எரிப்பதால் வரலாற்றை திருத்தி எழுத முடியுமா?

– யாழ்ப்பாணப் பொது நூலகம் சிங்கள வன்முறையாளர்களால் தீவைத்து அழிக்கப்பட்ட நினைவுநாளை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது (01.06.2013) –

N.Selvarajahநூல்களை எரிப்பதும் நூலகங்களை எரிப்பதும் அறிவுஜீவிகளை அழிப்பதும் தமக்குப் பாதகமானதெனக் கருதும் மாற்றுக்கருத்தை இல்லாமல் செய்வதற்கான வழிமுறைகளாக உலகெங்கினும் உள்ள அரசியல் அதிகார வர்க்கங்களினால் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. மடாலயங்களில் சேகரித்து வைக்கப்பெற்ற நூல்களை எதிரிகள் அழித்தார்கள், அலெக்சாந்திரியா நூலகத்தை நிர்மூலமாக்கினார்கள் என்பதெல்லாம் வரலாறு. பப்பைரஸ் என்னும் பத்திரிகைத்தாளின் முன்னோடி அறியப்படாத அந்நாளில் இருந்த நூல் ஒரு பிரதியோ, சில பிரதிகளோ  ஏடுகளிலும், களிமண் தகடுகளிலும் எழுதப்பட்டுப் பேணப்பட்டு வந்திருந்தன. அவற்றை அழிப்பதன் மூலம் அதிகார வர்க்கம் அதிலிருந்த கருத்துக்களை குழி தோண்டிப் புதைப்பதில் ஓரளவு வெற்றி கண்டிருக்கலாம். அன்று மட்டுமல்ல இன்று அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிற்காலத்திலும் இந்த நடைமுறையைக் கைக்கொள்வதினால் இவர்கள் எதைச்சாதித்து விட்டார்கள்?

கி.மு. 213இல் புராதன சீனாவின் சக்கரவர்த்தி Shih Huang-ti. ஓருங்கிணைக்கப்பட்ட பெருஞ்சீனப் பேரரசின் முதலாவது மன்னராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர். இவர் தான் சீனப்பெருஞ்சுவரைக் கட்டுவிப்பதில் முன்னோடியாயிருந்தவர். தனது ஆட்சிக்காலத்தில் தான் சீன வரலாறு எழுதப்படவேண்டும் என்ற நோக்கில் விவசாயம், விஞ்ஞானம் மற்றும் எதிர்வு கூறும் சாத்திர  நூல்களைத் தவிர்ந்த அனைத்து நூல்களையும் சீனாவில் எரித்துவிடும்படி உத்தரவிட்டிருந்தார். மாய மந்திரக்கலைகளின் பாலிருந்த இவரது அதீத ஈடுபாட்டுக்கு கன்பூசிய  கொள்கையாளர்களினால் தெரிவிக்கப்பட்ட மாற்றுக் கருத்தும் இந்த முடிவுக்குக் காரணம் என வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். தடைசெய்யப்பட்ட நூல்கள் பற்றிக் கலந்துரையாடுவதே மரணதண்டனைக்குரிய குற்றமாகப் பிரகடனப்படுத்தியிருந்தார். இதன் மூலம்  எதிர்பார்த்த நீடித்த ஆட்சி அவருக்குக் கிடைக்கவுமில்லை. பெருஞ்சீன வரலாறு திருத்தி எழுதப்படவுமில்லை. சீன உளவியல் கருத்துக்கள் உலகப்புகழ்பெறத் தவறவுமில்லை.

மாறாக, கி.மு.206 இன் பின் அவரது ஆட்சியைக் கைப்பற்றிய ஆட்சியாளர்களால் சீன இலக்கியம் செழிக்கவைக்கப்பட்டது. ஆவணக்காப்பகங்கள் உருவாகின. பழைய வரலாறு பேண வழிகோலப்பட்டது. 

கிரேக்கத்தில் அலெக்சாந்திரியா நூலகம் கி.மு.283இல் பல்லாயிரம் ஆவணச் சேகரிப்புகளால் பெருமை பெற்றிருந்தது. ஏதென்சின் பலநூறு நாடகப்பிரதிகள் அங்கிருந்தன. அரிஸ்டாட்டிலின் சொந்தச் சேர்க்கைகள் கிரேக்க இலக்கியங்கள் அனைத்தும் அந்த நூலகத்தில் பேணப்பட்டு வந்தன. நவீன பொது நூலகச் சிந்தனை இங்கு தோற்றம் பெற்றிருந்தது. பல்வேறு படையெடுப்புக்களால் இவை சேதமாக்கப்பட்ட போதும் கிரேக்க இலக்கியமோ அரிஸ்டாட்டிலின் தத்துவங்களோ மறைந்துவிடவில்லை.

தமிழகத்தில் சோழர் கால சாசன ஆவணங்களிலே அடிக்கடி இடம்பெறுகின்ற சரசுவதி பண்டாரகங்கள் என்பது அக்காலத்தில் இருந்த நூலகங்களே என்பது வரலாற்றாய்வாளர் கூற்று. இவை பின்னாளில் சரஸ்வதி மகாலயம் என்றும் குறிக்கப்பட்டு வந்துள்ளது. படையெடுப்புக்களால் நூலகங்கள் அழிந்த போதிலும் இங்கு பேணப்பட்டு வந்த தமிழ் இலக்கியங்கள், இந்து சமயத் திருமுறைகள் எவையும் அழியாமல் இன்றும் நிலை பெறுகின்றன.

ஜேர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக் காலகட்டத்தில் மே 1933இல் இடம்பெற்ற நூல் எரிப்புக் கொண்டாட்டமும் எமக்கு வரலாற்றில் சீன மன்னன் Shih Huang-ti  யின் நடவடிக்கைகளை நினைவூட்டுகின்றன. அன்று ஹிட்லரின் நாசி ஆதரவாளர்களால் நூல்கள் பலாத்காரமாகப் பறிமுதல் செய்யப்பட்டும் சேகரித்தும் எரிப்பதற்காகப் பொது இடமொன்றில் மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த அறிவியல் மற்றும் வரலாற்று நூல்களின் முன்னால் நின்று அன்றைய நூல் எரிப்பு வைபவத்தை சம்பிரதாய பூர்வமாகத் தொடக்கி (எரித்து) வைத்துப் பேசும் போது ஜேர்மானிய கொள்கைத்திட்ட மந்திரி ஜோசப் கொயபெல்ஸ் (Joseph Goebbels) கூறிய வாசகங்கள் இவை.

‘அடுத்த ஆயிரம் வருடங்களுக்கு ஜேர்மானிய வாழ்க்கை முறையே உலகெங்கும் விதந்து பேசப்படப்போகின்றது. இன்று கொழுந்து விட்டெரியப் போகும் இத்தீயின் சுவாலைகள் ஒரு பழைய சகாப்தத்தின் முடிவைத் தெரிவிப்பதுடன் புதிய சகாப்தத்தின் மலர்வுக்கும் ஒளியூட்டப் போகின்றது. வரலாறு திருத்தி எழுதப்படுகின்றது.’

தமது அதிகார வலிமையால் ஜேர்மனியர்களின் பழைய வரலாற்றை இந்த நூல் எரிப்பால் ஜோசப் கொயபெல்ஸ்ஸாலும் அவரது அதிகாரவர்க்கத்தாலும் துடைத்தெறிய முடியவில்லை. மாறாக அந்த எரிப்பின் பின் எஞ்சிய சாம்பல் தான் அவர்களது முகங்களில் கரியாய் நிலைத்தது.

சமகால நிகழ்வுகளை நாம் பார்ப்போமானால், 1981இல் எமது தாயக மண்ணில் தமிழ் இன அழிப்பைத் திட்டமிட்டவர்கள், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தார்கள். ஈழநாடு பத்திரிகைக் கட்டிடத்தை எரித்தார்கள். அவர்கள் கண்டது என்ன? பல வருடங்களாகியும் அந்த ரணம் மாறாத நிலையில் உலகளாவிய ரீதியில் யாழ்ப்பாண நூலகம் பற்றிப் பேசப்படும் நிலை உருவாகியது. அந்த எரிப்பின் பின் விடுதலைப்போராட்டம் பற்றிய தீவிரம் அதில் அதுவரை அக்கறைப்படாதிருந்த பல புத்திஜீவிகளையும் அரசியலுக்கு அப்பாலும் கவர்ந்தது. மேலும் பல்லாயிரம் விடுதலைப் போராளிகளை போராட்டம் உள்வாங்கியது. இன அழிப்பு மற்றும் ஈழ விடுதலைப்போராட்டம் பற்றிய செய்தியை, யாழ். நூலக எரிப்பு உலகின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் சென்றது. அன்று அங்கிருந்த ஒரே ஒரு பத்திரிகை ஈழநாடு ஏரியுண்டதன் பின் என்ன நடந்தது என்று பாருங்கள். எத்தனை பத்திரிகைகள் அங்கு பின்னர் முளைவிட்டன. இங்கு புகலிடம் வரை அல்லவா அவை படர்ந்துள்ளன. இது தான் வரலாறு. இவை எல்லாம் 1981 மே 31ம் திகதி ஊரடங்கு நள்ளிரவில் இலங்கை அரசின் காவலர்கள் உரசிய ஒரு தீக்குச்சியின் பலாபலன்.

பொஸ்னியாவில் 1890இல் கட்டப்பெற்று 155 000 அரிய நூல்கள் உள்ளிட்ட ஒன்றரை மில்லியன் நூல்களைக் கொண்டிருந்த தேசிய, பல்கலைக்கழக நூலகங்களை சேர்பியர்கள் ஆகஸ்ட் 1992 இல் மூன்று நாட்களாக முயன்று எரித்தார்கள். விளைவு? உலக அரங்கில் பொஸ்னியாவின் விடுதலைக்கான ஆதரவுக்கரம் நீட்டப்பட்டது. பல்வேறு நிறுவனங்கள் உலகெங்கிலும் இருந்து பொஸ்னிய ஆவணங்களைச் சேகரிக்கும் இயக்கத்தை ஸ்தாபித்தார்கள். அத்துடன் இலங்கை போலவே பொஸ்னிய-சேர்பிய தகராறும் உலக அரங்கில் வெளிச்சத்துக்கு வந்தது.

2000 மார்ச்; 9ம் திகதி, கியுபாவின் நூலகங்களின் நண்பர்கள் என்ற அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஸ்பெயின் அரசு கலாச்சார உதவித்திட்டத்தின் கீழ்; கியுபா அரசுக்கென அன்பளிப்புச் செய்த நூற்றுக்கணக்கான நூல்கள் கொண்ட பொதிகள் எரிக்கப்பட்டு, புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டு விட்டதாகக் குற்றஞசாட்டியுள்ளது. கியுபாவின் மோசமான தணிக்கை விதிகளை அறிந்திராத வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் அனுப்பும் நல்லெண்ண உதவிகள் எதுவும் கியுபாவின் நூலகங்களை பெரும்பாலும் அடைவதே இல்லை என்பதை இந்த அமைப்புக்கள் அறிவதில்லை. இப்படி அழிக்கப்படும் நூல்களில் அரசியல் சித்தாந்தங்களையோ, சர்வதேச மனித உரிமைப் பிரகடனங்களையோ பிரதிபலிக்காத சாதாரண அறிவியல் நூல்களும் சிறுவர் நூல்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சல்மான் ரூஷ;டிக்கு மரண தண்டனை விதித்ததும் ஈரானிய கொமெய்னிகளின் திட்டம் பலித்ததோ என்னவோ ரூஷ;டியின் நாவல்கள் உலக அரங்கில் விறுவிறுப்பாக விலை போயின. அந்;த எழுத்தாளனை உலகின் மூலை முடுக்கெல்லாம் பிரபல்யப்படுத்தியது. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியின் கதையாக முடிந்த வரலாறு இது மட்டுமல்ல.

ஜே.கே.ரோலிங் இன் சிறுவர் நாவலான ஹரிபொட்டர் (Harry Potter and the Sorcerer’s Stone ) 1999-2000 இல் சினிமாவாக்கப்பட்டு வெளிவந்ததும், சில கிறிஸ்தவர்கள் பாதிரியார் Jack D Brock என்பவரின் தலைமையில் நியு மெக்சிக்கோவின் கிறிஸ்தவ சமூக தேவாலயமான அலாமொகோர்டோ தேவாலயத்தில் திரண்டெழுந்தனர். அந்த நூல் மாந்திரீக மாயாஜாலங்களுக்கு எதிரான கிறிஸ்தவ இறையியலின் நம்பிக்கையை கேலிக்குள்ளாக்குகின்றதென்பது அவர்களது குற்றச்சாட்டு. இதன் வெளிப்பாடாக அந்த நூலின் பிரதிகளை ஆலயத்தின் உறுப்பினர்கள் எரித்து அழித்தார்கள். விளைவு ஜே.கே.ரோலிங்கை கண்டு கொள்ளாதவர்களெல்லாம் அவரது நூல்களைப்பற்றிய தேடலில் தம்மை ஈடுபடுத்தினர். விளைவு? வறுமையில் உழன்ற அவரை இன்று உலகின் பெரும் பணக்காரர்களின் வரிசையில் வரலாறு இடம்பெற வைத்துள்ளது.

நூல்களையோ நூலகங்களையோ தற்காலிகமாக புவியியல் வரையறைக்கும் அதிகார வரம்புக்கும் உள்ளே வைத்து அழிக்கலாம். ஆனால் நவீன ஊடக வளர்ச்சி மிக்க இந்நாளில் தொடர்ந்தும் எவ்வளவு காலத்துக்குத் தான் இத்தகைய அநாகரீக முறைகளை அதிகாரவர்க்கம் பின்பற்றப் போகின்றது? தாங்கள் விரும்பாத பக்கங்களை கிழித்தெடுத்து அழிப்பதன் முலம் வரலாற்றை ஒரு சிலரின் பார்வையில் இருந்து சில காலங்களுக்கு அப்பறப்படுத்தலாம். அதுவே முழு உலகின் பார்வையையும் அந்தக் கிழிந்த பக்கங்களின்பால் பின்னர் தீவிரமாகச் செலுத்த உதவும் என்பதை அதிகார வர்க்கம் உணரவில்லையா என்ன?

N.Selvarajah
Bibliographer
Compiler, Noolthettam: Bibliography of Sri Lankan Tamils Worldwide
Postal Address: 48 Hallwicks Road, Luton, LU2 9BH, United Kingdom
Telephone: (0044) 7817402704
E-Mail: noolthettam.ns@gmail.com
website: Noolthettam.com

noolthettam.ns@gmail.com