இலக்கியத்தினூடே பயணித்த இயக்குநர் பாலுமகேந்திரா

இலக்கியத்தினூடே   பயணித்த   இயக்குநர்    பாலுமகேந்திரா‘பாலு… உன்னுடைய   நுண்ணுணர்வுகளுக்கும்   இந்த    மீடியத்தின்   மீது   நீ கொண்டிருக்கும்    காதலுக்கும்    உன்னுள்    இருக்கும் படைப்புத்தாகத்திற்கும்   நீ   ஒரு   இயக்குநராக    மாறுவதுதான்   இயல்பானது —  விரைவில்  நீ   ஒரு   படத்தை    இயக்குவாய்— Mark My Words    –  என்று    பல    வருடங்களுக்கு    முன்னர்    கல்கத்தா மருத்துவமனையிலிருந்தவாறு –    தன்னைப்பார்க்கவந்த   பாலுமகேந்திராவை    வாழ்த்தியவர்   சர்வதேச   புகழ்  பெற்ற  இயக்குநர் சத்தியஜித் ரே. புனா   திரைப்படக்கல்லூரியில்   பாலுமகேந்திரா    ஒளிப்பதிவுக்கலையை பயின்ற    காலத்தில்    வருகைதரு   விருந்தினராக   விரிவுரையாற்ற   வந்த சத்தியஜித்ரேயை   பாலு மகேந்திரா   இலங்கையில்   மட்டக்களப்பில்  கல்வி    கற்றுக்கொண்டிருந்த    காலத்திலேயே   மிகவும்   நேசித்தவர். ரேயின்   ஆளுமையை    உள்வாங்கிக்கொண்ட   திரையுலக  கலைஞர்களின் வரிசையில்  பாலுமகேந்திரா  மிகவும்  முக்கியமானவர். ரே  மறைந்த  பின்னர்  1994   ஆம்   ஆண்டு  வெளியான  ஒரு  மேதையின் ஆளுமை   என்ற   தொகுப்பு  நூலில்  பாலுமகேந்திரா எழுதியிருக்கும் கட்டுரைகள்  திரைப்படத்துறையில்   பயிலவிருப்பவர்களுக்கு  சிறந்த  பாட நூல். இந்திய   சினிமாவின்  நூற்றாண்டு  தமிழகத்தில்   கொண்டாடப்பட்டுள்ள கால கட்டத்தில்  பாலுமகேந்திராவின்  மறைவை – தென்னிந்திய   சினிமாவில் அவரது   பங்களிப்பு  தொடர்பாக  ஆராய்வதற்கும் –  அவரது  இழப்பு பலருக்கும்  வழி  திறந்திருக்கிறது. பாலு மகேந்திரா  இயல்பிலேயே  நல்ல  தேர்ந்த  ரசனையாளர். இலக்கியப்பிரியர்.  தீவிர  வாசகர்.  இலங்கையில்  அவர்  மட்டக்களப்பில் படித்த  காலத்திலும்  சரி  கொழும்பில்  வரைபடக்கலைஞராக  பணியிலிருந்த காலத்திலும்  சரி  அவரது  கனவுத் தொழிற்சாலையாக  அவருக்குள்ளே தொழிற்பட்டது  அவர்  நேசித்த  சினிமாதான்.

ஒரு  இலங்கையர்  இந்தியா  சென்று  முக்கியமான  ஒரு  துறையில் ஈடுபட்டுழைத்து  அங்கீகாரம்  பெறுவது  என்பது  முயற்கொம்புதான். புறக்கணிப்புகளுக்கும்  ஏமாற்றங்களுக்கும்  குழிபறிப்புகளுக்கும் குத்துவெட்டுக்களுக்கும்   வஞ்சனைகளுக்கும்  பெயர்போன  திரையுலகத்தில்  எதிர்நீச்சலிட்டு  தன்னை  தக்கவைத்துக்கொண்டதுடன் தமிழ்  சினிமாவை  உலகத்தரத்துக்கு  எடுத்துச்செல்ல  முயன்றதுடன்  பல புதிய  இயக்குநர்களின்  வரவுக்கும்  காரணமாக விளங்குவது   என்பது   சாதனைதான். பாலுமகேந்திராவின்   வாழ்வையும்    பணிகளையும்   ஆராயும்பொழுது  அவரது  ஆளுமையின்  தூண்டலாக  அவருடனேயே   வாழ்ந்திருப்பவர் பயணித்திருப்பவர்   அவரது  ஆசான்   சத்தியஜித்ரேதான்.

சத்தியஜித்ரே   அந்திமகாலத்தில்   இதய  நோயாளியாகி  சிகிச்சைகளுடன் மருந்து   மாத்திரைகளுடன்   திரைப்படத்தளத்துக்கு   வெளியே   ஒரு அம்புலன்ஸை   தயார்  நிலையில்  வைத்துக்கொண்டே   இறுதிக்கால படங்களை   இயக்கினாராம். அவரைப்போன்றே   பாலுமகேந்திராவும்   சில   வருடங்களுக்கு   முன்னர் திடீரென்று   வந்த   இதய   நோயினால்   பாதிக்கப்பட்டு   மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று   வந்தவர்தான்.   தொடர்ச்சியாக   மருந்துகளை உட்கொண்டவாறு   மருத்துவர்களின்   ஆலோசனைளை   கேட்டவாறு   தனது தொழிலை   பக்தியுடன்  –    காதலுடன்    நேசித்துவந்தார்.

முதலில்  1970  இல்    மலையாளத்தில்    நெல்லு    என்ற   படத்தின் ஒளிப்பதிவாளராக    இயங்கி    அதற்கு   கேரள   மாநில  சிறந்த ஒளிப்பதிவாளர்   விருது பெற்றார்.    சங்கராபரணம்,    முள்ளும் மலரும் முதலான    படங்களுக்கும்    பாலுவே    ஒளிப்பதிவாளர். மட்டக்களப்பு    அமிர்தகழி     கிராமத்தின்    தனது    பால்யகால நினைவுகளைத்தான்    தமது   முதலாவது    திரைப்படமான  அழியாத கோலங்களில்    சித்திரித்தார்.     கன்னடத்தில்    கோகிலா    என்ற   படத்தை இயக்கி    அதற்கு    தேசியவிருது பெற்றார். அவரது   மூடு பனி,   இரட்டை வால் குருவி,    ஜூலி கணபதி    முதலான படங்கள்    ஆங்கிலப்படங்களின்   தழுவல்கள் என்றபோதிலும்    அந்த உணர்வே    தமிழ் ரசிகர்களை    அண்டவிடாமல்     சிறப்பாக படமாக்கியிருந்தார். அழியாத    கோலங்கள்,    மூன்றாம் பிறை    முதலான    அவரது    படங்கள் –  பார்த்துவிட்டு   வந்தபின்னரும்    பலகாலம்    மனதில்    அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தவை.

மூன்றாம் பிறையின்     இறுதிக்காட்சியில்    கமல்ஹாசன்    தொட்டபெட்ட ரயில்    நிலையத்தில்    அழுதுபுரண்டு   ரசிகர்களிடத்தில்    கண்ணீரை வரவழைக்கும்  காட்சி –  அவரை  அடையாளம்   காணமுடியாமல்   ஸ்ரீதேவி ரயிலில்   சென்றுவிடும் காட்சி    என்பன     ரசிகர்களை    நீண்டகாலத்திற்கு மனதிலிருத்தியது. சில    மாதங்களுக்கு    முன்னர்   அந்தப்பிரதேசத்திற்குச்  சென்றிருந்த பாலுமகேந்தரா    திடீரென்று    ஓடிச்சென்று    அந்த    ரயில்   நிலைய ஆசனத்தில்    அமர்ந்துவிட்டு   மிகுந்த    பரவசத்துடன்  எழுந்துவந்தாராம்.

அவரது    படங்களில்   நடித்தமையினால்   இந்தியாவில்    தேசியவிருது பெற்றவர்கள்    கமல்ஹாசன்       (மூன்றாம் பிறை)    அர்ச்சனா (வீடு)    சந்தியாராகம்,    நீங்கள் கேட்டவை,    சதிலீலாவதி    உட்பட    பல   படங்களை   இயக்கினார். பாலுமகேந்திராவின்    இயக்கத்தில்    நடிப்பதற்கு    மிகவும்    விரும்பியவர் நடிகர்திலகம்     சிவாஜிகணேசன்.     ஒரு    சந்தர்ப்பத்தில்    பாலுமகேந்திராவை    சந்தித்தபொழுது     ‘ ஏன்  சார்  நானெல்லாம் உங்களுக்கு    ஒரு    நடிகனாகவே   தென்படவில்லையா?”    என்று ஏக்கத்துடன்    கேட்டவர்.  ஆனால் – இறுதிவரையில்   அவரது   விருப்பத்தை   தன்னால்   நிறைவேற்ற முடியாமல்   போய்விட்டதாக   வருந்தினார்   பாலுமகேந்திரா. வீடு    படத்திற்காக    கட்டப்பட்ட    வீட்டை    திரையில்    பார்த்திருப்பீர்கள்.    சாலிக்கிராமத்தில்    அமைந்துள்ள    அந்த    வீடுதான் தற்பொழுது    பாலுமகேந்திராவின்    திரைப்படக்கல்லூரியாக    இயங்குகிறது. சொக்கலிங்க   பாகவதர்    என்ற   பாடகரை    பாலு மகேந்திரா   ஒரு குணச்சித்திர    நடிகராக    அறிமுகப்படுத்திய    படம்    வீடு.   அந்த வீட்டைச்சுற்றித்தான்   எத்தனை    கதைகள்.    பேராசிரியர்   கா. சிவத்தம்பி எப்பொழுதாவதுதான்    அபூர்வமாக    திரைப்படங்கள்    பற்றி     விமர்சனம் எழுதுவார்.    அவர்   –   வீடு   பற்றி     எழுதிய   விமர்சனம்     தமிழகத்தின் சினிமா    இதழ்     பொம்மையில்    வெளியாகியிருக்கிறது. அந்த    வீடு    பல    திரை ரசிகர்கள்    –   இலக்கியச்சுவைஞர்களையும் பாதித்திருக்கிறது.     மடத்துவாசல்    என்ற    வலைப்பதிவை    நடத்தும் வானொலி    ஊடகவியலாளர்     காணா .பிரபா    என்பவர்    இலங்கையில் போர்    முடிவுற்ற     பின்னர்    அங்கு    வடக்கில்   பராமரிப்பின்றி சிதிலமாகிப்போன     வீடுகள்   குறித்த    பதிவில்    பாலு மகேந்திராவின்    வீடு    ஏற்படுத்திய     உணர்வலைகள்    பற்றியும்    குறிப்பிடுகிறார்.

பாலுமகேந்திரா    இலங்கையில்    பிறந்து   தமிழகத்தில்   திரையுலகில் உச்சநிலைக்குச்சென்றாலும்     அவர்   ஈழத்து   தமிழ்    திரைப்படங்கள்    குறித்து    அதன்    வளர்ச்சி    தொடர்பாக      அக்கறைகாண்பிக்கவில்லை என்ற    விமர்சனமும்    முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவர்    இந்தியாவில்    குறிப்பாக     தமிழ்நாட்டில்    காலூன்றுவதற்கே   பட்ட பாடு     கொஞ்சநஞ்சமல்ல.     அதற்கிடையில்     அவரது    காதலி   ஷோபாவின் தற்கொலை.    அதனால்    பொலிஸ்    விசாரணை    அழுத்தங்கள். அந்தச்சாட்டில்    அவரை    இலங்கைக்கு    நாடு   கடத்துவதற்கு   நடந்த சதிகள்…    இப்படி    அவர்    வாழ்வில்  தொடர்ந்து    போராடிக்கொண்டே இருந்தவர். எனினும்  –   அவருக்கு    இலங்கையில்     மட்டக்களப்பு    சிறை   உடைப்பு குறித்தும்     இலங்கைப்   போரின்    கோரமான    பக்கங்கள்   தொடர்பாகவும்  படம்    இயக்கும்   எண்ணம்    தொடர்ந்து   கனவாகவே இருந்துவந்திருக்கிறது.    ஆனால்    அதற்கான    சூழல் அவருக்குப்பொருந்திவரவில்லை.      போர்    குறித்து    எடுப்பதாயின்    இரண்டு    தரப்பையும்    விமர்சனத்துக்குள்ளாக்க    நேரிடும்   என்ற தயக்கமும்   அவரிடமிருந்தது. பாலமகேந்திரா    தீவிர   இலக்கிய    வாசகர்    என்பதை    தொடக்கத்தில் குறிப்பிட்டோம்.    அவர்    ரப்பர்    போன்று    இழு  இழு   என்று    இழுபடும் தொலைக்காட்சி    நாடகங்களை    இயக்குவதற்கு     முனவரவில்லை    என்பது எமக்கெல்லாம்     மிகுந்த    ஆறுதல். ஆனால்   கதைநேரம்    என்ற   தொடரில்   சுந்தரராமசாமியின்   பிரசாதம் சிறுகதை    உட்பட    பல   நல்ல சிறுகதைகளை    குறும்படங்களாக இயக்கிவெளியிட்டார்.    இலங்கை    எழுத்தாளர்    கே.எஸ். சிவகுமரனின் சிறுகதைத்தொகுப்பு    பெர்லினில்    வதியும்    கருணாகரமூர்த்தியின் அவர்களுக்கென்றொரு   குடில்  என்ற   கதைத்தொகுப்பு   ஆகியவற்றுக்கு முன்னுரையும்    எழுதியிருக்கிறார்.

செ. யோகநாதன்    எழுதிய – தொகுத்த   சில   நூல்களின்   அட்டைப்படங்களும்   பாலுமகேந்திராவின்   கெமராவின்    கலை வண்ணம்தான். இலங்கையின்   மூத்த   எழுத்தாளரும்    குமரன்   பதிப்பகத்தின் நிறுவனருமான    சென்னை    வடபழனியில்   வசிக்கும்  செ.கணேசலிங்கனை  –  அவரைச் சந்தித்த   காலம்   முதல்   தமது    உடன்பிறவாத    மூத்த   சகோதரனாக    வரித்துக்கொண்டவர்தான் பாலுமகேந்திரா. பாலுவின்   கோகிலா    படத்தின்   தயாரிப்பு    நிருவாகியாக   இயங்கியவர் கணேசலிங்கன். பாலுமகேந்திராவின்    தொடர்புகளும்    மாக்சீய சிந்தனைகளும்    கணேசலிங்கனை    கவர்ச்சிக்கலையின்   மறுபக்கம் என்ற    திரையுலகம்    சம்பந்தமான    நாவலையும்    எழுதத்தூண்டியது.

கடந்த    ஆண்டு     இலங்கையில்    இயங்கும்     எழுத்தாளர்    ஊக்குவிப்பு மையம்    பாலுமகேந்திராவுக்கு    சிறந்த    இயக்குநருக்கான    வாழ்நாள் சாதனையாளர்    விருதை   வழங்கியபொழுது    அந்த   விருது கிழக்கிலங்கையில்    மட்டக்களப்பிலிருந்து    கிடைத்தமையினால்    தனக்கு கிடைத்த   ஏனைய    விருதுகளிலிருந்து    உயர்ந்த   விருது   என்று புளகாங்கிதமாக    அவர்    சொன்னதாக   குறிப்பிட்ட     ஊக்குவிப்பு   மையத்தின்    ஸ்தாபகர்    ஓ.ஏ. குணநாதன்   குறிப்பிடுகிறார்.

புலம்பெயர்ந்தவர்களின்    வலி    குறித்து   எழுதுவதற்கு   நாம் வார்த்தைகளை   தேடுவது    போன்று   பாலு   மகேந்திராவும்   தனது  தாயகம்    பற்றிய    ஏக்கத்துடன்தான்    இறுதிவரையில்   வாழ்ந்து மறைந்திருக்கிறார். ஒரு படைப்பாளியின்   பொறுப்பு    குறித்து    எம்மில்    பலருக்கு பல்வேறுவிதமான    கருத்துக்கள்   இருக்கலாம். பாலுமகேந்திராவின்    ஆசான்   சத்தியஜித்ரே   –  அவருக்குத்   தெரிவித்த படைப்பாளியின்    பொறுப்பு   பற்றி   பாலுவின்    வார்த்தைகளிலேயே இங்கே   பார்ப்போம். ஒரு    படைப்பாளியும்    மனிதனே.    இன்னும்    சொல்லப்போனால்   மற்ற மனிதர்களை    விடச் சற்று    முழுமை    பெற்ற  மனிதன்.    தனது வாழ்க்கைச்சூழலில்     இருந்தும் – அத்தோடு    பின்னிப் பிணைந்திருக்கும் அன்றாடக் கருமங்களிலிருந்தும்    முழுவதுமாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதென்பது     அவனால்    முடியாத   காரியம். எனவேதான்    எந்த    ஒரு   படைப்பிலும்    ஏதோ   ஒரு   வகையில்   இந்த சமூகப்பிரக்ஞை    என்பது    இடம்பெற்றே தீரும்.    ஒரு    படைப்பாளி பார்த்துக்கொள்ள    வேண்டியதெல்லாம் –    தான்    ஒரு   பிரசாரகனாக மாறிவிடக்கூடாது    என்பது    பற்றித்தான். பிரசாரம்   செய்வது    படைப்பாளியின்    வேலையல்ல.    எந்த   ஒரு சமூகப்பிரச்சினைக்கும்    தீர்மானமான – முடிவான    தீர்வுகளைக்  கொடுக்க எவராலும்   இயலாது.    சரியா – தப்பா   என்று   நியாயம்   வழங்குவதோ தீர்வு   சொல்வதோ   ஒரு  படைப்பாளியின்   வேலையல்ல.  அவனுக்கு   அது முக்கியமல்ல.    கட்டாயமுமல்ல.    சரியுமல்ல.    (ஆதாரம் : ஒரு மேதையின் ஆளுமை – நூல்)  இந்திய   சினிமாவின்    நூற்றாண்டு    காலத்துள்   பாலமகேந்திராவின்   இடம் அவரது    அழியாத    கோலங்கள்  போன்று   அழியாத   தடம் பதித்திருக்கிறது. அவர் மறைந்தாலும்   வாழும்   கலைஞராகத்தான்    இருப்பார்.

letchumananm@gmail.com