அந்தனி ஜீவா வின் ‘’அ.ந.க ஒரு சாகாப்தம்’ –ஒரு மதிப்பீடு

அந்தனி ஜீவா வின் ‘’அ.ந.க ஒரு சாகாப்தம்’ –ஒரு மதிப்பீடுஎழுத்தாளர் மேமன்கவி[அறிஞர் அ.ந.க.வின் நினைவு தினம் பெப்ருவரி 14. அதனை முன்னிட்டு எழுத்தாளர் அந்தனி ஜீவாவுன் ‘அ.ந.க ஒரு சகாப்தம்’ நூல் பற்றிய எழுத்தாளர் மேமன்கவியின் இக்கட்டுரை பிரசுரமாகின்றது. இதனைப் பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பிய மேமன்கவிக்கு நன்றி. -பதிவுகள்.] அ.ந.க.என நெருக்கமானவர்களால் அழைக்கப்பட்டவர்.. அவரது மறைவு நிகழ்நது சுமார் 40 வருடங்கள் கடந்து அவரை பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகள் உதிரிகளாக ஆங்காங்கே  பிரசுமாகி இருப்பினும், அவர் பற்றிய ஓரு நூல் என்ற வகையில் அந்தனி ஜீவாவின் ‘அ.ந.க ஒரு சகாப்தம்’ முக்கியமான நூலென்றே சொல்லவேண்டும். இன்றைய நமது கலை இலக்கிய சூழலில் முக்கிய தேவை ஒன்று இருக்கிறது. புதிய தலைமுறையைச் சார்ந்த கலை இலக்கிய ஈடுபாட்டாளார்களுக்கு, அவர்கள் இன்று அனுபவித்து கொண்டிருக்கும் நவீன கலை இலக்கிய வளர்ச்சிக்கு அஸ்திவாரமிட்டுப் போன முன்னோடிகளைப் பற்றிய அறிதலை செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த வகையில் அ.ந.க பற்றிய அந்தனி ஜீவாவின் இந்த நூல் அந்த தேவையை நிறை வேற்றுவதில் பங்காற்றி இருக்கிறது. அந்தனியின் இந்த சிறிய நூல் அ.ந.க வை சிறப்பான முறையில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஆய்வு செய்யவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

ஆழமான ஆய்வுப் பார்வையுடன் அ.ந.க அவர்களை பற்றி ஒரு பார்வையை முன்வைக்கும் பொழுதுதான், நமக்கு பல விடயங்கள் புதிதாய்  புலப்படும் என்பதாக எனக்குப் படுகிறது. அந்தனி ஜீவாவின் இந்த நூலின் வழியாகவும் அவரை பற்றி மேலும் பல வழிகளிலும்  தெரிந்து கொண்டதன் மூலமும் எமக்கு தெரியவருவது என்னவென்றால், அன்றைய காலகட்டத்தில் அவர்  சார்ந்திருந்த கலை இலக்கியச் சூழல்களிலிருந்து அவர் வேறுபட்டு நின்றவர்  என்பது உறுதியாகிறது. இன்னும் ஆழமாகச் சொல்வது என்றால், அவரிடம் ஓரு கலகத்தன்மை இருந்துள்ளது. அவ்வாறான ஒருவராக அதாவது கலகத் தன்மை மிக்கவராக எமக்கு அவர் தெரிய வருகின்ற பொழுது, அவருக்கு முந்திய, அவரது சமகாலத்து, அவருக்கு பிந்திய காலகட்டத்தைச் சார்ந்த, இந்திய மற்றும் தமிழக சார்ந்தவர்களான பாரதி, சதத் மண்டோட்டோ, புதுமைப்பித்தன்,  தருமு சிவராமு, ஜெயகாந்தன், ஜி.நாகராஜன் போன்றோர் என் ஞாபகத்திற்கு வந்து போகிறார்கள். இப்படி நான் சொல்வது மூலம் அ.ந.கவை இவர்களுடன் ஒப்பிடுவதல்ல என் நோக்கம். இவர்களில் சிலர் அ.ந.க கொண்டிருந்த கருத்தியலை கொண்டவர்கள் அல்ல என்பதையும் நாம் அறிவோம். ஆனால், அ.ந.க உட்பட்ட இவர்கள்  எல்லோரிடமிருந்த ஓர் ஒற்றுமை எனறால் அது நான் மேற்குறிப்பிட்டும் கலகத்தன்மைதான். அத்தகைய கலகத்தன்மை அ.ந,க வின் கலை இலக்கிய முயற்சிகளின் வழி யாகவும் அவரது தனிப்பட்ட நடவடிக்கைகளிலும் வெளிப்பட்டிருப்பதை அவருடன் நெருக்கமாய் பழகிய அந்தனி ஜீவா போன்றவர்கள் இன்று அவரை பற்றி தந்திருக்கும் குறிப்புக்கள் அதனை உறுதி செய்கின்றன.

அந்த வகையில் அ.ந.க வின் கலை இலக்கிய படைப்புக்கள் பேசிய விடயங் களில் அந்த கலகத்தன்மை வெளிபட்டு நின்றது. அத்தோடு, அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் குறிப்பாகச் சிலப்பதிகாரத்தை பற்றி அவரது காரமான கட்டுரையைச் சொல்லாம்.. அத்தோடு, அவரது மொழிபெயர்ப்பு முயற்சிகள். அவற்றில் ஒன்றான அதற்காக தேர்ந்தகடுத்த எமிலி ஸோலாவின் ‘நாநா’ நாவல். 
இத்தகைய அ.ந.க வின் முயற்சி களை பற்றி அந்தனி ஜீவா தனது நூலில் வெறுமனே தகவல்காளாக சொல்ல வில்லை. முதலாவது, ‘’எமிலிஸோலாவின் ‘நாநா என்ற நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டு இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்..’’ அடுத்து அ.ந.க சிலப்பதிகாரத்தை பற்றிய அவரது ஆய்வு கட்டுரை பற்றி குறிப்பிடும் பொழுது ‘ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து ‘பண்டிர் திருமலைராயர்’ என்ற புனைபெயரில் பிரச்சினைக்குரிய பல கட்டுரைகளை எழுதினார்.. சிலப்பதிகாரத்தைப் பற்றி அ.ந.கந்த சாமி எழுதிய கட்டுரைகள் பெரும் சர்ச்சைக்குள்ளாயின. அத்தோடு, அ.ந.க ‘தேசபக்தன்’ பத்திரிகையில் ‘கசையடிக் கவிராயர்’ (இந்தப் புனைபெயரும் அந்த வகையில் கவனிக்க வேண்டிய ஒன்று) என்ற பெயரில் கவிதை எழுதியதை பற்றி குறிப்பிடும் பொழுது, ‘ஈழத்து இலக்கிய உலகில் நடைபெறும் திருகுதாளங்களையும், காசு கொடுத்து உண்மைப் படைப்பாளிகளின் படைப்புக்களை வாங்கித் தம் சொந்தப் பெயரில் புத்தகமாகப் போடும்  நபுஞ்சகத்தனத்தைக் கடுமையாகச் சாடினார்’ என்றுகிறார். அ.ந.க.வின் ‘மதமாற்றம்’ நாடகத்தைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, ‘’மத மாற்றம்’ முதல் முதலில் அரங்கேற்றப் பட்டதும், அதை பற்றிய காரசாரமான விவாதங்களும் விமர்சனங்களும் இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.’’ என்கிறார்;. (அடிக்கோடுகள் என்னால் இடப் பட்டது)

பெரும் பரபரப்பையும் பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தும் வகையில், படைப்பதும், படைக்கின்ற படைப்புகளில் கடுமையாகச் சாடுவதுமாக அ.ந.க வின் சித்தனை இயக்கம் இருந்துள்ளது. அதுவே எமக்கு அவரது குரல் ஒரு கலக்கக்குரல் என சொல்ல வைத்துள்ளது. அத்தோடு, அ.ந.க விளிம்புநிலை மக்கள் மீது கொண்டிருந்த கரிசனை, அக்கறை (அ.ந.க வின் இத்தகைய அக்கறை பற்றி எனது நண்பரும் அ.ந.க வுடன் பழகிய காலம் சென்ற ஷிப்லி  என்ற எனது நண்பர் அவர்கள் என்னிடம் பலதடவை சொல்லி இருக்கிறார்.. அத்தோடு, இந்த நூலில் விரிவாக சொல்லா விட்டாலும், இந்த நூலை வெளியிட்டின் பொழுது அந்தனி ஜீவா மேடையில் கூறிய தகவல்கள் மூலமும் நான் அறிந்து கொண்டே) மேற்குறித்த அம்சங்கள் எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கின்ற பொழுது தான், அன்றைய சூழலில் அவர் ஓரு பெரும் கலக்காராக இருந்துள்ளார்.; என புலப்படுகிறது. அந்த வகையில் பார்க்குமிடத்து, அந்தனி ஜீவாவின் இந்த நூலை தவிர்த்துப் பார்தாதால் அ.ந.க வை நாம் சரியாக இந்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தவில்லையோ எனும் ஐயம் எனக்குள் எழத் தான் செய்கிறது.

அ.ந.க வின் உருவாக்கம் வரை ஈழத்து கலை இலக்கியம் சிந்தனைப் பரப்பில் அத்தகைய குரல் ஒலித்திருக்கவில்லை.. அவரது அந்த கலகக்குரலின் நீட்சியினை அவருக்கு பின் வந்த ஈழத்து ஒரு சில படைப்பாளிகளிடம் காணப்பட்டதும், அத்தகையவர்களே ஈழத்து கலை இலக்கியத்தில் அவதானத்திற்குரியவர்களாக  இருந்துள்ளார்கள் என்பது அ.ந.க வின் ஒரு விளைச்சல் எனலாம். அதே வேளை அ.ந.க வுடன் நெருங்கி பழகியவர்களும் சரி, அவரை அவரது இறுதி காலத்தில்  அவரை போஷித்தவர்களிடமிருந்தும் சரி, அந்த கலகக்குரல் இடைக்கிடையே தலை காட்டி வந்துள்ளது. அத்தகைய ஒரு சிலரிடம் அத்தன்மையே  ஒரு குணமாக வளா;ந் திருந்தமை நான் கண்கூடாகக் காணக் கூடியதாக இருந்தது. (உம் சில்லையூர் செல்வராசன் லடீஸ் வீரமணி, அந்தனி ஜீவா, நான் மேலே குறிப்பிட்ட நண்பர் ஷிப்லி)

இப்படியாக அ.ந. கந்தசாமி அவர்களு ஒரு விரிவான தளத்தில் நின்று ஈழத்து கலை இலக்கிய உலகம் பார்க்க தவறி விட்டது என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம். ஆனால், அத்தகைய  விரிவான தளத்தில் நின்று அ.ந.க வை புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சிக்கு மிக பயன் படும் வகையில் அந்தனி ஜீவாவின் ‘அ.ந,க ஒரு சகாப்தம்’ எனும் இச்சிறு நூல் அமைந்துள்ளது எனலாம்.

[இக்கட்டுரை மல்லிகை ஏப்ரல் 2009இல் பிரசுரமான கட்டுரை.]

memonkavi@yahoo.com