சிறப்புற நிகழ்ந்த ‘மறுமலர்ச்சி’ வெளியீட்டுவிழா!

[ மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு நூல் அண்மையில் யாழ் பொதுசன நூலகக்கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றதாக எழுத்தாளர் குணேஸ்வரன் அறியத்தந்திருந்தார். அத்துடன் நிகழ்வுக்காட்சிகள் சிலவற்றையும் புகைப்படங்களாக அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றி. அவற்றை ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘மறுமலர்ச்சி’ இதழ்களின் தொகுப்பு நூலானது முக்கியமானதொரு மைல் கல்லாகும். இது போன்று ஏனைய சஞ்சிகைகளின் தொகுப்பு நூல்களும் வரவேண்டும். இதன் மூலம் ஈழத்தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை முறையாக ஆவணப்படுத்த முடியும்.  இது போல் இலங்கையில் வெளிவந்த தமிழ்ப்பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகள், கவிதைகள்,  நாவல்கள் மற்றும் திறனாய்வுக்கட்டுரைகள் போன்றவையும் பல்வேறு தொகுப்புகளாக வெளிவருவது நல்லது. அவ்விதம் வெளியிடுவதற்கு மிகுந்த பொருட்செலவாகுமென்பதால், அவற்றை முதலில் மின்னூல்களாகத் தொகுத்து வெளியிடலாம். இவ்விதம மின்னூல்களாக அவை இருப்பது இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் வரலாற்ற முறையாகப்புரிந்து கொள்வதற்கு உறுதுணையாகவிருக்கும்.

தற்போது தொகுப்பு நூலாக வெளிவந்த ‘மறுமலர்ச்சி’ இதழ்களின் தொகுப்பும் மின்னூலாக இணையத்தில் ‘நூலகம்’ போன்ற தளங்களில் சேகரித்து வைக்கப்பட வேண்டும். இவ்விதம் இணையத்தில் மின்னூல்களாக இவை இருப்பது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இவற்றைப்பற்றி பல்வகை ஆய்வுகளை, திறனாய்வுகளைப்புரிவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். – பதிவுகள் – ]

ஈழத்தின் முதலாவது தமிழ் இலக்கிய இதழாகிய மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு வெளியீட்டு விழா 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.30 மணிக்கு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னதாக அண்மையில் ஈழத்து இலக்கிய உலகைவிட்டு மறைந்த எழுத்தாளர் செங்கை ஆழியானுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நிகழ்வில் வரவேற்புரையை நூலக நிறுவன இயக்குநர் சேரன் சிவானந்தமூர்த்தி நிகழ்த்தினார். வெளியீட்டுரையை இதழ்களின் பதிப்பாசிரியர்களில் ஒருவராகிய கோப்பாய் சிவம் நிகழ்த்தினார்.

அறிமுகவுரையை சு. குணேஸ்வரனும், ஆய்வுரையை பேராசிரியர் துரை மனோகரனும் நிகழ்த்தினார்கள். நூலின் முதற்பிரதியை தொழிலதிபர் எஸ்.பி நாகரத்தினமும் இணைப்பிரதிகளை யாழ்ப்பாணம் பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் பிரம்மஶ்ரீ க. இலட்சுமணசர்மாவும் பருத்தித்துறை பிரதேச செயலர் த. ஜெயசீலனும் யாழ் பொதுநூலக பிரதம நூலகர் திருமதி சுகந்தி சதாசிவமூர்த்தியும், நூலக நிறுவன இயக்குநர் சேரன் சிவானந்தமூர்த்தியும் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜாவிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். மறுமலர்ச்சி இதழ்களின் எண்ணிமமாக்கப்பட்ட இறுவெட்டுப்பிரதிகளை சேரன் சிவானந்தமூர்த்தி பதிப்பாசிரியர்களிடம் கையளித்தார். ஏற்புரையை செல்லத்துரை சுதர்சன் நிகழ்த்தினார்.

kuneswaran@gmail.com