ஆய்வு: நிலம் – மையம் – அதிகாரம்

1
- முனைவர் ஞா.குருசாமி, துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை -இங்கிலாந்தின் நிலவுடைமையிலான உற்பத்தி வரலாறு இடைக்காலத்தில் இருந்தே தொடங்குகிறது. கி.பி 1066 முதல் 1300 வரையிலான நார்மன் ஆட்சிக்காலத்திற்கு முன்பே இங்கிலாந்தில் மேனர் முறை வழக்கில் இருந்தது. மேனர் முறை என்றால் வரி செலுத்தும் நிலப்பகுதிகள் என்று பொருள். இந்நடைமுறை இங்கிலாந்தில் மட்டுமின்றி மத்திய ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா நாடுகள் அனைத்திலும் வழக்கத்தில் இருந்தது. இங்கிலாந்தில் இந்நடைமுறை எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதற்கு சரியான வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. ரோமானிய சாம்ராஜ்யத்தில் அடிமை ஊழியர்களால் பயிரிடப்பட்ட வில் (Vill) என்பதிலிருந்து இது தோன்றியிருக்க வேண்டும் எனவும், ஜெர்மனி நாட்டில் பயிர் செய்யப்பட்ட பிரதேசமாகிய மார்க்கில் (Mark) இருந்து இது நிலவி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இருபத்தோராம் நூற்றாண்டு வரலாற்று அறிஞர்கள் ரோமானியர், டியுடானியர் ஆகியோர்களின் முறைகளில் இருந்து இது தோன்றி இருக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். 1086 – இல் எழுதப்பட்ட டூம்ஸ்டே புத்தகத்தில் (Domesday Book) இருந்து தான் நார்மன் ஆட்சியில் மேனர் முறை இருந்து வந்ததைப் பற்றி அறியமுடிகிறது. மேனர்களில் பெரும்பகுதி திருச்சபைகளின் வசம் இருந்தன. பேராயர்கள், ஆயர்கள், பிற சமயத் தலைவர்களும் (பிரபுக்கள்) மேனர்களை அனுபவித்தார்கள். இதே காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்த இராஜராஜ சோழனின் நிர்வாகத்தில் நிலம் அதிகாரத்தின் மையமாக, அதே சமயத்தில் சற்று கூடுதல் வலுவாகக் கட்டமைக்கப்பட்டது. முதன்முதலில் நிலம் அளவிடும் முறையை அறிமுகப்படுத்திய இராஜராஜ சோழனின் இந்த அணுகுமுறை தன்னுடைய அரசின் வரி விதிப்பில் இருந்து ஒரு சிறு நிலப்பகுதியும் தப்பி விடக்கூடாது என்ற நோக்கினதாகவே இருந்திருக்கிறது.

மேனர் நிலங்களைப் பொறுத்தவரை உள்நிலம் (Inland) என்றும், வெளிநிலம் (Out land or villenegium) என்றும் பிரித்தறியப்பட்டது. உள்நிலம் பேராயர்கள், சமயத் தலைவர்கள் முதலியோர்களின் பயன்பாட்டு நிலமாகவும், வெளிநிலம் பண்ணையாளர்களின் பயன்பாட்டு நிலமாகவும் இருந்தது. பண்ணையாளர்கள் பயன் படுத்திய நிலத்தின் மீது அவர்களுக்குச் சட்டப்படியான உரிமைகள் இல்லை. ஆனால் பேராயர்கள் உள்ளிட்டவர்கள் பயன்படுத்திய நிலம் அவர்களுக்கு உரிமையுடையதாக இருந்தது. மேலும் வெளிநிலத்தை வைத்திருந்த பண்ணையாட்களை மாற்றுவதற்கான உரிமையும் அவர்களுக்கு இருந்தது. நார்மன் காலத்தின் பின்பகுதியில் பண்ணையாளர்களின் நிலங்கள் உள்நிலங்களாக மாற்றப்பட்டு பேராயர்கள் உள்ளிட்டவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. ஆட்சி அதிகாரம் அரசன் கையில் இருந்தாலும், நிலத்தின் உரிமையிலான அதிகாரம் பிரபுக்களின் கையில் இருந்ததால் அதிகாரம் மிக்கவர்களாக பிரபுக்களே இருந்தனர். இவர்களின் ஆதரவிலும், வழிப்படுத்தலிலுமே அரசன் ஆட்சி செய்திருக்கிறான்.

இவ்விடத்தில் பேசப்பட வேண்டியவர்கள் பிரபுக்களும், பண்ணையாளர்களுமே ஆவர். அதிகாரம் கொண்டவர் ஒ அதிகாரம் அற்றவர் என்பது நிலம் உடையவர் × நிலம் அற்றவர் என்பதாக இருந்திருக்கிறது. நிலங்களின் மீது சட்ட ரீதியான உரிமை பெற்ற பிரபுக்கள் அதிகாரம் உடையவர்களாகவும், சட்ட ரீதியான உரிமையில்லாத பண்ணையாட்கள் அதிகாரம் அற்றவர்களாகவும் இருந்தனர். பண்ணையாட்களுக்குள்ளும் பொருளாதார அடிப்படையில் பாகுபாடு இருந்தது. 30 ஏக்கர் நிலமுடைய பண்ணையாள் வில்லின் (Villein) எனவும், 5 ஏக்கர் உள்ள பண்ணையாள் போர்டர் (Border) எனவும், 1 ஏக்கர் நிலமுள்ள பண்ணையாள் காட்டர் (Cotter) எனவும் அறியப்பட்டனர். இங்கிலாந்தின் இடைக்கால சமூக அமைப்பு பெரும்பாலும் சட்டத்தைவிட வழக்கத்தையை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் பிரபுக்கள் மீது பண்ணையாட்கள் வழக்குத் தொடரக்கூடாது என்பது வழக்கமாக இருந்தது.

பண்ணையாட்களின் மூன்று பிரிவினர்களில் ஒரு பிரிவினராகிய வில்லின்கள் தன்னுடைய நிலத்திலும் வேலை செய்துவிட்டு தன்னுடைய பிரபுவின் நிலத்திலும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்பது விதியாக இருந்தது. விதைப்புக் காலத்திலும், அறுவடைக் காலத்திலும் வில்லின்கள் வழக்கத்தை விட அதிக வேலை செய்தனர். இது தருமவேலை எனக் குறிக்கப்பட்டது. தன்னால் முடியாத போது தன் மகனையோ, அல்லது கூலி கொடுத்து மற்றொரு ஆளையோ வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. தவிர வில்லின்கள் தன்னுடைய பிரபுக்களுக்கு பணமும், பொருளும் தந்திருக்கின்றனர். மைக்கல்மாஸ் (Michealmass) ஈஸ்டர் (Easter) போன்ற பண்டிகைக் காலங்களில் வாத்துகளும் முட்டைகளும் கொடுத்திருக்கிறார்கள்.

போர்டர்களும், கார்டர்களும் வேறு வேறானவர்கள் என்ற கருத்தும், இருவரும் ஒருவரே என்ற கருத்தும் இருக்கிறது. அவர்கள் பிரபுகளுக்காக ஒருநாள் மட்டுமே உழைத்தனர். இதனால் ஓய்வு நேரம் அதிகமாகக் கிடைத்தது. அந்த நேரங்களில் அவர்கள் கூலிக்கு வேலை செய்தனர். இன்றைய பயிர்த்தொழில் வர்க்கம் இவர்களில் இருந்துதான் தோன்றியிருக்க வேண்டும். இதனால் வரலாறு, பொருளாதாரம் ஆகிய துறைகளில் போர்டர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். பதினான்காம் நூற்றாண்டில் 1348,1361,1368,1381,1396 ஆகிய ஆண்டுகளில்  பிளேக் நோயினால் மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தனர். போர்டர்கள், காட்டர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இதனால் பிரபுக்கள் நட்டம் அடைந்தனர். எஞ்சி நின்ற பண்ணையாட்கள் அதிகமான கூலி கேட்டனர். தொழிலாளர் பற்றாக்குறை நேர்ந்த பின்னர் வில்லின்களைவிட போர்டர்களும், காட்டர்களும் கூலி வேலை மூலம் அதிகமான ஊதியம் பெற்று முன்னேறினர். இந்தப் பொருளாதார ரீதியிலான முன்னேற்றம் கூலியாட்கள் மத்தியில் புரட்சி ஏற்படக் காரணமாக அமைந்தது.

இடைக்காலத்திற்குப்பின் பொருளாதார அமைப்பில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. வேளாண்மை பின்னுக்குத் தள்ளப்பட்டது. வேளாண்மை செய்வதைவிட கால்நடை வளர்ப்பு இலாபகரமானதாக இருந்தது. இதனால் வேளாண் நிலங்களைவிட மேய்ச்சல் நிலங்களின் மதிப்பு உயர்ந்தது. 16 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை திறந்த வயல்களில் நடந்த வேளாண்மை பின்னர் வேலியிட்ட நிலங்களில் நடைபெறலாயின. நிலங்களுக்கு வேலியிடல் முறை அறிமுகமான பின், வேலியிடல் என்பது ஒவ்வொருவரின் அதிகாரத்தை வடிவமைத்து தனித்துவப்படுத்துவதாக மாறியது. திறந்த நிலத்தில் நிகழ்ந்த கால்நடை மேய்ச்சலில் அதிக இலாபம் இருந்ததை உணர்ந்த பிரபுக்கள் அவற்றைத் தடுக்க வேலிகள் அமைத்தனர். இது கால்நடை மேய்ச்சலில் இருந்த இலாபத்தை நட்டமாக்கி, திரும்பவும் நிலத்திலூடான அதிகாரத்தை, பொருளாதார உற்பத்தி முறையினை பிரபுகளுக்கு கைமாற்றியது. வேலியிடல் மூலம் சிறு நிலங்கள் வைத்திருந்தவர்கள் முற்றாகப் பதிக்கப்பட்டனர். இதனால் தங்களுடைய நிலங்களைப் பிரபுக்களுக்கு விற்றனர். இந்நிகழ்வுக்குப் பின் பிரபுக்களின் அதிகாரம் மேலும் வலுப்பெற்றது.

நிலம் அற்றவர்கள் தேசிய அரசிலோ, தள அதிகாரத்திலோ பங்கு பெற முடியவில்லை. சமூக அந்தஸ்து பெற நிலவுடைமையாளராக இருப்பது மிக முக்கியமானதாக இருந்தது. மிகப் பெரிய தொழிற்சாலையில் அதிகமான இலாபம் ஈட்டியவர்கள் கூட நிலமில்லாதவர்களாக இருந்தால் ஓரம் கட்டப்பட்டனர். பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பதற்கு 600 பவுண்ட் மதிப்புள்ள நிலத்திற்கு உரிமையாளராக இருக்க வேண்டும். நகராட்சியில் உறுப்பினராக 300 பவுண்ட் மதிப்புள்ள நிலத்திற்கு உரிமையாளராக இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இச்செய்தியின் மூலம் நிலம், அதிகாரத் தோற்றுவாயின் மையமாகத் தொழிற்பட்டு இருப்பதை அவதானிக்கலாம்.

2
தொல்தமிழர் பற்றிப் படர்ந்து இருந்த இந்தியா என்று பெயரிடப்படாத பெருநிலப்பரப்பில் ஆரியர்கள் நுழைந்து முதல் வேலையாக அங்கிருந்த பூர்வகுடிகளை விரட்டிவிட்டு, தங்களின் குடியேற்றங்களை அமைத்துக்கொண்ட செயல் நிலத்தைக் கையப்படுத்திய செயல்தான். இன்றைய இலங்கையின் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை அமைத்து வருகின்ற இலங்கை அரசின் தொழிற்பாட்டோடும் இதனை இணைத்துக் காணலாம். ஆரியருக்குப் பின்னான தொடர் படையெடுப்புகளும் அவை குறித்த விவரணையும் தனித்த ஆய்வுக்கு உரியன. அவைகளும் நிலத்தை அதிகார மையமாகக் கொண்ட இயங்கியல் தன்மையுடையவைதான்.

ஆங்கிலேயர் இந்தியாவை வெற்றி கொண்ட போது இந்தியச் சமூக அமைப்பு நிலப்பிரபுத்தன்மை கொண்டதாக இருந்தது. (கெய்ல் ஓம்வெட் 1998) அதாவது நிலப்பிரபுக்களின் வர்க்கத் தன்மையும், அவர்கள் மேலாண்மை செய்கின்ற உற்பத்தி உறவின் கட்டமைப்பும் சாதிய முறைகளினால் வரையறுக்கப்பட்டு இருந்தது. பீகார் பகுதியில் நிலத்தை அதிகார மையமாகக் கொண்ட வைப்பு முறையில் முதலில் அஸ்ரப்புகளும் அவர்களை அடுத்து பக்கால், பவானியா, ஜோதியாக்களும் இருந்தனர். நிலமற்றவர்கள் செய்த தொழிலின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தனர். காஷ்மீர் பகுதிகளில் நிலத்தை அதிகார மையமாகக் கொண்ட வைப்புமுறையில் மாலிக்குகளும், அவர்களை அடுத்து கிஸான், மஸ்தூர்களும் இருந்தனர். மகாராஷ்டிராவில் பாட்டீல் முதலாவதாகவும் அவர்களை அடுத்து புலவாடி, வம்சுமா, பழுதேதர்களும் இருந்தனர். கருநாடகப் பகுதிகளில் கவுடாக்களும் தமிழகத்தில் ஜமீன்தாரும் (மிராசுதாரர்) முதலில் இருந்தனர். ஜமீன்தார்களை அடுத்து பேகாரிகள் என்று சொல்லப்பட்ட குத்தகைதாரர்களும், அவர்களை அடுத்து விவசாயக்கூலிகள், அடிமைகள், களப்பணியாளர்களும் இருந்தனர். இவற்றில் முதலாவதாக குறிப்பிட்ட அனைவருமே பெருநிலப்பரப்புக்கு உரிமையாளராக இருந்து சனாதனத்தையும், அதன் உள்முக்கிய வடிவாகிய சாதியத்தையும் கட்டிக்காத்து வைதீகத்தின் தீண்டாமைக் கோரப்பசிக்குத் தீனியளித்தவர்கள். இந்திய நெடும்பரப்பில் வைதீகம் என்ற வேந்தர்சார் அதிகாரம், நிலத்தை மையமாகக் கொண்டே கட்டி எழுப்பட்டது என்பதே மையநீரோட்ட வரலாறு முன்வைக்கும் விஷயமாகும்.

நில உரிமையில் முதல் நிலையில் கூறப்பட்ட அஸ்ரப், மாலிக், பாட்டீல், கவுடா, ஜமீன்தார்கள் தங்களின் கீழ் இருந்த மக்கள் மீது அதிகாரம் செலுத்திய நிலப்பிரபுக்கள். இவர்கள் நேரடியாக விவசாயத் தொழிலில் ஈடுபடாத சாதிகளில் இருந்து வந்தவர்கள். நிலத்தின் மீதான அவர்களின் ஆதிக்கம் அரசர்கள் வழங்கிய மான்யங்கள் மூலமாகவும், முன்னோர்களின் பரம்பரைச் செல்வாக்கிலும் வாய்த்ததாகும். (மேலது.ப.71) தமிழகத்தில் ஜமீன்தார்களுடன் நேரடியாக நெருங்கி நின்று தொழிற்பட்ட பார்ப்பனர்களுக்கும், வெள்ளாளர்களுக்கும் கணிசமான நிலம் இருந்தது. அவர்களும் நிலப்பிரபுக்களுக்கான மதிப்போடே அணுகப்பட்டார்கள். கேரளத்தில் நிலத்தை அதிகார மையமாகக் கொண்ட வைப்பு முறையில் நாயர்கள் முதல் இடத்தவர்களாக இருந்தாலும், சூத்திரராகக் கருதப்பட்ட இவர்கள் மதச் சடங்குகளால் ஏனைய சூத்திரச் சாதிகளில் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொண்டனர்.

பதினெட்டாம் நூற்றாண்டில் வேளாண்மை சாராத தொழில்துறையில் அபரிமிதமான இலாபத்தைக் கண்டு முதலாளியச் சிந்தனையுடன் பயணிக்கத் தொடங்கிய இங்கிலாந்தின் இயங்கியல், ஆங்கிலேயர் ஆளுகையின் கீழ் இருந்த இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பிரதிபலித்தது. என்றாலும் நிலப்பிரபுத்துவம் முழுமையாக மாறிவிடவில்லை. தொழில்மயமாக்கலில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜமீன்தார்கள் உள்ளிட்ட முதலாமவர்களும், அவர்களோடு நெருங்கிய நிர்வாக உறவுடையவர்களாக இருந்த பிற நிலப்பிரபுக்களும் ஒன்று திரண்டு, ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தி விடுதலை கோரினர். இன்றுவரை ஆங்கில அரசு கொடுத்துச் சென்ற விடுதலையானது பெரிதும் நிலப்பிரபுக்களுக்குச் சார்பானதாக உள்ளதே தவிர, அடித்தள, விவசாயக் கூலிகளுக்கானதாக இல்லை. இந்திய விடுதலைப் போராட்ட அரசியல் கூட நிலத்தை மையமிட்ட நிலபிரபுக்களின் முனைப்புதானே தவிர வேறொன்றுமில்லை.

நிலப்பிரபுக்களின் நுணுக்க அரசியலைப் புரிந்து கொண்ட ஆங்கில அரசு நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் மீது சாதிய அடிப்படையிலான உரிமை நிலவி வந்ததை ஒழிக்க சட்ட பூர்வமான வழிகளை உருவாக்கியது. ஆங்கில அரசின் சட்ட வடிவம் தந்த ஊக்கத்தினால் நிலவுடைமைக்கு எதிரான கிளர்ச்சிகள் உண்டாயின. கிளர்ச்சியை முன்னின்று நடத்திய இயக்கங்களுள் கிசான் இயக்கத்திற்கு மேலதிகமான பங்குண்டு. இந்த இயக்கம் ஜமீன்தார் உள்ளிட்ட முதலாமவர்கள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டது. விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் இவ்வியக்கத்தில் முழு மூச்சுடன் ஈடுபட்டனர். இவ்வியக்கம் நடத்திய தெலுங்கானா கிளர்ச்சிக்குப்பின் பெருவாரியான கிராமப்புற ஏழைகளையும் உறுப்பினர்களாக்கிக் கொண்டது. ஜமீன்தாரி முறையை ஒழித்து அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்கும் விதமாக உபரி நிலத்தை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கக் கோரியும் இவ்வியக்கம் போராட்டங்களை நடத்தியது. இதைப் போன்றே வைதீகச் சனாதனத்திற்குக் குந்தகம் ஏற்பட்டு விடாமல் அதிகாரப் பகிர்வை  வலியுறுத்த ஏற்படுத்தப்பட்ட இயக்கம்தான் வினோபாவின் பூமிதான இயக்கம்.
நிலப்பிரபுத்துவத்தை டி.டி.கோசாம்பி மேலிருந்து நிலப்பிரபுத்துவம், கீழிருந்து நிலப்பிரபுத்துவம் என வகைப்படுத்துகிறார். போர்க்கால ஆக்கிரமிப்புகளாலும், நிலமான்யத்தினாலும் வளர்வது முதலாவது. இரண்டாவது ஆதிக்கமுள்ள விவசாயக்குழுத் தலைவனது பரம்பரையோ அல்லது அக்குழு முழுவதுமோ வளர்ந்து செழித்த நிலபிரபுத்துவம். முன்னதில் உரிமைகளை அரசு வழங்கியது. இந்த உரிமைகள் பரம்பரையாக அவர்களின் சந்ததிக்கும் சென்று, பின் அவ்வுரிமைகள் நிலங்களைக் கடந்து, அந்நிலங்களில் வேலை செய்யும் மக்களைக் கட்டுப்படுத்தும் உரிமைகளாகவும் மாறின. இந்த இரண்டும் சேர்ந்துதான் விவசாயத்தில் உடல் உழைப்பைச் செலுத்தாத சிறுபான்மை நிலப்பிரபுத்துவம் தோன்றக் காரணமாயின

3
தமிழகத்தின் பக்தி இயக்க காலத்தில் மொத்த நிலப்பரப்பில் நீர்வளம் நிறைந்த 75 விழுகாட்டு நிலங்கள் கோயில்களின் உடைமையாகத்தான் இருந்தன. அதற்கு முன்னதாக வர்க்க வேறுபாடுகள் முதன்மையடையாத குழு அமைப்பில் சொத்துரிமை தனிநபர்க்கு அல்லாமல் குழுவின் எல்லா உறுப்பினர்களுக்கும் பொதுவானதாக இருந்தது. அச்சமூகங்களின் தலைமைப் பொறுப்பு சுழற்சி முறையில் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைத்தது. அத்தகைய பொதுத்தன்மைகளை நீக்க முயன்ற வேந்தர்கள், பொதுமை நீக்கி ஆட்சி செய்ய முயன்றதை புறநாநூற்றின் 8,51,129 ஆம் பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. இவர்கள் குழு அங்கத்தினர் அனைவரின் உரிமையையும் நீக்கி அந்த இடத்தில் தனிநபர் உரிமையை நிலைநாட்டினர். இத்தகைய மாறுதல்களை இயல்பானதாகக் காட்டுவதன் மூலம் ஒரு பகுதியினர் தங்களை மற்ற குழுக்களில் இருந்து வேறுபடுத்தி உயர்ந்தவர்கள் எனக் காட்டுவதற்கு வேதங்கள், பார்ப்பனர்களின் உதவியுடன் யாகங்கள் செய்து தங்களை சூரியகுலம், சந்திரகுலம் எனச் சொல்லிக் கொண்டனர். சங்கப்பாடல்களில் வேதம், வேள்வி, பார்ப்பனர் என வரும் இடங்கள் அனைத்தும் தமிழ் வேந்தர்களுடன் சேர்ந்தே வருவதையும், தமிழ் மன்னர்களாக் கருதப்படுபவர்களின் பெரும்பாலான பெயர்கள் வடமொழித் திரிபாக இருத்தலையும் அவதானிக்கலாம்.

சங்ககாலத்தில் காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டன. அதாவது குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகள் மருதநிலங்களாக மாற்றப்பட்டன. இதை இன்னொரு தளத்திலும் புரிந்து கொள்ளலாம். வட மாநிலங்களில் கனிமவளம் மிக்க பகுதிகளில் வாழும் பழங்குடிகளை விரட்டிவிட்டு, அந்த இடங்களை அரசு கையகப்படுத்துவதைப் போல குறிஞ்சி, முல்லை நிலக்குடிகள் விரட்டப்பட்டு, அந்நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டு இருக்கின்றன. தவிர விளைநிலமாக்குதல் என்னும் நடவடிக்கையில் மருதக்குடியேற்றங்களும் நடந்திருக்க சாத்தியக் கூறுகள் அதிகமுண்டு. சங்ககாலத்தில் விளைநிலம் என்பது மருதத்தையை குறித்திருக்கிறது. விளைபொருள் என்பது மருதநில வேளாண் உற்பத்திப் பொருளையே குறித்திருக்கிறது. அதாவது மருதநிலத்தின் நெல்லும் கரும்புமே மதிப்பு மிக்க பொருட்களாகக் கருதப்பட்டன. அவற்றை மையமிட்டே பண்டமாற்றும் நடந்திருக்கிறது.

ஒழுங்குமுறைப் படுத்தப்பட்ட போர்முறை என்று சொல்லப்படும் வெட்சி முதல் உழிஞை வரையிலான நடவடிக்கைகள் ஒருவகையில் திட்டமிட்ட கூட்டான கொள்ளையடிப்பு என்கிறார் எல்.பெர்க்கர். நிலத்தின் உரிமை கைமாறல் பிரச்சினையை விரித்துரைப்பது தான் புறப்பொருள் வெண்பாமாலையின் வஞ்சிப்படலமும், காஞ்சிப்படலமும். வஞ்சிப்படலத்தின் கொளுப்புனைவுகள் வலிமை சார்ந்தும் அதீத வீரம் சார்ந்தும் இருக்க, காஞ்சிப்படலத்தின் கொளுப்புனைவுகள் மென்மை சார்ந்தும் அதீதம் அல்லாத வீரம் சார்ந்தும் இருப்பதைக் காணலாம். புறப்பொருள் வெண்பாமாலையின் நிரை, அரண் கோடல் பிரச்சினை பற்றிப் பேசும் மற்ற படலங்களும் இத்தகைய அமைப்பிலேயே உள்ளன. இது தனித்த விரிவான ஆய்வுக்குரியது.

காஞ்சி என்பதை நிலையாமை எனக் கொள்ளும் வாசிப்பில், நிலம் காத்தல் பற்றிய புனைவைக் கொண்டுள்ள காஞ்சிப்படலத்தின் மூலம் மெலியவர்களுக்கு அவர்கள் நிலத்தின் மீதான உரிமையும் நிலையில்லாதது என்பது உணரப்படுகிறது. அதீத வீரம்சார் புனைவுக்கும், வீரம்சார் புனைவுக்குமான வேறுபாடு என்னவெனில் அதீத வீரம்சார் புனைவு என்பது மரணம் பற்றிய பதிவு இல்லாததாகவும், வீரம்சார் புனைவு மரணம் பற்றிய பதிவினை உடையதாக இருப்பதுமே ஆகும். வீரரின் மரணம் பற்றிய செய்தி வஞ்சிப்படலத்தில் இல்லை. அச்செய்தியைக் காஞ்சிப்படலத்தின் ~தலைக்காஞ்சி| கொளு விவரிக்கும். புறப்பொருள் வெண்பாமாலையைப் பொருத்த மட்டில் ~வஞ்சி| என்பது பகைவர் மேல்செலவு என்றே பொருள் கொள்ளப்படுகிறது. அதாவது சிறு நிலவுடைமையாளர்கள் வேந்தர்களுக்குப் பகைவர்களாகவே கருதப்பட்டு இருப்பதை சங்க இலக்கியப் புறப்பாடல்களில் காணமுடியும். சிறு நிலவுடைமையாளர்களுக்கு பெண்பிள்ளைகள் இருக்குமாயின் அவர்கள் கூடுதல் பகைவர்களாகக் கருதப்பட்டு இருக்கின்றனர். ஐந்நூறு ஆண்டுகால வெளியில் உருவான சங்க இலக்கியத்தில் நிலம் – மையம் – அதிகாரம் எனபது முதல்நிலை நகர்வாகவும், பெண் – மையம் – அதிகாரம் என்பது இரண்டாம் நிலை நகர்வாகவும் இருந்திருக்கிறது. நிலம் சமூக அதிகாரத்தை உற்பத்தி செய்யும் உயிரற்ற பொருளாகவும், பெண் குடும்ப அதிகாரத்தை உற்பத்தி செய்யும் உயிருள்ள பொருளாகவும் கருதப்பட்ட சிந்தனைப் போக்கை சங்க இலக்கிய நெடுகிலும் காணலாம். சமூக அதிகாரத்தைத் தக்க வைக்க நிலம் கையகப்படுத்தலும், குடும்ப அதிகாரத்தை தக்க வைக்க பெண் கையப்படுத்தலும் நடந்திருக்கின்றன.

நிலத்தை மண்மகள், நிலமடந்தை, பூமகள் என்று பெண்ணாக உருவகித்ததையும் இதோடு இணைத்து நோக்கும் போது அதிகாரத்தை நோக்கி நகர்வாக நிலமும், பெண்னும் இருந்துவந்திருப்பதை தெளிந்துணரலாம். நிலத்தில் இருந்து சீதை உருவானாள். சீதை இராமனுக்கு உரிமையானாள் என்னும் புனைவை வைதீகத்தின் சுவையான கதையாக மட்டும் கருதி விட முடியாது. வைணவ அதிகாரத்தின் மையமான இராமன் என்கிற ஆணுக்கு பெண்ணாகிய சீதையும், அவள் உருவான நிலமும் அதிகாரத்தை நோக்கி நகர்வுப்பாதையாக இருந்திருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புரிதலில் நாம் சங்க இலக்கியத்தை வாசிக்கும் பொழுது ~அகம்| காதல் வாழ்வு பற்றியது, புறம் வீரம், ஈகை, கொடை பற்றியது என்ற மரபான புரிதலையும் தாண்டி, ஆண் பெண்ணை மையமாகக் கொண்டு அதிகாரத்தை நோக்கி நகர்ந்ததான பதிவுகளே அகப்பாடல்கள் எனவும், நிலத்தை மையமாகக் கொண்டு நகர்ந்ததான பதிவுகளே புறப்பாடல்கள் எனவும் கருதலாம்.

வேந்தர்களால் கைப்பற்றப் பட்ட நிலங்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கே வழங்கப்பட்டு உள்ளது. அன்றைக்கு அது சமூக ஒழுங்காகவும் இருந்திருக்கிறது. பார்ப்பனர்களுக்கு கிராம நிலங்கள் மட்டுமின்றி கிராமங்களும் தானமாகக் கொடுக்கப்பட்டன. சேரன் இமயவரம்பன், நெடுஞ்சேரலாதன், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போன்ற வேந்தர்கள் பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயங்களை வழங்கினர். அதற்கு மாற்றாக பார்ப்பனர்கள் வேந்தர்களுக்கு ராஜசூயம் போன்ற வேள்விகளை நடத்திக் கொடுத்தனர். மலையமான் திருமுடிக்காரி தனது நாடு முழுவதுமே பிரமதேயமாகக் கொடுத்துவிட்டதையும், அவனுடைய நாட்டை கடலும், பகைவரும் கவர முடியாது என்ற செய்தியை புறநாநூற்றின் 122 – வது பாடல் பதிவு செய்துள்ளது. பார்ப்பனர்களை பொருளாதார அதிகாரமுள்ளவர்களாக மாற்றியதன் முழுப்பங்கும் வேந்தர்களையே சாரும். அவர்களைத் தொடர்ந்து பல்லவர்களும் வடநாட்டுப் பார்ப்பனர்களைக் கொண்டுவந்து குடியேற்றி நிலங்களையும், வீடுகளையும் கொடுத்து அதிகாரமுள்ளவர்களாக மாற்றும் வேலையைத் தொடர்ந்து செய்திருக்கின்றனர்.

நிலக்கொடை மூலம் பார்ப்பனர்களுக்குச் சென்ற அதிகாரம் களப்பிரர் காலத்தில் ஆட்டம் கண்டது. பிரம்மதேயங்களைக் களப்பிரர்கள் பறிமுதல் செய்தது வேள்விக்குடி செப்பேடு மூலம் தெரியவருகிறது. நிலத்தை முதன்முதலாக அளவிட்டு வரிவிதித்த இராஜராஜ சோழன் பிரம்மதேயங்களுக்கு வரிவிலக்கு அளித்து, பார்ப்பனர்களுக்கு பாதுகாப்பும் பொன்னும் கொடுத்து வேந்தருக்கு நிகரான அந்தஸ்தைக் கொடுத்தான். வைதீகச் செல்வாக்கை விரிவுபடுத்தியதும், ஆழப்படுத்தியதும் இராஜராஜனின் தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது.

வேந்தர்களின் நகர்வு வைதீகம், பார்ப்பனியம், தனியுடைமை என்று நகர, அவர்களுக்கு எதிரான இனக்குழுவின் நகர்வு அவைதீகம். அல்பார்ப்பனியம், பொதுவுடைமை என நகர்ந்தது. வேந்தருக்கு எதிரான இனக்குழுவினரே களப்பிரராக வளர்ந்திருக்க வேண்டும். இவர்களின் அதிகார இருப்பு பொதுவுடைமையாக, சுழற்சி முறையில் இருந்தமையால் மொழியையும் பொதுவுடைமையாகக் கருதினர். மேலும் மொழிவழியிலான சிந்தனையும் பொதுமையானதாக இருந்தது. இக்காலத்தில் தான் வைதீகத்திற்கு எதிரான இனக்குழுவினர் மொழிவழியாக அதிகாரத்தைக் கைப்பற்றி அறநூல்கள் இயற்றினர். பொது மனப்பான்மையுடன் இயற்றியதால் தான் களப்பிரர் காலத்தில் உருவான திருக்குறள் உலகப்பொதுமை பேசியிருக்கிறது. இந்தச் சூழலில் வைதீகத்தின் மூலம் அதிகாரத்தைக் கட்டமைக்க, வேந்தர்கள் மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள். பக்திகாலம் தொட்டு மொழியையும் கையகப்படுத்திய வேந்தர்கள் மொழியின் வாயிலாக வைதீகத்திற்கு எதிர்சிந்தனை கொண்டவர்களைக் களப்பிரர் என்றார்கள். பிரம்மதேயங்கள் களப்பிரர்களால் பறிக்கப்பட்டதால், நிலவுடைமையாளர்களாக இருந்த பார்ப்பனர்கள் இலக்கிய வரலாறும், சமூக வரலாறும் எழுதும் போது களப்பிரர் ஆட்சிக் காலத்தை இருண்டகாலம் என்றனர். பார்ப்பனர் அல்லாத பிற நிலவுடைமையாள வரலாற்றாளர்களும் அதை வழிமொழிந்தனர்.

களப்பிரர் காலத்தில் அடிவாங்கிய வேந்தர்களைத் தலைவர்களாகக் கொண்ட வைதீக அரசு நிலத்தை வெறுமனே வைத்திருந்தால் ஆபத்து என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தது. அதன் விளைவாக நிலத்தின் உரிமையை கோவிலுக்கு இடம் மாற்றியது. இதன் பின் கோயில்கள் அதிகாரங்களைக் கட்டமைக்கும் மையங்களாயின. களப்பிரர் காலத்தில் ஆட்டம் கண்ட வைதீகம் பிற்கால வேந்தர்கள் காலமாகிய பக்திக் காலத்தில் சமணப்பள்ளிகளையும், புத்தவிகாரைகளையும் அடித்து நொறுக்கிக்கியது. சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். இந்தக் காலத்தில் தான் காவிரிக்கரையில்  சோழ அரசன் கோச்செங்கண்ணான் 96 கோயில்கள் கட்டியதாக அறிகிறோம். இதை 96 இடங்களில் நிலத்தின் வழியான அதிகாரத்தைக் கோயில் மூலமாகத் தக்கவைத்துக் கொண்ட செயல்களாகப் புரிந்து கொள்ளவும் இடமுண்டு.
இந்நிலையில் களப்பிரர் மூலம் பெற்ற அனுபவத்தால் மொழியையும் கையகப்படுத்திய வைதீகம் அவைதீகர்களை மந்தி போன்றவர்கள். அந்தகர்கள், மாபாவிகள், புலையர்கள், அழுக்குப் பாவிகள் என இழிவு கற்பித்து தீண்டாத்தாகாதவர்களாக மாற்றியது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் தீண்டாமை இல்லை என்கிற கி.ரா.அனுமந்தனின் கருத்தும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. தீண்டத்தகாதவர்களின் நகர்வு பாதை பௌத்தமாகவும், சமணமாகவும் இருந்ததால்தான் அவர்களின் பண்பாட்டை மீள்கட்டுமானம் செய்யும் செயலை அயோத்திதாசர் பௌத்தத்தில் இருந்து தொடங்குகிறார்.

சிற்றிலக்கிய காலத்தில் நிலத்திற்கு பாதுகாப்பாக இருந்துவரும் கோவிலைப் பாதுகாக்கும் பொருட்டும், பெருமைப்படுத்தும் பொருட்டும். வைதீகப் பரவலைத் தக்க வைக்கும் பொருட்டும் தலபுராணங்கள் பாடப்பட்டன. நிலவுடைமையாளரும், தீவிர வைதீகருமான மீனாட்சிசுந்தரம் பிள்ளை அதிகமான தலபுராணங்கள் பாடியதில் உள்ள நுணுக்க அரசியலை இந்த இடத்தில் நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். நிலத்தை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்;ட அதிகாரத்தையும், அதிகாரத்தை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட சனாதனம், கடவுள், கோயில் வைதீகம் ஆகியவற்றை பெரியார் எதிர்த்ததின் நோக்கம் ஜமீன்தாரின் கிராம ஆட்சி மூலம் பாதுகாக்கப்பட்ட சாதியத்தையும், நிலவுடைமையையும் தகர்த்தெரிவதே ஆகும். இப்படிப்பட்டவரைத் தலைவராகக் கொண்ட பிற்காலத்திய திராவிட இயக்கங்களின் ஆட்சிக்காலத்தில் தான் ரியல் எஸ்டேட் தொழில் சூடு பிடித்துள்ளது. இது வேதனையான காலமுரண்.

துணைநூல்கள்
1. The Economical History in England, – Gorge W.South cate
2. Invitation to Socialogy – Peter L Berger
3. Cultural and civilation of Anciant India – D.D. Kosambi
4. Yojana – Magazine December 2011 Bubliced by Government of India
5.    வர்க்கம் – சாதி – நிலம். – கெய்ஸ் ஓம்வெல்ட்
6.    கோவில் – நிலம் – சாதி – பொ.வேல்சாமி
7.    நிலம் – சாதியம் – பௌத்தம் அம்பேத்கரின் பார்வை – எம். தங்கராஜ்
8.    புறப்பொருள் வெண்பாமாலை – கழக வெளியீடு
9.    புறநாநூறு – கழக வெளியிடு

* கட்டுரையாளர்: – முனைவர் ஞா.குருசாமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை –