கவிதை: வழிமாறிய பயணங்கள்.

– நிலாமுற்ற குழுமத்தில் பாடிய கவிதை –

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

இல்லத்தரசியாக இலங்கையில் தலைகோதியது கவிச்சாரல்
நல்ல முயற்சியால் வழிமாறியது பெட்டகோவாகி ஓய்வு.
சொல்லடுக்கி தமிழின் கழுத்தைக் கட்டியவாறு இன்று
செல்ல மழைத்துளியென் செழுமைக்கு வல்லதமிழ்.
நில்லாத தமிழ்ப் பல்லக்குப் பயணம்.
தொல்லையும் உண்டு நிராகரிப்பு அலட்சியம்.

பணம், பயண அனுமதி, பயணச்சீட்டின்றி
பகிர்ந்திட மனிதரில்லாத வழிமாறிய பயணம்
பத்திரம், ஆரோக்கியம், நித்திரையூர் தொலைத்து
சித்திரவதையாம்  நோயூருக்கு அனுப்பும்.

சுழலும் பூமிக்கு வயதாகியதால் அதன் சுந்தரமான
வாழ்வும் எம்மை உழல வைக்க
வெள்ளம் சுனாமி, வரட்சியாம் நோய்களென
நிழலும் நெருங்காது வழி மாற்றுகிறது.
குழலுள் காற்றாய் நாம் வெற்றியிசை மீட்டவேண்டும்.

வாழ்வின் சுழற்சியால் தடம் மாறாது
தாழ்வு  நிலையேகாத நம்பிக்கைக் கைத்தடியோடு
தழலாய் எழும் தைரியம் ஒன்றினாலே
குழிகள் மேடுகள் தாண்டிக் கவனம் களவாடி 
விழி வியக்கவோடும் பயணங்களே வாழ்க்கை.

போர் மூண்டு அவலமாகிய காதை
கூர் மழுங்கிய கலாச்சாரமானதெம் வாதை
நேர் படுத்த – மொழியும் முயற்சியுமே
தீர்மானம் செய்திடும் பயணச் செழுமையை
சீர்பட எழுகிறார்களெம் அடுத்த தலைமுறை.

எழுத்துக்கள் மாற கருத்துகள் மாறி
முழு அர்த்தம் இழந்து கோர்வையற்று
வழுவுடை ஓசையாகி கழுத்தை நெரிப்பதாகவே
வழிமாறும் வாழ்வும் உண்மையில் மனிதர்
நழுவுகிறார்கள் இலக்கிலிருந்து வருத்தமே

பட்ட அனுபவத்தால்  திட்டமிடலில் மேதாவியாகி
நட்டமின்றி வழி நழுவாத பயணமாக்கலாம்.
வஞ்சம், குரோதம், விரக்தியுயர புகைத்தல்
அஞ்சும் போதைப்பொருள், மது, மாதில்
தஞ்சமாகி வன்கொடுமை, கொலையில் தடம் பதித்து
நஞ்சாக்குகிறார் வாழ்வை  நலமற்று சிறையிலே.

ஆண் பெண்ணுறவின் ஆதிக்க வேற்றுமையால்
கண்ணான காதல் கன்னலற்று, வழிமாறிய
வண்ணமற்ற இல்லறங்களால்  வதைபடும் பிஞ்சுகள்
எண்ணிக்கையற்றுப் பாதை மாறுகிறார்  பாதுகாப்புணர்வை
கீதையும் தராது,  ஏக்கந்தானிது சோகம்.

இரை  தேடி அலைந்த மனிதர்
விரைந்தோடி உணவு  வீடு  தேடியுயர்ந்தார்.
வனப்பாகக் குழுக்களாய் வாழ்ந்தவர் நாடு
இனம் மதமொழியெனப் பரிணாமம் அடைந்தார்.
மன்னன், அரசுடைமையென்று நாடு பிடித்தார்.

மக்களாட்சி  ஐனநாயகமென முன்னேறினார்.
அலைந்து திரிந்தவன்  ஆகாயத்தில் பறந்தார்
மின்சாரம் வளர்ச்சி மனித அறிவின் மகோன்னதம்!
வழிமாறிய பயணங்கள் வளமான பயணங்களாக
இருந்தாலும், சுயநலமும் மனிதருடன் சேர்ந்தது.

போட்டி பொறாமை சங்கிலியாகி,
பகைமை கொழுந்து விட்டு எரிந்தது.
மனித உரிமை மறுக்கப்பட்டது
வறுமை அடக்குமுறை  போர்க் காரணிகளால்
பிறந்து வாழ்ந்த நாட்டிலிருந்து இடப்பெயர்வு.

எம் சக்தியைப் பிரயோகிக்கும் எதிர்நீச்சலும்
அதனோடுடன் நீந்துதலுமே மாறுதலின் உந்துசக்தி.
அறிவு ஆற்றல் தேடலேயெம் துரித முன்னேறத் துணைவுகள்.
பிச்சை வேண்டாம் நாயைப் பிடியென்று
வாழ வேண்டுமா? தனிமனித உரிமை வென்றிட
வழிமாறிய பயணத்தில் வேட்கை உயரவேண்டும் 

வரலாறான வழிமாறிய தடங்கள் இலக்கியத்திலுமேராளம்!…
இதிகாசங்களும் புராணங்களும் அதன் ஆதாரமே


kovaikkavi@gmail.com