இசை மேதை தி.கி. ராமமூர்த்தியின் மறைவு.

இசை மேதை தி.கி. ராமமூர்த்தி.எழுத்தாளர்  குரு அரவிந்தன்தமிழ் திரையுலகின் இசைத்துறைக்கு சென்றவாரம் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. ஒன்று திரையுலகில் தனது இனிய குரலால் பாடலிசைத்துக் கொடிகட்டிப் பறந்த பாடகர் பி.பி.சிறீனிவாஸின் இழப்பு, மற்றையது தமிழ் திரையுலகில் தனது இசையால் பல ஆண்டுகாலம் ஆளுமை செய்த இசையமைப்பாளர் ரி.கே. ராமமூர்த்தியினுடையது.  1922ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்த ரி,கே. ராமமூர்த்தி 2013 ஏப்ரல் மாதம் 17ம்திகதி புதன்கிழமை நோய்வாய்ப்பட்டு தனது 91வது வயதில் சென்னை தமிழ்நாட்டில் காலமானார். அவரது புனித உடல் சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. எம்மைவிட்டுப் பிரிந்த அமரர் ராமமூர்த்திக்கு 4 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் உட்பட 11 வாரிசுகள் உள்ளனர்.  ரி.கே. ராமமூர்த்தி என்று பலராலும் அழைக்கப்பட்ட இவர், தான் பிறந்த ஊரான திருச்சிராப்பள்ளியின் முதல் எழுத்தையும், தனது தந்தையின் முதலெழுத்தiயும் தனது பெயருக்கு முன்பாகப் பாவித்துக் கொண்டிருந்தார். சி.ஆர். சுப்புராமனின் இசைக்குழுவில் வயலின் வாசிப்பதில் மிகவும் திறமைசாலியாக இருந்த இவர் பின்னர் எம். எஸ் விஸ்வநாதனுடன் இணைந்து பல பாடல்களுக்கு இசை அமைத்திருக்கின்றார். இவரது தந்தையான கிருஸ்ணசுவாமி ஐயர், தாத்தாவான மலைக்கோட்டை கோவிந்தசுவாமி ஐயர் ஆகியோர் திருச்சிராப்பள்ளியில் வயலின் வாசிப்பதில் மிகவும் பிரபலமாக இருந்தார்கள்.  அவர்களிடம் இருந்து இவர் இந்த இனிய வயலின் இசையைக் கற்றுக் கொண்டார். அந்த நாட்களில் பிரபல இசை அமைப்பாளராக விளங்கிய எஸ். பி. வெங்கட்ராமன்தான் இவரைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
 
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படப் பாடல்களுக்கு இவர் இசையமைத்திருக்கின்றார். எம். எஸ். விஸ்வநாதனோடு இணைந்து 1952ல் ஆரம்பித்து, 60களில் சுமார் 700 தென்னிந்தியப் படங்களுக்குமேல் இவர் இசையமைத்திருக்கின்றார். பணம் படத்திற்காக 1952ல் இருவரும் இணைந்து இசையமைக்கத் தொடங்கி, அதன் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களுக்கு இருவரும் இணைந்து இசையமைத்தனர். ரி.கே.ராமமூர்த்தி வயலின் இசைப்பதில் திறமை மிக்கவராகவும், எம்.எஸ். விஸ்வநாதன் பியானோ, கீபோர்ட், ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகளைக் கையாள்வதில் திறமை மிக்கவராகவும் இருந்தனர். 1965ம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு இசையமைத்ததைத் தொடர்ந்து சில தனிப்பட்ட காரணங்களுக்காக எம். எஸ். விஸ்வநாதனை விட்டுப் பிரிந்த இவர் தனிப்பட்ட முறையில் 1966 தொடக்கம் 1986வரை சுமார் 19 படங்கள்வரை இசையமைத்திருக்கின்றார். இருபத்தியொன்பது வருடங்களின்பின் மீண்டும் 1995ம் ஆண்டு இருவரும் இணைந்து சத்தியராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் படத்திற்காக இசையமைத்திருக்கிறார்கள்.
 
இவர் தனியாக இசையமைத்த திரைப்படங்களில் சாது மிரண்டால், தேன் மழை, மறக்க முடியுமா, நான், தங்கச் சுரங்கம், காதல் ஜோதி, ஆலயம், சோப்பு சீப்பு கண்ணாடி, சங்கமம் போன்ற படங்கள் மிகப்பிரபலமானவை மட்டுமல்ல, திரைப்பட ரசிகர்களின் பாராட்டையும் பெற்றிருந்தன. ஆனால் எம். எஸ். விஸ்வநாதனுக்குக் கிடைத்ததுபோல அதிக படங்களின் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை.
 
ஒரு காலத்தில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி என்றால் அவர்களின் இசையைக் கேட்பதற்கென்றே பல இசையார்வலர்கள் காத்திருந்தார்கள். இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்தபோது ‘மெல்லிசை மன்னர்’ என்று தமிழ்த்திரையிசை ஆர்வலர்களால் பாராட்டப்பட்டனர். இலங்கை வானொலியில் அவர்கள் இசையமைத்த பாடல்கள் ஒலிபரப்பாத நாளேயில்லை எனலாம். அந்த அளவிற்கு அவர்கள் தமது இசை அமைப்பின் மூலம் தமிழ்த் திரையிசை இரசிகர்களைக் கவர்ந்திருந்தனர். சிவாஜிகணேசன், என்.டி. ராமராவ் ஆகியோர் நடித்த புகழ்பெற்ற படமான கர்ணன் திரைப்படத்திற்கு மெல்லிசை மன்னர்கள் இருவரும் இணைந்தே  இசையமைத்திருந்தனர். மேலும், மறக்கமுடியமா படத்திற்காகக் கலைஞர் கருணாநிதியின் ‘காகித ஓடம் கடலலைமேலே’ என்ற பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். எம்.ஜி.ஆர். நடித்த பணம் படைத்தவன் படத்தில் வரும் ‘கண் போனபோக்கிலே கால் போகலாமா’ என்ற பாடலில் வரும், பலரையும் கவர்ந்த வயலின் இசை இவருக்கே சொந்தமானது.
 
மெல்லிசை மன்னர்கள் இணைந்து இசையமைத்த பாடல்களில், எம்.ஜி. ஆரின் மன்னாதி மன்னன் படத்திற்காக மருதகாசியின் ஆடாத மனமும் உண்டோ, சிவாஜியின் பாசமலர் படத்திற்காக மலர்ந்தும் மலராத பாதி மலர்போல, பாக்கியலட்சுமி படத்திற்காக மாலைப்பொழுதின் மயக்கத்திலே, பார் மகளே பார் படத்திற்காக அவள் பறந்து போனாளே, பாகப்பிரிவினை படத்திற்காக தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும், ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக அதோ அந்தப் பறவைபோல, நான் படத்திற்காக அம்மனோ சாமியோ போன்ற மறக்கமுடியாத பல பாடல்கள் இன்றும் நினைவைவிட்டு அகலாதிருக்கின்றன. தமிழ் திரைப்பட இசையுலகிற்கு அவராற்றிய பணி மகத்தானது. காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்களில் இவருடைய பங்கும் நிறைந்து இருக்கின்றது.
 
தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்ற இவரைச் சமீபத்தில் ஜெயா தொலைக்காட்சியின் கௌரவிப்புவிழாவில் தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா இவரது இசைத்திறமையைப் பாராட்டி மேடையில் வைத்துக் கௌரவித்திருந்தார். அமரர் ராமமூர்த்தியின் மறைவுக்குத் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். எம் எஸ். விஸ்வநாதன், இளையராஜா, நடிகர் சிவகுமார், எஸ்.பி. முத்துராமன் உட்பட பல திரையுலகப் பிரமுகர்கள் வருகைதந்து அமரரான அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் ரி.கே. ராமமூர்த்தியின் பூதவுடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு மயிலாப்பூர் கிருஷ்ணாம்போட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மெல்லிசை மன்னரில் ஒருவரான ரி.கே. ராமமூர்த்தி இசையார்வலர்களை விட்டுப் பிரிந்தாலும் அவரது இசை காலமெல்லாம் ரசிகர்களின் இதயத்தில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

kuruaravinthan@hotmail.com