எழுத்தாளர் கெளதம நீலாம்பரனுக்கு எமது அஞ்சலி!
‘சரித்திர நாவலாசிரியரும், மூத்த எழுத்தாளருமான திரு. கௌதம நீலாம்பரன் இன்று (14.09.2015) அதிகாலை 3.30 அளவில் சென்னையில் காலமானார்’ என்னும் பதிவினைத் தடாகம் அமைப்பாளர் எழுத்தாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள் தனது முகநூல் பதிவிலிட்டிருந்தார்.
அது எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் அவர்கள் பற்றிய சிந்தனையை ஏற்படுத்திவிட்டது. உண்மையில் எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் அவர்கள் சரித்திரக்கதைகள் எழுதுமோர் எழுத்தாளர் என்பதைப்பார்த்திருக்கின்றேன் ஆனால் அவரது படைப்புகள் தொடர்களாக வெளிவந்த காலத்தில் படித்ததில்லை. முக்கிய காரணம் நான் வெகுசன ஊடகங்களின் தீவிர வாசகனாக இருந்த காலகட்டத்தில் அவர் கோலோச்சிக்கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக என் வெகுசன ஊடக வாசிப்புக்காலகட்டமான என் மாணவப்பருவத்தில் எனக்குப் பிடித்த சரித்த நாவலாசிரியர்களாக கல்கி, சாண்டில்யன், ஜெகசிற்பியன், அகிலன், மற்றும் நா.பார்த்தசாரதி ஆகியோரே விளங்கினார்கள் என்பேன். அக்காலகட்டத்தின் பின்னர் அறிமுகமானவர்களில் ஒருவரே எழுத்தாளர் கெளதம நீலாம்பரன். ஆனாலும் அவரது நாவலொன்றினை வாசிக்க வேண்டுமென்று எனக்கு ஆர்வம் பிற்காலத்தில் ஏற்பட்டது. அதற்குக்காரணம் கூகுள் தேடுதலொன்றின்போது ஈழத்து மன்னன் சங்கிலியன் பற்றியொரு சரித்திர நாவலொன்றினை அவர் எழுதியிருந்த விபரம் கிடைத்ததுதான். அந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் அதனால்தான் ஏற்பட்டது. ஆனால் அந்த நாவல் இணையத்தில் கிடைக்குமா என்று தேடியபோது முதலில் எனக்கு அப்பெயரில் அவர் எழுதிய நாடகம்தான் கிடைத்தது.
உண்மையில் 1983 இனக்கலவரத்தைத்தொடர்ந்து தமிழகம் நோக்கி ஈழத்தமிழ் அகதிகள் படையெடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழகம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. அதன் விளைவாக எழுந்த உணர்வுதான் ‘ஈழமன்னன் சங்கிலி’ என்னும் நாடகத்தை எழுத அவரைத்தூண்டியதாக அவரே குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்த நாடகமே எழுத்தாளர் மணியனின் ‘இதயம் பேசுகிறது’ சஞ்சிகையில் தொடர் நாடகமாகப்பிரசுரமாயிற்று. அப்பொழுது எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் ‘இதயம் பேசுகிறது’ சஞ்சிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்துகொன்டிருந்தார்.
‘இதயம் பேசுகிறது’ சஞ்சிகையில் தொடர் நாடகமாக வெளிவருவதற்கு முன்னர் அதனை நாடகமாக மேடையேற்றவே கெளதம நீலாம்பரன் விரும்பிருந்தார். அதற்காகவே அவர் அந்நாடகத்தை எழுதியிருந்தார். அது எம்ஜிஆரின் கவனத்தைக்கவரும் அளவுக்கு அமைந்திருந்தது. பின்னர் அக்காலகட்டத்து அரசியல் சூழல் காரணமாக அம்முயற்சி தடைபட்டுபோனது. எம்ஜிஆரே முதலில் ‘இதயம் பேசுகிறது’ சஞ்சிகையில் வெளியிடுங்கள். பின்னர் இன்னொரு சமயம் மனோகரின் நாடகக்குழுவின் மூலம் மேடையேற்றலாமெனப்பரிந்துரை செய்ததாக கெளதம நீலாமபரனே நாவலின் முன்னுரையில் கூறியிருக்கின்றார்.
அச்சமயம் தமிழகத்தில் தங்கியிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர் அமிர்தலிங்கம் அவர்களைத் தனது நாடகப்பிரதியுடன் சந்தித்தபோது அவர் ‘ஏன் நீங்கள் இதனையொரு பெரிய நாவலாக எழுதக்கூடாது’ என்று கேட்டிருக்கின்றார். அதன் விளைவாக அவர் சங்கிலி மன்னனை மையமாக வைத்துக் ‘கலைமகள்’ மாத சஞ்சிகைக்காக எழுதிய நாவல்தான் ‘ராஜ கங்கணம்’. அது நூலுருப்பெற்று ஶ்ரீராம் டிரஸ்டின் பாரதி விருது ரூ. பத்தாயிரம் பெற்றது. பின்னர் சாரதா பதிப்பக வெளியீடாக ‘ஈழவேந்தன் சங்கிலி’ என்னும் பெயருடன் வெளிவந்தது. இந்தப்பிரதியினையே அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.
இந்த நாவலின் முன்னுரையில் எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் கூறியவற்றிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
“ஈழம் கொந்தளித்துக்கொண்டிருந்த நேரம்; இனிய தமிழ்ச் சகோதரர்கள் அங்கே இரத்தம் சிந்தி, இதயம் நலிந்து கிடந்த வேளை – என் மனம் துடியாய் துடித்தது. இறகுகள் நமக்கில்லையே – மறுகணம் பறந்து அம்மண்ணில் இறங்க ஒரு வழியில்லையே. கடல் சூழ்ந்த இலங்கையைக்கனல் சூழவைத்த ஆஞ்சநேயனுக்கு இருந்த ஆற்றல் நமக்கில்லது போயிற்றே என்றெல்லாம் உள் மனம் உளைச்சலிட்டது……. உடனே நம் மண்ணின் வரலாற்றை மனதால் உழத்தொடங்கினேன். அப்போதுதான் என் முன்னே எழுந்து நின்றான் வருணகுலத்தான். என்னைப்பொறுத்தவரை இந்த நூலின் நாயகன் அவன் தான். ஈழமன்னர் சங்கிலிகுமாரருக்குப் பக்கபலமாக ஓர் இமையம் போல் எழுந்து நின்ற அவன் இனக்கலவரங்களை ஒடுக்கினான். போர்த்துக்கீசியர்களைப் பொலபொலத்துப் போகச்செய்தான்.’
இவ்விதம் எழுத்தாளர் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.
1983 கலவரத்தைத்தொடர்ந்து ஈழத்தமிழர்கள் தமிழகம் நோக்கிப் படையெடுத்தபோது அவர்களுக்குத் தம்மால், தமிழகத்தமிழர்களால் அங்கு சென்று உதவ முடியவில்லையே என்ற இயலாமையே அவரை சங்கிலி மன்னனைப்பற்றி எழுதத்தூண்டியது. இதனால்தான் நாவலை சங்கிலி மன்னனுக்கு தஞ்சை மாநிலத்தைச் சேர்ந்த வீரனான வருணகுலத்தான் என்பவன் தனது வீரர்களுடன் இலங்கை சென்று உதவுவதுபோல் அமைத்துக்கொண்டார். ஈழத்தமிழர்கள்பால் அவர் கொண்டிருந்த பற்றின் வெளிப்பாடே அவரது இந்தச்சரித்திர நாவல். இந்நாவலின் முக்கியத்துவம் இதில்தான் தங்கியுள்ளது.
என் பால்ய காலத்து வெகுசன வாசிப்புக்காலகட்டத்தில் விடுபட்டுப்போனாலும், ஈழத்தமிழர்களின் வரலாற்றை மையமாக வைத்து நாவலெழுதியதன் மூலம் தன் படைப்பினை வாசிக்க வைத்தவர் எழுத்தாளர் கெளதம நீலாம்பரன்.அந்த ஒரு காரணத்துக்காகவே ஈழத்துத் தமிழர்களின் வரலாற்றை மையமாக வைத்து வரலாற்று நாவல் எழுதிய தமிழகத்து எழுத்தாளர்களின் முன்னோடியாகவிளங்குபவர். ஈழத்துக்குச் சென்ற தமிழகத்து மன்னர்களைப்பற்றிய வரலாற்று நாவல்களுள்ளன. உதாரணத்துக்கு கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, அகிலனின் ‘வேங்கையின் மைந்தன்’ ஆகியவற்றைக்கூறலாம். ஆனால் ஈழத்தமிழ் அரசனொருவனை மையமாக வைத்துத்தமிழகத்தில் வெளியான முதல் நாவல் நானறிந்த வரையில் இதுவே முதலாவது. ஈழத்தில் செங்கை ஆழியான் ‘நந்திக்கடல்’ என்றொரு வரலாற்று நாவல் எழுதியிருக்கின்றார். மேலுமொரு நாவல் எழுதியிருக்கின்றாரென்று எண்ணுகின்றேன்.
எழுத்தாளர் கெளதம நீலாம்பரனுக்கு எமது அஞ்சலியைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.
Terry Fox: கனடாவின் நாயகர்களிலொருவன்!
Terry Fox ஐக் கனடாவின் நாயகர்களிலொருவராகக்கூறுவார்கள். புற்றுநோயினால் ஒரு காலை இழந்துவிட்ட நிலையிலும், செயற்கைக்காலுடன் புற்று நோய்த்தீர்வுக்கான ஆராய்ச்சிகளுக்காக நிதி திரட்டுவதற்காகக் கனடாவின் பல்வேறு நகரங்களினூடு ஓடத்தொடங்கினார். இறுதியில் அதுவே அவரது முடிவுக்குக்காரணமாக அமைந்து விட்டது. அவரது அசாத்தியமான துணிவும், விடாமுயற்சியும், இறுதிவரை தளராது தான் கொண்ட கொள்கையில் திடமாக நின்று மானுட குலத்துக்கு உறுதுணையாக உதவிய அவரது பரந்த அன்புணர்வும் என்னை வியப்படைய வைப்பவை.
டெரி ஃபாக்ஸின் மறைவிலிருந்து வருடா வருடம் டெரி ஃபாக்ஸ் ஓட்ட நிகழ்வின் மூலம் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நிதி சேகரிப்பது கனடியர்களின் வழக்கம். மேலதிக விபரங்களை http://www.terryfox.org/Run/ என்னும் இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம்.
தன் குறுகிய கால வாழ்வினை மானுட குலத்துக்குப் பயனுள்ள வகையில் மாற்றி மறைந்தவன் டெரி ஃபாக்ஸ். செயற்கைக்காலுடன் , புற்றுநோய் ஆராய்ச்சிக்காக அவன் ஓடும் தோற்றம் இருப்பினைப்பயனுள்ள வகையில் மாற்றிட அனைவரையும் தூண்டும் சக்தி மிக்கது. மானுட வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி ஊட்டிட வைப்பது.
ngiri2704@rogers.com