சிறு குறிப்பு: ‘டொராண்டோ’வில் எழுத்தாளர் ‘கடலோடி’ நரசய்யாவுடனொரு சந்திப்பு!

நரசய்யாதமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஆதரவில் இன்று , நவம்பர் 5, 2011, ‘டொராண்டோ’ வில் எழுத்தாளர் நரசய்யாவுடனொரு சந்திப்பு நடைபெற்றது. நான் சென்றபோது கூட்டம் தொடங்கிவிட்டது. நரசய்யா ஆரம்பகாலக் கடற்படைப் பொறியியலாளராகப் பணியாற்றிய தனது அனுபவத்தையும், ஆனந்தவிகடனுக்குக் கதைகள் எழுதிய அனுபவத்தையும் விபரித்துக்கொன்டிருந்தார். தனது முதற் சிறுகதையே விகடனில் முத்திரைக் கதையாக வெளிவந்த அனுபவத்தையும் நினைவு கூர்ந்தார். – சுற்றிவரப் பார்த்தேன். எழுத்தாளர்களான என்.கே.மகாலிங்கம், அ.முத்துலிங்கம், செழியன், டானியல் ஜீவா, க.நவம், திருமாவளவன், சுமதி ரூபன், ‘காலம்’ செல்வம் எனப் பலர் சமூகமளித்திருந்தனர். – முனைவர் செல்வா கனகநாயகம் அவர்களின் தலைமையில் மேற்படி நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

எழுத்தாளர் நரசய்யா தனது கடல் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகளை விபரித்தார். இதற்குதாரணமாக ஏர்னஸ்ட் ஹெமிங்வே பற்றியும், அவரது சொந்த அனுபவத்தின் வாயிலாக உருவான ‘கடலும் கிழவனும்’ புனைகதை பற்றியும் குறிப்பிட்ட அவர் அவற்றின் அடிப்படையிலேயே தனது படைப்புகளும் சொந்த அனுபவங்களை மையமாகக் கொண்டு உருவாகியதாகக் குறிப்பிட்டார்.  அதன்பின்னர் தான் ஓய்வு பெற்றதன் பின்னர் தனது கவனம் ஆராய்சியில் இறங்கியதாகவும், அதன் விளைவாக உருவான ‘கடல் வழி வணிகம்’ , ‘மதராசப் பட்டினம்’ பற்றியும் விபரித்தார். அத்துடன் தமிழர்களின் ஆரம்பகால விமான ஓட்டிகள் பற்றிய விபரங்களையும் விளக்கினார். அத்துடன் தமிழர்கள் தமது வரலாறு பற்றிய ஆய்வில் போதிய அக்கறையின்றி இருப்பதாகவும் கவலைப்பட்டுக்கொண்டார்.

‘காலம்’ செல்வத்தின் சிறிய அளவிலானான நூல் கண்காட்சியொன்றும் நடைபெற்றது. அதில் ரஃபேலின் மொழிபெயர்ப்பான ‘அம்பர்தோ எகோ’ (நேர்காணல்களின் தொகுப்பு) மற்றும் ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யும் வாங்கினேன். நியாயமான விலையில் அவற்றைப் பெற முடிந்ததற்காக ‘காலம்’ செல்வத்திற்கு நன்றி. மொத்தத்தில் பயனுள்ள சந்திப்பு. ‘காலம்’ செல்வம் சிறிது முயற்சியெடுத்து நரசய்யா அவர்களின் நூல்களையெல்லாம் கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தால் மிகவும் பயனுள்ளதாகவிருந்திருக்கும்.

– ஊர்க்குருவி –
ngiri2704@rogers.com