ஆய்வு: சங்க இலக்கிய உடன்போக்குப் பாடல்கள் வெளிப்படுத்தும் வன்முறைப் பதிவுகள்!

- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -ஆய்வு: சங்க இலக்கிய உடன்போக்குப் பாடல்கள் வெளிப்படுத்தும் வன்முறைப் பதிவுகள்!உளமொத்த காதலர்கள் களவு வாழ்வில் இருந்து திருமண வாழ்வில் இணைதல் வேண்டித் தலைவனும் தலைவியும் சுற்றத்தார் யாரும் அறியாவண்ணம் வீட்டைவிட்டு வெளியேறிச் செல்லுதல் உடன்போக்கு என்பர். இவ்வுடன்போக்கின் போது, தலைவனும் தலைவியும் தலைவியின் வீட்டார் சார்ந்த சூழல், இயற்கை சார்ந்த சூழல் என இருவகை சூழல்களின் தாக்குதலுக்கு உட்படவேண்டியுள்ளது. இத்தாக்குதலில் தலைவியின் வீட்டார் நிகழ்த்திய வன்முறைப் பதிவுகளை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

உடன்போக்கு

அலர், இற்செறிப்பு, நொதுமலர் வரைவு, வரைவு கொடாமை போன்ற இடையூறுகள் ஏற்படும் பொழுது, தோழியின் உதவியுடன் தலைவியின் உறவினர் யாரும் அறியாவண்ணம் இல்லறவாழ்வை மேற்கொள்ளும் பொருட்டுத் தலைவியைத் தலைவன் தன்னுடன் அழைத்துச் செல்வது உடன்போக்கு எனப்படும். அதாவது, களவுவாழ்வில் ஈடுபட்டிருந்த தலைவனும் தலைவியும் கற்பு வாழ்வை (திருமணவாழ்வு) மேற்கொள்ளுதல். இவ்வுடன்போக்கு எல்லாக் காலத்தும் நிகழும். இதற்கு, “ஒருவழித் தணத்தற்குப் பருவங் கூறார்” (அகப்பொருள் விளக்கம், நூ.40)  என்று அகப்பொருள் விளக்கம் சான்று பகர்கின்றது.

சங்க இலக்கியத்தில் உடன்போக்குக் குறித்த பாடல்களாக, நற்றிணையில் 21 பாடல்களும், குறுந்தொகையில் 19 பாடல்களும், ஐங்குறுநூற்றில் 40 பாடல்களும், அகநானூற்றில் 36 பாடல்களும், கலித்தொகையில்  ஒரு பாடலும்  என மொத்தம் 117 பாடல்கள் உள்ளன.

உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடிச் செவிலித்தாய், நற்றாய் மற்றும் உறவினர்கள் (தந்தை, தமையன்) சென்றதாக மட்டுமே பதிவுகள் காணப்படுகின்றன. ‘தோழி’ தேடிச் சென்றதாகப் பதிவுகள் இல்லை. உடன்போக்குப் பாடல்களில் நற்றாய், செவிலித்தாயின் கூற்றுகளை, மகளைப் பிரிந்ததால் வருந்துதல் (நற்.271:10-12), மகளை உடன் அழைத்துச் சென்ற காளையினையும் அவன் தாயையும் வைதல் (நற்.293:5-9), பின் மகளின் செயலை வாழ்த்துதல் (ஐங்.371:4-5) என்ற மூன்று நிலைகளில் காணமுடிகின்றது.

தலைவி விரும்பிய தலைவனுடன் மணம் முடிக்காமல் மாற்றானுக்கு மணம் முடிக்க அவளின் தாய் தந்தையர் ஏற்பாடு செய்து, மணவிழா நெருங்கும் நேரத்தில் தலைவனுடன் உடன்போக்குச் சென்றதனை அகம்.221 ஆம் பாடலிலும், தலைவி தன் தந்தையின்      செல்வவளத்தை நினைக்காமல் ஒரு பசு மட்டும் கட்டப்பட்டுள்ள வீட்டை உடைய ஏழைத் தலைவனுடன் உடன்போக்குச் சென்றதை எண்ணித் தாய் வருந்துவதனை அகம்.369 ஆம் பாடலும் வெளிப்படுத்துகின்றது.

உடன்போக்கில் வன்முறை
தலைவனுடன் உடன்போக்குச் செல்ல தலைவியை உடன்படுத்தும் தோழி, தலைவியின் தாய் மற்றும் தமையன்மாரைப் பற்றிக் கூறுமிடத்தில், அன்னைபடும் துன்பத்தினையும், தமையன்மார்கள் படும் கோபத்தினையும் கண்டு கவலைப்படாமல் உடன்போக்கினை மேற்கொள்ளத் தலைவியைத் தூண்டுகிறாள்.

“நின்னினும் மடவள் நன்நின் நயந்த
அன்னை அல்லல் தாங்கிநின் ஐயர்
புலிமருள் செம்மல் நோக்கி
வலியாய் இன்னுந் தோய்கநின் முலையே”    (அகம்.259:15-18)

என்ற தோழி கூற்றிலிருந்து தலைவியின் தமையன்மார்கள் புலியைப் போன்று அச்சத்தை ஏற்படுத்தும் வன்செயல்களில் ஈடுபடுவர் என்பதை அறியலாம்.

சிறுவயது முதல் ஒன்றாக விளையாடிய ஒரே தெருவைச் சேர்ந்த அல்லது ஊரைச் சேர்ந்த தலைவனும் தலைவியும் உடன்போக்கு மேற்கொண்டதை குறுந்.229 ஆவது பாடல் குறிப்பிடுகின்றது. இப்பாடலில் உடன்போக்குக்கான காரணம் பற்றிய குறிப்புக் காணப்படவில்லை. சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு, முன்பகை போன்றவை இவ்வுடன்போக்கிற்குக் காரணமாக இருந்திருக்கலாம். தலைவி தான் விரும்பிய தலைவனுடன் உடன்போக்குச் சென்றாலும் அவர்களைத் தொடர்ந்து அவளின் சுற்றத்தார் தேடிவருதல் உண்டு.

தலைவியைத் தேடிச் சென்ற செவிலித்தாய், தன்கால்கள் நடக்க முடியாமல் தளர்ந்தன எனவும், கண்கள் உற்று நோக்கி நோக்கி ஒளி மழுங்கின என்றும் புலம்புவதனைக் குறுந். 44 ஆம் பாடல் விளக்குகின்றது.

உடன்போக்கில் சென்ற தலைவியைத் தேடி அவளின் சுற்றத்தார் தொடர்ந்து பின் வருவதைக் கண்ட தலைவன், தலைவியை அவர்களிடம் விட்டுச் செல்வான். இதனை,

“போக்கறி வுறுத்தல் வரவறி வுறுத்தல்
நீக்கம் இரக்கமொடு மீட்சி யென்றாங்கு
உடன்போக் கிடையீ டொருநால் வகைத்தே”(அகப்பொருள் விளக்கம், நூ. 197)

என்று நம்பியகப்பொருள் ‘உடன்போக்கு இடையீடு’ பற்றிக் கூறுகின்றது. மேலும், உடன்போக்கில் நான்கு வகையான இடையீடுகள் உள்ளதென்றும் அவற்றுள் தலைவியின் சுற்றத்தார் தலைவியை மீட்கச் செல்லலும் உண்டு என்பதையும் அறியலாம்.

தலைவியுடன் உடன்போக்குச் செல்கையில் ஆறலைக் கள்வர்கள் போன்ற பிறரால் துன்பம் வருகின்ற பொழுது அதனை எதிர்த்துப் போரிடும் வல்லாண்மை தலைவன்  பெற்றிருந்த போதிலும் அவளின் சுற்றத்தார் வருகின்ற பொழுது அவர்களுடன் போர் செய்யாது மறைந்து நிற்பதனை,

“அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே”    (நற்.362:9-10)

என்ற பாடல்வரிகள் விளக்குகின்றன. ‘நுமர்வரின் மறைகுவென்’ என்பதற்குப் பின்னத்தூரார், “தான் அவரை அடும் ஆற்றலுடையனாயினும் தலைவி தன்னுள்ளத்து எம்பெருமானுக்கு ஏதேனும் ஏதம் (துன்பம்) நிகழும் கொல்லோ என்று ஏங்கி இறந்துபடுமாதலின், அதுகருதி நுமர்வரின் மறைகுவேன் என்றான்” என்பார். எனவே, தலைவியைத் தேடிவரும் அவளின் சுற்றத்தார் தலைவனின் மீது வன்தாக்குதல் நடத்துவர் என்பதனை உணரலாம். இவ்வன்தாக்குதலில் தலைவன் இறந்துபடுதலும் கூடும். எனவே, தலைவி அதனைக் கண்டு வருந்துவாள் என்பதால் தலைவியின் சுற்றத்தாருடன் வன்முறையில் ஈடுபடாமல் மறைகுவென் என்றான். மாறாக, தலைவன் தலைவியின் சுற்றத்தாருடன் சண்டையிடும் பொழுது அவளின் சுற்றத்தார் யாரேனும் இறந்துபடினும் தலைவிக்குத் தன்மீதுள்ள காதல் மாறி வெறுப்புத் தோன்றலாம்  என்பதாலும் ‘நுமர்வரின் மறைகுவென்’ என்று கூறியிருக்கலாம்.

தலைவியின் உறவினர்கள் அறியாதபடித் தலைவன் மறைவதற்கு இடம் கொடுத்த குன்றினைத் தலைவி வாழ்த்தியதனை, ஐங். 312ஆம் பாடலின் வழி அறியலாம். தலைவன் தாக்குதல் நடத்தாமல் மறைந்திருந்தாலும் தலைவியின் சுற்றத்தார் உடன்போக்கில் இடைமறித்து தாக்குதல் உண்டு.

“கடையழிய நீண்டகன்ற கண்ணாளைக் காளை
படையொடும் கொண்டு பெயர்வானைச் சுற்றம்
இடைநெறித் தாக்குற்ற தேய்ப்ப…..”        (பரி.11:46-48)

என்ற பரிபாடலில் வருகின்ற உவமை வாயிலாகத் தலைவியின் சுற்றத்தார் தலைவனுடன் நிகழ்த்திய வன்முறையினைக் காணமுடிகின்றது. தற்காலத்திலும் இவ்வாறு உடன்போக்கு மேற்கொண்ட காதலர்களைப் பின்தொடர்ந்து சென்று தாக்குதல் நடத்துவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் உள்ளது. இருவேறுபட்ட சாதியில் உள்ளவர்கள் காதல் கொண்டு உடன்போக்கு மேற்கொண்டு மணம் முடித்தால் அது சாதிக்கலவரமாக வெடிக்கிறது. இதனால் பலர் தம் உயிரை இழக்கின்றனர்.

சட்டங்கள் கடுமையாக உள்ள இக்காலத்திலேயே உடன்போக்கினால் எழும் வன்முறையின் தீவிரம் நம்மை அஞ்சச் செய்கின்றதெனில், சங்க காலத்தில் எத்தகைய கொடுமையான வன்செயல்கள் நடந்தேறியிருக்கும் என்பதனை ஊகித்து உணரலாம். இதனைத் தொல்காப்பியர்,

“கொண்டுதலைக் கழிதலும், பிரிந்துஅவன் இரங்கலும்,
உண்டென மொழிப ஓரிடத் தான.”    (தொல். நூ. 961)

என்பார். தலைவி வீட்டைவிட்டுப் பிரிந்து செல்வது ஒரு பிரிவு எனவும், பாலைவழியில் தலைவியின் சுற்றத்தினர் அவளைக் கைப்பற்றிச் செல்லும் போது தலைவியைத் தலைவன் பிரிவது மற்றொரு பிரிவு என்றும் குறிப்பிடுவர். உடன்போக்கில் வன்முறை நிகழும் என்பது இங்கு  மறைமுகமாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

“களவு இருவழிகளால் கற்பு மணம் எய்தும். ஒன்று; அறத்தொடு நிலை; பிறிதொன்று; உடன்போக்கு. முன்னது மென்முறை; பின்னது வன்முறை. எனினும், அன்றைய சமூகத்தில் உடன்போக்கை மறுத்தலும் இல்லை; ‘மறு’ என ஒறுத்தலும் இல்லை” என்று க.ப. அறவாணனும் (க.ப. அறவாணன்:2002:129) இதனை மென்மையான வன்முறை என்று து. சிவராஜும் (து.சிவராஜ்:1994:41) குறிப்பிடுகின்றனர். உடன் போக்கை வன்முறை என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை. இதனையே கவிப்பேரரசு வைரமுத்து, “உங்கள் உடல்வழியே வந்தாலும் பிள்ளைகளின் உடல்கள் உங்களுக்குச் சொந்தமில்லை. பிள்ளைகள் வயதுக்கு வந்தவுடனேயே பெற்றோருக்குத் துறவு மனப்பான்மை வந்துவிட வேண்டும். அன்பு என்பது கூட ஒருவகை ஆதிக்கம் தான். அந்த ஆதிக்கத்தை இழந்த ஆதங்கம் தான் உங்களை அழுத்துகிறது. அவள் முடிவு சரியாகவும் இருக்கலாம். நடை கற்றுத் தருவதே பெற்றோர் கடமை; சாலைகள் அவரவர் உரிமை” (வைரமுத்து:2008:76)என்பார். தலைவி தான் விரும்பிய தலைவனுடன் செல்வது வன்முறையாகாது. தலைவியின் பெற்றோர் சுரவழியில் தலைவனைத் தாக்கித் தலைவியைக் கைப்பற்றிக் கொண்டுவருவது தான் வன்முறை. “அகத்தில் பாலை என்னும் திணை (பெற்றோர் அறியாமல்) விரும்பும் பெண்ணைக் கடத்திச் செல்லுதலேயாம்; இதனை அடுத்துத் தலைவனுக்கும் தலைவியின் உறவினர்களுக்கும் சச்சரவு நிகழும். இச்சச்சரவு பெரிய போராகவும் மாறலாம்” என்று சுப்பிரமண்யன் (ந.சுப்பிரமண்யன்: 2010:170) கூறுகிறார்.

முடிவாக, தலைவியின் வீட்டார் தலைவியின் காதலை ஏற்காத சூழலுக்குக் காரணமாக பொருளாதார ஏற்றத்தாழ்வு, குலப் பாகுபாடு, முன்பகை போன்றவை இருந்துள்ளது. எனவே, உடன்போக்கின் போது காதலர்களைப் பிரித்து தலைவனைத் தாக்கும் வன்முறைகள் நிகழ்த்தப் பெற்றுள்ளன என்பதை அறியமுடிகிறது.

பயன்பட்ட நூல்கள்
1.    ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, (உ.ஆ.), ஐங்குறுநூறு  அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
2.    கா.ரா. கோவிந்தராச முதலியார் (உ.ஆ) அகப்பொருள் விளக்கம், கழக வெளியீடு
3.    க.ப. அறவாணன், அற்றைநாட்காதலும் வீரமும், மெய்யப்பன் தமிழாய்வகம்
4.    ச.வே. சுப்பிரமணியன், (உ.ஆ.), தொல். நூ. 961,மெய்யப்பன் பதிப்பகம்
5.    து. சிவராஜ், சங்க இலக்கியத்தில் உளவியல், சிவம் பதிப்பகம்
6.    ந. சுப்பிரமண்யன், சங்ககால வாழ்வியல்,நியூசெஞ்சுரி புக்ஹவுஸ்
7.    பொ.வே. சோமசுந்தரனார், (உ.ஆ.), குறுந்தொகை, கழக வெளியீடு
8.    ந.மு. வேங்கடசாமி நாட்டார், ரா. வேங்கடாசலம் பிள்ளை.    அகநானூறு, கழக வெளியீடு
9.    நச்சினார்கினியர், (உ.ஆ.), கலித்தொகை, கழக வெளியீடு
10.    பொ.வே. சோமசுந்தரனார், பரிபாடல், கழக வெளியீடு
11.    பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், நற்றிணை, கழக வெளியீடு
12.     வைரமுத்து, பாற்கடல், சூர்யா இலக்கியம்

sivasivatamil@gmail.com