‘ஒரு காலம் இருந்தது’ கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

தியத்தலாவா எச்.எப்.ரிஸ்னா‘ஒரு காலம் இருந்தது’ என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் மூதூர் முகைதீன் அவர்கள். சுமார் நாற்பது ஆண்டுகால ஆசிரிய சேவையில் தன்னை அர்ப்பணித்து, அண்மையில் ஓய்வுபெற்றுள்ள அவர், சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலக்கியத்தில் ஈடுபட்டு தமிழ்த் தொண்டாற்றியவர். தான் கடமையாற்றிய பாடசாலைகளில் சஞ்சிகைகளை, கையெழுத்துப் பிரதிகளை வெளியிட்டு மாணவர்களின் இலக்கிய ஆர்வத்துக்கு வித்திட்டிருப்புதுடன் மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவராக இருந்து ஓசை என்ற கவிதைச் சிற்றிதழையும் வெளியிட்டு வருகிறார். இவரது கல்விப் பணிக்காக 2006ம் ஆண்டு தேசிய சமாதானப் பேரவையினால் வித்தியாகீர்த்தி விருதையும்,  இலங்கை அரசின் கலாசார மரபுரிமை அமைச்சால் 2007ம் ஆண்டு கலாபூஷணம் விருதையும், சாமஸ்ரீ, கல்விச்சுடர் போன்ற பட்டங்களையும் பெற்றுக்கொண்ட திரு. மூதூர் முகைதீன் அவர்களின் நான்காவது தொகுப்பே ஒரு காலம் இருந்தது என்ற இந்த கவிதை நூலாகும்.

மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தின் வெளியீடாக வந்துள்ள இந்தப் புத்தகம் நூறு பக்கங்களில் அமைந்திருக்கிறது. இதில் உள்ள அநேகமான கவிதைகள் கடந்த காலத்தில் நமது நாட்டை கூறுபோட்டுப் பிரித்துக்கொண்டிருந்த யுத்தத்தின் வடுக்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளன. ஆண்டாண்டு காலங்களாக பேதங்கள் மறந்து, குரோதங்களைத் துறந்து ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் சுதந்திரமாக சுற்றித்திரிந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் இன்று மதத்தாலும், மொழியாலும் பிரிவினைப்பட்டு சமுதாயங்களுக்கிடையில் பிளவுபட்டு யாரோ பெற்ற அநாதைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் சோகத்தை நிதர்சனமான முறையில் நோக்கியிருக்கிறார் நூலாசிரியர்.

‘… இனங்களிடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி இவர் பேச வரும் பொழுதெல்லாம் சக இனத்தை வெறுக்காது மனித நேயத்துடன் இவருக்குள் இருக்கின்ற இன ஒருமைப்பாட்டுக்கான பிடிவாதத்துடன் பேசுகின்றார். அதாவது எதிர் இனம் என இன்று அடையாளப்படுத்தப்பட்ட அதே நேரத்தில் தன்னுடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள் இன்று அடைந்திருக்கும் இழிவு நிலையிட்டு சந்தோஷிக்கும் வக்கிர உணர்ச்சியினை வெளிப்படுத்தாது அவர் கொண்டிருக்கும் மனித நேயத்திலிருந்து ஒரு சொட்டேனும் குறையாது அக்கவிதைகளை ஆக்கியிருக்கிறார்..’ என்று திரு. மேமன் கவி அவர்கள் தனது உரையில் நூலாசிரியரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்

நூலாசிரியரான மூதூர் முகைதீன் அவர்கள் தனது உரையில் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

‘… எனது வாழ்வியல் அனுபவங்களினூடாக தரிசித்த சம்பவங்களையும், உள்வாங்கிய உணர்வுகளையும் எவ்வித மிகைப்படுத்தலுமின்றி மனிதம் என்ற உயரிய பார்வையில் வைத்தே இக்கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன…’

ஆகவே இந்த அழகிய தேசத்தை முப்பதாண்டு காலங்களாக யுத்தத்தின் சின்னமாக மாற்றிவிட்டு தற்போது ஓழிந்திருக்கும் போர்க்கால வடுக்களை வைத்து பின்னப்பட்டுள்ள இந்தக் கவிதைகள் நிச்சயமாய் வருங்கால சந்ததிக்கு திரு. முகைதீன் அவர்கள் தந்திருக்கும் சொத்துக்கள். கவிதையின் பாணி, எழுத்து நடை என்பன அழகிய முறையில் கையாளப்பட்டு மிகவும் காத்திரமான முறையில் நேர்த்தியாக வெளிவந்திருக்கும் ஒரு காலம் இருந்தது என்ற தொகுப்பின் கவிதைக் களத்துக்குச் செல்வோம்.

முதல் கவிதையான ஒரு காலம் இருந்தது என்ற கவிதை, இன ஒருமைப்பாட்டின் அன்றைய நிலையையும், தற்கால நிஜங்களையும் புடம் போட்டுக் காட்டுவதாய் அமைந்திருக்கிறது. காகத்தின் கூட்டில் குயில் இட்ட முட்டை என்ற உவமையை இதற்கு உவமித்திருக்கும் விதம் சிறப்பானது. ஆயிசா உம்மா, அன்னம்மா ஆகிய இருவகையான பெண்களும் ஆலய மணியோசை, பாங்கொலி கேட்டு தமது கடமை முடித்த அந்த ஒரு காலம் பற்றி இப்படி விபரித்திருக்கிறார்.

 ஒரு காலம் இருந்தது
 அந்திப் பொழுது உச்சம் கொடுக்க
 ஆலய மணி ஓசையில்
 அரிசி உலை வைப்பதற்காய்
 ஆயிசா உம்மா அவசரப்படுவதும்

 அதிகாலை பாங்கொலியில்
 அன்னம்மா எழுந்து
 புகையிலைத் தோட்டத்துக்கு
 புறப்பட்டுப் போவதுமாய்
 ஒருவர் வழியில் இருவரும் இணைந்தே
 வரையப்பட்ட விதி வழியாய்
 வாழ்ந்த ஒரு காலம் இருந்தது… என்றவாறு நீள்கின்றன வரிகள்.

எனது உலகம் என்ற கவிதையிலும் போர்க்காலத்தின் சாயல்களே பயணித்துக் கிடக்கிறது. பதுங்குக் குழிகளுக்குள் ஒழிந்தும், மறைந்தும் வாழ்க்கை ஓட்டிய அப்பாவி மக்களின் துயரங்கள் கண்கூடாக பார்த்ததைப் போன்ற மனநிலையை இந்தக் கவிதை ஏற்படுத்திப்போகிறது. போர்க்கால இரவுகள் அம்மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளம். தெருநாய்களின் ஓலத்துடனும், துவக்குச் சத்தங்களுடனும், சீருடையினரின் காலடி சத்தங்களும் பயப்பட்டு செத்துச்செத்து வாழ்ந்த இரவுகளை எண்ணிப் பார்த்தால் இன்றும் மனம் வேகிறது. அந்தப் பிரதேசங்களில் நீண்டு உயரமாக வளர்ந்திருக்கும் மரங்கள், வெந்த உடல்களின் சாம்பலை உரமாகக்கொண்டு வளர்ந்தவை என்று கூறும் கவிஞர், நாம் இந்த உலகில் இருப்பது வாழ்வதற்காக அல்ல. மாறாக உயிரைக் காப்பதற்காகவே என்கிறார்.

பசி மயக்கத்துடன் பதுங்குக் குழிக்குள் இருந்து நிலவைப் பார்க்கின்ற போது, பாட்டி சுட்ட அப்பமும் பொரித்த முட்டையின் உருவமும் தெரிவதாக கூறியிருப்பதானது, அவ்வேளையில் கொண்டிருந்த வயிற்றுப் பசியின் கொடூரத்தை விளக்கி நிற்கிறது. அகதிமுகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், கடந்தகால இனிமைகள் நினைவுகளில் தோன்றி மனசை வருத்தி வருத்தியே இன்றைய நாளை கழிக்கச் செய்கிறது என ‘நேற்றைய நாளில் இன்று’ என்ற கவிதையின் பொருள் அமைந்திருக்கின்றது.

ஏதிலிகள் என்ற கவிதையில் இடைத்தங்கல் முகாம், நலன்புரி நிலையங்கள், அகதி முகாம்கள் என்று பல பெயர்கொண்ட இடங்களில் அணிந்த ஆடையுடனும், ஊனமாகிப் போன உடம்புடனும் வாழும் மனிதர்களை, யுத்தம் விட்டுப் போன எச்சங்கள் என்ற அடைமொழியிட்டு விளித்திருப்பது வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கிறது.

சுகமாகிய தூங்கிய காலங்கள் எல்லாம் இன்று சுமையாகிப் போனதில் எல்லோருமே வயிற்றெரிச்சல் கொள்கின்ற காலமிது. தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஈடுகொடுத்தும், ஈடுகொடுக்க முடியாமலும் திண்டாடும் பலர் இன்று எம்மத்தியில் காணப்படுகின்றனர் என்பதே மெய் நிலை. இணையப் பாவனையாளர்கள் பரவலாக அதிகரித்துக் கொண்டிருக்கும் நிகழ்காலத்தில், நடுநிசிகளில் ஒரு மணி, இரண்டு மணிகளிலும் பேஸ்புக் என்ற வலையமைப்பில் தமது நேரங்களையும், காலங்களையும் வெறுமனே கழித்துக் கொண்டிருந்தால் சுகமான தூக்கம் எங்கே கிடைக்கப் போகிறது?

கனவு கண்டு பீதியுடன் விழிக்கையில் அம்மா அரவணைத்து ஆசுவாசப்படுத்தும் அந்த இனிய சுகமும், குளிர்காலங்களில் போர்வைக்குள் புகுந்து தவளையின் கத்துதலை தாலாட்டாகக் கொண்டு உறங்கிய அந்த இதமும், ஏழுதலை நாகங்கள் பற்றியும் கொள்ளிவாய்ப் பிசாசுகளின் தீப்பிழம்பான கண்களையும் பற்றி அப்பா அழகாக பொய்கூறிய அந்தக்காலங்களில் அப்பாவைக் கட்டியபடி அயர்ந்து விடும் அந்த இனிய கணங்களும் இன்று… குளிரூட்டப்ட்ட அறையில் தூங்கினாலும் கிடைப்பதில்லை. இந்த கருத்துக்களை வைத்து ஏக்கத்தோடு எழுதப்பட்ட ‘சுகமான தூக்கங்கள்’ எனும் கவிதை சிந்திக்க வைக்கிறது.

எங்கு போனாலும் நாம் காணக்கூடிய துக்ககரமான காட்சிகளில் ஏழைகளின் அதிகரிப்பு முக்கிய பங்;கு வகிக்கிறது. குடியிருப்பு வசதிகளற்று, சுகாதார தீர்வுகளற்று பாதையோரங்களிலும், கடைவாசல்களிலும் தமது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் இழிநிலையைப் பற்றி பேசும் கவிதையாக தீர்வு என்ற தலைப்பிலான கவிதை அமைந்திருக்கிறது. நிலத்தில் சுருண்டு கிடக்கும் சின்னஞ்சிறார்களை சப்பித்துப்பிய கரும்புச் சக்கை என்று உவமித்திருக்கும் நிலையானது, நொந்து நூலாகி எலும்பும் தோலும், அழுக்கும் புண்ணுமாகப் படுத்திருக்கும் சிறுவர்கள் பற்றிய கழிவிரக்கத்தை விதைத்துச் செல்கிறது. அது மாத்திரமன்றி அந்த சமூகத்தின் வயோதிபர்கள் எருமைகளுடனும், எச்சில் குப்பைகளுடனும் படுத்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருப்பதுடன், மீன் வலைக்குக் கூட மீள உபயோகிக்க முடியாத கண்விழுந்த கந்தல் உடைகளை அணிந்திருக்கும் அவர்களின் வாழ்வியல் முறையை சித்தரித்திருக்கிறார் கவிஞர். 

அந்த சித்தரிப்பினூடாக ஆட்சியைப் பிடித்தவர்களின் ஏளனப் பார்வையையும், அலட்சியமான பதிலளிப்புக்களையும் பற்றி விபரித்து ஆத்திரரமடைகிறார். வானளாவ உயர்ந்த அரசியல்வாதிகளின் வீடுகளுடன் ஏழைகளின் வரட்சியான நிலையை ஒப்பிட்டுப் பார்க்குமாறு கூறியிருக்கிறார். இந்த கவிதையில் கவிஞர் முகைதீனின் மானிட நேயம் வெளிப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

நாம் இன்று அடிக்கடி பஸ் வண்டிகளில் பயணம் செய்கிறோம். அதற்காக பலமணி நேரம் பஸ் வரும் வரை காத்திருக்கிறோம். அவ்வேளைகளில் எம்மைச்சுற்றி நடக்கும் விடயங்களை நாம் கவனித்திருந்தாலும் கூட, அதை ரசித்திருக்கமாட்டோம். எனினும் முகைதீன் அவர்கள் பஸ் தரிப்பிடத்தினிலே என்ற கவிதையில் தொட்டுக் காட்டியிருக்கும் விடயங்கள் நயக்கத்தக்கதாக இருக்கிறது. அதாவது நீண்ட நேரம் காத்து நின்றதால் ஏற்படும் கால் வலியை, ஒற்றைக் காலில் தூண்களில் சாய்ந்து சுகம் காண தூண்களே துணை நிற்கும் என்கிறார். பிச்சைக்காரனின் நச்சரிப்பிலிருந்து தப்புவதற்காக கண்கள் எங்கேயோ கவனம் செலுத்துவதாக காட்டிக்கொள்ளும் பலபேரை பார்த்திருக்கிறோம். இன்றைய பத்திரிகையை இரவலாய் வாசிக்க எட்டிப் பார்ப்பதில் கழுத்து நீளும், எங்கிருந்தோ ஓடிவந்த தெருநாய் ஒன்று ஒரு காலை உயர்த்தி நாட்டிய கம்பத்தை நாசம் செய்யும் என்றெல்லாம் அழகிய முறையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை கவிதையாக்கியிருக்கிறார்.

அந்திச் சூரியன் மறைவதை நாம் எல்லோரும் ரசிப்பவர்கள் தாம். எனினும் நாம் அடிக்கடி கூறுவது சூரியன் கடலுக்குள் சென்றுவிட்டான் அல்லது மலைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டான் என்பது தான். என்றாலும் திரு. முகைதீன் அவர்கள் கூறியிருக்கும் விதத்தைப் பாருங்கள்.

பகல் முழுவதும்
வெப்பக் கரங்களால்
பூமி மேனியைத் தழுவிய கதிரவன்
புழுக்கம் தீர
கடல் நீரில் இறங்கி
கந்தக உடலைக் கழுவும்

எத்தனை அழகான கற்பனை? என்னை வியக்க வைத்தது. இது போன்ற பல அழகிய விடயங்கள் இத்தொகுதியில் காணப்படுகின்றன. அவற்றை வாசித்தபோது கவிதை மீது இன்னுமின்னும் பற்று ஏற்படுகின்றது. மனிதநேயத்துக்காக குரல்கொடுத்தும், தேசத்தின் ஒற்றுமைக்காக பேனை எடுத்தும் தனது மனப் போராட்டங்களை வெள்ளைத் தாளில் வடித்து அந்த உணர்வுகளை எமக்குள்ளும் ஊற்றிய கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களின் இலக்கியப் பணி மென்மேலும் சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
 
E-mail:- riznahalal@gmail.com
 
Websites:- www.poemrizna.blogspot.com

www.storyrizna.blogspot.com
www.vimarsanamrizna.blogspot.com