நோர்வேத் தமிழ் நாவல்: நாளை – 1

– நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவிதைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன.  இவரது ‘நாளை’ நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. – பதிவுகள் –

அத்தியாயம் ஒன்று!

- இ. தியாகலிங்கம் -அந்த இரைச்சல் தாங்க முடியாததாக இருந்தது. கழுவும் இயந்திரத்தின் இத்தகைய ஒலங்களைச் சகித்தல் அவள் வேலையின் ஒரு அம்சமே. இன்றைக்கு நித்தியாயினிக்குத் தாங்க முடியாததாக இருந்தது. ஒரே தலைவலி. மற்றவர்கள் காதில்லாதவர்கள் போன்ற பாவனையில் வேலையில் ஈடுபட்டிருந்தது அவளுக்கு எரிச்சல் ஓட்டியது.  ‘என்ன மனிதர்கள்? பணத்திற்காக எதுவுமா? வேலை ஸ்தல உரிமைகள் மீறப்படுகின்றன. ஏதாவது முணு முணுப்பு? இலங்கையில் அடங்கிக் கிடந்தார்கள். இங்கு? புதிய பூமியும் புதின வானமும் நாடி வந்த இடத்தில்? சுதந்திரம் என்பது எங்களுக்கு எட்டாத கனவுகளா?’–இவ்வாறெல்லாம் அவளுடைய மனசு தறிகெட்டோடியது.  ‘செவி உடல் உறுப்பு. உடலா நோகடிக்கப்படுகிறது? இல்லை. காதிலும் ஆழமானது. மனசு நோகடிக்கப்படுகின்றது. மனசு சம்பந்தப்பட்ட உணர்வுகள் காயமடைகின்றன. நோகடிப்பதும் காயப்படுத்துவதும் வன்முறை சார்ந்தது என்று இவர் தர்க்கிப்பார். இவர் கற்பனை செய்யும் உலகம் வேறு. யதார்த்த உலகம் வேறு அநுபவங்களைக் கொண்டிருக்கிறது. பணத்தின் விஸ்வ ரூபம்! பணத்தின் முன்னால் மண்டியிடும் மனிதன் இயந்திரமாகி விட்டான். ஆன்மாவின் விலையா பணம்?’ இவருடைய சிந்தனைச் செல்வாக்குகள் தன்னைப் பீடிப்பதை உணருகின்றாள். அவற்றில் இருந்து அந்நியப்படவும் அவளால் முடியவில்லை.

பெட்டிக்குள் கிடந்த மீன்கள் முடிந்துவிட்டன. பெட்டியை நகரும் ‘பெல்’டில் தள்ளிவிட்டு, மேஜையைக் கழுவத் துவங்கினாள். இவளுடன் சேர்ந்து வேலை செய்த ஜ“விதாவும் பெட்டியை பட்டியிலே நகர்த்தி, இதில் உதவி செய்ய வந்தாள். பணி துரிதமாக முடிந்தது.

‘அப்பாடா!’

நரக இரைச்சலிலிருந்து விடுதலை பெற்றது போன்ற உணர்வு. வெளியே வந்ததும் ஒருவகை நிம்மதி. சுதந்திரக் காற்றினைச் சுவாசிப்பது போன்ற உணர்வு.

மேலே வந்ததும் வெள்ளைச் சட்டையையும் பாத அணிகளையும் கழற்றினாள். அவசர அவசரமாக அவற்றை அலமாரிக்குள் திணித்தாள். தன்னுடைய காலணிகளை மாட்டிக் கொண்டு, ‘ஜக்கேற்’றினை அணிந்தவாறே திரும்பிப் பார்த்தாள். ஜ“விதா போட்டியில் ஈடுபட்டு ஜெயித்தவளைப் போல தயார் நிலையில் நின்றாள்.

ஏனையோரைச் சட்டை செய்யாது இருவரும் வெளியேறினார்கள்.

நித்தியாயினிக்கு இந்த வேலை பிடிக்கவில்லை. படிப்புக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற வேலை ஒன்று கிடைப்பதாக இல்லை. அப்படி எதிர்பார்க்க முடியாத நிர்ப்பந்தத்தினால், இந்த மீன் வெட்டும் வேலையை ஏற்றுக் கொண்டாள், ‘பிச்சைக்காரனுக்கு மாற்று மார்க்கம் இல்லை’ என்பது போல! ஆனால்…ஆணும்-பெண்ணும் உழைத்தே குடும்ப வசதிகளை அமைத்துக் கொள்ளுதல் சாலும் என்கின்ற இன்றைய ஐரோப்பிய கலாசாரத்திலிருந்து அந்நியப்பட்டு வாழவும் முடியாது. மூளையோ, மனசோ தேவை இல்லை. இரண்டு கைகளை மட்டுமே வாடகைக்குக் கொடுத்தது போலவும். தொழிற்சாலையின் அமைப்பு விதிகளை அவள் வேலை செய்யும் தொழிற் சாலை மீறவும் செய்தது. இதனை ஆட்சேபித்துப் போராட அவள் யார்? இந்த நினைவுகள் அவளுக்குத் தொழிற்சாலை மீது வெறுப்பினை ஏற்படுத்தியது.

நித்தியாயினியும் ஜ“விதாவும் வெளியே வந்தனர். நேரம் இரவு பதின்னொன்றரை என்றாலும், வெயில் பரவியிருந்தது. இது கோடைகாலம். கோடைகளில் இரவும் பகல்களாகவும் குளிர் காலத்தில் பகலும் இரவுகளாகவும் விந்தை புரியும் வடதுருவ இயல்பு அவர்களுக்கு வந்த புதிதிலேதான் வியப்பாக இருந்தது. இப்பொழுது பழக்கப்பட்ட ஒன்றே!

ஜ“விதா கலகலப்பானவள். ‘கடி’க் கதைகளிலே கெட்டிக்காரி.

‘நித்தியா அக்கா?

‘ம்ம்…’

‘அதுகள் ஒண்டையும் இன்னும் காணம்?’

‘ம்ம்…’

‘அவையவைக்கு எது சரியோ, அதைச் செய்யினம்…’

‘அப்ப நீங்களும் சிரி எண்டுறியளே? overtime எண்டு போய்க் கேக்குதுகள். அது அவனாப் பாத்துக் கொடுக்கிறது. ‘இன்ரேவ’லிலும் நிண்டு வெட்டுகினம். பத்தே முக்காலுக்கு கழுவலாம் எண்டு இருந்தாலும், பதினொரு மணிக்கும் கழுவாமல் நிண்டு வேலை செய்யினமாம்…இதுகளை வைச்சுத்தானே அவங்கள் எங்களை மட்டமாக நினைக்கிறாங்கள். காசெண்டால் வாயைப் பிளப்பம் எண்டு நினைச்சுத்தானே, இந்தத் தொழிற் சாலையின் அடிப்படை வசதிகளைக்கூட கவனிக்காமல் எங்களை வாட்டுறாங்கள்…இது விளங்காதே அக்கா?’

‘காசிருந்தா எல்லாத்தையும் வாங்கலாம் எண்டு அதுகள் நினைக்குதுகள். நாங்கள் இப்பிடிச் சொன்னால் பொறாமையில கதைக்கிறம் எண்டுதான் அவை விளங்கிக் கொள்ளுவினம்.’

‘அவமானமா இல்லை?’

‘எதுதான் அவமானம் இல்லை? நாட்டை விட்டு வந்ததே முதலில் அவமானம். இவர் சொல்லுறவர். தாங்கள் வந்த புதிதில பெரும்பாலும் இந்தத் தொழிற்சாலைகளில நொஸ்குகள்தான் வேலை செய்தவர்கள். அப்ப, வெப்பநிலை பதினேழுபாகைக்கு குறைஞ்சாலே, தொழில் செய்யறவங்கள் இன்ரேவல் றூமுக்கதான் இருப்பினமாம். இப்ப என்ன கதை? இதை ஆரிட்டப் போய்ச் சொல்லி அழறது?

‘எங்கடையள் எல்லாத்தையும் தலைகீழா மாத்திப் போட்டுதுகள்…?

‘எங்களப் பற்றி ஐரோப்பியர் ஒரு சாராருக்கு மட்டமான தப்பபிராயம் இருக்குது. எங்கட சனம் இப்பிடி எல்லாம் நடந்தால், எங்களைக் காட்டுச் சனம் எண்டுதான் அவங்களும் நினைப்பாங்கள். இதுகும் ஒண்டு சொல்ல வேணும். எங்களை மனிசனா மதிக்கிற சனங்களும் நிறைய இருக்கினம், என்று இவர் சொல்லுறவர். நாங்கள் முதலில எங்கடை பிழைகளைத் திருத்தி மனிசராக வாழப் பழக வேணும்… எங்கடை சனம் திருந்தும் எண்டு நினைக்கிறியே?’ நித்தியாவிற்கு குரல் கம்மிற்று.

‘அக்கா, நீங்கள் உணர்ச்சிவசப்படுறியள்…’

‘உணர்ச்சியோ? யோசிச்சா விசர்தான் வருகுது.’

ஜ“விதா பேச்சை மாற்ற விரும்பினாள்.

‘அக்கா நீங்கள் கவிதைகள் எழுதுவியள் என்று கேள்விப் பட்டனான்…’

‘மீன் வெடுக்கிலை கவிதை எல்லாம் ‘காத’ (குட்பை) சொல்லிப்போட்டுது என்று இவரிட்டை நான் சொல்லுறனான்.’

‘கவிதை என்பது ஒரு வரப்பிரஸாதமாம்…குளத்தோட கோவிச்சுக் கொண்டு, அடிக் கழுவாமல் விடுறதே?’

‘இந்த நாட்டுக்கு எங்கட ஊர்ப் பழமொழிகள் சில சரிப்பட்டு வரவும் மாட்டாது’ என்று சொல்லி, நித்தியா இலேசாகச் சிரித்தாள்.

‘கேள்விப்பட்டனீங்களே அக்கா, விநாயகத்தார் வீட்டை ஓஸ்லோவிலிருந்து நகைகள் வந்திருக்காம்…’

‘இங்க நகைகளைப் பூட்டிக் கொண்டு ஆருக்காம் வடிவு காட்டுறது? ஏன்தான் நகைகள் எண்டு அலைய வேணும்?’

‘என்னக்கா, என்னையும் ஏசுறியளே’

‘இல்லை, ஜ“விதா, ஒரு கதைக்குச் சொன்னனான். நீ என்ர நல்ல சிநேகிதி. அதனாலதான் எதையும் மனம் விட்டுப் பேசுறன். மற்றவயோட கதைச்சால், அந்தரத்தில பிசத்திறன், எரிச்சல் கேஸ்…எண்டெல்லாம் கதைப்பினம்…’

அவர்கள் வாழ்ந்தது ஒரு தீவு. அந்தத் தீவு, வெளிப்பார்வைக்கு ஒரு பாலத்தினால் இணைக்கப்பட்ட இரண்டு தீவுகள் போன்றே தோன்றும். தொழிற்சாலை இருந்த பகுதியிலிருந்து, இந்தப் பாலத்தினைத் தாண்டித்தான் அவர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்கு வரலாம். பாலத்தினைக் கடந்து குடியிருப்புக்குச் செல்லும் பாதையிலே திரும்பிய பொழுதுதான் இருவரும் அவர்களைக் கண்டார்கள். அவர்களைப் பார்த்ததும் ஜ“விதாவுக்கு உதறல் எடுத்தது. ஜ“விதாவின் பதற்றத்தைப் பார்த்ததும், நித்தியா தன் மனசினைக் கவ்வும் பயத்தினைத் துரத்தி, சகஜமாகத் தோன்ற முயன்றாள்.

அவர்கள் நால்வர். இளைஞர். நொஸ்குகள். ஏதோ தொழிற்சாலைகளிலே வேலை செய்பவர்கள் போன்ற தோற்றம். அவர்கள் பியர் அருந்திக் கொண்டிருந்தார்கள். வீதியின் கரையிலே எழுந்துள்ள அரைச் சுவரிலே அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். அலுப்பிற்காக குடிப்பவர்கள் போன்று தோன்றவில்லை. மதுவை ரஸ’த்துக் குடிப்பவர்கள் போல, போத்தலிலே இருந்து பியரை உறிஞ்சினார்கள்.

இவர்களுக்கு ஏற்பட்ட பயத்தினை அவதானித்த ஒருவன் கட்டில் இருந்து குதித்து, வீதிக்கு வந்தான். இதனை ஒரு சமிக்ஞையாகக் கருதிச் செயற்படுபவர்களைப் போல, மற்றைய மூவரும் குதித்து அவனுடன் சேர்ந்து கொண்டனர்.

அவர்கள் நால்வரும் கால்களை அகட்டி கைகோர்த்து, வீதியின் குறுக்கே நின்றால், கடந்து செல்வது பிரச்சினையாகி விடும் என்பதை நித்யா உணர்ந்தாள். அதற்குப் பயந்து திரும்பி விடுவதா? திரும்பி எங்கே ஓடுவது? மீண்டும் தெழிற்சாலைக்கா? பயந்ததாக காட்டிக் கொள்வதே, அவர்கள் மூர்க்கங் கொள்ளுவதற்கு ஊக்கியாக அமையலாம்.

இவர்கள் எதிர்பார்க்காத கடுதியில் அவர்கள் நால்வரும், இர்வகளுடைய வழியை மறிப்பது போலச் சூழ்ந்து கொண்டார்கள்.

நித்தியாவுக்கு பயம் கோபம் என்கின்ற பரிணாமம் பெற்றது. உதடுகள் துடிக்க அவர்களை முறைத்துப் பார்த்தாள். இதனை அவதானித்த ஒருவன் குரூரமாகச் சிரித்தான். அவன் தன் கையில் இருந்த பியர் போத்தலை அவள் வாயருகே நீட்டி, ‘குடிக்கப் போறியா? கொஞ்சம் குடியன்’ என்று கிண்டல் செய்தான்.

நித்தியாவுக்கு சட்டென்று கண்ணகியின் கதை நினைவில் மிதந்தது. தன் கணவன் கோவலன் கள்வனல்லன் என்பதை நிரூபிக்கத் தன் சிலம்பை உடைத்து, தன் மனசில் எழுந்த கோபத் தீயினால் மதுரை நகரையே எரியுண்ணச் செய்தாளாம். அந்தப் பத்தினித் தெய்வத்திற்கு முள்ளியவளைக்கு அயலில் உள்ள வற்றாப்பளையிலே கோயிலும் உண்டு. சின்ன வயசிலே ஒரு தடவை தாத்தாவுடன் அங்கு சென்றிருக்கிறாள். இந்தக் கதை இவர்களிடமிருந்து தப்ப உதவுமா-ஏதாவது செய்து தப்ப வேண்டும்.

‘ஜ“விதா, நாங்கள் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் அந்த நோஞ்சானைத் தள்ளிக் கொண்டு வெளியே போவம். இல்லாட்டில் இவங்கள் விடமாட்டாங்கள்.’

‘பயமா இருக்கக்கா…’

‘பயத்தால் வேற வழி? குடிவெறியில நிக்கிறாங்கள். சமாளித்துத் தப்ப வேணும்…’

‘சரி அக்கா…’

நித்தியா நோஞ்சானைத் தள்ளத் துவங்கினாள். ஜ“விதாவும் திடீர்ப் பலம் கொடுத்துத் தள்ளத் துவங்கினாள்.

அந்த நால்வரும் இவர்களைச் சுற்றி எழுப்பி இருந்த மனிதச் சங்கிலி திடீரென அறுந்தது. இது அவர்களை நிலை குலையச் செய்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி, அவர்களைத் தாண்டி, நித்தியாவும் ஜ“விதாவும் விரைவாக நடக்கத் துவங்கினார்கள். ஜ“விதா கிட்டத்தட்ட ஓடுவது போலவே நடந்தாள். நித்தியாவும் பயந்து போனாள். ஜ“விதாவுக்கு போட்டி போடுவது போல அவளும் துரிதமாக நடந்தாள்.

இவர்கள் எப்படி விரைவாக நடந்தாலும், அவர்கள் விடுவதாக இல்லை. தங்களுடைய வியூகத்தினை அறுத்து விட்டதான கோபம். போதை அவர்கள் கோபத்துக்குத் தீனியிட்டது. மீண்டும் அவர்களைத் தடுத்து நிறுத்த முனைந்தார்கள். குஞ்சினைப் பருந்திடம் இருந்து காக்கும் பேட்டின் ராங்கி தலைக்கேறவும், ஒருத்தனைத் தள்ளி விட்டு நித்தியா மீண்டும் வேகமாக நடந்தாள். இச்செயலை அவர்கள் தங்களை அவமதிப்பதாக விளங்கிக் கொண்டார்கள்.

இந்தத் தடவை தப்ப முடியவில்லை. இருவரையும் அவர்கள் தமது வட்டத்தினுள் வளைத்துக் கொண்டனர். ஆத்திரம் தீரும் வரையிலும் மீதமிருந்த பியர் முழுவதையும் அந்த இரண்டு பெண்களின் தலைகளிலும் அபிஷேகங்கள் செய்வதுபோலக் குளிப்பாட்டினார்கள். நுரைதள்ளிய அந்த பியரின் நெடி இவர்களுக்குக் குமட்டல் உணர்வினை ஊட்டியது. அவமானத்தால் உடல் கூனிக் குறுகியது. அந்த இளைஞர்களுடைய அட்டகாசமான வெறியூட்டல் சிரிப்பு, இவர்களுக்கு ஆத்திரம் ஊட்டியது. ஜ“விதா குரல் எழுப்பி அழுதாள். அவள் புழுப்போன்று துடித்துக் குமுறியது பார்க்க முடியாததாக இருந்தது. அவளுக்குத் தென்பூட்டுவதற்கென்றாலும், தான் இருக்க வேண்டும் என்று நித்தியா நிச்சயித்தாள். இந்த ஆக்கினைகளின் மத்தியிலே, உடலை நனைத்த பியர் குளிர் காற்றிலே, உறை நிலை அடைவது போன்று அவஸ்தைப் படுத்தியது. உடல் நடுங்கியது.

இதற்குமேல் அவர்களை இம்சைப்படுத்த அவர்கள் விரும்பவில்லையா? அட்டகாசமாகச் சிரித்தபடியே, மீண்டும் பாலத்தை நோக்கி அந்த வெறிக்கூட்டம் நகர்ந்து சென்றது…

தப்பித்த உணர்வுடன் நித்தியாவும், ஜ“விதாவும் நடந்தார்கள். ஜ“விதா தன் வீட்டுக்குச் சென்றாள். அவள் வீட்டைத் தாண்டித்தான் நித்தியா தன் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.

‘ஊரிலே இப்படி ஒரு வெறிகாரனாலே செய்ய முடியுமா? செய்துவிட்டு மறுநாள் வீதியில் உலவ முடியுமா? அந்த ஊரின், அமைதியையும் சாந்தத்தினையும் பேணி, பெண்களுடைய மானத்துக்கு உத்தரவாதம் தந்த அந்தப் பிறந்த மண்…அதனை விட்டு ஏன் இங்கு வந்து இப்படி ஆக்கினைப் படுகின்றோம்! ஏன்?…’

நினைவுகள் அந்தரத்திலே தொங்கின.

வீடு வந்துவிட்டது.

தன் கோபத்தினையும் இயலாமையையும் கதவிலே காட்டிப் பலமாக அடித்துக் கொண்டிருந்தாள்.

அடக்கி வைத்திருந்த அனைத்து உணர்சிகளும் அவரைக் கண்டதும் உடைப்பெடுத்தன. வெந்நீர் போத்தலை நிலத்திலே வைத்ததும் தேம்பித் தேம்பி அழத் துவங்கினாள். ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கின்றது என்பதைத் தேவகுரு புரிந்து கொண்டார். அவளை அணைத்து ஆறுதல் வார்த்தைகள் கூறியவாறே, அவளை ஜக்கெற்றைக் கழற்றி வெளியே எறிந்தார். அப்படி இருந்தும் மதுவாசனை வீட்டின் ஹோலில் மண்டியது. அவள் பியரிலே குளித்து வந்தவள் போன்று தோன்றினாள். மது வாசனை அந்த வீட்டிற்குப் பொருந்தாத ஒன்று.

பிள்ளைகள் இரண்டும் தூங்கப் போய்விட்டார்கள். அது மட்டுமே அவருக்குச் சிறிது நிம்மதியைத் தந்தது. ஒரு துவாயை எடுத்து வந்து அவளுடைய தலையைத் துடைக்கத் துவங்கினார். ஆனால், அவள் துவாயைப் பறித்துத் தானே துடைத்தாள். தேம்பல் தொடர்ந்தது. தேவகுருவால் தாங்க முடியவில்லை. அவளை சோபாவில் அமரச் செய்தார்.

‘என்ன நடந்தது நித்தியா? இந்த பியர் எல்லாம் என்ன?’

அவருடைய கேள்விகள் நித்தியாவி சோகத்தை மேலும் கிளறச் செய்தன. அவளுடைய அழுகையின் சுருதி அதிகரித்தது.

‘அழாத நித்தியா. நீ இப்பிடி அழுதால், பிள்ளையள் எழும்பி விடுவாங்கள். இந்தக் கிலிசகேடுகளை அதுகளும் பார்க்க நேர்ந்தால்…முதலில் என்ன நடந்தது என்று விஷயத்தை எனக்குச் சொல்லும். துக்கத்தை இன்னொருத்தருக்குச் சொல்லுறதால மனப்பாரம் குறையுமல்லோ…’ தேவகுரு கெஞ்சும் பாவனையில் சொன்னார்.

விக்கல்களுக்கிடையில் நித்தியா நடந்ததைத் சொல்லி முடித்தாள். அவளுடைய முகத்தில், வேதனையும் சோகமும் பரவி இருந்தன. அவர் பதில் ஏதும் பேசாது, சிந்தனையில் ஆழ்ந்தார். அவருடைய மௌனம் அவளுக்கு எரிச்சல் ஊட்டியது.

‘நீங்கள் இப்பிடி இருந்தால் என்ன அர்த்தம்? போலிஸ“க்கு உடன் போன் செய்யுங்கோ!’

‘இல்லை, நித்தியா…யோசிப்பம்…’

‘என்ன இல்லை? என்ன யோசிக்கிறது? என் மேல பியர் ஊத்தியிருக்கிறாங்கள். வழிமறிச்சு வம்பு செய்திருக்கிறாங்கள். கையைப் பிடிச்சு மானபங்கப்படுத்தாத குறை…எளிய நாய்கள். என்ரை வேதனைய அறியாமல், இங்கை இருந்து இல்லை நித்தியா என்று இழுக்கிறியள்’ என வெடித்தாள் நித்தியா.

அவளுடைய ஆத்திரங்களும் சோகங்களும் சூடான சொற்களாக வெளிவந்து கரையட்டும் என்று நினைத்தவரைப் போல அமைதி காத்தார்.

‘நீங்க பேசாம இருந்தா என்ன அர்த்தம்?

‘நித்தியா, முதலிலை பதட்டப் படாதையும். ‘ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டம்’ எண்டு தெரியாமலே சொல்லி வைச்சிருக்கிறாங்கள்…அவங்கள் உசாரிலை முஸ்பாத்தியாகவும் செய்திருக்கலாம் அல்லோ? அவங்கட சையிட்டில இருந்தும் யோசிக்க வேணும்… ‘

‘முஸ்பாத்தியா? நான் அவங்களுக்கு ஆர்? உங்கடை மனுஷ’யை நடு றோட்டிலை வைச்சு மானப்பங்கப் படுத்தி இருக்கிறாங்கள். நீங்களும் ஆம்பிளைதானே?

‘இஞ்சேர் அப்பா. ஆண் எண்டால், சண்டைச் சேவலைப்போல துள்ள வேணுமே? இல்லை கேக்கிறன். நான் கோவப்பட்டுச் சூரசங்காரம் ஆடினால், ஆருக்கு நன்மை? இப்படிப்பட்ட நேரங்களிலதான் மனிதன் நிதானத்தை இழக்காமல் யோசிக்க வேணும். போலிஸ”க்குப் போனால், பிரச்சினை தீர்ந்திடுமோ? பகையை நிரந்தரமாக்கிக் கொள்ளத்தான் வழிபிறக்கும். நட்புக்கும் இணக்கத்திற்கும் சமாதனத்துக்குமான வழிகளை எல்லாம் அடைச்சுப் போடுவம்…அவங்க இளைஞர்கள் எண்டு சொல்லுறாய்…குடிவெறியிலை நிண்டவங்கள் எண்டும் சொல்லுறாய். குடிவெறி முறிஞ்சு தங்கள் செயலுக்காக அவங்கள் வெட்கப் பட்டாலும், படுவாங்கள். மனுஷ வாழ்க்கையில் எல்லாச் சாத்தியங்களும் உண்டு என்பதை நாங்கள் நினைச்சுப் பார்க்க வேணும்…?’

சிந்தனை அறுந்து மௌனமானார். அவள் பக்கத்தில் அமர்ந்து, தன் அண்பையும் பாதுகாப்பும் அவளுக்கு என்றும் உண்டு என்பதை உறுதிப்படுத்தும் வகையிலே அவளை ஆதரவுடன் அணைத்தார்.

அதனைத் திமிறிக் கொண்டு, ‘இப்ப நீங்கள் என்ன செய்யப் போறியள்?’ என்று கேட்டாள். கோபத்தில் அவள் குரல் மேலும் கிளறியது.

‘என்ன சொல்லுறியள்? ஒண்டும் பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்?’

‘நான் ஏதாவது சொன்னால் உனக்குக் கோபம் வரப்பாக்குது. கொஞ்சம் நாளுக்கு முந்தி நான் ஒரு புத்தகம் வாசிச்சனான். எதிரியை வெல்வதைவிட அவனைப் புரிந்துகொள்வதே மேல்! எதிரியைத் தோற்கத் தோற்கச் செய்தால், அவன் மீண்டும் எழுந்து தொல்லை கொடுக்கக் கூடும். ஆனால், சமாதானம் அவனுடைய பகையை வெட்டிச் சாய்க்க உதவும்…யோசித்துப் பார். இண்டைக்கு நீ போலிஸ”க்குப் போகலாம். நாளைக்கு அவர்களைப் பிடிச்சு விசாரிக்கலாம். அவங்கள் என்ன கொலைக் குற்றமா செய்து போட்டாங்கள்? பிறகு என்ன செய்வாங்கள்? உன்னைக் காணுற நேரமெல்லாம் உன்னை ஏதாவது வழியிலை துன்புறுத்தத்தானே பார்ப்பாங்கள்? இது-இந்த நிரந்தரப் பகை எங்களுக்குத் தேவையா?’

‘உங்களுடைய தத்துவம் எங்கடை நடைமுறைக்குச் சரிப்பட்டு வராது. நீங்கள் இப்ப போலிஸ”க்கு வாறியளோ, இல்லையோ?’

‘கோபத்தில மனுஷன் நியாங்களை மறந்து செயற்படுவான். கொஞ்சம் ஆர அமர்ந்து யோசிப்பம். எங்களுக்கு இரண்டு பிள்ளையள் இருக்கு. அதுகளைத் தூங்க விட்டிட்டு, கதவைப் பூட்டிக் கொண்டு நாங்கள் இரண்டு பேரும் போலிஸ”க்கு ஓடுறதே? இடையிலை அதுகள் எழும்பி எங்களைத் தேடினால் என்ன பாடுபடுங்கள்? இரவு முழுவதும் யோசிக்கலாம். அதுக்குப் பிறகும் நீ போலிஸ”க்குப் போறதுதான் சரியென்று தீர்மானித்தால், நாளைக்கு நான் லீவு எடுக்கிறேன்.’

‘நல்லா இருக்கு உங்கள் சமாதானம்…’

‘ஓக்கே, நித்தியா…நீ எழும்பு…பாத்ரூமுக்குப் போய் இந்த நாத்தங்கள் போக நல்லா முழுகு. பிறகு சாப்பிடுவம். நான் சாப்பிடாமல் உனக்காகக் காத்திருக்கிறேன்…’

‘இப்ப போலிஸ”க்குப் போறேல்லையே…?’

‘எத்தினை தரம் சொல்லுறது?…வடிவா யோசித்து நாளைக்குப் பார்ப்பம்…?ஏ

‘நல்ல மனுஷன்…சாமியாராய் போகவேண்டியவரை எனக்கு கட்டி வைச்சிருக்கினம்…’ என்று புறுபுறுத்துக் கொண்டே நித்தியா எழுந்து தன் படுக்கை அறைக்குள் சென்றாள். அப்படியே படுத்துவிடுவாளோ எனவும் தேவகுரு நினைத்தார். ஆனால், சில விநாடிகளில், அவள் புயல் வேகத்திலே குளியல் அறைக்குள் புகுந்தாள். இதைப் பார்த்ததும் தேவகுருவுக்குச் சற்றே நிம்மதியாக இருந்தது.

ஹோலிலே இன்னமும் மதுவாடை வீசிக் கொண்டிருந்ததாக தேவகுருவுக்குத் தோன்றியது. அவர் வாழ்க்கைப் பாதையிலே பல மேடுபள்ளங்களைக் கடந்து வந்தவர். வன்முறையே விடுதலைக்கான ஒரே மார்க்கம் என அவர் நம்பிய காலமும் உண்டு. மதுவிலே மனக் கவலைகளைக் கரைக்கலாம் என அவர் வாழ்ந்த காலமும் உண்டு. ஆனால், அவை அனைத்தும், அவர் வாழ்க்கையில் மின்னலைப் போன்று சடுதியாக தோன்றி மறைந்தன. இப்பொழுது திடசித்தத்துடன் சரியான மார்க்கத்தினைக் கண்டுபிடித்து ஒழுகுவதாக நம்பினார். அன்பும், அஹ’ம்ஸை நெறியும் மானிட நேயத்தை வாழ்க்கையிலே பயிலுவதற்கு சரியான மார்க்கம் என அவர் நம்பினார். அதனை நடைமுறைப்படுத்துவதிலுள்ள இந்த சிக்கல்களை அவர் தினமும அநுபவித்து வருகின்றார். இந்த சிக்கல்களே அவற்றின் மீதான ஈடுபாட்டினை தீவிரப்படுத்துவதாகவும் அவர் உணரலானார்.

தேவகுரு எழுந்து, யன்னலைத் திறந்து, பின் அதை மேல தள்ளிவிட்டு, காற்று உள்ளே தாராளமாகப் புகுவதற்கு வசதி செய்தார். காற்றின் சுகமான பரப்பல். அது அவர் மனசுக்கு இதம் அளித்தது. சோபாவில் அமர்ந்து, இலேசாக கண்களை மூடிக்கொண்டார்.

‘நித்தியா அவமானப்பட்டுவிட்டாள். அவள் மனசிலே ஆழமான காயம். அதற்குப் பரிகாரம்? போலிஸ் நடவடிக்கையினால், அவளுடைய மனக்காயங்களுக்கு ஒளடதம் அளித்துவிட முடியுமா? போலிஸ் நடவடிக்கையினால், நித்தியாவின் மனக்காயம் அளவுக்கு கேடு விளைவித்தவர்களுக்கு, மனக்காயங்கள் ஏற்படுத்த முடியுமா?’ ‘கண்ணுக்குக் கண்’ என்கின்ற பகைவெறியினால் மானிட குலத்திற்கு நன்மையுண்டா? அன்பு வழியின் அற்புதங்களை ஏற்றுக் கொள்ள ஏன் மனிதகுலம் தயக்கங் காட்டுகிறது? காந்தியம் இன்றைய காலகட்டத்திற்குப் பொருந்தாத மார்க்கமா?’

‘காந்திக்கு நீங்கள்தான் மறுவாழ்வு அளிக்கப் போகிறீர்களா?…வாருங்கோ, சாப்பிடுவம்..’

தேவகுரு திடுக்குற்று விழித்தார். நித்தியாவின் முகத்திலே கோபம் சற்றே வடிந்திருந்தது, அவருக்கு நிம்மதியைத் தந்தது.

சாப்பிட்டு முடித்ததும் இருவரும் படுக்கை அறைக்குச் சென்று படுத்துக்கொண்டனர். மீண்டும் அவளுடன் பேச்சுக் கொடுத்து, அவளுடைய மனக்காயங்களை ஆழப்படுத்த விரும்பவில்லை. தூக்கம் கடவுள் படைத்த அற்புத மருந்து. எத்தனையோ மனிதர்களுடைய மனக் காயங்களை அதுவே சுகப்படுத்துகிறது. இப்படியே நினைத்துக் கொண்டு, தேவகுரு சீக்கிரமே தூக்கத்தில் ஐக்கியமானார்.

ஆனால், நித்தியாவுக்குத் தூக்கம் வரவில்லை. எத்தனையோ சந்தர்ப்பங்களிலே தேவகுரு காந்தியக் கொள்கைகளை அவளுக்கு விளக்கியிருக்கிறார். அந்தக் கொள்கையின்பால் அவளுக்கு இன்னும் ஈர்ப்பு ஏற்பட வில்லை. அது நடைமுறைக்கு உதவாத பத்தாம் பசலிப் போக்கு என்றே அவள் கருதினாள். இருந்தாலும், யாழ்ப்பாண கலாசாரத்திலே வளர்ந்த அவள், கணவனுடைய கொள்கைகளை எதிர்த்து முனைப்பாக விவாதித்ததில்லை. எதிர்வாதங்களினால், குடும்ப அமைதியில் உடைவுகள் ஏற்படுமோ எனவும் அவள் பயந்தாள். ஆனால் இன்றைய அவமதிப்பினை அவள் மன்னிக்கத் தயாராக இல்லை. தன்னை அவமதித்த அந்த நான்கு நொஸ்குகளும் ஏதோ வழியிலே தண்டனை அநுபவித்தே தீரவேண்டும் என்பதில் அவள் தீவிரமாக இருந்தாள். அவர்கள் தண்டனை அடையாது போனால், மேலும் பல தொந்தரவுகளும் அவமதிப்புகளும் அடுக்கடுக்காக வந்து சேரும் என அவள் பயந்தாள். போலிஸ”க்குப் போய் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும் என்கின்ற தீர்மானத்துக்கு அவள் வந்தாள்.

‘நாளைக்கு லீவு எடுக்கிறியளே?’

பதில் வரவில்லை. திரும்பிப் பார்த்தாள். அவர் தூங்குவது போலத் தெரிந்தது. சற்று யோசித்த பின்னர் ‘நாளைக்கு லீவு எடுக்கிறியளே?’ என குரலை உயர்த்திக் கேட்டாள்.

‘ஏன்?’ என்று தூக்கம் கலையாது கேட்டார்.

‘போலிஸ”க்குப் போகத்தான்…’

‘போலிஸ”க்கோ? அது தேவையில்லை…’

‘இப்பிடி விட்டா நாளைக்கு கையைப் பிடிச்சு இழுத்து, காரிலை போட்டுக் கொண்டு போவாங்கள். அப்ப இருந்து தத்துவம் பேசுங்கோ…’

‘நல்லதுதான் நடக்கும் என்று நினைச்சு நமது மனங்களைப் பழக்கி எடுக்க வேண்டும்…அப்பதான் நல்லது நடக்கும்.’

‘உங்களுக்கு ஏலாட்டி விடுங்கோ…நான் வேறையாரையாவது கூட்டிக்கொண்டு போறன்…’

‘கிணத்துக்குள்ள விழுவன் எண்டு அடம்பிடிச்சா நான் என்ன செய்யிறது? நான் எவ்வளவோ சொல்லிப் போட்டன். இனி உன்ரை இஷ்டம். காலைமை வேலைக்கு போகவேணும். கொஞ்சம் நித்திரை கொள்ளுவம்…’ உரையாடலைத் தொடர விரும்பாதவர் போல, மறுபக்கம் திரும்பிப்படுத்தார். மறுகணமே அவர் நித்திரையாகி விட்டார். அவள் எதோ தீர்மானத்துக்கு வந்தவளாக, ‘அலாம்’ மணிக்கூட்டை சரி செய்து வைத்துக் கண்களை மூடினாள்.

காலையில் ‘அலாம்’ மணி கிணுகிணுத்தது. இருவரும் விழித்தார்கள்.

தேவகுரு காலைக்கடனை முடித்து வருவதற்கிடையில் நித்தியா தேநீர் தயாரித்துக் காத்திருந்தாள். சுடு தேநீர் இதமாக இருந்தது. அவள் முகத்தில் அமை நிலவுவதாக எண்ணினார். வேலைக்குப் புறப்பட்டார். அவள் எதுவும் பேசவில்லை.

வேலைக்குச் செல்லும்போது நித்தியாயினி பற்றி அக்கறையுடன் நினைத்துக் கொண்டார். ‘அவள் சராசரி மனுஷ’. பல ஆசைக் கனவுகளைச் சுமந்து இந்த நாட்டுக்கு வந்தவள். அந்தக் கனவுகளிலே புகலிட நாட்டிலே எதிர் நோக்க வேண்டிய பிரச்சனைகளுக்கு இடமில்லை. பாவம். மெது மெதுவாத்தானே புதிய நிலவரங்களைப் படிக்க வேணும். காரிலே வேலைக்குப் போனால் பிரச்சினை குறையும். இனியும் ஒத்திப் போடேலாது. கெதியிலை ஒரு காரை வாங்குவம். வீண் ஆடம்பரம் ஏன் எண்டுதான் நினைச்சன். இப்ப அதுக்குத் தேவை வந்திருக்கு…’இவ்வாறான எண்ண அலைகளிலே எற்றுண்டு அவர் நடக்கலானார்.

மாலதி ungdomskole (ஆரம்பப் பாடசாலை)க்குச் சென்று வருகிறாள். அவளுக்கு இன்று பாடசாலை உண்டு. நித்தியா அவளையும் கோகிலாப் பாப்பாவையும் எழுப்பிக் குளிப்பாட்டி வெளிக்கிடுத்தினாள்.

அவளும் புறப்படத் தயாரானாள்.

வெங்கடேஸ”க்கப் போன் பண்ணி விடயத்தை சொன்னாள். அவன் பல கேள்விகளைக் கேடடனாயினும் வருவதற்குச் சம்மதித்தான்.

வெங்கடேஸ் சுணங்காது காரிலே வந்து சேர்ந்தான். மாலதியிடம் தங்கச்சிப் பாப்பாவைப் பார்க்குமாறு ஏற்பாடு செய்தவின், அவள் காரிலே ஏறிப் புறப்பட்டாள்.

போலிஸ’ல் ஒன்றரை மணிநேரம் செலவாகியிருக்கும். அங்கே உருட்டிப் பிரட்டி ஆயிரம் கேள்விகள் கேட்கப்பட்டன. குற்றப் பத்திரிகையை முறையாக எழுதி முடித்த போது, அவளுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. அவர் சொல்வதுதான் சரியாக இருக்குமோ என்கின்ற எண்ணமும் தலைதூக்கியது. ஆனாலும், தான் செய்ததுதான் சரியென்கிற நியாயங்கள் அவளை வசீகரப்படுத்தவும் தவறவில்லை. நித்தியா வீட்டுக்குத் திரும்பினாள். பாப்பா தூங்கினாள். மாலதி அயலில் இருந்து வி€ளாயடினாள். வீட்டில் பிரச்சினை இல்லை என்பது அவளுக்கு நிம்மதியைத் தந்தது.

தாயைக் கண்டதும் மாலதி துள்ளினாள்.

‘அம்மா, மாமாவோட எங்க போயிட்டு வாறீங்க?’

‘போலிஸ”க்கு…’ என்று கூறி நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

‘ஏன் போலிஸ”க்குப் போன?’

‘அதடா, என்னைத் தெருவில கரைச்சல் பண்ணுகினம்.’

‘கரைச்சல் பண்ணுறவய போலிஸ் பிடிப்பினமே?’

‘ம்…பிடிப்பினம்..’

‘அம்மா, பசிக்குது School-க்குப் போகபாக நேரம் போயிட்டுது.’

‘இன்றைக்குப் பள்ளிக்கூடம் போகவேண்டாம். பரவாயில்லை…இஞ்சை இருந்து படிக்கவேணும்…சரியே?’

பிள்ளையின் கதை மாறியது. சாப்பாடு கொடுக்காது போன குற்றம் மனசை வாட்ட, விறுவிறுவென்று உணவு பரிமாறினாள்.

தேவகுரு வேலையாள் வந்து குளித்துவிட்டு, ஹோலுக்குள் வந்தபோது, மாலதி ஏதோ வரைந்து கொண்டிருந்தாள்.

‘என்ன ஆள் மும்முரமாகச் செய்யுது?’ என்கின்ற ஆவலுடன் தேவகுரு எட்டிப் பார்த்தார். இரண்டு ஆள்களைப் போல மாலதி கீறிக்கொண்டிருந்தாள். தந்தை தான் கீறியதைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவதானித்த மாலதி, அவரைப் பார்த்து சிரித்தாள்.

‘என்னம்மா, இந்தப் படம்?’

‘போலிஸாரைக் கீறிப் பார்க்கிறன்.’

‘ஏன்? போலிஸ் எண்டா உனக்கு விருப்பமோ?’

‘அம்மா போலிஸ”க்குப் போனவதானே?’ தேவகுருவின் மனசிலே சம்மட்டி அடிவிழுந்ததுபோல! மாலதி கவனிக்காதவாறு சமாளித்துக்கொண்டார்.

‘யாரோட போனவ?’

‘மாமாவோட…’

‘எந்த மாமா?’

‘வெங்கட் மாமா!’

தேவகுரு பிள்ளைக்குப் பக்கத்தில் அமர்ந்தார்.

‘அப்பா, பசிக்கேல்ல அம்மா?’

‘ஏன் காத்தா சொக்கினில சாப்பிட்டியளா?

அவர் பதில் எதுவும் சொல்லாமல், சிரித்து மழுப்பினார்.

இரவு வேலையால் வந்து, சாப்பாட்டைத் திறந்து பார்த்த நித்தியாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘சப்பிடேல்லையா?’ என்ற அவளுடைய கேள்விக்கு அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

செவி கேளாதவரைப்போல, அவர் மௌனம் சாதித்தார். பல முறைகள் கேட்டும் பதில் வரவில்லை. அவருடைய விருப்பத்திற்கு மாறாக அவள் ஏதாவது செய்தால், மௌனம் சாதிப்பது அவர் வழக்கம்.

குற்ற உணர்வு அவளை உறுத்தியது.

‘என்னை மன்னிச்சிடுங்கோ…உங்களுடைய கோபத்தைச் சாப்பாட்டிலை காட்டாதேயுங்கோ…’

‘நித்தியா, நான் உன்னை மன்னிக்கிறதுக்குக் கடவுளோ? நானும் மனுஷன்தான். போலிஸ”க்குப் போறதுக்கு உனக்கு உரிமை இருக்கு. நான் அதைத் தப்பு எண்டு சொல்ல வரேல்லை…நான் நினைக்கிறது போல காரியங்கள் நடக்கவில்லை… நான்தான் குற்றவாளி. என்னை நானே தண்டித்துக் கொள்ளுறதுக்கு எனக்கு உரிமை இருக்கு. நன் தண்டனையை அநுபவித்தே தீரவேண்டும். இன்றிலிருந்து நான் மூன்று நாள்களுக்கு உண்ணா நோன்பு…’

‘ஏன் இந்தக் கொடுமை?’

‘இது கொடுமை அல்ல. நான் என் மனசைச் சத்தப் படுத்தவேண்டும். அவ்வளவுதான்…’

இதற்குமேல், அவருடைய தீர்மானத்தினை உடைப்பதற்கு எந்த சாகஸமும் செல்லாது என்பதை அவள் அறிவாள்.

நித்தியாயினி நினைத்தது நடக்கவில்லை. அவள் எதிர்ப்பார்த்தது போல போலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. பியர் குடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள், வெறியிலோ ‘ஈவ் டீஸ’ங்கில்’ ஈடுபட்டிருக்கிறார்கள். அதனைப் புரிந்துகொள்ள முடியாது இந்தப் பெண் அதனைப் பெரிதுபடுத்துகிறாள். அவர்கள் அவளைத் தொடக்கூடவில்லை. அத்துடன் அவளுடன் வந்ததாகச் சொல்லப்படும் ஜ“விதா எந்த முறைப்பாடும் செய்யவில்லை. நித்தியா அதீத உணர்ச்சி வயப்பட்டு, தீவிர எதிர்வினையாகவே போலிஸை நாடியிருக்கிறாள். இந்தச் சின்ன விடயத்தினை பெரிதுபடுத்த தேவையில்லை என்கின்ற முடிவுக்குப் போலீஸார் வந்தார்கள்.

‘ஆதாரம் இல்லாததால் முறைப்பாட்டை நீக்குகிறோம்’ என போலீஸ’லிருந்து கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தினைத் தேவகுருவுக்குக் காட்ட வெட்கப்பட்டுக் குமைந்தாள்.

தேவகுரு பிறந்த மண்ணின் வாழ்க்கைக் கோலங்கள்-

இலங்கைத்தீவின் மங்கலத் தலைப்பாகை போல யாழ்குடாநாடு. அதற்கு அணி சேர்க்கக் கடல் அலைகளில் நீந்தி ஒட்டிக் கொள்ளத் தவிக்கும் மாணிக்கங்களைப்போல சப்த தீவுகள். அவற்றுள் ஒன்று, தீவு என்கின்ற சொல்லை உதறித்தள்ளி, நகர் என்கின்ற நாகரிகம் புனைந்தது. அதுதான் கரைநகர்!

போகத்தோடு வறண்டுவிடும் வயல்கள். மண்ணைக் கிண்டி வளந்தேடும் உழைப்புப் பலிக்காது. மண்ணின் மைந்தர் தென்னிலங்கை சென்று, வணிய முயற்சிகளிலே தமது உடலையும் ஊக்கத்தையும் பிழிந்து, வளந்தெடுவதில் வெற்றி நாட்டினர். ‘பதுளை முருகேசு’, ‘பண்டாரவளைச் செல்லப்பா’ என மண்ணின் மைந்தர்கள் பலரும் கியாதி பெற்றனர். பொருளீட்டலின் வெற்றிக்குக் கட்டியம் கூறும் விதத்தில் வீடுகள் எழுந்து காரைநகருக்கு அழகு சேர்த்தன.

இயற்கை அழகிற்கும் குறைச்சல் இல்லை. கடல் நீரிலே நன்கு குளித்து புது ஜ“விதம் பெற்ற சொகுசுடன் எந்தத் திக்கில் இருந்தும் சீதளக்காற்று வீசிக்கொண்டே இருக்கும். தீவு அல்ல, நகரேதான் என்பதை நிரூபிப்பது போல கடல் நீரிலே நடுவகிடு எடுத்த வாக்கில் பொன்னாலைப் பாலம் காரை நகரை யாழ்குடா நாட்டுக்கு இணைந்து அழகு சேர்க்கின்றது.

CASUARINA BEACH என்று வெளிநாட்டினரும் நத்தி உல்லாசம் சுகிக்கவரும் சவுக்குமரக் கடற்கரை, தீவின் வடபால் அமைந்துள்ளது. அங்கு வெண்மணல் கொள்ளையாகப் பரந்து கிடக்கின்றது. கடற்காற்று சவுக்கு மரங்களிலும் தாழைகளிலும் புதிய இசைகள் மீட்டிப் பரவும். இந்த இசையையும் காற்றையும் உடல்களிலே பரவவிட்டுப் பரவசங்கொள்ளும் ஏக்கத்துடன் உல்லாசப் பயணிகள் கூடுவர். பனை கொடியேறிவிட்ட காலங்களில், பனங் கள் – ஓடியர் கூழ் ஆகிய சம்பிரதாயங்களுடன் மண்ணின் மைந்தர்களும் இந்த உல்லாசங்களை மாந்திக் களிப்பர்.

இந்தக் கடற்கர€யை அடுத்து வடகாடு. காரைநகர் மக்களின் இந்துமத ஆராதனைகளின் வெளிப்பாடாக இங்கு ஈழத்துச் சிதம்பரம் அமைந்துள்ளது. திருவெண்பா காலமே அதன் திருவிழாக் காலமாகும். திருவிழாக்களின் உச்சமாக இடம்பெறும் தேர்த்திருவிழாவுக்கு யாழ்க்குடா நாட்டு மக்களே அள்ளுப்பட்டு வந்தது போல இருக்கும். மூளாய், சுழிபுரம், வட்டுக்கோட்டை, மானிப்பாய் ஆகிய இடங்களில் வாழும் இந்துக்களும் நேர்ச்சைகள் வைத்துத் திரளுவர். ஈழத்துச் சிதம்பரம் கோயில் வீதிகள் பெரிய பஜார் போன்று தோன்றும், கோயில் வீதியில் வலம் வரும் காவடிகள்தான் எத்தனை வகை! பாற்காவடி, தூக்குக்காவடி, பறவைக்காவடி, தமது உடல்களை வருத்திப் பக்தியை வெளிப்படுத்துவதில் இத்தனை வகைகளா?

தீவின் தெற்கில் ஊர்காவற்துறைக்குச் செல்ல உதவும் கிட்டங்கித்துறை உண்டு. துறையின் வசதிகளைப் பயன்படுத்தும் முகமாகவும், அதன் அயலில் பொருளாதார முன்னேற்றம் காணும் முயற்சியின் குறியீடாகவும் சீநோர் அமைக்கப்பட்டது. சிலோன் – நோர்வே நாடுகளின் கூட்டு முயற்சி என்பதற்காகப் புனையப்பட்டது அப்பெயர். சீநோர் மீன்பிடிக்க உதவும் வள்ளங்களைக் கட்டும் தொழிற் சாலையை நிறுவியது. கடலிலே அறுவடை நடத்தும் மீனவர்களுக்கு வள்ளங்கள் கடன் அடிப்படையிலே கொடுக்கும் பணியையும் அது செய்தது. உள்நோக்கங்களைப் பிரசித்தஞ் செய்யாது, சீநோருக்கு அயலில் இருந்த பலகாடு என்னும் இடத்தில் இலங்கை கடற்படையின் முகாம் ஒன்று அமைக்கப்பட்டது. கடத்தல் வணிகத்தை கட்டுப்படுத்த வந்ததாக விளக்கம் தரப்பட்டது. பின்னர், தமிழர் பிரதேசத்தின் மீது சிங்களர் தொடுத்த பேரினவாத மேலாதிக்கப் போரில் கடற்படை நடவடிக்கைகளின் கேந்திரமாக அது மாற்றப்பட்டு, கடற்பகுதியின் பெரும் பகுதியைக் கபளீகரஞ் செய்து ஏமாப்புப் பேசுகின்றது.

தீவின் எல்லாப் பகுதிகளிலும் நன்னீர் கிணறுகள் இல்லை. பெரும்பாலும் சவர் நீரே கிடைக்கும். ஆனால், சின்னத்தாய் – பெரியதாய் – ஆலங்கன்றடி என்ற பெயர் கொண்ட கிணறுகள் குடிநீருக்கு வரப்பிரசாதம் இருந்தாலும் இக்கிணறுகளிலே வேளாளர் மட்டுமே நீர் அள்ளமுடியும். ‘சிங்களவர்கள் எங்களை நசுக்கிறாங்கள். இந்தக் கொடுமைக்கு ஒரு விடிவே இல்லையா?’ என்று மேடை தோறம் அலறுபவர்கள்கூட, பிறந்த மண்ணிலே தமிழர்களுள் ஒரு பகுதியினரை ‘இழிசனர்’ என ஒதுக்கி வைத்து, அடிமைகளாக நடத்துவதிலே என்ன நியாயம் இருக்கிறது என்று கேட்பதில்லை. யாழ்ப்பாண மண் வேளாளருக்கு மட்டுமே சொந்தம், அதன் நன்னீர் கிணறுகளும் அவர்களுக்கே சொந்தம் எனக் கொட்டம் அடிப்பது நியாயமென்றால், இலங்கை முழுவதும் சிங்கள – பௌத்த ‘கோயிகம’ சாதியருக்கே சொந்தம் எனத் தென்னிலங்கையில் பேசப்படும் புதிய வேதம் எவ்வாறு நிராகரிக்கப்படலாம்? வயல் வெளிகளுக்கு அப்பால் உள்ள பகுதியே சிறுபான்மைத் தமிழர்களுக்கான குடியிருப்புப் பகுதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இன ஒதுக்கல் கொள்கை தென்னாப்பிரிக்காவில் தோல்வி அடைந்துவிட்டது! ஆனால் காரைநகரில் உள்ள ஜாதி ஒதுக்கல் கொள்கை?

அரும்பு மீசையுடன், கதாநாயகனாகக் கருதப்பட வேண்டும் என்கின்ற ஆசைகளை நெஞ்சிலே சுமந்து, காரைநகர் மண்ணிலே வளரிளம் பருவத்தனாய் தேவகுரு பவனி வந்த காலம்…

அப்பொழுது காதல் எண்ணங்களே கனவிலும் நினைவிலும் வலம்வந்தன. அவருடைய ஏசியா சைக்கிளை மன்மத ரதமாக அவர் கற்பனை செய்து கொண்டார். அழகான கன்னிப் பெண்கள் வாழும் வீட்டுப் படலைகளிலே நாலு ரவுண்ட் அடிப்பது வீரசாதனை. அவர்கள் வீதியிலே வந்தால் கைகளை காற்றிலே எறிந்து அபிநய பாஷைகள் பேசச் சுதந்திரம் அளித்து, சைக்கிளை ஓட்டுதல் தம்மை கதாநாயகனாக அவர்கள் மனசிலே பதிவு செய்யும் எனவும் நம்பினார். ‘சண்டித்தனம்’ ஆண்மை என்றும், அத்தகைய ஆண்மையையே பெண்கள் காதலிப்பார்கள் என்றும் நினைத்துக் கொண்டார். வேறு வகுப்புக்களிலே புகுந்து, ஒருவனை அடித்து நடுங்க வைக்கும் சாகஸங்கள் புரிந்தும், தமது கதாநாயக ‘இமேஜை’ வளர்க்கலானார். சகமாணவர்கள் அவர் சண்டித்தனங்களை மெச்சிய பொழுது பெருமை அடைந்தார். தன் வன்செயல் நடவடிக்கைகளைப் பாடசாலை நிர்வாகமும், வீட்டாரும் தட்டிக்கேட்டால் ஆபத்தாகிவிடும் என்கின்ற பயம் உள்ளூர இருந்தது. தமது வீர சாகஸங்களைப் பெருமளவில் நிரூபிக்கும் பெரிய களம் ஒன்று வாய்க்காதா என அவர் மனசு இரகசியமாக விரும்பிற்கு. காதல் – வீரம் என்று அவர் மனசு சிறுவன் குரங்காக அவரை அலைக்கழித்த போதிலும், எதிர்வரும் பரீட்சையிலுள்ள ஊக்கத்தை அவர் துறக்கவும் இல்லை.

அன்று தேவகுரு பாடசாலைக்கு வழமை போலத்தான் சென்றிருந்தார். பாடசாலை செல்வதில் சுகம் இருந்தது. பரபரப்பு இருந்தது. பெண்களைப் பார்ப்பதில் இதம் இருந்தது. நண்பர்களுடன் சேர்ந்து பாடசாலை விறாந்தைகளில் சுற்றிவந்ததில் சல்லாபம் இருந்தது. கதாநாயகர்களாக ஊர்கோலம் வருவது சந்தோஷ சல்லாப சுவாசத்தை அருளுவதான திருப்தியும் இருந்தது.

மதிய இடைவேளை முடிந்து சமய பாடம் நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் சைவப்புலவர். சமய வகுப்பிலே அவர் இளம் மனசுகளைச் சுண்டியிழுக்கும் கதைகளையும் இணைத்துப் பாடம் நடத்துவார். அவற்றை ‘பலான’ விஷயங்கள் என விளங்கிக் கொள்ளக் கூடாது. ‘சமயம் பேரின்பத்திற்கு வழிகாட்டுவது; இதில் வேடிக்கை என்னவென்றால் பேரின்ப சுகம் சிற்றின்பம் என்கின்ற அளவு கோலினாலேதான் அளந்தறியப்படுவது. ஒன்றின்றி மற்றதும் இல்லை. ஆண்டவனின் அற்புத லீலா விநோதங்களைச் சாமானியர் அறியமாட்டார்கள். சிருஷ்டி இறைவனின் தொழில்களும் ஒன்று. அதனை கலவி யினாலும் மனித உறவுகளினாலும், சாதிக்கிறான். அது முதற்படி சிருஷ்டி கர்த்தாவுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவுகளை உய்த்துணர்தல், அடுத்தபடி…’ என்று பல விளக்கங்கள் அடுக்கி, ஆட்சேபனைகளைக் குதறி எறிய வல்லவர். அவருடைய வகுப்பிலே ஒன்றியிருந்தபொழுது அது நடந்தது…

நாலு துறுதுறுத்த இளைஞர்கள் பரபரப்பாகப் பாட சாலைக்குள் நுழைந்தார்கள். ஒவ்வொரு வகுப்பாகப் புகுந்து துண்டுப் பிரசுரங்களை வீசிச் சென்றார்கள். அவர்கள் வந்தது. எறிந்து சென்றது, திடீரென எழுந்த சுழல் காற்று, மறுகணமே சுவடு தெரியாது மறைந்தது போன்ற மாயம். அந்தத் துரிதமும்-துடிப்பும் புதியன. அன்று, துண்டுப்பிரசுர விநியோகஸ்ரே கதாநாயகர்களாக உயர்ந்தார்கள். அவர்கள் வந்து சென்றது பற்றியே எத்திசையிலும் பேச்சு. அவர்கள் விசிறிச் சென்ற துண்டுப் பிரசுரங்களுள் ஒன்றினைத் தேவகுரு வாசித்தார். அரச அடக்கு முறைக்கும் வன்செயலுக்கும் எதிராகக் குமுறி எழும் இளைஞரின் நவ குரலாய் அது ஒலித்தது. காரை நகரிலே குடிகொண்டிருக்கும் கடற்படை, இரவின் பாதுகாப்பிலே,பொதுமக்கள்மீது கட்டவிழ்த்து விடும் வன் முறைகளை அது பட்டியல் இட்டுக் கூறியது. வதந்திகள் எனச் சொல்லப்பட்ட பல நிகழ்ச்சிகளை அப்பிரசுரம் ஆதார பூர்வமாக நிரூபித்தது. கடற்படை வீரர்களின் அத்துமீறல்களையும் அக்கிரமங்களையும் எதிர்கொள்ளாது போனால், காரைநகர் முழுவதுமே இலங்கைக் கடற்படையின் மகா முகமாக மாறிவிடும் என எச்சரித்திருந்தது. துடிப்புள்ள இளைஞர்களின் வீரமே மண்ணின் மானத்தையும் கௌவரத்தையும் நிலைநாட்ட வல்லது எனவும் துண்டுப் பிரசுரம் விவாதித்தது. இந்தப் புதிய மெய்ம்மைகளை உணர்ந்ததும், அவனுள் உறங்கிக் கிடந்த இன்னொருவன் விஸ்வருபம் பெற்றான்.

‘வந்தேன்; பார்த்தேன்; வென்றேன்!’ என்று யூலியஸ் சீஸர் வெற்றி மமதையிலே ஆர்ப்பரித்தானாம். இலங்கைக் கடற்படை வீரர்களும் பொன்னாலைப் பாலத்தில் நின்று இவ்வாறு கொக்கரிப்பார்களா? வளரிளம் பருவத்துக் காதல் நினைவுகள் கொச்சையானவை. அதிலே சிரத்தை ஊன்றி, மண்ணையும், இனத்தையும் நேசிப்பதைத் துறந்து விட்டோமோ என்கின்ற குற்ற உணர்பு தேவகுருவைப் பிறாண்டலாயிற்று. வாழ்க்கைக்குப் புதியதோர் அர்த்தம் ஊண்டாகின்ற தவிப்பும் தாகமும் அவர் மனசைப் பற்றிக் கொண்டன.

புதிய அர்த்தம் பற்றிய அக்கறைகள் வளர்ந்து வந்ததற்கிடையில் பத்தாம் வகுப்பிலே சித்தி எய்தினார். இந்தச் சித்தி குடும்பத்தினரை மகிழ்வித்தது. அடுத்த வகுப்பு பல்கலைக் கழகத்திற்குப் போவதற்கான நுழைவாயிலாகும். அவர் படித்த யாழ்ரன் கல்லூரியிலே அவருக்குத் தோதான கற்கைநெறிகள் இருக்கவில்லை. எனவே, அவர் வீட்டிலிருந்து சில மையில் தொலைவில், பொன்னாலைப் பாலத்திற்கு அண்மையில் அமைந்துள்ள காரைநகர் இந்துக் கல்லூரியிலே சேர்ந்தார்.

அங்கு புதிய நட்புகள் கிடைத்தன. அவரைப் பார்க்கிலும் அரசியலும் நாட்டு நடப்புகளும் நன்கறிந்த மாணவர்கள் இருந்தனர். பாடசாலை விட்டதும், அவர்களிலே சிலர்கூடி நாட்டிலே அதிகரித்து வரும் வன்முறையைப் பற்றி விவாதித்தார்கள். தமிழ் அரசியல்வாதிகளிலே அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாகக் காணப்பட்டார்கள். தென்னிலங்கையிலே மூர்க்கம் பெற்று வரும் சிங்களப் பேரின வாதத்திற்கு எதிராக, இவர்கள் உருபு வாய்ந்த நடவடிக்கைகள் எடுக்கச் சத்தியற்றவர்களாகக் காணப்பட்டார்கள். சிங்கள இனவாதத்துக்கு எதிராகத் தமிழ் இன வாதத்தினை வளர்ப்பதில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார்கள். இந்த தமிழ் இனமான உணர்ச்சியினை வாக்கு வங்கியாக மாற்றிக் கொண்டனர். நாடாளுமன்றத்திலே பிரதிநிதிகளாய் வலம் வந்து, சில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும், வர்த்தகப் பெருமக்களுக்கான ஆதாயச் சலுகைகளையும் பெற்றுத் தருவதிலே காலம் போக்கினார்கள். நாடாளுமன்றத்திலே சண்டப் பிரசண்டமாகப் பேசி, அவற்றைத் தமிழ்ப் பத்திரிகைகளிலே முதற்பக்கச் செய்திகளாக வரச்செய்து தங்கள் வீரத்தை நாட்டினார்கள். பொதுக் கூட்டங்களிலே தமிழனுடைய பண்டைய வீர வரலாற்றினைக் கூறிக் குதூகலித்தார்கள். ஆனால், சிங்களர் தங்கள் திட்டங்களை நேர்த்தியாகச் செயற்படுத்தி வெற்றிமேல் வெற்றி சாதித்தனர். தமிழருள் பேர்பாதிப் பேருக்குத் ‘தோட்டக் காட்டான்’ என்று பெயர் சூட்டி வாக்குரிமைகளைப் பறித்தார்கள்.

[தொடரும்]