திரும்பிப்பார்க்கின்றேன்: நடமாட முடியாத காலத்திலும் நடமாடும் நூலகமாகத் திகழ்ந்த இரசிகமணி கனகசெந்திநாதன் இலக்கியத்தையும் இனிப்பையும் நேசித்தார்.

1_kanaka-senthinaathan.jpg - 7.27 Kbமுருகபூபதிசிட்னியிலிருந்து 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் வானொலியில்  எழுத்தும் எழுத்தாளரும் என்ற  நிகழ்ச்சிக்காக ( நேரடி  ஒலிப்பதிவு – நேரடி ஒலிபரப்பு )   என்னை   பேட்டிகண்ட   குறிப்பிட்ட வானொலி ஒலிபரப்பு ஊடகவியலாளர் நண்பர்   செ.பாஸ்கரன்   பேட்டியின்    இறுதியில்  ஒரு   கேள்வி – ஆனால் ஒரே  பதில்  தரவேண்டும் என்றார். கேளுங்கள்   என்றேன். உங்களுக்குப் பெரிதும் பிடித்தமான   தமிழ்   எழுத்தாளர்   யார்?  –   இதுதான் கேள்வி. என்னை மிகவும்  தர்மசங்கடத்திற்குள்ளாக்கிய   கேள்வி.   உடனடியாக  பதில்   சொல்ல   சற்று   தயங்கினேன். கருத்துமுரண்பாடுகளுக்கு அப்பாலும்   எனக்குப்பிடித்தமான   பல எழுத்தாளர்கள்    இருக்கிறார்கள்.எனது  திரும்பிப்பார்க்கின்றேன்   தொடரில் இடம்பெறும் பல எழுத்தாளர்கள்   எனக்கு   பிடித்தமானவர்கள்தான். ஆனால் – எனக்குப்பிடித்த   ஒரு   எழுத்தாளரின்   பெயரையும்  ஏன்   அவரை  எனக்குப்பிடித்தது  என்றும்   சொல்ல  வேண்டும்.  சில கணங்கள்  யோசிக்கவைத்த  கேள்வி  அது. எனது  மௌனத்தைப்பார்த்துவிட்டு  மீண்டும்  –  உங்களுக்குப்பிடித்தமான   தமிழ்   எழுத்தாளர்   யார்?  சொல்லுங்கள்   என்றார்     பாஸ்கரன். எனக்குப் பெரிதும் பிடித்தமான  எழுத்தாளர்   குரும்பசிட்டி  இரசிகமணி கனகசெந்திநாதன்    எனச்சொன்னேன். உடனே  அவர்  தனக்குப்பிடித்தமான  எழுத்தாளர்  மு. தளையசிங்கம் என்றார். எனக்கும்   அவரை  நன்கு  பிடிக்கும்   என்றேன்.

 ஏன்   எனக்கு   கனகசெந்திநாதனைப் பிடித்தது? அவர் இலங்கையில் வடபுலத்தில்  குரும்பசிட்டி   என்ற  கிராமத்தில் வாழ்ந்தவர்.   ஆசிரியராக  பணியாற்றிய   எழுத்தாளர். இலக்கிய விமர்சகர்.தனது   வீட்டில்   பெரிய நூலகம்   வைத்து   தானும்   பயனடைந்து – சக எழுத்தாளர்களையும்   பயனடைய வைத்தவர். நடமாடும்    நூலகம்   என   அழைக்கப்பட்டவர். தொலைதூரத்தில்  –  இலங்கையின் மேற்கே   நீர்கொழும்பில்  இருந்த என்னை   அவர்   பெரிதும்   கவர்ந்தமைக்கு   என்ன    காரணம்.? வாசகர்களே —-  இனி இதனைப்படியுங்கள்.    உங்களின் மனக்கண்ணில் அந்தக்காட்சி     விரியும். —-   ——     ———-            ——- நாகம்மா…. ஒரு   தாம்பாளமும்   செவ்வரத்தம்   பூவும்   கொண்டு  வாரும் — குரல்   கேட்டு  ஓடோடி   வருகின்றார்    எங்கள்   இரசிகமணி    கனகசெந்தியின்    மனைவி.     எம்மைப் பார்த்து  அமைதியான  புன்னகை. இவரைத்  தெரியும் தானே? –   இது   முருகபூபதி.    இவர்   தம்பி   செல்வம்.  இவர்    தம்பையா.    இங்க   பாரும்…. இன்றைக்கு   எங்கட   வீட்டுக்கு    ஒரு தமிழரல்லாத    தமிழ்க்கவிஞர்    வந்திருக்கிறார்…  இவர்தான்    மேமன்கவி..  கனகசெந்திநாதன்     அமர்ந்தவாறு    அனைவரையும்    இல்லத்தரசிக்கு அறிமுகப்படுத்துகிறார். மேமன்கவி   எழுந்து    அந்தத்   தாயை   வணங்குகிறான். இருங்கோ…. என்ன …. கூப்பிட்டியள்…. கணவன்    பக்கம்   முகம்   திரும்புகிறார். என்ன … விளங்கவில்லையோ….. கெதியாய்போய்….. தாம்பாளமும்     வாசலில்   ஒரு   செவ்வரத்தம்  பூவும்   பறித்துக் கொண்டு வாரும் — கனகசெந்தி   மீண்டும்   கட்டளை   பிறப்பிக்கின்றார். அம்மையாரும்  கணவரின்    கட்டளையை    நிறைவேற்றிவிட்டு   பவ்வியமாக    ஒதுங்கி நிற்கிறார்.    அழகிய   பித்தளைத்    தாம்பாளத்தில்     செவ்வரத்தம்பூ    சிரிக்கின்றது.

தம்பி அந்த மலருக்குப் பக்கத்தில் உமது கவிதை மலரை வையும்.

மேமன்கவி தனது முதலாவது (யுகராகங்கள்) கவிதைத் தொகுதியை வைத்து –  தாம்பாளத்தை   தூக்கியவாறு    அடுத்து   என்ன   செய்வது  எனத் தெரியாமல்    தயங்குகின்றான்.

தம்பி எனக்கு எழும்பமுடியாது இனி அந்தத் தட்டத்தை என்னிடம் தாரும்.

மேமன்கவியும் அவ்வாறே செய்கின்றான்.

கனகசெந்தியின் நடுங்கும் வலது கரம் அந்த அழகிய மலரை மேமன்கவியின் தலையில் வைத்து ஆசிர்வதிக்கின்றது. நன்றாக இருக்கவேண்டும் தொடர்ந்தும் எழுத வேண்டும். எனது வாழ்த்துக்கள் என்றும் உண்டு. கவிதை நூலை அவர்  எடுத்துக் கொள்கிறார். இந்த அதியற்புதக் காட்சியைக்  கண்டு  எனது  கண்கள்   பனிக்கின்றன. கனகசெந்திக்கே உரித்தான இந்தக் குணாதிசயம் எம்மில் எத்தனை பேருக்குண்டு? அவர் மறக்க முடியாத   மனிதர். தனது    நண்பர்களை – அட.. …சொக்கா…. என    அவர்   செல்லமாக அழைப்பதுண்டு.  அவ்வாறு என்னையும்  அழைக்கவில்லையே    என்ற  ஏக்கமும்   எனக்குண்டு. அவரை எனது வாழ் நாளில்  இரண்டு  தடவைகள்தான்  சந்தித்திருக்கின்றேன்.   அதுவும்    நீரிழிவு   நோயினால்   கடுமையாகப் பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்துவிட்ட வேளைகள்  அவை.

அவர்   எப்படியிருப்பார்? –   அவர்   வாழும்   அந்த   அழகிய  சிற்றூர்   எப்படி  இருக்கும்? – அவரது   அந்தக் கதைகளில்   பயின்ற   செம்மண் ஒழுங்கைகளினூடே    நடைபயில   வேண்டுமே –   இந்த   ஆசைகள் 1972 இல் துளிர்விட்டபோதிலும்   நிறைவேறியது   1975   இல்தான்.  மல்லிகை –  ஆசிரியர்   டொமினிக் ஜீவா   என்னை    இலக்கிய   உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்    மட்டுமல்ல   பல  எழுத்தாளர்கள்   எனக்கு நண்பர்களாவதற்கும்    வழிவகுத்தவர். எனது   முதலாவது   சிறுகதைத்  தொகுதிக்கு   யாழ். வீரசிங்கம் மண்டபத்தில்   அறிமுகவிழா   ஒழுங்கு  செய்து  –  அழைப்பிதழும் அச்சடித்த பின்பு  என்னை  அழைத்தார்.    பத்து   ஆண்டுகளின்    பின்பு   மீண்டும்  யாழ்  மண்ணில்   கால்   பதித்தேன். ரயில்  நிலையத்தில்  என்னை   வரவேற்ற    ஜீவாவைக்  கண்டதுமே   ஏதோ கனகசெந்தி   பக்கத்தில்தான்    இருப்பார்  என்ற எண்ணத்தில்  –   அவரைப் பார்க்க  வேண்டும்  –  என்றேன்.    எனது    ஆவலைப் புரிந்து கொண்ட   ஜீவா   என்னை   மறுநாளே குரும்பசிட்டிக்கு   பஸ் ஏற்றி விட்டார்.    அன்றுதான் அந்த    அழகிய    கிராமத்தை    தரிசித்தேன். கொட்டும்  மழையில்   அந்த  ஊரில்   இறங்கி –  வீட்டுக்கு   வழிகேட்டுச் சென்று – அவரது   இனிய   உபசரிப்பில்  திளைத்து – பல  புதினங்கள்  பேசி – கலந்துரையாடினேன்.

எழுத்தாள    சகோதரர்    அன்பளிப்புச்   செய்த  சக்கரநாற்காலியில்    அமர்ந்து கொண்டே   புதினம்   பேசினார்    கனகசெந்தி.    அந்தச்   சக்கர நாற்காலியை   வழங்கியவர்    டானியல்    என்ற  தகவல்  பின்புதான்   தெரியும். இலக்கிய   உலகத்தைப் பற்றி    மாத்திரமல்லாமல்   எழுத்தாளர்களின் பின்னணிகளையும்    நன்கு   தெரிந்து வைத்திருந்த நடமாடும்   நூல் நிலையம்   கனகசெந்திநாதன். அவர்   உண்மையிலேயே   வியப்பான  மனிதர்தான்.   ஆசிரியராகப் பணிபுரிந்த  காலத்தில்   மாதச் சம்பளம்   எடுத்ததுமே   புத்தகக் கடைக்கு  முதலில் சென்று   பத்திரிகை – சஞ்சிகை – புத்தகங்கள்   என்று   விலைகொடுத்து  வாங்கி வரும்   மனிதர்  அவர். எங்காவது   உதைப்பந்தாட்டம்   நடக்கிறது   என   அறிந்தால்   அங்கும் ஓடிச்சென்று    விளையாட்டு   வீரர்களை   உற்சாகப்படுத்தும்    விளையாட்டுப் பிரியர்    என்று    கவிஞர்  அம்பி   சொல்லக் கேட்டதுண்டு. இந்த   நடமாடும்  நூல்நிலையம்  மிகுந்த   பிராயாசையுடன்   ஈழத்து இலக்கிய  வளர்ச்சி    என்ற   நூலை   வெளியிட்டது.  அதன்  உள்ளடக்கம்   தொடர்பாகப் பல்வேறு   கருத்துக்கள்   உண்டு.    சிலரை   கனகசெந்தி   மறந்துவிட்டார்   என்ற    குற்றச்சாட்டும் –  அதனை   வெளியிட்டவர்கள்    தமது  கைச்சரக்கு களையும்    கனகசெந்தியே    அறியா வண்ணம்    அதில்   திணித்து விட்டார்கள்    என்றும்    கூறப்பட்டதுண்டு.

எது  எப்படி  இருந்தபோதிலும்   ஈழத்து  தமிழ்  இலக்கிய   உலகில்   அவர்  வித்தியாசமான   மனிதர்தான். எனது    கதைகளைப்  படித்ததன்   மூலம்    மாத்திரம்தான்    என்னையும் அறிந்திருப்பார்    என    நினைத்தேன்.    ஆனால் – அவரோ    எனது            பூ ர்வீகத்தையும்   தெரிந்து  வைத்துள்ளார்   என்பதை   முதல்  முதலில் அன்று   சந்தித்து உரையாடிய பொழுதுதான்  புரிந்து  கொண்டேன்.

ஓ.. இந்த மனிதருக்கு    எப்படி  இதெல்லாம்  தெரியும் ?  எனக்குள்   ஆச்சரியம்  படர்ந்தது. நீர்கொழும்பு   வீதிகளில்   தாம்    நடமாடியதையும்   அங்கு    கடற்கரைக் காற்றில்    மிதந்ததையும்   சுவை பொங்கக்   கூறினார். அந்தக்    காலங்களில்  நான்   சிறுவன்.   நண்பர்களுடன்  கள்ளன் –  பொலீஸ்   விளையாடியிருக்க வேண்டும். ஜீவா…. நல்ல  காரியம்   செய்திருக்கிறான்.   நீர்கொழும்பிலும் – திக்குவல்லையிலும்  –  அநுராதபுரத்திலும்  –   புத்தளத்திலும்  தமிழ் எழுத்தாளன்   பிறக்கிறான்   என்பதை   எமக்கு   மல்லிகை   மூலம்   சொன்னவன்  ஜீவா. கனகசெந்தி   உதிர்த்த   இந்த   வார்த்தைகள்  நிஜம்தானே. அச்சந்திப்பு   முடிந்து   சுமார்   ஓராண்டு   காலத்தின்  பின்பு  நண்பர் – கவிஞர்  மேமன்கவியை   அவரிடம்   அழைத்துச் சென்றேன்.   இம்முறை  எம்மை உரும்பிராயிலிருந்து   குரும்பசிட்டிக்கு   தத்தமது   சைக்கிள்களில்  ஏற்றிச்சென்று   வழிகாட்டியவர்கள்   நண்பர்கள்  செல்வமும்    தம்பையாவும்தான்.   இருவருமே   நல்ல   இலக்கியச் சுவைஞர்கள்.   அவ்வப்போது  எழுதியவர்கள்.

சைக்கிள்  பாரில்   அமர்ந்து   கால்   தொடை  நசிந்து – பாதம்  விறைத்து பலமுறை   வீதியோரங்களில்   மேமன்கவி   அமர்ந்து   புலம்பிய   கதையை   இங்கே   சொல்ல   வேண்டிய  அவசியமில்லை. இந்த   இரண்டாவது   சந்திப்பின்   போது  அவருக்கு  60  வயதாகி  மணி விழாவுக்கான   ஏற்பாடுகள்   ஆரம்பமாகியிருந்த காலம்.   அவரை   நேரில் வாழ்த்திவிட்டு  –   ஐயா … உங்கள்   மணிவிழாவை  எங்கள்  ஊரிலும்  நடத்த விரும்புகிறோம். –  உங்கள்   அபிப்பிராயம்  எப்படி?

தம்பி .. …என்  நிலைமை   உமக்குத்  தெரியும்.  நடமாட  முடியாமல்  இங்கு  முடங்கிக் கிடக்கின்றேன்.   பாராட்டு   விழாக்கள் – மணி   விழாக்களில்   மினக்கெடுறதை விட   உருப்படியாக   ஏதும்    செய்தால்   நல்லது.    வெளிவராத   பல   படைப்புகள்   இங்கே    இருக்கு.   அவற்றை   அச்சில்  பார்க்க   விருப்பம்.    அதற்கு  ஏதும்  வழி   இருந்தால்   சொல்லும். நல்ல   யோசனை.   உங்களுடைய  ஏதாவது  நூல்  கையெழுத்துப் பிரதியில்  இருந்தால்   தாருங்கள்  நாங்கள்    நூலாக்கி   வெளியிட   ஆவன   செய்கிறோம்  –  எனச் சொல்லி  அவரது   ஒருபிடி  சோறு   நாடகப் பிரதியை   வாங்கிச் சென்றேன். நீர்கொழும்பில்   கனகசெந்திக்குத்   தெரிந்த   வர்த்தக   நண்பர்கள் –  இலக்கிய   நண்பர்கள்   நிதி  உதவி  வழங்க  முன்வந்தனர்.   எழுத்தாளர் சாந்தன்    முகப்போவியத்தை    வரைந்தார்.   நண்பர்   மு.கனகராசன்  நூலின் பின்புற   அட்டையில்   கனகசெந்தியைப் பற்றிய   குறிப்பினை   எழுதினார்.

இரசிகமணி  விழா    நீர்கொழும்பு   இந்து   இளைஞர்  மன்ற   மண்டபத்தில்   எமது    இலக்கியவட்டத்தின்   சார்பில்   நீர்கொழும்பு   விஜயரத்தினம்   மகாவித்தியாலயத்தின்    அப்போதைய    அதிபர்   திரு.வ.சண்முகராசா     தலைமையில்   நடந்தது.   கவிஞர்   அம்பியும்   கலந்து கொண்டு    கனகசெந்தியின்    சிறப்பியல்புகளைச்   சிலாகித்துப் பேசினார். கனகசெந்தியின்   புதல்வர்   முருகானந்தன்   தந்தையின்   சார்பில்  கலந்து கொண்டு –   ஒருபிடி சோறு   நூலின்   பிரதிகளை  தலைவரிடமிருந்து    பெற்ற பொழுது   மண்டபத்தில்   எழுந்த   கரகோஷம்   கனகசெந்திக்கு   கேட்டிருக்காதுதான்.   ஆயினும்  ஒரு  \நல்ல  எழுத்தாளருக்கு  எந்தத் திசையிலும்   நல்ல   வரவேற்புக் கிடைக்கும்   என்பதற்கு   அந்த மணிவிழாவும்   நல்ல  உதாரணம்.

நாயகன்  இல்லாமலே  மணிவிழா  நீர்கொழும்பில்  மாத்திரம்   நிறைவு பெறவில்லை  –  பின்னர்   கொழும்பிலும்  இலங்கை  முற்போக்கு எழுத்தாளர்   சங்கத்தின்   சார்பாக   வெள்ளவத்தை    தமிழ்ச்சங்க மண்டபத்திலும்   இரசிகமணிவிழா   நடைபெற்றது.   அங்கும்   ஒருபிடி சோறு அறிமுகப்படுத்தப்பட்டது. விழாவுக்கு   எழுத்தாளர்கள்   திரண்டு   வந்தனர்.    முன்னேற்பாடாக ஒலிபரப்புக்   கூட்டுத்தாபனத்துக்கும்   அறிவித்திருந்தோம்.  நிகழ்ச்சியை   ஒலிப்பதிவு    செய்ய வந்தவர்கள்  –   மறுநாள்  திங்கள்   மாலையே  அதனை  ஒலிபரப்பவிருப்பதாகச்  சொன்னபோது  அதிர்ந்து விட்டேன்.    இந்த  விழாக் கூட்டங்களைக்   கண்டுகளிக்க   முடியாத   கனகசெந்தி   வானொலி மூலமாவது   கருத்துக்களைக்   கேட்க வேண்டுமே   என்ற  ஆதங்கமே   அவ்வதிர்ச்சிக்குக்   காரணம்.  விழா   முடியும் பொழுது  இரவு 10 மணியும்   கடந்து விட்டது.  இன்னும்  சில   மணி  நேரங்களில் –  அதாவது   மறுநாள்  மாலை –  இந்த  நிகழ்ச்சி  ஒலிபரப்பப்பட்டுவிடும்.   படுத்த  படுக்கையில்  இருக்கும்  கனகசெந்தி  இதனைக்  கேட்கச் சந்தர்ப்பம்   கிட்டுமா?   கடுமையாக  யோசித்தேன்.   கவிஞர்கள்   அம்பியும்   சில்லைய+ர்  செல்வராசனும்  நல்ல  யோசனை சொன்னார்கள்.  உடனே   தொலைத்தொடர்பு   தலைமையகத்துக்குச்  சென்று  கனகசெந்திக்கு   அவசர   தந்தி   மூலம்  தகவல்  அனுப்பினேன். வானொலியை   குறிப்பிட்ட   நேரத்தில்   செவி மடுக்கவும்  –   இது தான் தகவல். மறுநாள் –  கனகசெந்திக்கு   தந்தியும்   கிடைத்து – அவரும்   வானொலி   கேட்டு    நன்றி கூறிக்  கடிதம்   எழுதினார் சுறுசுறுப்பு மிக்க   அந்தப் படைப்பாளியை   காலம்   அவ்வாறு  கட்டிலில் முடக்கிப் போட்டிருக்க வேண்டாம்.   விதி  அவருடன்  நன்றாக விளையாடியது.  அவரும்  சளைக்காமல்  ஈடுகொடுத்து  விளையாடினார். குரும்பசிட்டி   வீட்டின்  ஒரு  புறத்தில்   கொட்டில்  அமைத்து –  அங்கே   ஏராளமான   நூல்களைச்  சேகரித்து   வைத்திருந்தார். அவரைப் பார்க்கச் செல்வோர்   அந்த   நூலகத்தையும்   தரிசிக்கத் தவற மாட்டார்கள்.  கவிஞர்  கந்தவனம் –  கலைஞர்  ஏ.ரி.பொன்னுத்துரை  முதலானோர்  அவரது   ஊரையே   பிறப்பிடமாகக்  கொண்டவர்கள்.    அடிக்கடி   அவரைச் சந்தித்து   அவரது  உற்சாகம்  தளராமல்  பார்த்துக் கொண்டார்கள்   என்பதா   அல்லது  கனகசெந்திதான்   அவர்களை   உற்சாகப்படுத்தி   எழுதத் தூண்டினாரா ?   என்பது தெரியாது. பேராசிரியர்   கைலாசபதியும்   இரசிகமணி   கனகசெந்தியும் இலக்கியக்கருத்து ரீதியாக    முரண்பட்டவர்கள்தான்.   கைலாஸ் தமது விமர்சனங்களை    மாக்ஸீயக்கண்ணோட்டத்தில்  அணுகியவர்.   ஆனால்    கனகசெந்தி   அப்படியல்ல.  கனகசெந்தி பெரும்பாலும்   நயப்புரைகளையே    எழுதியவர்.

ஈழத்துப்பேனா  மன்னர்கள்   என்ற   அவரது   தொடர்   முன்னர்  வெளியான     ஈழகேசரியில்   பிரசுரமானபொழுது   அதற்கு   இலக்கிய   வட்டாரத்தில்  நல்ல   வரவேற்பு   இருந்திருக்கிறது. கனகசெந்தியின்   இலக்கிய நயப்புரையில்   அதிகம்   ஆர்வம்  காண்பிக்காத    பேராசிரியர்   கைலாசபதி   –   யாழ். பல்கலைக்கழகத்தில்    தமிழ்  நாவல்   நூற்றாண்டு   ஆய்வரங்கை   நடத்தியபொழுது –  அதில்  கலந்து கொள்வதற்காக  தமிழகத்திலிருந்து   வருகை   தந்திருந்த    எழுத்தாளர்   அசோகமித்திரனிடம்  –    கனகசெந்தியைப் பற்றி  மிகவும்   உயர்வாகச் சொன்னதுடன்   கவிஞர்   எம்.ஏ.நுஃமானுடன்    அசோகமித்திரனை   குரும்பசிட்டிக்கு   அனுப்பி வைத்தார். கனகசெந்தியை   சந்தித்துத் திரும்பிய   அசோகமித்திரன்    வழங்கிய சான்றிதழ்  –  உங்கள்   நாட்டில்   எழுத்தாளர்களிடையே  நிலவும் சகோதரத்துவமான   நட்புணர்வு    என்னைச் சிலிர்க்க வைக்கின்றது. இறுதியாக —  அவரை  நான்   சந்தித்த  இரண்டாவது  சந்தர்ப்பத்தில்   அவர் நீரிழிவு   உபாதையினால்  தனது  கால்  கை  விரல்களையும் இழந்திருந்தார். இனிப்பு   அவரை   உடனிருந்து   அழித்தது.   அவர்   இனிமையான  மனிதர்.  இலக்கியத்தையும்   இனிப்பையும்   நேசித்தார். அவரைப்பற்றி  கவிஞர்  அம்பி   சுவாரஸ்யமான   தகவல்   ஒன்றை  என்னிடம்   சொல்லியிருக்கிறார். யாழ்ப்பாணத்தில்  தாமோதர விலாஸ்   என்ற  சைவ  ஹோட்டலுக்கு வடையும்   பால்  கோப்பியும்   அருந்துவதற்கு   கனகசெந்தியுடன்  இலக்கிய நண்பர்கள்   செல்வார்களாம். கனகசெந்தியே   உரத்த   குரலில்   சர்வரிடம்   குரல்   கொடுப்பாராம்.  தம்பி   எல்லோருக்கும்   வடை   கொண்டு வாரும். அத்தோடு   எல்லோருக்கும்   சுடச்சுட   பால்   கோப்பி .   ஆனால்   எனக்கு மாத்திரம்   சீனி   போடாமல்   கோப்பி.  என்பாராம்.

முதலில் வடை  வரும். கனகசெந்தி விரைந்து சாப்பிட்டுவிட்டு விரைந்து எழுந்து கைகழுவச்செல்லும்பொழுது    கோப்பி  தயாரிப்பவரின்   அருகில் சென்று   சன்னமான  குரலில்  எல்லாத்துக்கும்   சீனி  போடு   தம்பி.  ஆனால் மேசைக்கு  கொண்டுவரும்பொழுது   என்னிடம்   சீனி  இல்லாத  கோப்பி என்று   ஒரு   டம்ளரைத்தந்துவிடும்   என்பாராம். ஒருநாள்  கனகசெந்தியின்   இந்த   கோப்பி – சீனி விளையாட்டு    கையும்   களவுமாகப்பிடிபட்டதாம். இந்தச்சுவாரஸ்யத்தை  எழுத்தாளர்களின் மறுபக்கம் என்ற தொடரை பல வருடங்களுக்கு  முன்னர்   தினக்குரல்  ஞாயிறு  இதழில்   எழுதியபொழுது   கனகசெந்தி பற்றிய அங்கத்தில்  பதிவு செய்துள்ளேன். கவிஞர் அம்பியிடம்   மானிப்பாய்   கிறீன்   மருத்துவமனையை   ஸ்தாபித்த அமெரிக்க  பாதிரியார்   சாமுவேல்   பிஸ்க் கிறீன்  அவர்கள் பற்றிய   தகவலைச்சொல்லி   ஆய்வு   செய்யவைத்தவர்   கனகசெந்திதான்.

கனகசெந்தி   எழுதியிருக்கும்   நூல்கள்:

வெண்சங்கு  (சிறுகதைத்தொகுதி) / வெறும்பானை  (நாவல்) /  விதியின்  கை (நாவல்)  / ஒரு பிடி சோறு  (நாடகம்)  /  ஈழத்து  இலக்கிய  வளர்ச்சி  (ஆய்வு) / ஈழம் தந்த கேசரி  –  கவின்  கலைக்கு  ஓர்  கலாகேசரி –  கலைமடந்தையின் தவப்புதல்வன் – நாவலர்  அறிவுரை –  கடுக்கனும்  மோதிரமும்   (கட்டுரைகள்)

இன்றைய   இளம்   தலைமுறை  எழுத்தாளர்கள்   கனக செந்தியின் நூல்களைத்   தேடி  எடுத்துப் படிக்க வேண்டும்.   அவர்  வாழ்ந்த   வாழ்க்கையை அவருடன்   பழகிய   நண்பர்களிடம்   கேட்டுத்   தெரிந்த கொள்ள வேண்டும்.   மிகவும்  எளிமையான  மனிதர்.   இனிய  பண்புகள்  நிறைந்த  படைப்பாளி.   எம்மிடையே   நினைவுகளைப் பதித்து விட்டுப்    பிரிந்து விட்டார்.

letchumananm@gmail.com