அறிமுகம்: ஓவியர் நகுலேஸ்வரி

நகுலேஸ்வரி ஓவியம்

எழுபதுகளிலேயே கனடாவுக்குப்புலம்பெயர்ந்து , இங்குள்ள பிரபல நிறுவனமொன்றில் பணியாற்றி , அண்மையில் ஓய்வு பெற்றவரே நகுலேஸ்வரி அவர்கள். இவரை எனக்கு சிறு வயதிலிருந்தே நன்கு தெரியும். எமது மாணவப்பருவத்திலேயே இவர் அக்காலகட்டத்தில் வெளியான வெகுசன இதழ்களில் வெளியாகிக்கொண்டிருந்த ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களைப் பார்த்து அழகாக ஓவியங்களை வரைந்துகொண்டிருப்பதை வியப்புடன் பார்த்திருக்கின்றோம், கனடாவின் பொருளியல் வாழ்க்கைக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட இவர் பெரிதாகத் தனது ஓவியத் திறமையில் நாட்டம் செலுத்தவில்லை. ஆனால் ஓய்வு பெற்ற பின்னர், குழந்தைகளெல்லாம் வளர்ந்து  தம் வாழ்வைக் கவனிக்கத்தொடங்கிவிட்ட நிலையில் மீண்டும் பொழுதுபோக்குக்காக இவரது கவனம் ஓவியத்தின்பால் ஈடுபடத்தொடங்கியது. இருந்தாலும் தன் ஓவியத்திறமையில் பெரிதும் நம்பிக்கை வைத்தவராகத்தெரியவில்லை. அடிக்கடி ‘வோட்டர் கலர்’ ஓவியங்களை வரைவதும் , அவற்றை அழிப்பதுமாக இருந்திருக்கின்றார். அவ்வாறான சமயங்களில் தான் இவர் வரைந்த சில ஓவியங்களைப்பார்த்தேன். எனக்குப் பிரமிப்பாகவிருந்தது.

அவ்வோவியங்களைப்பார்த்ததும் இவரது ஓவியத்திறமை தெளிவாகப்புலப்பட்டது. மலர்கள், குருவி, மரங்களென இயற்கைக்காட்சிகளை பார்ப்பவர் உள்ளங்களைக் கவரும் வகையில் வரைந்திருந்தார். அவ்விதமே எனக்குத் தென்பட்டது. அவ்வோவியங்களில் சிலவற்றை இங்கு பதிவு செய்கின்றேன். அவை பற்றிய உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். ஓவிய நண்பர்களே இவ்வோவியங்களின் கலை நேர்த்தி பற்றிய உங்கள் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். இவற்றைப்பார்த்தபோது, ஓவியத்துறையில் தன் நாட்டத்தை அதிகமாகத் திருப்பினால், சிறந்த ஓவியர்களிலொருவராக நகுலேஸ்வரி அவர்கள் திகழ்வார்கள் என்பது நிச்சயம் என்பதென் எண்ணம். உங்கள் எண்ணம் எதுவோ அதனைத்தெரியப்படுத்துங்கள்.

நகுலேஸ்வரி ஓவியம்

நகுலேஸ்வரி ஓவியம்


இங்குள்ள ஓவியங்கள் பற்றி எழுத்தாளரும், ஓவியருமான ஜெயந்தி சங்கரிடம் கருத்துகள் கேட்டிருந்தேன். அவர் தனது கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அவரது கருத்துகளுக்காக எனது நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எழுத்தாளர் ஜெயந்தி சங்கர்ஜெயந்தி சங்கர் (சிங்கப்பூர்) : “ஈராண்டுகளாக நான் சொந்த ஈடுபாட்டிலும் ரசனையிலும் நிறைய ஓவியம் சார்ந்து வாசிக்கிறேன். நானே பரீட்சார்த்தமாய் முயன்று வருகிறேன். நான் பெரிய நிபுணர் இல்லை. வாட்டர் கலரில் என் மனம் ஈடுபாடு கொள்கிறது. ஆயில் பெயிண்டிங் நான் இன்னும் முயலவில்லை. அக்ரிலிக் செய்துள்ளேன். எனினும், சில அடிப்படைகள் உண்டு. அனைவருக்கும் தெரிந்தவையும் கூட. நீங்கள் காட்டிய ஓவியங்களைக் கண்டேன். அழகானவை. அவற்றைத் தீட்டிய விரல்கள் அக்ரிலிக் / தைல ஓவியத்துக்குப் (அக்ரிலிக்/ஆயில் பெயிண்டிங்) பழக்கமாகியிருக்க வேண்டும். அல்லது அக்ரிலிக்/ஆயில் பெயிண்டிங்கு அவரது தூரிகையும் விரல்களும் ஏற்றவையாக நான் காண்கிறேன். இதற்குக் காரணங்கள் உண்டு. இவர் தூரிகையின் பலத்தில் தீட்ட முனைகிறார் என்பது தெளிவு. இது கொடுக்கும் அழகுகள்தான் வான்கோ, மோனே போன்றவர்களின் ஆயில் பெயிண்டிங்கில் நான் காணக்கூடியது. அது அக்ரிலிக்/ஆயிலுக்கான பாணி. அது முக்கியக் காரணம். ஆகவே, இவர் அக்ரிலிக் / தைல ஓவியத்துக்கானவர். அதில் மேலும் கற்று மேலும் வளரலாம்.

வாட்டர் கலருக்கு என்றொரு குணம் உண்டு. இதனைப் பலரும் மறந்து விடுகின்றனர். நீரின் போக்கில் வண்ணங்களைத் தீட்டுவதும் நமது தூரிகையின் போக்கில் நீரின் குணயியல்பை முதலாக்குவதும். அது எதையுமே இந்த ஓவியங்களில் என்னால் காண முடியவில்லை. வாட்டர் கலரில் வெள்ளை பெயிண்ட்டை பயன்படுத்தவே கூடாது. அது அன்புரொஃபெஷனல். இதில் அவர் பயன்படுத்தியுள்ளார். இவர் அக்ரிலிக்/தைல ஓவிய பாணியில் நுட்பங்களை மேலும் மேலும் அறிந்து கொண்டு முன்னெடுத்தால் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உறுதி. அவரும் ஊக்கம் பெறுவார்.”

ngiri2704@rogers.com