நூல் அறிமுகம்: அறிவுரைகளைக் கொஞ்சம் அழுத்தமாகவே விசிறும் தூவானம்

நூல் அறிமுகம்: அறிவுரைகளைக் கொஞ்சம் அழுத்தமாகவே விசிறும் தூவானம் இஸ்லாமிக் புக் ஹவுஸின் நேர்த்தியான புத்தக அடுக்குகளுக்குள்ளிருந்த இந்நூலினைக் கையிலெடுத்ததுமே , வானவில் சுமந்த அட்டையில் தூவானம் எனும் பெயரினைக் கண்டதும் இதுவொரு கவிதைத் தொகுதியாக இருக்குமோ என்று எண்ணித்தான் நூலைப் புரட்டினேன். ஆனாலும்அதன் முதல் பக்கத்தைப் புரட்டியதுமே இது சகோதரி ஷாறாவின் சிந்தனைக் கட்டுரைத்தொகுதி என்பதை அறிந்து கொண்டதும், இந்நூல் தொடர்பான ஆர்வம் பன்மடங்கு அதிகமானதை இங்கு கூறித்தானாக வேண்டும். கலைப்பட்டதாரியும் ஆசிரியப்பணியில் அனுபவமுள்ளவருமான சகோதரி ஷாறா    அவர்களின் எழுத்தை எனக்குப் பரிச்சயமாக்கியது அல்ஹசனாத், எங்கள்தேசம் ஆகியவைகள்தான். கவிதை, கட்டுரை, சிறுகதைகளென இடைவெளியின்றி எழுதிவரும் இவரின் முதல்நாவலான பீனிக்ஸ் பறவைகள் பலரின் பாராட்டையும் பெற்றுக் கொண்டதோடு மூன்று பதிப்புகளையும் [3000 பிரதிகள்] கண்டது குறிப்பிடத் தக்கது. ஈமானிய உறுதியுள்ள பெண்ணின் தளராத முயற்சியால் சமூக அமைப்பையே மாற்றியமைக்கலாம் என்பதைத் தெளிவாக உணர்த்தி நிற்கிறது பீனிக்ஸ் பறவைகள் நாவல்.   

தூவானம் எனும் இக்கட்டுரைத் தொகுதி ,சிறிதும் செறிவும் காரம் நிறைந்ததுமான கட்டுரைகளை முப்பது தலைப்புகளில் உள்ளடக்கியுள்ளது. பெரும்பாலானவை பெண்களை, பல்வேறு துறைகளிலும் அவர்கள் காணவேண்டிய முன்னேற்றங்களைப் பற்றிப் பேசினாலும் சில அரசியல், சமூகம் சார் கட்டுரைகளும் இல்லாமலில்லை. 
பெண்களின் சமூகப் பங்களிப்பு, ஆண்கள் வெளிநாடு செல்வதால் எதிர்கொள்ளும் சீரழிவுகள், சீதனப்பிரச்சனை, பெண்கல்வியின் அவசியம்,விவாகரத்து,மறுமணம், இவைகளின் பின்விளைவுகள்,இஸ்லாத்தின் பார்வையில்  பெண்ணுரிமை,பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளே மறுக்கப்படுகிற சந்தர்ப்பங்கள், கல்வி, மொழியறிவின் அவசியம்,

சர்வதேசபாடசாலைகளின் சீரழிவுகள்,அங்கு ஏற்படுத்தப் படவேண்டிய மாற்றங்கள் ,உளவியல் பற்றியெல்லாம் தெளிவாகப் பேசியிருப்பதோடு அதற்கான தீர்வுகளையும் முன்வைத்திருப்பது சிறப்பானது.
   
இதை விடவும் அரசியல் சமூகம் சார் கட்டுரைகளும், தான் சொல்லவந்த விடயத்தை ஆணித்தரமாக முன்வைக்கிறது.மறைந்த பிரபல அரசியல்வாதி ஒருவர் சம்பந்தமான கட்டுரையொன்றில் தலைவர்கள் இறந்தபிறகு அவர்களின் சேவைகளை ஊதிப் பெருப்பிக்கும் பணியை எழுத்தாளர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.எனும் உஷ்ணமான வரிகள் ஒரு முஸ்லிம் பெண்ணெழுத்தாளரின் பேனாமுனையிருந்து வந்திருப்பது எனக்கு வியப்பையே தந்தது.எம்சமூகத்திலுள்ள அரசியல் தலைவர்கள்,தம்கட்சியையும் அதுசார்ந்தோரையும் குர் ஆன், ஹதீஸ் காட்டும் வழியில் நடத்திச் செல்ல முயல வேண்டும் என்பது அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி அனைவரும் ஏற்றுநடக்கவேண்டிய கருத்துதானே.  

தூவானம் கட்டுரைத்தொகுதி வெறுமனே பெண்களுக்காக மட்டுமன்றி ஆண்களும் வாசித்து நல்லுணர்ச்சி பெறக்கூடிய வகையிலேயே எழுதப்படுள்ளது. மேலும் இதில் அடங்கியிருந்த இவரது கவிதையொன்றின் எனக்குப் பிடித்த வரிகள்:

பெண்ணே!                
நீ தாலாட்டை மட்டுமே
பாட வேண்டுமென
இவர்கள் சொல்கிறார்கள்.
நினைவிருக்கட்டும்
உன்னால் அகற்றப் படவேண்டியவை
வெறும் சிலந்திவலைகள் மட்டுமல்ல
சில அத்திபாரங்களும்தான்!         

அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மத்,சகோதரர் அப்துல்லாஹ் அஸ்ஸாம் ஆகியோரின் உரைகளும் நூலின் கனதிக்கு மேலும் வலுவூட்டுகிறது.   சகோதரி ஷாறாவின் எழுத்து,சமூகப் பணிகள்மென்மேலும் சிறக்க என் இதயம் நிறைந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
                                  
நூல் :  தூவானம்
ஆசிரியர்: ஷாறா
வெளியீட்டு முகவரி: 26/12
தெமட்டகொட பிளேஸ்
கொழும்பு-09
விலை :150.00
       
sfmali@kinniyans.net