தந்தையர் தினத்தினிலே….

நான் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவனாகவிருந்தபோது என் தந்தையாரை (நடராஜா நவரத்தினம்) இழந்து விட்டேன்.. அவர் ஒரு நில அளவையாளராகவிருந்தார்.  அவர் மிகவும் உயரமானவர் (சுமார் ஆறடி உயரமெனலாம்; நான் அவரைவிட ஒர் அங்குலம் உயரத்தில் சிறியவன்.) எனக்கு எழுதுவதிலும் , வாசிப்பதிலும் இவ்வளவு தூரம் ஈடுபாடு தோன்றியதற்குக் காரணமே அப்பாதான். சிறுவயதிலிருந்தே வீடு நிறைய புத்தகங்களும் , சஞ்சிகைகளும்தாம். பொன்மலர், பால்கன் காமிக்ஸ் , அம்புலிமாமா தொடக்கம், விகடன், கல்கி, கதிர், கலைமகள், ராணி, ராணிமுத்து, மஞ்சரி, கலைக்கதிர், ஈழநாடு, சுதந்திரன், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் என்று வீடே நிறைந்து கிடக்கும்.  எனது ஐந்து வயதிலேயே நாங்கள் வவுனியாவுக்கு இடம் மாறிச் சென்று விட்டோம், அம்மா ஆசிரியையாக வவுனியா மகா வித்தியாலயத்தில் பணிபுரிந்த காரணத்தால். வவுனியாவில் நாங்கள் குருமண்காடு என்னும் பகுதியில் அப்பொழுது வசித்து வந்தோம். ஒற்றையடிப் பாதையாகவிருந்த வீதியினைக் கொண்டிருந்தது குருமண்காடு அக்காலகட்டத்தில். சுற்றிவர விரிந்திருந்த கானகச் சூழல். பல்வேறு விதமான பறவையினங்கள் (நீர்க்காககங்கள், ஆலா, பருந்து, மாம்பழத்தி, நீண்ட வாற் கொண்டைக்குருவிகள், வவ்வால்கள், குக்குறுபான்கள், மரங்கொத்திகள், மீன் கொத்திகள், பலவேறு வகையான பாம்பினங்கள், குரங்கினங்கள் என விளங்கிய கானகச் சூழலில்
எம் வாழ்வு கழிந்தது.

 சிறு வயதில் அப்பாவுடன் மன்னார் வீதியிலிருந்த பட்டாணிச்சுப் புளியங்குளத்தில் குளிக்கப்போவதுண்டு. அது போல் யாழ்ப்பாணத்திலிருந்த சமயம் அதிகாலைகளில் அப்பாவுடன் வில்லூண்டிக் கேணியில் குளிக்கச் சென்றது நினைவில் பசுமையாகவுள்ளது.

இரவு வேளைகளில் முன்றிலில் அப்பா சாய்வு நாற்காலியில் படுத்திருந்தபடி நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானினை பார்த்தபடியிருப்பார். அவரது சாறத்தைத் தொட்டிலாக்கி நானும் அவருடன் சேர்ந்து சுடர்கள் மின்னும் இரவு வானினைப் பார்த்து என்னை மறந்திருப்பேன். அக்காலகட்டத்திலொருநாள்தான் அவர் ஐன்ஸ்டன் பற்றிக் கூறினார். படங்கள் பலவற்றை வெட்டியொட்டி ஒரு புத்தகத்தை எங்களுக்கு அவர் தயாரித்துத் தந்திருந்தார். அதில் ஐன்ஸ்டைன், மேரி கியூரி போன்றோரின படங்களையும் வெட்டியொட்டியிருந்தார். எனக்குச் சிறுவயதிலிருந்தே வானியற் துறையில் ஆர்முண்டாகக் காரணமாகவிருந்தவர் அப்பா.

அக்காலகட்டத்தில் அதிகாலைகளில் மிக நீண்ட வால்வெள்ளியொன்றினைக் காணக்கூடியதாகவிருந்தது. அவ்வால்வெள்ளியினைப் பார்ப்பதற்காகவே அதிகாலைகளில் நேரத்துடன் எழுந்து விடுவதுண்டு. அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்கிப் படுத்திருக்கும் சமயங்களில் பல தடவைகள் விண்ணில் சுடர்களுக்கிடையில் விரையும் செயற்கைக்கோள்களை எமக்கு அவர் காட்டியிருக்கின்றார்,

அண்மையில் எனது ஆங்கில வலைப்பக்கத்துக்கு என் அப்பாவுடனான மேற்படி அனுபவத்தை மையமாக வைத்து ஆங்கிலக் கவிதையொன்றினை எழுதியிருந்தேன். தந்தையர் தினமான இன்று அவர் நினைவாக அந்தக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பினையும், மூலத்தினையும் இங்கு தருகின்றேன்.


கவிதை: ஐன்ஸ்டைன், அப்பா மற்றும் நான்!

– வ.ந.கிரிதரன் –

நட்சத்திரங்கள் நிறைந்த இரவு வானை
முன்றிலில்
என் தந்தையின் அருகிலிருந்து பார்ப்பது
ஒரு இனிய பால்ய காலத்து நினைவு.

சாய்வு நாற்காலியில் அவர் படுத்திருக்கும்போது
நான் அவரது ‘சாற’த்தை ஏணையாக்கிக்கொள்வேன்.

இரவு வானைப் பார்த்துக்கொண்டிருக்கும் அதே சமயம்
நான் படுத்திருக்கும் ஏணையிலிருந்து
அவரைச் செவிமடுத்தலென்பது
எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குகளில்
ஒன்று.

அவர் நட்சத்திரங்களைப்பற்றி உரையாடுவார்.
அவர் கிரகங்களைப்பற்றி உரையாடுவார்.
அவ்விதமான அரியதொரு தருணமொன்றில்
அவர் ஐன்ஸ்டைன் பற்றிக் கூறினார்.
அதுதான் முதல் தடவையாக நான்
ஐன்ஸ்டைன் பற்றிக் கேட்டது.
அதன்பின்பு அவர், ஐன்ஸ்டைன் , எனக்கு மிகவும்
விருப்பமான அறிவுலகவாதியானார்.

வெளியும், நேரமும்
இனிமேலும் வேறுவேறானவையல்ல.
இனிமேலும் சுயாதீனமானவையல்ல.
ஆனால்
சார்பானவை,
ஒளியின் வேகம் தவிர.

வெளியும், நேரமும்
இனிமேலும் தனித்தனியானவையல்ல.
ஆனால் அவை
பிரிபட முடியாத
வெளி-நேரத் தொடர்வரிசை..

நாம் வெளி-நேரத் தொடர்வரிசையில்
இருக்கின்றோம்,
அவர் அறிவித்தார்.
 
ஐன்ஸ்டைன், ஒரு பிரபஞ்ச
அறிவுலகவாதி.
ஓர்
அறிவுலகப் புரட்சிவாதி
வெளி-நேரத்தைப் பொறுத்தவரை. 


Poem- Einstein, My Dad and I  By V.N.Giritharan

looking at the starry night sky,
 Beside my dad,
 in front of our house,
 A sweet childhood memory!
 
As he lay down on the easy chair,
 I find a hammock in the
 *Sarong he wore..
 
While looking at the night sky,
 listening to him
 from the hammock
 where I lay down
 is my favorite pass time.
 
He talked about stars;
 He talked about planets;
 He talked about satellites;
 He talked about many other
 astronomical things.
 
I listened; listened; listened
 with great interest.
 
I felt wonder when listening to him.
 I felt astonishment when looking at him.
 
In one of these precious moments,
 He talked about Albert Einstein.
 That was the first time
 I heard about him.
 he has been my favorite
 person of knowledge
 there after.
 
Space and Time are
 no longer separate;
 No longer absolute,
 but relative
 except
 the speed of light.
 
Space and Time are
 no longer separate
 entities,
 but
 A non separable.
 space-time continuum.
 
We exist in
 the space-time continuum,
 he declared.
 
Einstein, A man of
 cosmic intellect;
 A true
 knowledge – revolutionary
 on space-time.
 
* Sarong – A fabric often wrapped around the waist and worn by men and women in many Asian countries. It is also known as lungi in India.