சிறுகதை: துன்பம் நேர்கையில்..!

குரு அரவிந்தன் – ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக குடும்பத் தலைவனை இழந்து நிர்க்கதியாய் இருப்பவர்களுக்கு உதவும் நல்ல நோக்கத்தோடு செயற்படும் அன்பு நெறிக்காகப் புனையப்பட்ட சிறுகதை –

சீதா..!
யாரோ வாசலில் கூப்பிடும் சத்தம் கேட்டது.

அவள் கனவிலிருந்து வெளிவந்து கண் விழித்துப் பார்த்தாள். தட்டிக்குள்ளால் நுழைந்த வெளிச்சம் கண்ணுக்குள் பட்டுத் தெறித்ததிலிருந்து விடிந்து போயிருப்பது தெரிந்தது.

‘யாராய் இருக்கும்..?’ நெஞ்சில் ஒருவித பய உணர்வு சட்டென்று தேங்கி நின்றது.

மீண்டும் அதே குரல் கேட்டது. கவனமாகக் காது கொடுத்துக் கேட்டாள், பெண் குரல், பக்கத்து வீட்டு ரேவதி மாமியின் குரலாகத்தான் இருக்கும் என்ற நினைப்போடு அவசரமாக எழுந்து சோம்பல் முறித்து, கூந்தலை அள்ளி முடிந்து கொண்டாள்.

இப்போதுதெல்லாம் முன்புபோலப் பயப்பட வேண்டியதில்லை. நாட்டில் நடப்பதைப் பார்த்தால், ஆட்சி மாறினாலும் அதிகாரம் மாறாமலே இருப்பது போன்ற ஒருவித பிரேமை தோன்றலாம். ஆனாலும் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. முன்பெல்லாம் யாராவது அழைத்தாலே பயம் பிடித்துக் கொள்ளும். வாசல்வரை வந்து அழைத்துச் சென்றால், அப்புறம் பிணமாகத்தான் வீடு வரவேண்டும். இல்லாவிடால் தொலைந்து போனவர்களின் பட்டியலில் இடம் பெறவேண்டும். எதுவாக இருந்தாலும் முடிவு என்னவென்பதை வந்தவர்களே தீர்;மானிப்பார்கள். எஞ்சியிருக்கும் நீங்கள்தான் அந்த இழப்பின் வலியைக் காலமெல்லாம் சுமக்க வேண்டிவரும்.

இவளது கணவனையும் ஒரு நாள் அதிகாலையில் இப்படித்தான் வெளியே வரும்படி அழைத்துக், கூட்டிச் சென்றார்கள். அப்புறம் கணவனுக்கு என்ன நடந்தது, இருக்கிறானா இல்லையா என்றுகூட இதுவரை தெரியவில்லை. சித்திரவதை முகாமுக்கு அவனைக் கொண்டு சென்றதாகவும் கதைகள் அடிபட்டன. ஒரே நாளில் அவளது தலைவிதி மாற்றப்பட்டிருந்தது. கைக்குழந்தையோடு தனித்துப் போன அவளது வாழ்க்கை இதுவரை அர்த்தமற்றதாய் போயிருந்தது. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இதுவரை காலமும் அவள் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. குழந்தைக்காகவாவது வாழவேண்டும் என்று அவள் உறவுகளால் நிர்பந்திக்கப் பட்டாள். வருமானத்திற்கு எங்கே போவது, அதுவே பெரிய தொரு கேள்விக்குறியாய், பூதாகரமாக கண்முன்னால் பயம் காட்டியது. யுத்த சூழலில் யாரும் வலிய வந்து உதவுவதற்கு முன்வரவில்லை. தெரியாத வேலை என்றாலும், இன்னும் ஒரு உயிர் வாழவேண்டுமே என்ற ஆதங்கத்தோடு அடுத்த நேரக் கஞ்சிக்காகக் கூலி வேலைக்கும் சென்றாள். ஆனாலும் என்னதான் மறக்க நினைத்தாலும்,  அவளது கணவனை அன்று அழைத்துச் சென்ற அந்த வெள்ளைவான் மட்டும், யமதர்மனின் எருமைமாடுபோல, அவள் கண்ணுக்குள் அடிக்கடி நிழலாடிக் கொண்டே இருந்தது.

காலம் எப்படி எல்லாம் மனித மனங்களை மாற்றிவிடுகின்றது. நல்லவன் கூடாதவனாகவும், கூடாதவன் நல்லவனாகவும் பட்டியலில் இடம் பெற்றுவிடுவது காலத்தின் கோலம்தான். காலம் யாருக்காகவும் காத்திருக்காது என்பது போல, எப்படியோ இழுத்துப் பறித்து நடந்த தேர்தலால் அரசியல் பட்டியலும் இப்போது மாறிவிட்டது. நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவளால் இழப்பை முற்றாக மறக்க முடியாவிட்டாலும், இப்போதெல்லாம் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சாவது விடமுடிகின்றது.

ஆழ்ந்த சிந்தனையோடு வெளியே வந்து பார்த்தாள். மாமியுடன் இன்னும் இருவர் வாசலில் நின்று கொண்டிருந்தனர்.

‘என்ன மாமி, காலங்காத்தால.. என்ன விஷயம்..?’ குரலில் அவளையறியாமலே ஒருவித பதட்டம் கலந்து வந்தது.

‘விஷயம் இருக்கு, அதுதானே வந்தனாங்கள்’ என்றாள் மாமி.

ஒன்றும் புரியாமல் பார்த்தாள், மாமியின் வார்த்தைகளில் பதட்ம் இருக்கவில்லை. அருகே இரண்டு பேர் நன்றாக உடுத்தபடி, புன்னகையோடு நின்றிருந்தார்கள். வெளிநாட்டவர்போல தெரிந்தார்கள்.

‘சீதா, இவங்க கனடாவில் இருந்து வந்திருக்கிறாங்கள்’ என்று மாமி அறிமுகப்படுத்தினாள்.

கையுயர்த்திக் கும்பிட்டு, சைகையாலே வணக்கம் சொன்னாள். அவர்களும் அப்படியே செய்தார்கள்.

‘அக்கா, நாங்க அன்பு நெறியில இருந்து வந்திருக்கிறோம்.’

‘அன்பு நெறியா, கனடாவில இருக்கிற அன்பு நெறியா?’ அவளது விழிகள் விரிந்து ஒரு கணம் நிலைத்து நின்றன.

‘ஓம், அங்கையிருந்துதான் வாறம், உங்களுக்கு அன்பு நெறி பற்றித் தெரியுமாக்கா?’

‘ஓம் ஓம் என்ன நீங்கள், தெரியுமா எண்டு கேட்டிட்டீங்க, ஒண்டுமே தெரியாமல் இருந்த எனக்கு தங்கட செலவில தையல் வகுப்பு நடத்தி எனக்கு பாடம் சொல்லித் தந்தது அவைதானே..!’

‘ஓ அப்படியா, மறந்து போயிடுவீங்களோ எண்டு பார்த்தேன், நல்ல விஷயத்தை ஞபகம் வைச்சிருக்கிறீங்கள்.’

‘அவை செய்த உதவியை எப்பிடி மறக்கமுடியும். இப்ப கூழோ கஞ்சியோ குடிக்க அவை சொல்லித் தந்த இந்த தையற்கலைதானே எனக்கு உதவியாய் இருக்கு’ என்றாள்.
என்னக்கா சொல்லுறீங்க, தையல் செய்ய உங்களுக்கு விருப்பமாக்கா?

‘தினக்கூலிக்கு தைக்கப் போறனான். உண்மையாகவே இதுதான் சாப்பாட்டிற்கு எனக்கு மட்டுமில்லை, இங்கை இருக்கிற என்னைப் போன்றவைக்கும் வருமானம் தருகுது, எவ்வளவு நாளைக்கோ தெரியாது. என்னைப்போல நிறையப் பெண்கள் இங்க குடும்பத் துணையில்லாமல் இருக்கினம். அதுசரி உங்களை வெளியாலை வைச்சுக் கதைச்சுக் கொண்டிருக்கிறன், உள்ள வங்கோ.’ சீதா அவர்களை உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைத்தாள்.

அவர்கள் வந்த வழியெல்லாம் யுத்தத்தின் பாதிப்பை அவதானித்துக் கொண்டுதான் வந்தார்கள். வசதி உள்ளவர்கள் வசதி அற்றவர்களுக்கு தங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடுதான் இந்தத் திட்டத்தை ஆரம்பித்தார்கள். கனடிய வர்த்தகப் பிரமுகர்கள் அவர்களுக்கு நிறையவே உதவி செய்தார்கள்.
‘அப்ப உங்களுக்கு வேற வேலையே தெரியாதாக்கா?’

‘இந்தக் கிராமத்திலா, வேறை என்ன கூலி வேலைக்குத்தான் போகலாம்’

‘இல்லை அக்கா, இதுக்காகத்தான் இந்;த தையல் பயிற்சியை முதல்ல கிழக்கு மாகாணத்தில பாதிக்கப்பட்டவைக்குத் தந்தனாங்கள். அது உங்களுக்குப் பயன்பட்டிருக்கு என்று தெரியுது. ஆதனால நாங்கள்  உங்களுக்கு ஒரு நல்ல சேதி கொண்டுவந்திருக்கிறம்.’

‘எனக்கா நல்லசேதி, அப்பிடி என்றால் என்ர புருசன் உயிரோட இருக்கிறாரா?’ அவள் முகத்தில் எதையோ எதிர்பார்த்த, பொங்கி வந்த ஆர்வத்தோடு அவர்களைப் பார்த்தாள்
‘இல்லை அக்கா அதுபற்றி எங்களுக்கு உண்மையாகவே தெரியாது, ஆனால் உங்கள் எதிர்காலம் வளமாய் இருக்க வேணும். ஆதனால நாங்கள் ஒரு திட்டத்தோட வந்திருக்கிறம்’

‘என்ன ராசா, என்ன திட்டம், சொல்லுங்கோ’

‘நாங்கள் உங்களுக்கு தவணை முறையில் பணம் கட்டக்கூடியதாகத் தையல் மெசின் ஒன்று வாங்கித் தரப்போறம்’

‘தையல்மெசினா.. எனக்கா..?’ அவள் நம்ப முடியாமல் ஆச்சரியமாய் அவர்களைப் பார்த்தாள்

‘அதாவது நாங்கள் உங்களுக்கு மட்டுமல்ல, எங்கட திட்டத்திலை தையல் படித்தவர்களுக்கு கடனாக ஒரு தையல் மெசின் தரப்போகிறம். நீங்களே அதை வைச்சுப் பிழைக்கலாம். மாதாமாதம் வருகிற வருமானத்தில தவணைப் பணத்தை கட்டி முடிச்சால் போதும்.’

‘உண்மையாவா?’

‘ஓம், இந்தத் திட்டத்தின்படி, நீங்கள் கடனைக் கட்டி முடிச்சதும் அந்தப் பணத்தை எடுத்து தேவையான இன்னுமொருவருக்கு உதவி செய்ய நினைச்சிருக்கிறம்.’
இப்படியும் மனிதர்களா, அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்து எங்களுக்கு உதவி செய்கிறார்களா? உணர்ச்சி வசப்பட்டதில் அவளது கண்கள் கலங்கின.

‘நீங்கள் எல்லாம் இந்த மண்ணைவிட்டுப் போனபோது நாங்க உங்களைப்பற்றித் தப்பாய் பேசினோம். ஆனால் இப்போதுதான் புரியுது, நல்ல மனசு படைத்த வெளிநாட்டில் இருக்கும் உங்களைப் போன்றவர்களால்தான் நாங்கள் இந்த மண்ணில் மானத்தோடு நிம்மதியாய் வாழமுடியுது.’ வார்த்தைகள் விம்மலோடு வெளிவந்தன.

‘இல்லை அக்கா, எங்கட உடன் பிறப்புகளுக்கு எங்களால முடிஞ்ச அளவு உதவியைச் செய்யிறம், அவ்வளவுதான்.’

‘உதவி என்று செய்யிறத்திற்கும் நல்ல மனசு வேணுமெல்லே, நீங்கள் எவ்வளவோ தூரத்தில இருக்கிற கனடாவில இருந்தாலும் உங்கட சிந்தனை எல்லாம் எங்களோடதான் இருக்குது எண்டு இப்பதான் எங்களுக்கும் புரியுது.’

‘இது எங்கட இனத்திற்குச் செய்ய வேண்டிய எங்கட கடமையக்கா. தனித்தனியாய் செய்யாமல் ஒன்றாய் சேர்ந்து ‘அன்பு நெறி’ என்ற பெயரிலை செய்யிறம். நாங்க மட்டுமல்ல, எங்கட அடுத்த தலைமுறையும் கட்டாயம் தொடர்ந்து இதைச் செய்யும்.’

‘ஒரு நிமிசம் இருந்து தேத்தண்ணி குடிச்சிட்டுப் போங்கோ’ என்று சொன்ன சீதா சமயல்கட்டு நோக்கி நடந்தாள்.

அவர்களின் பார்வை சுவரில் மாட்டியிருந்த அந்தப் படத்தில் பதிந்தது. ஒரு அழகான பட்டுத் துணியில் சீதாவின் தையற்கலைக்கு அடையாளமாகவோ, அல்லது நன்றியுணர்வின் வெளிப்பாடகவோ வண்ண நூல்களின் தையல் வேலைப்பாட்டோடு கூடிய வாசகம் அடங்கிய பிறேம் கண்ணில் பட்டது. தையற்கலை தெரிந்த பெண்கள் உள்ள எல்லா வீட்டிலும் யுத்தத்திற்கு முந்திய அந்த நாட்களில் ‘வெல்கம்’ என்றோ அல்லது வேறு வாசகம் கொண்ட எழுத்துக்கள் தைக்கப்பட்டோ இதுபோல சுவரில் ஏதாவது பிறேம் அழகுபடுத்திய ஞாபகம் வந்தது. அங்கே இருந்த அந்த வாசகத்தை மீண்டும் வாசித்துப் பார்த்தார்கள்.

‘இடுக்கண் களையுமாம் அன்பு நெறி’

பழைய வாழ்க்கை திரும்பிவிட்டது போல, இவர்களின் கண்கள் கலங்கிப் போனது. சீதா சுடச்சுட கொண்டு வந்து கொடுத்தது வெறும் தேத்தண்ணி எண்டாலும், பாதிக்கப்பட்ட அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவியைச் செய்கிறோம் என்ற திருப்தியில் இவர்களின் மனசெல்லாம் இனிப்பாய் நிறைந்து போனது.

kuruaravinthan@hotmail.com