுத்து தாயகத்தில் மரணித்த உறவுகளுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி சபையினரால் செலுத்தப்பட்டது.

‘சொப்கா’வின் தலைவர் அந்தனி ஜேசுதாசன் ‘எங்களை வரவேற்று பயமற்று வாழ மறுவாழ்வு தந்த கனடா நாட்டின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை இன்று நாங்கள மெய்யன்புடனும், நன்றியுணர்வுடனும்  கொண்டாடுகின்றோம்’ என்று தனது உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து சொப்காவின் உப தலைவர் குரு அரவிந்தன் ‘பல்கலாச்சார, ஒற்றுமையான வாழ்க்கைக்கு கனடா மிகவும் சிறந்த உதாரணமாக மற்ற நாடுகளுக்கு விளங்குகின்றது. இந்த நாட்டை எனது புகுந்த வீடு என்று சொல்லிக் கொள்வதில் நான் மிகவும் பெருமைப் படுகின்றேன்’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
 
குரு அரவிந்தனின் உரையைத் தொடர்ந்து செல்வி தாரணி தயாபரன், செல்வி கிருத்திகா தயாபரன் ஆகியோரது வரவேற்பு நடனம் இடம் பெற்றது. வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து நகராட்சி மன்ற 10ம் வட்டார உறுப்பினர் சூ மக்பெடரின் உரை இடம் பெற்றது. அடுத்து கனடா தினத்தைப் பற்றிய உரையை பிரெஞ்சு மொழியில் செல்வி அனிதா ரங்கநாதன் நிகழ்த்தினார். அடுத்து சொப்பகா சிறுவர்கள் கலந்து கொண்ட கலாச்சார நடனம் இடம் பெற்றது.

அடுத்து சொப்பகா சிறுவர்கள் கலந்து கொண்ட கலாச்சார நடனம் இடம் பெற்றது.
 
ஸ்காபரோ ரூச்றிவர் பாராளுமன்ற கௌரவ உறுப்பினரும், கனடாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருமான ராதிகா சிற்சபேசன் அவர்கள் கனடா பிறந்த நாள் கேக் வெட்டி, பிறந்த நாள் பாடல் பாடி நிகழ்வைச் சிறப்பித்தார். அவரது சிறப்புரையைத் தொடர்ந்து, கலைமகள் குறுநாவல் போட்டியில் சர்வதேச விருது பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தனுக்கு ‘புனைகதை வித்தகன்’ என்ற பட்டம் சூட்டி, விருது வழங்கி அவரது சாதனையையிட்டு தான் மட்டுமல்ல தமிழ் இனமே பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டு அவரைப் பாராட்டினார்.
 
தொடர்ந்து அபிராம் சந்திரமோகன் பாடலிசைக்க பிரியங்கா சந்திரகுப்தன் நடனமாடினார். அடுத்து அழகன் சின்னத்தம்பி, சிர்வின் ராஜ்குமார், திர்ஷா ஜேசுதாசன் ஆகியோரின் பாடல்களும் சொப்பா இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றன. தொடர்ந்து இடம்பெற்ற சொப்கா இளைஞர்களின்நகைச்சுவை உiயாடல் சபையோரை வயிறு குலுங்க வைத்தது. அடுத்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வைத்திய கலாநிதி விக்டர் பிகராடோவின் சிறப்புரை இடம்பெற்றது. பிரதம விருந்தினர் உரையைத் தொடந்து திரு. ஞானபண்டிதர், திரு அழகன் சின்னத்தம்பி குழுவினர் பங்கு பற்றிய வில்லுப்பாட்டு இடம் பெற்றது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து கனடா தினப் போட்டியில் பங்குபற்றிப் பரிசு பெற்ற மாணவர்கள் பரிசு கொடுத்துக் கௌரவிக்கப்பட்டனர். இறுதியாக சொப்காவின் செயலாளர் செல்வி ராகுலா சிவயோகநாதனின் நன்றியுரை இடம் பெற்றது.
 
செல்வி.ஜெனிரா ரூபரஞ்சன், செல்வி.சிவானி சிவசெல்வச்சந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிகளை மிகவும் விறுவிறுப்பாகக் கொண்டு நடத்தினர். இரவு விருந்துடன் கனடா பிறந்த நாள் கொண்டாட்டம் இனிதே முடிவுற்றது.

maliniaravinthan@hotmail.com