உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு – நூல் வெளியீட்டு விழா

உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு - நூல் வெளியீட்டு விழாஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கவிசிரேஷ்டராக விளங்கிய சிவசம்புப் புலவரின் பிரபந்தங்கள் அடங்கிய “உடுப்பிட்டிச் சிவசம்பு புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு – தேவபாகமும் மானிடபாகமும் எனும் பெருந் தொகுதி வெளியீட்டு விழா. 2014ஆம் ஆண்டு தை மாதம் 5ஆம் திகதி அன்று உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூhயில் அமைந்துள்ள பேராசிரியர் அழகையா துரைராஜா மண்டபத்தில் நகரபிதா வல்வை ந. அனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

மண்டபத்தில் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னதாகப் புலவர் இல்லத்திற்கு முன்னால் உள்ள யோகர் சுவாமிகள் போற்றிய துவாளிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட ப10ஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் அவ்வாலயத்திலிருந்து பிரபந்தப் பெருந்திரட்டு மதகுருமார்கள், சமயப் பெரியார்கள், அறிஞர்கள் இலக்கியவாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் புடை சூழ மங்கள வாத்தியங்கள் சகிதம் புலவர் ஊஞ்சல் பாடிய வல்லைவாளிப் பிள்ளையார் ஆலயத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அதன் பின்னர் மண்டபத்திற்குக் கொண்டுசெல்லப் பட்டது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய விழாவில் யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் திரு. ந.சஞ்ஜீவன் இறை வணக்கத்தை இசைத்தார். புலவரின் பக்திப் பாடலொன்றும் இசைக்கப்பட்டது. புலவரின் கொள்ளுப் பேரரும் பொறியியலாளரும் வெளியீட்டாளருமாகிய திரு. நீ. நித்தியானந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். நகரபிதா தமது தலைமையுரையில் தமிழினத்தின்; சொத்துக்கள், சாதி மற்றும் பிராந்திய பாரபட்சமின்றி ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் வெளிப்பாடுகளில் ஒன்றே இந் நூல் வெளியீடும் என்று குறிப்பிட்டார்.

ஆசியுரையைச் சிவபிரம்ம ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஈழத்துத் தலங்கள்மேல் புலவர் பாடிய இலக்கியங்கள் அழிந்துவிட்டன என்று நினைத்தோம். ஆனால் கடினமான முயற்சியுடன் அதனைத் தேடி எடுத்து, புலவருக்கும் புலவர் பாடிய ஆலயங்களுக்கும் பக்திப் பாடல்களுக்கும் பதிப்பாசிரியர்கள் பெருமை சேர்த்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

வாழ்த்துரையினை வழங்கிய யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். கி. விசாகரூபன், இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெளியீட்டு விழா என்றும் கூழங்கைத் தம்பிரானில் இருந்து உருவாகிய இரண்டு புலமை மரபுகளாகிய ஆறுமுகநாவலர் மரபு, சிவசம்புப் புலவர் மரபு என்பவற்றில் சிவசம்புப் புலவர் மரபினை ஆராய்வதற்குரிய வரலாற்று ஆவணங்கள் கொண்ட தொகுதியாக இந்நூல் விளங்குகின்றது எனவும் இதனைப் பதிப்பித்தவர்கள் பட்ட பெரும் சிரமங்களை நேரடியாக அறிவேன் என்றும் ஒரு பெரும் நிறுவனம் செய்ய வேண்டிய பணியைப் புலவர் மணி அவர்களும் சுதர்சன் அவர்களும் திறம்படச் செய்துள்ளனர் என்றும் அவர்களுக்கு ஈழத்து இலக்கிய வரலாறு கடமைப்பட்டது என்றும் குறிப்பிட்டார். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அதிபர் திரு. சு. கிருஷ்ணகுமார், உடுப்பிட்டி மண்ணிற்கென அமைந்த இலக்கிய பாரம்பரியத்தை அருளம்பலம் முதலியார் தொடக்கி வைத்தார் எனவும் அது இன்று வரை இலங்கை முழுவதும் பரவியுள்ளது எனவும் குறிப்பிட்டு ஈழத்து இலக்கியத்திற்கு உடுப்பிட்டி தந்த நன்கொடையே இந்நூல் எனவும் இக் கல்லூரியின் மைந்தர்கள் இதனைச் சிறப்பாக ஆற்றியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

வெளியீட்டுரையினைப் புலவரின் ப10ட்டி தமிழ் புலமை மிக்க ஆசிரியை திருமதி. இ. தில்லையம்பலம் வழங்கினார். புலவரின் வாழ்க்கைப் பின்னணியிலிருந்து சுவாரசியமான விடயங்களை எடுத்துக் கூறி அவற்றோடு புலவரின் படைப்புக்கள் எவ்வாறு பொருந்துகின்றன என்பதையும் காலத்தின் தேவை குறித்து அவை நூலாக வெளிவந்துள்ளதையும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி தீக்கிரையானபோது, புலவரின் நூல்களும் தீக்கிரையாகின எனினும், அவற்றைச் சுதர்சன் தனது நான்கு வருடமான தீவிர தேடுதலில் கண்டுபிடித்து தொகுத்திருப்பது பாராட்டத்தக்கது என்றும் கூறினார். புலவரின் சுவடிகளைப் பாதுகாத்த புலவர்மணிக்கு நன்றியும் கூறினார்.

பின்னர் நூல் வெளியீட்டு வைபவம் நடைபெற்றது. முதற் பிரதியைப் புலவர்மணி கா. நீலகண்டன் வழங்க வைத்திய கலாநிதி இருதய வைத்திய நிபுணர் ந. குகதாசன் பெற்றுக்கொண்டார். கௌரவப் பிரதியினை திரு. கி. தவநேசன் வழங்க யாழ். பிரதம நூலகர் திருமதி இமெல்டா கருணாகரன் பெற்றுக் கொண்டார். சிறப்புப் பிரதிகளை யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் சி. ஸ்ரீ சற்குணராஜா வழங்கினார்.

உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு - நூல் வெளியீட்டு விழாஅறிமுகவுரையினை பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. ப10. சோதிநாதன் நிகழ்த்தினார். சிவசம்புப் புலவரின் கவிதை ஆளுமை பற்றியும் சமய தத்துவ புலமை பற்றியும் சமஸ்கிருதப் புலமை பற்றியும் தமிழ்ப் பக்திக் கவிதை மரபில் அவருக்குரிய முக்கியத்துவம் பற்றியும் விரிவாகக் கூறிய அவர், ஆங்கில மொழியில் வெளிவந்த பக்திக் கவிதை, மானுடம் சார்பான கவிதை ஆகியவற்றுடன் ஒப்பிட்டும் தனது அறிமுக உரையினை நிகழ்த்தி பதிப்பாசிரியர்களுக்கு தனது ஆசியினையும் தெரிவித்தார்.  நயப்புரையினை வழங்கிய பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் பொக்கிஷம் ஒன்று இன்று வெளியிடப்படுகின்றது என்று கூறி, சிவசம்புப் புலவரின் உரைப்பணி, புராணப்படனப் பணி, கல்விப் பணி, இலக்கணப் பணி, இலக்கியப் பணி ஆகியவற்றை நயந்து கூறினார். இலங்கைப் பல்கலைக்கழங்களில் தமிழ்ப் புலமையாளர்கள் என்ற பாரம்பரியம் சிவசம்புப் புலவரின் கல்வி மரபிலிருந்து ஆரம்பிக்கின்றது எனக் கூறி சுவாமி விபுலானந்தர், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஆகியேரின் ஆசிரியர்கள், சிவசம்புப் புலவரின் நேரடி மாணாக்கர்கள் என்று சான்று காட்டிக் கூறினார். இத் திரட்டில் அமைந்த மூன்று ஆய்வுக் கட்டுரைகளையும் அவற்றின் முக்கியத்துவத்தினையும் கூறி, பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கியத்திற்கு கடின உழைப்பினால் தொண்டு செய்த புலவர் மணி அவர்களையும் சுதர்சனையும் பல்கலைக்கழக புலமையாளர் சார்பில் வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

ஆய்வுரை நிகழ்த்திய பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். வ. மகேஸ்வரன் அவர்கள், தமிழில் பதிப்புத்துறை பண்பாட்டுப் பின்னணியில், வரலாற்று ஓட்டத்தில் திரட்டு பெறும் முக்கியத்துவத்தை விளக்கியும் பல்கலைக்கழகப் புலமையாளர்கள் பகுப்பாய்வு முறையிலான பதிப்பினை மேற்கொள்வதற்கு இத்திரட்டு சிறந்த முன்னோடியாக, ஆரம்பமாக, முன்னுதாரணமாக அமைகிறது என்றும் செவ்விதாக்கம் செய்யப்பட்ட செம்மையான இதுபோன்ற பதிப்புக்கள் தனியே பதிப்பு நூலாக மட்டுமன்றி, வரலாற்று ஆவணமாகவும் விளங்குகின்றமை தமிழியலுக்கு பெரிதும் பயனளிக்கும் எனவும் குறிப்பிட்டார்.  சிவசம்புப் புலவர் அக்காலப் புலவர் போன்று குறித்த ஒரு கிராமத்திற்குரியவராக – உடுப்பிட்டிக்கு மட்டும் உரியவராக இருக்கவில்லை. இலங்கை எங்கணும் உள்ள தலங்கள் பலவற்றையும் அவர் பாடியவர். பிராந்திய எல்லைகளைக் கடந்தவர். இலங்கைக்கு அப்பால் இந்தியத் தலங்களான மறைசை, எட்டிகுடி ஆகியவற்றின் மீதும் பாடியவர். ஈழம், தமிழகம் மட்டுமல்லாது முதன் முதலில் ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்கிழக்காசியாவை நோக்கி நகர்ந்து சென்ற புலவர் இவரே எனவும் அதற்குச் சான்று அவரது மலேசியா, பினாங்கு, தண்ணீர்மலைக் கந்தசுவாமி மலை பதிகம் எனவும் குறிப்பிட்டார். நேர்த்தியான அச்சமைப்போடு புலவரது கையெழுத்து அமைந்த ஏட்டுச் சுவடியையும் சேர்த்துப் பதிப்பித்திருப்பதும் சிவசம்புப் புலவரது கவிதை மரபு, சிவசம்புப் புலவர் கால ஆராய்ச்சி முதலிய கட்டுரைகள் இடம்பெற்றிருப்பதும் இந்நூலுக்கு பெரும் பலம் சேர்க்கிறது என்றும் ஈழத்துத் தமிழ்க் கீர்த்தனை மரபு முன்னோடியாகிய சிவசம்புப் புலவரது கீர்த்தனைகள் இடம்பெற்றிருப்பன சிறப்பானது என்றார். புலவர்மணி நீலகண்டன் எனும் புலமையும் முதுமையும் நிறைந்த ஒருவரும் எனது மாணாக்கனும் என் துறை விரிவுரையாளருமாகிய சுதர்சன் என்னும் இளமையும் புலமையும் நிறைந்த ஒருவரும் இணைந்து செய்த பதிப்புப் பணி இது. மரபு ஆளுமைமிக்க ஒருவரும் மரபும் நவீனமும் கலந்த ஆளுமை மிக்க ஒருவரும் இணைந்து மேற்கொண்ட இப்பதிப்புப் பணி பாராட்டத் தக்கது. புலவரது நூல்கள் மேலும் வெளிவர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

ஏற்புரையினை பதிப்பாசிரியர் சார்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை விரிவுரையாளர் திரு. செ. சுதர்சன் நிகழ்த்தினார்.  நன்றியுரையினை கொழும்பு ஆதார வைத்தியசாலை இருதயவியல் துறையின் சிரேஷ்ட பதிவாளர் வைத்திய கலாநிதி பானுபிரசன்னா நிகழ்த்தினார். இதன் பின்னர் கல்லூரிக் கீதம் இசைக்கப்பட்டு அறிஞர் கௌரவிப்பும் இடம்பெற்றது. சுமார் எழுநூறு பக்கங்களைக் கொண்ட இந்நூல் யாழ். குரு பிரின்டஸில் அச்சிடப்பட்டுள்ளது. அட்டைப் படத்தினை யாழ். பல்கலைக்கழக நுண்கலைத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. பா. அகிலன் புலவரது ஓலைச் சுவடியையும் புலவர் காலத்து (பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம்)  மரஅச்சு விளக்கப் படமொன்றினையும் கொண்டு அழகுற வடிவமைத்துள்ளார். அட்டைப் படத்தினை கரிகணன் அச்சிட்டுள்ளது. சிவசம்புப் புலவரின் இல்ல வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.

– பதிவுகளுக்கு அனுப்பி வைத்தவர்: சு.குணேஸ்வரன்

kuneswaran@gmail.com