விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் தீவின் வட – கிழக்கில் சிறீலங்கா இராணுவம் மிகப் பெரிய அளவில் தனது இருப்பை வசமாக வைத்துக் கொண்டுள்ளது. தமிழர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் 19 பிரிவுகளில் 16 பிரிவுகளை நிறுத்தி வைத்துள்ளது. இந்துவுக்குக் கிடைத்திருக்கும் தகவல் படி யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று பிரிவுகள் நீங்கலாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தலா மூன்று பிரிவுகளை நிறுத்தியுள்ளது. வவுனியாவில் அய்ந்து பிரிவுகளை நிறுத்தியுள்ளது. இவற்றைவிட மேலும் இரண்டு பிரிவுகள் கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. மூன்று பிரிவுகள் தென்னிலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் தகவல் சிறீலங்கா இராணுவத்தின் உள்ளக ஆவணத்தில் இருந்து பெறப்பட்டது. இந்த ஆவணம் பவர் பொயின்ட் காட்சியளிப்பு மூலம் படைப் பிரிவுகள் எங்கெல்லாம் நிறுத்தப்பட்டுள்ளன என்பதை படங்கள் வாயிலாகக் காட்டுகின்றது. இந்த பவர் பொயின்ட் காட்சியளிப்பு 2012 யூன் மாதத்துக்கு என்றாலும் அதன் பின்னர் எவ்விதமான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. கேணல் ஹரிகரன் ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. இவர் சிறீலங்காவில் இந்திய அமைதிப் படையில் (IPKF) இருந்தவர். இவரோடு இந்து ஏடு இராணுவம் பற்றிய கணிப்பீட்டைப் பகிர்ந்து கொண்டது. அவரது கூற்றின்படி வடக்கு கிழக்கில் இராணுவம் பரவி இருக்கும் பாங்கினைப் பார்த்தால் அது ‘தாக்குதலுக்கு அணியமாக’ இருக்கும் ஒரு இராணுவம் போல் தெரிகிறதேயொழிய அது மோதலுக்குப் பின்னர் இளைப்பாறும் இராணுவம் போல் தெரியவில்லை.
நிறக்குறியீட்டுப் படங்கள் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள ஒவ்வொரு படையணியும் (brigade) எவ்வாறு பரவிக் கிடக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த ஆவணம் படைவீரர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் குறிப்பிடவில்லை. சிறீலங்கா படைப்பிரிவின் பலத்தை வைத்தே படைவீரர்களின் எண்ணிக்கை பற்றிய மதிப்பீட்டைச் செய்ய முடியும்.
ஏனைய படைகளோடு ஒப்பிடும் போது சிறீலங்கா படைப்பிரிவு சிறியதாகும். ஆறாயிரம் தொடக்கம் ஏழாயிரத்துக்கு இடைப்பட்ட வீரர்களைக் கொண்டது. இதில் குறைந்த எண்ணிக்கையை எடுத்தால் வடக்கு கிழக்கில் 85,000 – 86,000 போர் வீரர்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை கிழக்கில் பிறிதாக ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறப்புப் படையணி (Task Force) மற்றும் கடற்படை, விமானப்படை ஆகியவற்றை உள்ளடக்காது.
தமிழர் வாழும் பகுதிகளில் படைத்துறை தொடர்ந்து இருப்பது போருக்குப் பின்னாலான இன மீளிணக்கப்பாட்டுக்குத் தடங்கலாக இருப்பதாகப் பார்க்கப் படுகிறது. படை முற்றிலும் சிங்களவர்களால் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் வடக்கில் வாழும் மக்கள் கிட்டத்தட்ட எல்லோரும் தமிழர்கள்.
சனாதிபதி மகிந்த இராசபக்சே 20 – 21 இல் இந்தியாவுக்கு வருகை தரும்போது இந்தச் சிக்கல்பற்றி இந்தியா கேட்கக் கூடும். சிறீலங்காவின் சனாதிபதி பிரதமர் மன்மோகன் சிங்கை வியாழக்கிழமை சந்திக்க இருக்கிறார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்கிறார். சிறீலங்கா தனது படையை தனது எல்லைகளுக்குள் ஈடுபடுத்தும் உரிமையை நியாயப்படுத்துகிறது. தனது படையை எங்கு நிறுத்தப்பட வேண்டும் என்பது அதன் தேசிய பாதுகாப்புப் பற்றிய கணிப்பீட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்கிறது. அண்மையில் இந்திய செய்தித்தாளுக்கு கொடுத்த செவ்வியில் இராசபக்சே நாடு மூன்று பத்தாண்டு கால ஆயுத மோதலுக்குப் பின்னர் தேறிவருகிற ஒரு நாடு என்ற முறையில் வடக்கில் இருந்து படையைத் திரும்பப் பெறுவதில் உறுதியான முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் அங்கு படையை வைத்திருப்பது அந்தப் பகுதியில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்குவதற்கு எதிரான மிகுதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும் என்கிறார்.
டிசெம்பர் 2009 இல் 27,000 ஆக இருந்த படையினரின் எண்ணிக்கை யூன் 2012 இல் 15,000 ஆகக் குறைந்துள்ளது. மேலும் அவர் கூறுகையில் சிறீலங்காவின் வடபகுதியின் ” அபிவிருத்திப் பணிக்கு” படையினர் அங்கு இருப்பது அவசியமாகும். ஆனால் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படும் இந்த “அபிவிருத்தி” இல் படையினர் வகிக்கும் பாத்திரம்தான் இடர்ப்பாடாகப் பார்க்கப்படுகிறது.
அகிலன் கதிர்காமர் சிறீலங்காவில் உள்ள ஒரு சனநாயக செயற்பாட்டாளர். அவர் “வடக்கு கிழக்கில் படையினரின் வகிபாகம் பற்றிய கவலை எமக்குண்டு. ஆனால் அது போருக்குப் பிந்திய காலத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவமயப்படுத்தலில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது.
சிறீலங்கா முழுவதுமாக இராணுவமயப்படுத்துவதை திரும்பப் பெறுவதற்கும் நாட்டின் ஆட்சியில் இராணுவத்தின் வகிபாகம் பற்றியும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கும் ஒரு விவாதம் தேவைப்படுகிறது” என்கிறார். வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தைத் திரும்பப் பெறுவது அய்க்கிய நாடுகள் மனித உரிமை அவையின் தீர்மானத்தை சிறீலங்கா நடைமுறைப்படுத்தப்படுவதற்கான அளவுகோலாகக் கணிக்கப்பட இருக்கிறது.
மனித உரிமை அவையில் 2012 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறீலங்கா நியமித்த கற்றறிந்த பாடங்கள் மன்றும் மீளிணக்க ஆணையம் பரிந்துரைத்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளது.
ஆணையத்தின் முன் சாட்சியம் அளித்தவர்கள் இராணுவம் வடக்கிலும் கிழக்கிலும் ஒரு சமாந்தரமான அதிகார மையம் என்றும் அது சிவில் நிருவாகத்தைவிட அதிகாரம்படைத்ததாக இருக்கிறது எனச் சொன்னார்கள். சாலை அமைத்தல் போன்ற மேம்பாட்டு நடவடிக்கைகளில் இராணுவத்தின் உதவி பயனுள்ளதாக இருந்தாலும் அதன் தொடர்ச்சியான இருத்தல் உள்ளுர் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமையை தோற்றுவித்துள்ளது.
பல ஆண்டுகளாக நீடித்த போரில் இராணுவம் தனியார் காணிகளை கையப்படுத்தி பின்னர் அவற்றை அதிவுயர் பாதுகாப்பு வலயங்கள் ஆக மாற்றியது. இது அந்தக் காணிகளின் சொந்தக்காரர்கள் மீள் குடியமர்வதை தடுத்துவிட்டது.
அய்க்கிய நாடுகள் மனித உரிமை அவை அதன் தீர்மானம் பற்றிய முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்கு நியமிக்கப்பட்ட மூன்று நாடுகளது குழுவுக்கு இந்தியா தலைமை வகிக்கிறது. எதிர்வரும் நொவெம்பர் முதல் வாரத்தில் ஜெனிவாவில் நடக்கவிருக்கும் மீளாய்வு அமர்வில் இந்த மூன்று நாடுகளது குழு சிறீலங்காவோடு தொடர்பு கொண்டு எழுதிய அறிக்கை விவாதிக்கப்பட இருக்கிறது.
அணிசேரா நாடுகள் மற்று றயோ உச்சி மாநாடு ((Rio Summit) கூடியபோது இராசபக்சே பிரதமர் மன்மோகன் சிங் அவர்களோடு அவ்வப்போது பக்கவாட்டில் பேசினாலும் கடந்த யூன் 2010 இல் சனாதிபதி கடைசியாக புது தில்லிக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர் இப்போதுதான் இந்த இரண்டு தலைவர்களும் முதன் முறையாக உருப்படியான பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.
இந்த இரண்டு ஆண்டுகளில் சூழிநிலை மாறியுள்ளது. ஒரு இந்திய அதிகாரி “இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு “கடுமை” ஆக உள்ளது அதனை “கையாள” வேண்டியுள்ளது என ஒரு இந்திய அதிகாரி சொன்னார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பல உறுத்தல்கள் நுழைந்துள்ளன. ஒன்று இந்தியாவைப் பொறுத்தளவில் தமிழர்களது சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பது பற்றி இராசபக்சே அரசு இழுத்தடிப்புச் செய்வது. மற்றது சிறீலங்கா – சீனாவுக்கு இடையில் காணப்படும் மிக நெருக்கமான உறவு பற்றிய உள்ளுணர்வு.
அய்க்கிய நாடுகள் மனித உரிமை அவைத் தீர்மானத்துக்கு இந்தியா கொடுத்த ஆதரவு சிறீலங்காவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இந்தத் தீர்மானம் 2009 மே இல் நடந்த இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றியும் அது தொடர்பான வேறு சிக்கல்கள் பற்றியும் இராசபக்சே அரசு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்ற குற்றச் சாட்டு. இதன் பிற்பாடு தமிழ்நாட்டில் உருவாகியுள்ள சிறிலங்காவுக்கு எதிராக தமிழ்நாட்டில் எழுந்துள்ள உணர்வு அலைகள். இது சிறீலங்கா யாத்திரீகர்களைத் தாக்கும் அளவுக்குப் போயுள்ளது.
இதனைத் தொடர்ந்து கொழும்பு தனது குடிமக்களுக்கு தமிழ்நாட்டுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று விடுத்த அறிவுறுத்தல் ஒரு “அதிகமான எதிர்வினை” என்று புது தில்லி பார்க்கிறது.
தில்லி வட்டாரங்கள் இந்தச் சிக்கல்கள் எல்லாம் மன்மோகன் சிங் – இராசபக்சே சந்திப்பின் போது பேசப்படலாம் எனச் சொல்லுகின்றன. தமிழினச் சிக்கல் தீர்க்கப்படுவதற்கு சிறீலங்காவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவம் விலகிக் கொள்ள வேண்டும். மற்றது வட மாகாண சபைக்கு கூடிய விரைவில் தேர்தல் நடத்தி அதன் நிருவாகத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் கையளித்தல். இந்த இரண்டையும் இந்தியா வலியுறுத்துகிறது.
புது தில்லியில் இடம்பெறும் சந்திப்புக்களுக்குப் பின்னர் இராசபக்சே மத்திய பிரதேச மாநிலத்தின் சாஞ்சி என்ற இடத்துக்குப் பறக்க இருக்கிறார். அங்கு பன்னாட்டுப் பவுத்த பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். வெள்ளிக்கிழமை அவர் சிறீலங்கா திரும்புவார்.
(The Hindu – September 19, 2012 – URL http://www.thehindu.com/news/article3915391.ece )
-தமிழாக்கம் நக்கீரன்-