இலங்கை அரசியல் ஆடுகளத்தில் ஜனாதிபதியின் கோமாளிக் கூத்து

இலங்கை அரசியல் ஆடுகளத்தில் ஜனாதிபதியின் கோமாளிக் கூத்துஒழுங்கும், நேரான இலக்குமுள்ள, வஞ்சக உள்ளமற்ற, நேர்மையான  தலைவனொருவனைக் காணும் பாக்கியத்தை இலங்கை எனும் தேசம் பெறவேயில்லை. தலைவனாக முகமூடியணிந்தவாறு, நாட்டு மக்களை பலிகடாக்களாக்கி விளையாடும் கோமாளிகளும், சுயநலவாத நரிகளும் ஆட்சிக்கு வந்து தேசத்தைச் சூறையாடுவதையே எப்போதும் செய்து கொண்டிருக்கிறார்கள். தமது கையாலாகாத்தனத்தை மூடி மறைப்பதற்காக அடுத்தவர் மீது பழி சுமத்தும் தலைவர்கள் இலங்கையை மீண்டும் மீண்டும் ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எனும் பொய்காரரை ஜனாதிபதியாக ஆக்கியது இந் நாட்டு மக்களால் நிகழ்த்தப்பட்ட மிகவும் பாரதூரமான, தவறான முடிவாக மாறியிருக்கிறது. தனது அளவிட முடியாத தன்னம்பிக்கையோடு, சில தினங்களுக்கு முன்னர் அவர் பாராளுமன்றத்தின் அதிகப்படியான வாக்குகள் தனக்கேயுள்ளன எனப் பெருமையடித்துக் கொண்டிருந்தார். எனினும், அவரது வாய்ச் சவடால் பொய்யாகி, அவருக்கு எவ்விதத்திலும் ஆதரவற்ற நிஜ உலகும், யதார்த்தமும் தென்படத் தொடங்கிய போது, அதனை மறைப்பதற்காக அவர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் புதியதொரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி திடீரென மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்கி, இலங்கையின் ஆட்சியமைப்பைக் கேலிக்குரியதாக்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி இரவு திடீரென பாராளுமன்றத்தைக் கலைத்ததன் மூலம் மீண்டும் இலங்கை அரசியலமைப்பைக் கையிலெடுத்து விளையாட்டுக் காட்டத் தொடங்கியிருக்கிறார். இனி இது மாதக் கணக்கில் நீடிக்கக் கூடும்.

ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை, தான் புதிதாக அமைக்கப் போகும் ஆட்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் 113 பேரின் ஆதரவு இருப்பதாகவும், தான் ஒருபோதும் பாராளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லையெனவும் கூறிக் கொண்டிருந்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. அவ்வாறு திடீரென பாராளுமன்றத்தைக் கலைத்தால் புதிதாக இணைந்துள்ள பாராளுமன்ற அமைச்சர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வழியில்லாமல் போகும். அதனால், தான் அதனைச் செய்யப் போவதில்லை என ஒன்பதாம் திகதி காலைவேளை கூட கூறிவிட்டு அன்றிரவே திடீரென பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டார்.

இவ்வாறா நாட்டின் பிரதான பொறுப்பிலிருக்கும் ஜனாதிபதி சட்டத்தைச் சீர் குலைக்கும் விதத்தில் செயற்பட்டதோடு, மொத்த தேசத்தையும் பொய் கூறி ஏமாற்றியிருக்கிறார். அவரது இவ்வாறான மோசமானதும், இழிவானதுமான செயற்பாடு நாட்டு மக்களுக்கும், இளந் தலைமுறையினருக்கும் எடுத்துக் காட்டுவது என்ன? அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக எந்தப் பொய்யையும் கூறி, எவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளிலும் எவரும் நேர்மையும், வெட்கமுமின்றி ஈடுபடலாம் என்பதைத் தானே?

இன்று, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இலங்கை அரசியலையும், அரசாங்கத்தையும், ஆட்சிப்  பொறுப்பையும், அதிகாரத்தையும் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் இந்த விளையாட்டு, இலேசானதல்ல. பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இந்த விளையாட்டுக்காக நாட்டில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள், பரம்பரை பரம்பரையாக எதிர்காலத்திலும் நஷ்ட ஈட்டினைச் செலுத்திக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும் பொறுக்கித்தனமான செயற்பாடு இது. அவர் கலாசார மதத் துணியால் தன்னைப் போர்த்திக் கொண்டு, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தவாறு, ஜனநாயக் கோட்பாடுகளோடு மனம் போன போக்கில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு பொறுக்கியாக மிளிர்கிறார்.

‘எதிர்காலத்தில் மீண்டும் உனக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பை வழங்குவேன்’ என மஹிந்த ராஜபக்‌ஷ அளித்த வாக்குறுதியின் பேரிலேயே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த மோசமான அரசியல் திட்டங்களைச் செய்து வருகிறார் என்றாலும், ஜனாதிபதிகளுள் மிக மோசமான, வஞ்சகமும் துரோகமும் நிறைந்த ஒரு தலைவராக நாட்டு மக்களிடையே தன்னைப் பதிய வைத்து விட்டார். இதற்குப் பிறகும், எவரேனும், ‘ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மனித உரிமைகளுக்காகவும், இந் நாட்டின் அனைத்து இன மக்களதும் உரிமைகளுக்காகவும் முன்னின்று போராடுபவர்’ என கூறுவாரானால், அதைப் போன்றதொரு கொடூர நகைச்சுவை வேறில்லை. இனியொருபோதும் அவர் மீது துளி கூட நம்பிக்கை வைக்க முடியாத அளவுக்கு, அவர் சுயமிழந்த ஒரு கூறு கெட்ட கோமாளியாகியிருக்கிறார் என்பதே நிதர்சனம்.

நாட்டின் ஜனாதிபதிக்கு சிந்திக்கும் திறன் கடுகளவேனுமில்லை எனில், நாம் கவலைப்பட வேண்டியது அவர் குறித்தல்லாது, அவரையே இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் சுரணையற்ற பொதுமக்கள் குறித்துத்தான். ஆமாம். நாங்கள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகத் தேர்ந்தெடுத்திருப்பது இவ்வாறானதொரு முட்டாள் தலைவரைத்தான்.

2015 ஆம் ஆண்டு ஆளுங்கட்சியாகப் பதவியேற்ற கட்சியின் முற்றுமுழுதான தோல்விக்குக் காரணம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைத் தவிர வேறொருவரும் அல்லர். அதை அவரே தனது செயற்பாடுகளின் மூலமாக நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார். அவர், அவரையே நம்பியிருந்த மொத்த தேசத்தையும் தனது சுயநலமான குறுகிய மனப்பான்மையுடனான தீர்மானங்களால் சிறிதும் கூச்சமற்று, கைவிட்டிருக்கிறார். எதிர்வரவிருக்கும் 2019 தேர்தலில் இந்த நபர்கள் நிற்கப்போகும் கட்சியைத் தோல்வியடையச் செய்வதற்காக நாட்டு மக்கள் அனைவரும் போராட வேண்டியிருப்பது அதனாலேயாகும்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, மூன்று வருடங்கள் எனும் மிகக் குறுகிய காலத்துக்குள், ஒரு நாட்டை ஏன் ஒரு பிரதேசத்தைக் கூட ஆட்சி செய்ய, தான் எவ்விதத்திலும் பொருத்தமற்றவர் என்பதை நிரூபித்திருக்கிறார். தனது கையாலாகாத்தனத்தை மற்றவர் மீது பழியாகச் சுமத்தி, வேறொருவரது ஒளியினூடு வெளிச்சத்துக்கு வந்து, அந்த நபரையும் காட்டிக் கொடுத்து, தனது தனிப்பட்ட இலக்குகளை வென்றெடுக்கும் சுயநலவாதியாக அவர் ஆகியிருக்கிறார். அவருக்கே, அவர் எடுத்திருக்கும் தீர்மானங்கள் மிகச் சரியானவை என்பதை சட்டரீதியாக நிரூபிக்க முடியாமலிருக்கும் சந்தர்ப்பத்தில், தனது மனம் போன போக்கில் மேலும் மேலும் தீர்மானங்களெடுத்து மொத்த தேசத்தையும் பலிகடாவாக்கி விட்டிருக்கிறார். தனது தவறை சரி செய்வதற்குப் பதிலாக, ஒரு தவறை மறைப்பதற்காக மேலுமொரு மோசமான தவறைச் செய்வது அவருக்குப் பழகிப் போயிருக்கிறது. தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் இலங்கை எனும் நாடு தற்போது தனது கௌரவத்தை இழந்து விட்டிருக்கிறது.

தற்காலத்தில் இலங்கையில் அரசியல் சதித் திட்டங்கள் அரங்கேறிக் கொண்டிருப்பதாகவும், அதற்கு மூல காரணம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன என்பதாகவும் முன்னணியிலிருக்கும் சர்வதேச ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ‘திடீரென படுதோல்வியைச் சந்திந்த இலங்கையின் பலம் மிக்க அரசியல்வாதியான மஹிந்த ராஜபக்‌ஷ தனது குடும்பத்தவர்களையும் இணைத்துக் கொண்டு மீண்டும் திடீரென ஆட்சிக்கு வந்திருக்கிறார்’ என சர்வதேச ஊடகமொன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது. உலகம் முழுவதும் ‘மைத்ரிபால சிறிசேன அரசியல் சதிகளின் சூத்திரதாரி’ எனக் குறிப்பிடும்படியான கட்டுரைகள் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. அவர் மீது சர்வதேசம் வைத்திருந்த நன்மதிப்பும், நம்பிக்கையும் கூட கரைந்துருகி ஓடிக் கொண்டேயிருக்கிறது.

இலங்கை வரலாற்றிலேயே மக்கள் மத்தியிலிருந்து மிகுந்த வரவேற்போடு ஆட்சிக்கு வந்து, மிகக் கேவலமாக விடைபெறப் போகும் ஜனாதிபதியாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. தனது மைத்ரி யுகத்தில் நல்லாட்சியைத் தருவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்து மூன்று வருட காலத்துக்குள் நாட்டை அதல பாதாளத்தில் தள்ளி விட்டு, மீண்டும் ஆட்சியமைக்கக் கனவு காணும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது கூட்டாகச் சேர்த்துக் கொண்டிருப்பது மஹிந்த ராஜபக்‌ஷ எனும் பேராசைக்காரரை.

அரசியல் பதவி மோகத்தில் மீண்டும் எவ்வாறேனும் ஆட்சிக்கு மீண்டுவிடத் துடித்துக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, மைத்ரியின் அழைப்பு ஒரு தூண்டுகோலாக அமைந்து பெரும் துணிச்சலைத் தந்திருக்கிறது. ஊழல் வழக்குகளில் சிக்கிக் கொண்டுள்ள தன்னையும், தனது சகாக்களையும் விடுவித்துக் கொள்ள எவ்வாறேனும் அதிகாரம் மிக்கவொரு பதவியைப் பெற்றுவிடப் போராடிக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்‌ஷவும் எதிர்பாராத விதத்தில் மைத்ரிபாலவின் முட்டாள்தனமான வலையில் வீழ்ந்துவிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மீது வெறுப்பிலிருக்கும் பொதுமக்கள், அவருடன் கூட்டிணைந்திருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவையும் ஆதரிக்கப் போவதில்லை. தான் நம்பி வந்த சிறிசேனவின் கைகளில் ஏதுமில்லை என்பது மஹிந்தவுக்கு நன்றாகப் புரிந்திருக்கும். எனவே, இலங்கை சுதந்திரக் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டு இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்க்ஷ கடந்த நவம்பர் மாதம் பதினோராம் திகதி திடீரென அக் கட்சியை விட்டு விலகி தனது சகோதரன் பசில் ராஜபக்க்ஷவின் கட்சியான ‘இலங்கை பொது ஜன முன்னணி’ கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து இலங்கை சுதந்திரக் கட்சி சார்பாக நின்ற பாராளுமன்ற அமைச்சர்கள் பலரும் கூட அக் கட்சியை விட்டு விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் அங்கத்தவர்களாக இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்க்ஷ தனது புதிய கட்சியை ஆதரிக்கக் கூடும். இதன் காரணமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நம்பியிருக்கும் இலங்கை சுதந்திரக் கட்சி, படு தோல்வியைச் சந்திக்கக் கூடிய கட்சியாக மாறி விட்டிருப்பதோடு, ஆட்சி வலுவற்ற கட்சியாகவும் ஆகி விட  நிர்ப்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது.

குரங்கின் கையில் இரு விளிம்புகளும் நன்கு தீட்டப்பட்ட கூரிய வாளொன்று கிடைக்கும்போது அது, அவ் வாளை எடுத்து விளையாடும். அதன் போது அந்த வாளினாலேயே அதன் உடல் வெட்டுப்பட்டாலும் கூட அது கூரிய வாளொன்று என்பது அதற்குப் புரிவதில்லை. அது குருதி வடிய வடிய விளையாடிக் கொண்டேயிருக்கும். அவ்வாறே உன்மத்த நினைப்பிலிருக்கும் ஒரு தேசத்தின் தலைவன் நாட்டின் சட்டத்தோடும், நாட்டு மக்களோடும் விளையாட முற்படும்போது தனது அழிவைத் தானே தேடிக் கொள்வதை அந்தத் தலைவன் உணர்வதில்லை. எனினும் அவனது மோசமான செயற்பாடுகளுக்காக பழிவாங்கப்படுவது அப்பாவி பொதுமக்கள்தான்.

எவ்வாறாயினும், இந்து சமுத்திரத்தின் முத்தெனக் கொண்டாடப்படும் இலங்கை எனும் அழகிய நாடு மிகத் துரதிஷ்டமான நெருக்கடியான காலத்தை தற்போது கடந்துகொண்டிருக்கிறது.

mrishansha@gmail.com