சிறுகதை: தலைவன் தேடு படலம்!

- முனைவர் ஆ.சந்திரன் , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், வேலூர் -நிலத்தின் நீர் வேட்கை முற்றிலும் பூர்த்தியானதைப் பசுமையின் கரங்கள் வானத்திற்குத் தெரிவித்துக்கொண்டிருந்தன. நைட் வாச்மேன் வேலைக்குப் போய்த்திரும்பிய சோர்வைப் போக்கிக்கொள்ள போர்வைகள் சூரியக்குளியல் மூழ்கின. மாலைச் சூரியன் நீச்சல் பழக கடலை நோக்கி விரைந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பதறிய தலைவிக்கு அன்றை இரவு யுகத்தின் எல்லையாக நீண்டது. அது அவளுக்கு ஒரு முடிவை எடுக்க போதுமான இடைவெளியைத் தந்திருந்தது. அதனால் சூரிய உதயம் அவளுக்கு இனிய பொழுதாய் இருந்தது.

திருமணத்திற்குப் பிறகு வீட்டைவிட்டுத் தனியாகப் போவது இதுதான் முதல் முறை என்றாலும், அவளுக்கு அதைப் பற்றிய சிந்தனை ஏதும் அப்போது ஏற்படவில்லை. கதிரவனின் சூட்டை இலவசமாக வாங்கிக்கொண்டிருந்த தரையின் மேற்பரப்பு அவளைப் பரிசோதிக்க ஆரம்பித்தது. அவற்றின் சோதனைகளைப் பற்றிச் சிந்திக்கவிடாமல் செய்தன பிரிந்து சென்ற காதலனின் நினைவுகள். 

அவளுடைய நடையின் வேகம் தளர ஆரம்பித்தது. நீண்டதூரம் நடந்த களைப்பும் சூரியனின் வெக்கையும் அவளுடைய பெண்மையை உணர்த்தி பயமுருத்திப் பார்த்தன என்றாலும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. 

தென்னை மர நிழலில் அழையாத விருந்தாளியாய் அவள் அடைக்கலம் புகுந்த போது சூரியன் பூமியை தொண்ணூறு டிகிரி கோணத்தில் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையின் உக்கிரத்திற்கு மரத்தடியில் நிழலுக்கு ஒதுங்கியவர்களின் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையே முதன்மைச் சாட்சியங்களாய் இருந்தன.

அடிவயிற்றைத் தடவிய விரல்களின் பூரிப்பை முகம் வெளிக்காட்ட நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். தென்றலின் ஸ்பரிசம் அவளைத் தீண்டும் தருணங்களில் மட்டும் வெயிலின் சோர்வு ஓய்வு கொண்டது. 

நூடுல்ஸ்க்கு வெள்ளையடித்தது போன்ற தலையைக் கொண்ட பெண்ணின் கண்கள் நிழலுக்கு ஒதுங்கிய தலைவியை ஸ்கேன் செய்துகொண்டிருந்தன. வயதிற்கு மீறித்தெரிந்த அழகினைப் பெருமூச்சுடன் கூடிய அவளுடைய பார்வைத் தோலுத்துக் காட்டியது. அதை முதல் பார்வையிலேயே புரிந்துகொண்ட தலைவி, தன்னுடைய பார்வையை மரத்தின் நிழலில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த எறும்பின் மீது திருப்பினாள். அப்போதும் அவளுடைய கைகள் அடிவயிற்றைத் தடவியவாறே இருந்தன.

இளமைத் தோற்றமுடன் காணப்பட்ட முதியவள் இவ்வாறு சொன்னாள் இளம்பெண்ணைப் பார்த்து. “இந்த வெக்கையில் தனியாய் எங்கே போகிறாய் பெண்ணே! துணைக்கு யாரையாவது அழைத்து வந்திருக்கக் கூடாதா?……..” என்று.

இளம்பெண்ணின் அருகே வந்து, வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலையை மனதில் இருத்தியவளாய்த் தாய்மையின் வார்த்தைகளை அவள் உதிர்த்தபோது, தென்றல் இளையவளைப் புணர்ந்து சென்றது.

பிரசவத்திற்குத் தன்னுடைய தாய் வீட்டிற்குச் செல்வதாகவும், தன்னுடைய கணவர் வெளியூர் சென்றிருப்பதாகவும் கூறினாள்.

முதியவளிடம் அவ்வாறு கூறினாலும் “இனி எப்பொழுதும் உன்னுடனே இருப்பேன் என்று” கணவன் கூறிய சொற்கள் அவளை வாட்டத்தான் செய்தன. 

இன்னும் இரு திங்களில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறிய செய்தியை முதியவளிடம் அவள் கூறிய போது, அவளுடைய வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்பதை உணர்ந்துகொண்ட முதியவள் “உனக்கு இது முதல் பிரசவமா? என்று கேட்டாள்.

ஆமாம் …. சற்று தயக்கத்துடன் தலையசைத்தாள். அப்போது அவள் முகம் மாறியது.

அந்தவழியாக விரைந்து கொண்டிருந்த ஆடவன் பார்ப்பதற்கு நாயகன் போல இருந்தான். அவனைப் பார்த்ததும் முதியவளிடம் கூறிவிட்டு அவனுடய தேரில் மெல்ல அடியெடுத்து வைத்து ஏறினாள். அவளுடை முகம் பிரகாசமாய் மின்னியது. அப்போது தேர் வேகமாக ஓடத் தொடங்கியது விரைந்து அவளுடைய தாய் வீட்டை நோக்கி. 

வயிறு பெரியதாய் இருக்கிறது. அந்த பெண்ணுக்குப் பெண்குழந்தை தான் பிறக்கும் என்று ஒரு குரல் கூட்டத்திலிருந்து வந்தது. 

“அந்தப் பெண்ணின் வயிற்றில் இருப்பது ஆண்குழந்தை என்று அடித்துச் சொன்னான் ஒரு இளைஞன். அவன் தென்னை மரநிழலில் நிழலுக்கு ஒதுங்கியவர்களில் வித்தியாசமாய் இருந்தான். அவன் கறுமை நிறத்தை தோற்கடிக்கும் நிறத்துடன், பார்க்கப் போர் வீரன் போல் தோன்றினான். அங்கிருந்தவர்கள் அவனை வினோதமாய்ப் பார்த்தார்கள்.

அதைப் பற்றிய பிரஞ்ஞை ஏதும் அவனிடம் இல்லையென்பதை அவனுடைய பொலிவான முகம் வெளிக்காட்டடியது. 

ஆ…. என்ற சத்ததுடன் தனது வலது காலைப் பார்த்தான். வலியேற்படுத்திய கட்டெறும்பு அவனிடமிருந்து தப்பிக்க முயன்று தோற்றுப் போனது. கடிபட்ட இடத்திற்குக் கீழே ஒட்டியிருந்த சேற்றினைத் துடைத்தெரிந்தான். 

“இல்லை அந்த பெண்ணிற்குப் பெண் குழந்தை தான் பிறக்கும் என்று” ஒரு முதியவர் தன் அனுபவ அறிவைக் கொண்டு அங்கிருந்த கூட்டத்திற்குக் கேட்குமாறு விளக்க முயன்றார். 

பேச்சை ஆரம்பித்தது முதல் நிறுத்தும் வரை தன்னுடைய கருத்தை எல்லோறும் கேட்கிறார்களா? என்று நோட்டம் விட்டவாறே இருந்தன அவருடைய கண்கள். 

தன்னுடைய கருத்தை அனைவரும் ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சிப் பெருக்குடன் தன்னுடைய வீட்டை நோக்கி புறப்பட்டார். அவருடைய மகிழ்ச்சியை விழுங்கி யெழுந்தன தனிமையில் தவிக்க விட்டுவிட்டுப் போன அவருடைய வாரிசுகளின் நினைவுகள். அந்த வேதனையைக் இரண்டு கண்களைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அழுகையை நிறுத்திய கைக்குழந்தையின் உறக்கத்தை உறுதி செய்துகொண்ட தாய், “ஆமாம்! அந்தப் பெரியவர் சொன்னது சரிதான். அந்த இளம் பெண்ணுக்குப் பெண்குழந்தை தான் பிறக்கும்” என்று தன்னுடைய கருத்தைச் சொன்னாள். அவள் அதற்கான காரணத்தை மெதுவாக கூறினாள். அவ்வப்போது குழந்தை ஆழ்ந்து உறங்குவதை உறுதி செய்து கொண்டிருந்தாள். அவள் கூறிய காரணங்களைக் காட்டிலும் அவளுடைய குரல் அழகாய் இருந்தது.

தன்னுடைய முந்தானையை இழுத்து மூக்கைத் துடைத்தாள். குழந்தையின் சிறுநீர் வாடை அவளது மூக்கை மோதிச் சென்றது. அந்த வாடையில் இருந்து தப்பிக்க என்ன செய்வதென்று யோசித்தவாறே நாணி நின்றவளுக்கு ஒரு யோசனைத் தோன்றியது. அனிச்சையாய் அப்போது அவள் தலைமுடியைச் சரிசெய்து கொண்டிருந்தாள். கீழே விழும் தருவாயிலிருந்த முல்லை மலர் அவளுடைய உள்ளங்கையில் அழகாய்த் தஞ்சமடைந்தது. 

“இல்ல! இல்ல! அந்தப் பெண்ணுக்கு ஆண்குழந்தை தான் பிறக்கும்! அதுவும் அழகான கம்பீரமான தோற்றம் கொண்ட குழந்தை, அக்குழந்தை நிகரற்ற வீரனாய்த் திகழ்வான்” என்று தன்னுடைய நெற்றியிலிருந்து வழிந்தோடிய வியர்வைத் துளிகளைக் கழுத்தில் இருந்த பருமனான துண்டால் துடைத்தவாறே சொன்னார் ஒருத்தர். வெண்ணிற பட்டாடையை உடுத்திய அவர் வெக்கையின் தாக்கத்தில் மிகவும் சோர்ந்து போயிருந்தார். 

இளம்பெண்ணின் குழந்தையைப் பற்றிய நினைவுடன், தன்னுடைய கையில் இருந்த குடையை விரித்து தலைமேல் தூக்கிப் படித்து நடக்க ஆரம்பித்தார். இருட்டுவதற்குள் வீடு சென்று சேர்ந்து விட வேண்டும் என்ற பதற்றம் அவருடைய நடையில் தெரிந்தது.

“ஆணாய் இருந்தால் என்ன? பெண்ணாய் இருந்தால் என்ன? சுகபரசவம் நடந்தால் சரிதான். தாயும் சேயும் நல்லா இருக்கனும். கடவுளே நீ தாம்பா அந்தப் பொண்ணுக்குத் துணையிருக்கனும்” என்ற குரல் அனைவரின் கவனத்தயும் தன்பால் ஈர்த்தது. அங்கிருந்தவர்களின் பார்வை குரல் வந்த பக்கம் ஒரே நேரத்தில் சாய்ந்தது. 

“அவள் கூறுவது சரிதான். ஆணா இருந்த என்ன? பெண்ணா இருந்தா என்ன? தாயும் சேயும் நல்லபடியாக வீடு திரும்பனும். அவ்வளவுதான்!” என்ற ஒருமித்த குரல் காற்றில் பரவியது.

வானில் திரண்ட கார்மேகங்கள், சமருக்குச் செல்லும் போர் வீரர்கள் போல் அணிவகுத்து விரைந்தன. அவற்றின் முன் பிரகாசிக்க இயலாமல் கதிரவன் நாணி ஓடி ஒளிந்துகொண்டான்.

பொதுக்கூட்டம் முடிந்தது போன்று வெறிச்சோடிய தென்னை மரத்தின் நிழல் இருந்த இடம். 

இடுப்பில் கூடைய ஏந்தியவளாய்க் கீழ்த் திசையை நோக்கி தன்னுடைய பயணத்தைத் தொடங்கினாள் அந்த முதியவள். 

இளம் பெண்ணின் தலை அசைவு பிரதி அவளுடைய கண்களில் இருந்து அகலாமல் இருந்தது. 

ஏதோ புரிந்தவளாய்ச் சிரித்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.

அவளுக்கு முன்னாள் ஒரு இளம் பெண்ணும் முதியவரும் கை கோரத்து நடந்துகொண்டிருந்தனர். 

கொட்டித் தீர்த்த மழையின் வளத்தைப் பிரதிபலிப்பதாய் வளர்ந்திருந்த செடிக்கொடிகளிடையே அணில் குட்டிகள் ஓடிவிளையாடிக்கொண்டிருந்தன.

அவற்றின் மகிழ்ச்சியை மிஞ்சுவதாய் தென்னை மரத்தின் அடியில் ஐந்து சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய விளையாட்டைப் பற்றிய சிந்தனையில்லாமல் இருவர் முற்றி உதிர்ந்த தேங்காய் ஒவ்வொன்றாய் எடுத்து கையில் வைத்திருந்த மஞசள் பையை நிறைத்துகொண்டிருந்தனர்.

வானில் இருந்து வந்த வனதேவதை, சிறுவர்களின் விளையாட்டைக் கண்டு அதிசயித்தாள். 

அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு தேர் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய இளம்பெண்ணும் அவளுடைய காதலனும் தென்னை மரத்தை நோக்கி நடந்தனர். தன்னுடைய கையைப் பிடித்து நடந்த காதலனைப் பார்த்து இந்த மரத்தடியில் நான் உன்னைச் சந்திக்க வந்த போது நிழலுக்குத் தங்கினேன் என்று கூறினாள்.

அதைக் கேட்ட இளைஞன் அவளை இறுகப் பற்றி நெற்றியில் ஒரு முத்தமிட்டான்.

பிறகு அங்கிருந்து இருவரும் புறப்பட்டனர்.

chandran@shctpt.edu