தினமணி: சூடாமணி வாழ்கிறார்!

சூடாமணி வாழ்கிறார்ஜிம் ஸ்டோவல் என்று ஓர் ஆங்கில எழுத்தாளர் எழுதிய “த அல்டிமேட் கிஃப்ட்’ என்ற புத்தகத்தைப் படித்தவர்கள், ஹோவர்ட் ரெட் ஸ்டீவன்ஸ் என்ற ஒரு செல்வந்தர் தம் சொத்துக்களை உயில் மூலம் தன் குடும்பத்தினருக்கு எழுதி வைத்தபின், அவர்கள் எப்படி அதை அழித்துவிட்டு, அவர்களும் உருப்படாமல் போனார்கள் என்று முடித்திருக்கிறார். இளைஞனான மருமான் ஜேசன், மறைந்த தன் மாமா வீடியோவில் தன்னுடன் பேசுவதைப் பார்க்க வழக்கறிஞர் ஏற்பாடு செய்வார். நமக்கு இந்த உலகில் கிடைத்திருப்பதெல்லாம், கடவுளின் அன்பினால் மட்டுமே கிடைத்தது என்பதைப் புந்துகொள்ள எனக்குப் பல ஆண்டுகள் ஆயின என்று அவனுக்குக் கூறுவார். எனக்கு உன் மீது சிறிது நம்பிக்கை இருக்கிறது. அதை ஊதிப் பெரிதாக்க முடியும் என்று நம்புகிறேன் என்பார். ஜேசன் கடினமாக உழைத்து, பெரியவரின் நம்பிக்கையை நிறைவேற்றுவான். ரெட் ஸ்டீவன்ஸ் சிறுவர் இல்லம், ரெட் ஸ்டீவன்ஸ் நூலகம், மருத்துவமனை, ஏராளமான கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் எல்லாம் நடத்த ஒரு பில்லியன் டாலர் அறக்கட்டளை அவன் வசம் ஒப்படைக்கப்படுகிறது முழுப் புத்தகத்தையும்கூடப் படிக்க வேண்டாம். பின் அட்டையை முழுதும் படித்தாலே போதும். நூலின் மையக்கருத்து புலப்பட்டுவிடும்.

“”அந்தப் புத்தகத்தின் முகப்பில், இன்னொருவரின் ஆன்மாவின் ஆழம் வரை சென்று கவனியுங்கள் – செவிகளால் மட்டுமல்ல, இதயத்தால், சிந்தனையால், அமைதியான அன்பினால் அதன் ஒலியைக் கேளுங்கள்…” என்று ஒரு மேற்கோள் காட்டியிருக்கிறார் ஸ்டோவல். ஒவ்வோர் அத்தியாயமும், “கிஃப்ட்’ எனப்படும் அன்பளிப்பை வலியுறுத்தும். இறுதி அத்தியாயம்தான் “அல்ட்டிமேட் கிப்ட்’. ஒவ்வோர் அத்தியாயத்தின் தலைப்பிலும் ஒரு செய்தி இருக்கும். கடைசியில், பிறர் மீது தனது தாக்கம் எத்தகையதாக இருக்கும் என்பதைப் பொறுத்தே ஒருவர் அறிந்துகொள்ளப்படுகிறார் என்பது ஓர் அத்தியாயத்தின் செய்தி. ஆர். சூடாமணியைப் பொறுத்தவரை இது சற்றும் மிகையில்லாமல் பொருந்துகிறது.

ஆர். சூடாமணியின் கதைகள்தாம் இதுவரை அவரது வாசகரை நெகிழச் செய்துவந்தன. இப்போது அவர் மறைவுக்குப் பின் நடைபெறும் நிகழ்ச்சிகள் அவருடைய வாசகர் வட்டத்துக்கு வெளியேயுள்ளவர்களின் நெஞ்சங்களையும் நெகிழச் செய்து வருகின்றன.

தாம் மறையும் முன், தம்முடைய சொத்துக்களின் பாதுகாவலராக, தன் சினேகிதி பேராசியை கே. பாரதியை நியமித்திருந்தார் ஆர். சூடாமணி. தம்முடைய அசையாச் சொத்துக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தை எல்லாம் ராமகிருஷ்ணா மாணவர் இல்லத்துக்கும், ராமகிருஷ்ணா மிஷன் இலவச மருத்துவமனைக்கும், அடையாறு வாலன்டரி ஹெல்த் சர்வீஸ் சென்டருக்கும் கொடுத்து, அவர்களின் பணியை ஊக்குவிக்க எண்ணியவர் சூடாமணி. சென்ற ஆண்டு, முதல் தவணையாக சுமார் ஐந்து கோடி ரூபாய் இப்பணிகளுக்காக அளிக்கப்பட்டது. சென்ற ஞாயிறன்று இன்னும் ஆறுகோடி ரூபாய் அளித்த நிகழ்ச்சி, ராமகிருஷ்ண மடத்தின் வளாகத்திலேயே நடந்தது.

“ஹிந்து’ ராம், “”ஓர் எழுத்தாளரின் படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, தாம் பெரிதும் ரசிக்கும் ஆர்.கே. நாராயணின் எழுத்து குறித்து ஆங்கில நாவலாசிரியர் கிரஹாம் கிரீன் உயர்வாகக் கூறியிருந்த கருத்தை நினைவுகூர்ந்தார்.

நல்லி குப்புசாமி எப்போதும் பழைய சம்பவங்களை சிறுகதையின் சுவாரசியத்தோடு சொல்லி, நிகழ்ச்சிக்குத் தன் அனுபவ பூர்வமான பங்களிப்பை அளிப்பார்.

ரசகுல்லா கடையை நடத்தி வந்தார் ஒருவர். அவர் கல்கத்தாவைவிட்டுப் போய் இரண்டு ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்தபோது, தாம் யாரிடம் கடையை ஒப்படைத்திருந்தாரோ, அவர் கடையையே விற்றுவிட்டுப் போய்விட்டதால், அவருக்கு ராமகிருஷ்ண மடம் வாழ் நாள் முழுக்க அடைக்கலமும் ஆதரவும் அளித்ததாம். காரணம் மடத்தின் சன்னியாசி ஒருவருக்கு அவர் ஒரே ஒரு நாள், மூன்று வேளை உணவளித்தாராம் இதைச் சொல்லிவிட்டு, இது போன்று எத்தனையோ பேருக்கு வாழ்வளித்திருக்கிறது ராமகிருஷ்ண மடம்” என்றார் நல்லி.

பத்திகையாளர் மாலன் ஆர். சூடாமணி எழுதிய சிறுகதைகளின் உயர்வை எடுத்துக்கூறினார். சுவாமி சத்யஞானானந்தா, ஒரே நபர் இத்தனை பெரிய நன்கொடை தந்தது இத்தனை ஆண்டுகளில் இதுவே முதல் தடவை என்றும், இன்னுமொரு இருநூற்றைம்பது மாணவர்களயும் சேர்க்க இந்த நிதி உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அரசு அதிகாரி சாந்தா ஷீலா நாயர், “”வி.ஹெச்.எஸ். மருத்துவமனைதான் பின்னர் ஆரம்ப சுகாதார மையங்கள் எனப்படும் பி.ஹெச்.எஸ். உருவாகக் காரணம்” என்றார்.

ஆர். சூடாமணி வெளியுலகத்தின் தொடர்புகள் கணிசமாக ஏதும் இன்றி வாழ்ந்தவர். ஆனால் அவரைப் போல மனித வாழ்க்கையை அத்தனை அசலான உணர்வுகளுடன் தன் படைப்புகளில் நுணுக்கமாக வெளிப்படுத்தியவர் வேறு யாராவது இருக்க முடியுமா என்பது சந்தேகம். அவருடைய சிறுகதை “நாமாவளி’யைப் படித்தவர்கள், அவருடைய உள் மனம் எத்தனை கனிவானது என்பதை உணரமுடியும். மரங்களையும், தாவரங்களையும், இயற்கையையும் நேசித்தவர் சூடாமணி. எழுத்தைப் போலவே, ஓவியத்தையும் இதமாகக் கையாண்டவர். தன் உடல் நலக்குறைபாட்டுக்கு எவரிடமிருந்தும் அனுதாபம் எதிர்பார்க்காதவர். தன் சிறுகதைகள், நாவல்கள் மூலம் நல்ல சிந்தனைகளையும் கருத்துக்களையுமே வாசகர் நெஞ்சங்களில் விதைத்து வந்தவர். அப்படி வாழ்ந்தவர், தம் சொத்துக்களின் மதிப்பையும், முதலீட்டின் வருவாயையும் மொத்தமாக நற்செயல்களுக்கு நன்கொடையாக வழங்கியிருப்பது நமக்கு வியப்பளிக்கவில்லை!

சூடாமணியின் கனவு மெய்ப்பட உதவியவர் என்ற முறையில், தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பலரும் பாராட்டிய போது கிடைத்த மகிழ்ச்சியும், திருப்தியும் பேராசிரியை கே. பாரதிக்கு நிறைவைத் தந்திருக்கும்.

மீண்டும் ஜிம் ஸ்டோவல்லின் நூலுக்கே வருகிறேன். “அல்ட்டிமேட் கிஃப்ட்’ எது? இதைவிட நல்ல அன்பளிப்பு ஏதுமில்லை என்று கூறத்தக்கது எது?

ஸ்டோவல் முடிக்கிறார்: இறுதியில், வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து முடிப்பதுதான் “அல்ட்டிமேட் கிஃப்ட்’ என்று முடித்திருக்கிறார். அதுவும் ஆர். சூடாமணிக்குப் பொருந்துகிறது!

நன்றி: http://www.dinamani.com


உயிர்மை: ஆர். சூடாமணி என்னும் அற்புத மனுசி!

– கே.பாரதி –

சூடாமணி வாழ்கிறார்கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டுக் கல்வி அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு முந்தைய தலைமுறை எழுத்தாளரான ஆர்.சூடாமணியின் கையெழுத்துப் பிரதியை வாசிக்க வாய்த்தது. கடைசிப் பக்கத்தில் அவரது முகவரியைக் குறிப்பிட்டிருந்தார். என் வீட்டுக்கு அருகாமையில் வசிக்கும் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைவு முடிச்சைப் போட்டு வைத்தேன். பிறகு ‘லட்சியப்பெண்’ இதழ் குறித்து அவருடன் விவாதிக்க ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தேன். அவரது உருவ அமைப்பு குறித்து எனக்கு முன்பே தெரிந்திருக்கவில்லை. கூர்ந்து கவனித்தாலும் காயப்பட்டுப் போனாரோ என்று முகம் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன். ஐந்தாறு வயது வரை ஆரோக்யமான சிறுமியாகத்தான் இருந்திருக்கிறார். அம்மை நோய் தாக்கியபோது டாக்டர் ரங்காச்சாரியின் சிகிச்சையால் உயிர் பிழைத்தார். ஆனால் கை, கால்களின் இயல்பு வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிட்டது. அவரைப் பற்றிய இந்த விவரங்களை எழுதும்போது அவரது மெல்லிய உணர்வுகளை சிதைப்பதாக  இப்போதும் எனக்குத் தோன்றவுமில்லை. உரிய காரணத்துக்காகவே குறிப்பிட வேண்டியிருக்கிறது. யாருக்கு வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நேரிடலாம். நேர்ந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதும் எப்படித் தங்களை நடத்திக் கொள்கிறார்கள் என்பதுமே முக்கியம். அந்த வகையில் சூடாமணியின் ஆளுமை வியக்கத் தகுந்தது.

தனது இயலாமைகளையும் இழப்புகளையும் பூரணமாக ஏற்றுக் கொண்டிருந்தார். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் ஆக்கபூர்வமாகவும் ஆக்கிக் கொண்டார்.

புத்தகப் பிரியரான அவரது  வாசிப்பு விஸ்தாரமானது. நன்றாக, சித்திரம் தீட்டக்கூடிய அவருக்கு இசையிலும் ஆழ்ந்த ஈடுபாடு. சூடாமணியின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தியதில் அவரது அம்மாவுக்கு மிகப்பெரிய பங்கு இருந்தது.

அவரது படைப்புகள் ஆனந்தவிகடன், கல்கி, சுதேசமித்திரன், தினமணி கதிர் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. ‘நாராயணசாமி ஐயர் நாவல் போட்டி’யில் முதல் பரிசு, இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசின் ‘பப் பாஸி’ விருது என ஒரு சில விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

விளம்பரமோ, விருதோ இவருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. இன்னும் ஏன் இவருக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது தரப்படவில்லை என்று எவரேனும் எழுதினால் சங்கடப்படுவார்.

தொண்ணூறுகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த  ஒரு திரைப்படத்தில் அவரது சிறுகதையின் சாயல் அப்பட்டமாகத் தெரிந்தது. நான் சொன்னவுடன் படத்தைப் பார்த்துவிட்டு அவரும் உறுதி செய்தார். வழக்குத் தொடரவில்லையே தவிர வருத்தப்படாமலில்லை.

சூடாமணியின் சிறுகதைகளில் புதிய உத்திகள் இருக்காது. எளிய நடையில் நேரடியாகக் கதை சொல்லும் பாணி அவருடையது. பிரச்சினையை விவாதித்துவிட்டு ஒரு  புதிய பரிமாணத்தைக் காட்டுவதும் உளவியல் ரீதியான அணுகுமுறையும் அவரது எழுத்தின் பிரத்யேகத் தன்மை.

எல்லோருக்கும் எளிதாகக் கைவராத சில எல்லைகளை அவர் தொட் டிருக்கிறார். குழந்தைகளின் உளவியல் சூட்சுமங்களை உணர்வு பூர்வமாகச் சொல்லியிருக்கிறார் .

மானுட மேன்மைகோரும் தரமான இலக்கியத்துக்கு சூடாமணியின் பங்களிப்பாக குறிப்பிட வேண்டியது,  குழந்தைகளைப் பற்றி அவர் எழுதிய கதைகளே. குழந்தைகளின் உளவியல் சூட்சுமங்களைப் பற்றிய அவரது கவனிப்பு எல்லோருக்கும் எளிதில் சாத்தியப்படாது. வாழ்வின் நெருக்கடியில் சர்வசாதாரணமாக நசுக்கப்படும் குழந்தை உணர்வுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டிருக்கிறார். படிப்பவரின் கண்களைக் குளமாக்கும் நோக்கம் தவிர்த்த நம்பகத் தன்மையும், உணர்வுகளைச் சுளீரென சொடுக்கும் யதார்த்த தன்மையும் அவருக்கே உரியது.

“பெண்நிலை வாதம்” என்ற சொல்லாடல் பிரபலமாவதற்கு முன்பே பெண்நிலை நோக்கில் முற்போக்கான சிந்தனையுடன் நிறைய கதைகள் எழுதியிருக்கிறார். தனது கதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட எந்த முயற்சியையும் அவர் எடுக்கவில்லை என்பதால் ஓரிரு தொகுப்புகளே வெளிவந்திருக்கின்றன.

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் வெகுஜனப் பத்திரிகைகளில் சிறு கதைகளுக்கு கணிசமான பக்கங்கள் ஒதுக்கப்பட்டன. கனமான சிறுகதைகள் தகுந்த சித்திரங்களுடன் வாசகர்களுக்குச் சென்று சேர்ந்தன. எண்பதுகளில் சினிமா செய்திகளின் ஆதிக்கம் அதிகமாகி, சிறுகதைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டன. வணிகச் சூழலின் காரணமாக தொண்ணூறுகளில் சிறுகதைகள் ஒப்புக்கு இடம்பெற்றன. தற்போது அவசரமாகப் படிக்க அரை பக்கக் கதை (?) களும் துணுக்குச் செய்திகளும் போதும் என்றாகிவிட்டது. இந்தக் காலமாற்றத்தின் சுழற்சியில் சூடாமணி போன்றவர்கள் எழுதுவதை நிறுத்திக்கொண்டதில் வியப்பில்லை.

இலக்கியம், அரசியல், சமூகம், சினிமா என்று விரியும் எங்கள் விவாதத்தில் பெரும்பாலும் நான்தான் பேசிக் கொண்டிருப்பேன். ஓரிருவரிகளில் அவர் சொல்லும் கருத்து என் அணுகுமுறையைப் புரட்டிப் போடுவதாக இருக்கும்.

காந்தியத்தின் தாக்கம் அவரிடத்தில் இருந்தது. சுதந்திர தினமும் குடியரசு தினமும் அவருக்கு முக்கிய தினங்கள். வெள்ளைப் புடவையும் கழுத்தை மூடிய வெள்ளை சட்டையும் எப்போதும் அணிந்திருப்பார்.

பிறர் செல்வத்துக்கு ஆசைப்படும் மனிதர்கள் மத்தியில் சூடாமணி உன்னதமானவர். தனக்குக் கிடைத்த மூதாதையர் செல்வத்தையே அவர் தன்னுடையதாகக் கருதவில்லை. தனது எளிய தேவைக்கு மட்டுமே செலவு செய்வார். தனக்குப் பிறகு அவை ஏழை எளிய மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.

அவருக்குப்  பிடித்த அன்றாடப் பொழுதுபோக்கு கடற்கரைக்குப் போவது. காரில் அமர்ந்தபடி மனித இயக்கங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

தன்னைவிட இயலாதவர்களுக்கு உதவியாக இருந்தார். கண்பார்வையற்ற மாணவர்களுக்குப் பாடங்களை வாசிப்பார். இவரால் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் பெரிதும் பயனடைந்திருக்கிறார்.

சூடாமணிக்கு மூன்று சகோதரிகள். ஒரு சகோதரர். இளைய சகோதரி ருக்குமணி பார்த்தசாரதியும் எழுத்தாளர்.

கடைசிக் காலத்தில் தன் சகோதரிகள் ஒவ்வொருவராக இறந்து போனதைத் தாங்கிக் கொண்டார் சூடாமணி. அந்தப் பெரிய வீட்டில் தன்னந்தனியாக அவர் வாழ நேரிட்டது. உதவிக்குச் சில வேலையாட்கள் மட்டுமே. அவரது இயலாமையைத் தெரிந்துகொண்டு அவர்கள் சுரண்டிய போதெல்லாம் மௌனமாக அனுமதித்தார். “பணம்தானே? போகட்டும்” என்று தேற்றிக் கொண்டார். எவரையும் குறை கூறவில்லை.

நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரம் மருத்துவமனையில் சிரமப்பட்டார். ஒரு விடியலின் தொடக்கத்தில் முடிந்து போனார். சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கையற்ற அவரது உணர்வு இறுதியிலும் அனுசரிக்கப்பட்டது.

நன்றி: http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=3577