ஆய்வுக் கட்டுரை: ஏழாம் இலக்கணம் மரபா? நவீனமா?

1.0 முகப்பு

ஆய்வுக் கட்டுரை: ஏழாம் இலக்கணம் மரபா? நவீனமா?தமிழில் எழுதப்பட்ட இலக்கணங்களை மரபிலக்கணங்கள், நவீன இலக்கணங்கள் எனப் பாகுபடுத்திப் பார்ப்பது பெரும்பான்மையான ஆய்வறிஞர்களின் துணிபு. அவற்றுள் மரபிலக்கணங்களைப் பட்டியலிட இருபதாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்(2010:112), நூற்பா வடிவில் அமைந்திருக்க வேண்டும்(2010:299-300) என்பது இலக்கணவியல் அறிஞரின் கருத்து. அதாவது அறுவகை இலக்கணம் வரை எழுதப்பட்ட நூல்களை மரபிலக்கணங்களிலும், பிறவற்றை நவீன இலக்கணங்களிலும் வைக்கலாம் என்பது அவ்வறிஞரின் கருத்தாகப் புலப்படுகிறது. அக்கருத்து மரபிலக்கணக் காலநீட்சியை அறிவதற்கான கருதுகோள்கள் எனில், ஏழாம் இலக்கணத்தையும் மரபிலக்கண வரிசையில் வத்துப் பார்ப்பதே பொருத்தமுடையதாக இருக்கும். ஆக, ஏழாம் இலக்கணம் மரபா? அல்லது நவீனமா? என அறிவதாக இக்கட்டுரை அமைகிறது.

1.0. ஏழாம் இலக்கணமும் அதன் பகுப்பும்

தவத்திரு தண்டபாணி சுவாமிகளால் எழுதப்பட்ட இலக்கண நூல்கள் இரண்டு. ஒன்று: அறுவகையிலக்கணம். இது புலமையிலக்கணக்கத்தை ஆறாம் இலக்கணமாகக் கற்பிக்கிறது. மற்றொன்று: ஏழாம் இலக்கணம். இது தவத்தை ஏழாம் இலக்கணமாக கற்பிக்கிறது. இவ்விரு நூல்களும் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்களாகும். இவை சமகாலத் தரவுகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தருபவை.

இவற்றுள் ஏழாம் இலக்கணம் புணர்ப்பு இயல்பு, சொல்நிலை இயல்பு, பொருள் இயல்பு, யாப்பு இயல்பு, அணி இயல்பு, புலமை இயல்பு, தவ இயல்பு எனும் பகுப்புகளை உள்ளடக்கிய ஒரு நூல்.

2.0. ஏழாம் இலக்கணம் ஒரு மரபிலக்கணமே

மரபு என்பதற்கு ஒரு கருத்து நிலைபெற, அக்கருத்து பலரால் எடுத்தாளப்பெறுவது என மிகுதியான அறிஞர்கள் கருதுகின்றனர். அதனடிப்படையிலே தொல்காப்பியத்தைத் தொல்மரபின் காலநீட்சியில் வைத்துப் பார்க்கப்படுகிறது. அதன் கருத்தியல் பின்பு வந்த இலக்கணக் கலைஞர்களால் எடுத்தாளப் பெற்றது. இத்தன்மை மரபிலக்கணங்களாக கருதக்கூடிய ஒவ்வொரு இலக்கண நூல்களிலும் இழையோடுவதைக் காணலாம்.

மரபு சார்ந்த இலக்கணங்களை மிகுதியான ஆய்வறிஞர்கள் சுவாமிநாதம் வரை விளக்க முற்படுகின்றனர். சிலர் அறுவகை இலக்கணம் வரை அல்லது இருபதாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்ட இலக்கணங்கள் என் வரையறை செய்கின்றனர். அவ்வரையறைகளிலிருந்து மரபிலக்கணத்திற்குரியத் தகுதிகளாக அவ்வாய்வறிஞர்கள் கருதும் கருதுகோள்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

• தொல்மரபைத் தொகுத்தும் சுருக்கியும் விரித்தும் புதுக்கியும் பார்ப்பது.
• சமசுக்கிருதக் கோட்பாட்டைத் தொல்மரபுக் கோட்பாட்டிற்குப் புடைமாற்றித் தருவது.
• சமசுகிருதக் கோட்பாட்டைத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தருவது.
• தொல்மரபையும் சமசுக்கிருத மரபையும் ஒப்பிடுவது.
• நூற்பா(விதி) வடிவில் விளக்குவது.
• இருபதாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டது.

இக்கருதுகோள்கள் அனைத்தும் ஒரே இலக்கணத்துள் அமைந்து விடுவதும் இல்லை. அவற்றில் சில ஓரிலக்கணத்தில் அமைவதைக் காணலாம். அக்கருதுகோள்கள் அனைத்தும் மரபிலக்கணங்களாகக் கருதக்கூடிய இலக்கணங்களுக்குப் பொருந்தும் எனில், அவை ஏழாம் இலக்கணத்திற்கும் பொருந்திவரும் என்பதே உணமை. இருப்பினும் ஏழாம் இலக்கணத்தை மரபிலக்கணக் காலநீட்சியில் வைத்துப் பார்ப்பதில்லையே ஏன்? அதற்கான விடையை  அறுவகை இலக்கணத்துடன் ஒப்ப வைத்துப் பார்ப்பது, மரபிலக்கணக் கருத்தியலுடன் ஒப்பவைத்துப் பார்ப்பது என்ற இருவழிகளில் அறிய முயல்வோம்.

3.1. அறுவகையிலக்கணமும் ஏழாம் இலக்கணமும்: புறக்கட்டமைப்பு நிலை

 இங்கு அறுவகையிலக்கணத்தையும் ஏழாம் இலக்கணத்தையும்  புறக்கட்டமைப்புநிலையில் ஒப்பவைத்துப் பார்ப்பதின் நோக்கம் என்னவெனின்? அறுவகையிலக்கணம் மரபிலக்கணமாக எண்ணப்பட்ட நூல். ஏழாம் இலக்கணம் அவ்வாறு கருதப்பெறாத நூல். அவ்விரு நூல்களும் சமகாலத்தவை. எனவே புறக்கட்டமைப்பு நிலையில் ஒப்பவைத்துப் பார்க்கப்படுகிறது.

அறுவகையிலக்கணம் புலமையிலக்கணத்தைப் புத்திலக்கணமாகத் தர, ஏழாம் இலக்கணம் தவத்தைப் புத்திலக்கணமாகத் தருகிறது. இவ்வாறு புதுமைகளைப் புகுத்துவதே தத்தம் இலக்காகக் கொண்டுள்ளன அவ்விரு நூல்களும். அறுவகை இலக்கணம் குறித்து ச.வே.சுப்பிரமணியன் தரும் கருத்து இங்குச் சுட்டிகாட்டத்தகுந்தது.

 புலமை இலக்கணம் என்ற ஒரு புத்திலக்கணத்தையே படைத்துக்கொள்ளல், எழுத்திலக்கணத்தில் வரிவடிவை நுழைத்தல், பொருள் இலக்கணத்தின் புதுமை ஆகிய பெரு மாற்றங்களாலும் சொல், யாப்பு, அணி இலக்கணங்களிலும் புதுவழி கண்டுள்ளதாலும், இது பழைய நூல்களில் பயின்று உள்ள நூற்பாக்களையே மாற்றியமைத்தும் அல்லது அப்படியே எடுத்தாண்டும் சிற்சில வேறுபாடுகளை மாத்திரம் பெற்று விளங்கும் ஒரு வழி நூலாகாமை தெளிவு. வேறு இலக்கண நூல்களிலிருந்து ஒரே ஒரு நூற்பாக்கூட எடுத்து இவரால் தம் நூலுள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பது கருதத்தக்கது(2009:724).

இக்கருத்து ஏழாம் இலக்கணத்தை மரபிலக்கணமாகக் கருதக்கூடிய வழியை அமைத்துத் தருகிறது. ஏனெனில் ஏழாம் இலக்கணத்தின் சிலவிதிகள் முந்து நூல்களிலிருந்து அப்படியே எடுத்தாண்டுள்ளமையைக் காணலாம். காட்டாக,

 தன்மை முன்னிலை படர்க்கை மூன்றுஇடம் ஆம்;
 நான்எனல் தன்மை, நீஎனல் முன்னிலை;
 அவன் அவள் அவர் அஃது அவை எனல் படர்க்கையே  – ஏ.இ.14

எனும் ஏழாம் இலக்கண விதியைக் குறிப்பிடலாம். இவ்விதி முந்து நூல்களாகிய தொன்னூல் விளக்கத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளது என்பதை,

 மூவிடம் தன்மை முன்னிலை படர்க்கை
 தன்மை ஆகும் நான் யான் நாம் யாம்
 முன்னிலை நீநீயிர் நீவிர் நீர் எல்லீர்
 ஏனைய படர்க்கை எல்லாம் பொதுவே   – தொ.வி.51

எனவரும் இவ்விதி புலப்படுத்தும். இவ்விதியின் முதலடியில் முதல் சீரானது ஏழாம் இலக்கணத்தில் நான்காம் சீராகவும், தன்மைக்குரியச் சொல்லில் நான் என்பதும், முன்னிலைக்குரியச் சொல்லில் நீ என்பதும் இடம்பெறுகின்றமையைச் சுட்டலாம். ஆக, ஏழாம் இலக்கணம் முன்னோர்க் கருத்தியலை அப்படியே எடுத்தாண்டாலும் கூடுதலாக அதற்குரிய சான்றுகளைத் தருவது முதனூலாக்க முயற்சியேயாம். ஏனெனின் அதன் முந்து நூல்கள் யாவும் விதிகளில் சான்றுகளைத் தரவில்லை என்பது கருதத்தக்கது. இருப்பினும் அறுவகையிலக்கணம் சில விதிகளில் சான்றுகளை இணைத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

அறுவகையிலக்கணம்         ஏழாம் இலக்கணம்
பாயிரம்
                                     பாயிரம்

1.எழுத்திலக்கணம்                    1.புணர்ப்பு இயல்பு
2.சொல்லிலக்கணம்                2.சொல்நிலை இயல்பு
3.பொருளிலக்கணம்                3.பொருள் இயல்பு
4.யாப்பிலக்கணம்                    4.யாப்பு இயல்பு
5.அணியிலக்கணம்                 5.அணி இயல்பு
6.புலமையிலக்கணம்             6.புலமை இயல்பு
                                                    7.தவ இயல்பு

என்பது அவ்விரு நூல்களின் பகுப்புமுறைகள். இவற்றுள் அறுவகையிலக்கணம் எழுத்திலக்கணத்தை உருவோசை இயல்பு, நிலை இயல்பு, புணர்ச்சி இயல்பு எனவும், சொல்லிலக்கணத்தை பொதுவியல்பு, பிரிவியல்பு, சார்பியல்பு, திரிவியல்பு எனவும், பொருளிலக்கணத்தை அகப்பொருள்நிலை(உறுப்பியல்பு, குறிப்பியல்பு,  பழமையியல்பு, துறையியல்பு), புறப்பொருள்நிலை(நிலத்தியல்பு, உழியியல்பு, வேற்றுயிர் இயல்பு, கருவி இயல்பு), அகப்புறப்பொருள்நிலை எனவும், யாப்பிலக்கணத்தை இயலிசைத் தமிழியல்பு, வண்ணவியல்பு, மோனை இயல்பு, எதுகை இயல்பு, நாற்கவி இயல்பு, பனுவல் இயல்பு எனவும், அணியிலக்கணத்தை உவமையியல்பு, உடைமை இயல்பு, மாந்தர் உடைமை இயல்பு, கற்பனை இயல்பு, நிகழ்ச்சி இயல்பு, ஆக்க இயல்பு எனவும், புலமையிலக்கணத்தைத் தோற்ற இயல்பு, தவறு இயல்பு, மரபியல்பு, செயல்வகை இயல்பு எனவும் எனப் பாகுபடுத்துகிறது. ஆனால் ஏழாம் இலக்கணம் சொல்லிலக்கணத்தை மட்டும் சொல்நிலை இயல்பு, பெயர்ச்சொல் இயல்பு, ஒற்றுமை இயல்பு, வினைச்சொல் இயல்பு, இடைச்சொல் இயல்பு, உரிச்சொல் இயல்பு எனப் பாகுபடுத்திப் பார்க்கிறது. இங்குச் சொல்லிலக்கணத்தைப் பாகுபாடு செய்வதில் முந்து நூல்களை நாடுகிறது ஏழாம் இலக்கணம் எனலாம். இருப்பினும் இவ்விரு நூல்களும் முந்து நூல்களின் தன்மைகளிலிருந்து சற்று விலகிக் காணப்படுவதற்குச் சமயப்பற்று மிகுதியாகக் காணப்படுவதே என்பார் செல்வராசு. அக்கருத்து இங்குச் சுட்டிக்காட்டத்தக்கது.

19- ஆம் நூற்றாண்டில் இலக்கணம் படைத்த தண்டபாணி சுவாமிகள் சமணர்களுக்கு எதிராகத்தான் இலக்கணம் படைக்க வந்தேன் என்று கூறிக்கொண்டு சமண சமய இலக்கண நூல்களின் கட்டமைப்பிலிருந்து விலகி, தம் நூலைப் புதிய முறையில் கட்டமைத்துள்ளார். நூலின் அகம், புறம் என்று இரு நிலைகளிலுமே இம்மாற்றம் மேற்கொள்ளப் பெற்றுள்ளது. ஐந்திலக்கண மரபு என்பதையே மாற்றி அவற்றை அறுவகையாகக் கூறியதும் இதனாலேயே ஆகும்(2008:78).

3.2. ஏழாம் இலக்கணமும் முந்துநூல்களும்

 ஏழாம் இலக்கணம் முந்து மரபு நூல்களின் கருத்துக்களைத் தாங்கி நிற்கும் பெட்டகமாகவும் விளங்கியது என்பதை முன்புக் காட்டிய சான்று நிறுவி நின்றாலும். இங்கு மேலும் சில சான்றுகளைச் சுட்டிக்காட்டினால் தெளிவான புரிதலை ஏற்படுத்தும்.

இறந்தது நிகழ்வது வருவது என்ன
மூன்று காலம் மொழிவார்; உதாரணம்
முன்பு செய்தான், இப்போது செய்கிறான்
இனிச் செய்வான் என இயல்பாம் முறையே   – ஏ.இ.150

எனவரும் விதி வினைக்குரிய காலத்தை வரையறை செய்கிறது. அவ்விதி தமிழ் மொழிக்குரிய வினைச் சொற்கள் இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனும் மூன்று காலத்தை ஏற்கும் என விளக்கி நிற்கிறது. இக்கருத்துத் தொல்காலம் முதல் தாங்கி வந்த கருத்து என்பதை அதன் முந்து நூல்கள் காட்டும் உண்மை. அம்முந்து நூல்களின் கருத்துக்கள் வருமாறு:

இறப்பு, நிகழ்வு, எதிர்வில் எதிர்வுமுக் காலமே   – சுவாமி.59
இறப்பு நிகழ்வு மெதிர்வு மென்று
சொலப்படு மூன்று காலமுங் …      – மு.வீ.595
இறந்த காலத்து இடைநிலை தறட ஒற்று
இன்னே மூவிடத்து ஐம்பாற்கு ஏற்பன    – தொ.வி.108
நிகழ் பொழுது ஆநின்று இன்று கிறு என
ஐம்பால் மூவிடத்தும் ஆம் இடைநிலையே    – தொ.வி.109
எதிர்வரும் காலத்து இடைநிலைப் பவ் வ
ஐம்பால் மூவிடத்து ஆம் இவை சில இல    – தொ.வி.110
இறப்பு, எதிர்வு, நிகழ்வு எனக் காலம் மூன்றே   – நன்.382
இறப்பு நிகழ்வெதிர்வுவாங் காலங்கள்    – நேமி.63
இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக் காலமும்     – தொல்.685

இங்குக் குறிக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் பார்க்கும்பொழுது தொல்காப்பியம் தொட்டு சுவாமிநாதம் வரையிலான இலக்கணங்கள் காலத்துக்குரிய வகைகளை மட்டும் குறிப்பிட்டு நிற்க, ஏழாம் இலக்கணம் அதற்குரிய சான்றுகளையும் தந்து விதி அமைத்திருப்பது புதுமைப்போக்காக இருந்தாலும், முந்துநூல்களின் தழுவல் என்பதே உண்மை. அடுத்து,

ஏகாரத்தால் ஈற்றாசை, எதிர்மறை,
தேற்றம், எண், வினா, பிரிநிலை என்னும்
ஆறு பொருள் தரும்; அவற்றுள் ஈற்றசைக்கு
இச் சூத்திரமும் இலங்கு உதாரணமே    – ஏ.இ.240

எனவரும் விதியை நோக்குவோம். இவ்விதி ஏகார இடைச்சொல்லுக்கான பொருளை விளக்கி நிற்கும் விதியாகும். இவ்விதியில் ஏகாரம் ஈற்றசை, எதிர்மறை, தேற்றம், எண், வினா, பிரிநிலை ஆகிய ஆறு பொருள்களில் வரும் எனப்பட்டுள்ளது. இக்கருத்து இதன் முந்து நூல்களாகிய முத்துவீரியத்தில் எண், பிரிநிலை, ஈற்றசை, தேற்றம், வினா(650) எனவும், தொன்னூல் விளக்கத்தில் ஈற்றசை, தேற்றம், எண், வினா, பிரிநிலை, இசைநிலை(131) எனவும், இலக்கண விளக்கத்தில் தேற்றம், வினா, எண், பிரிநிலை, எதிர்மறை, ஈற்றசை(252) எனவும், நன்னூலில் பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை(422) எனவும், நேமிநாதத்தில் தேற்றம், வினா, எண், எதிர்மறை, ஈற்றசை(76) எனவும், தொல்காப்பியத்தில் தேற்றம், வினா, எதிர்மறை, எண், ஈற்றசை(742) எனவும் குறிக்கப்பட்டுள்ளமைக் கவனிக்கத்தக்கது. இம்முந்து நூல்களின் விளக்குமுறைகளில் ஏழாம் இலக்கணம் பெரிதும் தழுவியுள்ளது இலக்கண விளக்கத்தையே என்பதை,

தேற்றம் வினாவெண் பிரிநிலை யெதிர்மறை
யீற்றசை யெனவா றேகா ரம்மே    – இ.வி.252

எனவரும் விதியின்மூலம் அறியலாம்.

 இதுகாறும் விளக்கப்பட்ட கருத்தியல்களின் அடிப்படையில் நோக்கும்பொழுது முந்துநூல்களின் சாயல் ஏழாம் இலக்கணத்தில் காணப்படுகின்றமையை அறிய முடிகின்றது. இருப்பினும் அவ்விலக்கணப் பதிப்பாசிரியர்கள் மரபு சார்ந்த நிலையை சுவாமிநாதம் வரைக் குறித்துள்ளமைக் கவனிக்கத்தக்கது.

மரபுசார்ந்த நிலை என்பது தொல்காப்பியத்தை அடியொட்டி எழுந்த ஐந்திலக்கண நூல்களான, முத்துவீரியம், சுவாமிநாதம் முதலிய நூல்களைக் குறிப்பிடலாம்(2008:7).

இருப்பினும் அவர்கள் ஒருவாறு அறுவகை இலக்கணத்தையும் ஏழாம் இலக்கணத்தையும் மறைமுகமாக மரபிலக்கணங்களே என்பதை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம் ஆகிய நூல்களில் ‘புலமையை’ ஆறாம் இலக்கணமாகவும், ‘தவத்தை’ ஏழாம் இலக்கணமாகவும் வரையறுக்கிறார். இந்நூல்களும் ஐந்திலக்க்கண நூல்களின் நீட்சியாக எழுந்தவையாகும்(2008:7).

…இலக்கணச் சுருக்கம், பாலபோத இலக்கணம், இலக்கண வினாவிடை, இலக்கண நூலாதாரம், இலக்கண விளையாட்டு போன்ற நூல்கள் இயற்றப்பட்டன. இம்மரபு மாற்றாத்தினால், தமிழ்ச் சமூகத்தில் அனைவருக்கும் கல்வி எனும் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது(2008:7 – 8).

எனவரும் கருத்தியல்கள்வழிப் புலப்படுத்தி விடுகின்றனர். இவர்களின் கருத்துப்படி நூற்பா வடிவை விடுத்து, உரை வடிவ மாற்றமே மரபிலிருந்து விலகிய நவீனநிலை என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே, ஏழாம் இலக்கணத்தை மரபு சார்ந்த ஒரு இலக்கணமே எனத் துணிந்து கூறலாம். ஆக, இந்நூலை மரபுசார்ந்தது என ஏற்றுக் கொண்டால் பின்வரும் கருதுகோள்களுடன் மேற்கூறிய கருதுகோள்களையும் இணைத்துப் பார்க்கவேண்டும்.

• முந்து நூல்களின் சாயல் ஓரளவு புலப்படுவது.
• முந்து நூல்களின் கருத்துக்களை உள்வாங்கிப் புதிய விகளைத் தோற்றுவிப்பது.
• வழிநூல் தன்மையிலிருந்து முதனூல் தன்மையைப்பெற முயற்சிப்பது.
• சான்றுகளையும் இணைத்து விதிகளாக்கித் தருவது.

இதனடிப்படையில் நவீன இலக்கணத்துக்குரியத் தன்மையை ஒரே வரியில் சுட்டிவிடலாம். அது உரைநடை வடிவத்தில் மொழியை விளக்குதேயாம்.

துணைநின்றவை

1. அருள் வி., இளமாறன் பா.(பதிப்.), வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய ஏழாம் இலக்கணம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
2.  இராசாராம் சு., 2010, இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
3. சுப்பிரமணியன் ச.வே., 2009, தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்.
4. செல்வராசு அ., 2008, இலக்கிய இலக்கணப் புரிதல், எழில், திருச்சி.

neyakkoo27@gmail.com
http://meyveendu.blogspot.in/