பிடித்த சிறுகதை – 1 – நந்தினி சேவியர்.

எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் முகநூலில் ‘எனக்குப் பிடித்த சிறுகதை’  என்னும் தலைப்பில் சிறு குறிப்புகள் பதிவிட்டு வருகின்றார். இக்குறிப்புகள் எழுத்தாளர்கள் பலரை அறிமுகம் செய்வதால் ஆவணச்சிறப்பு மிக்கவை. அவை பதிவுகள் இணைய இதழில் அவ்வப்போது பிரசுரமாகும்.  – பதிவுகள் –


 

பிடித்த சிறுகதை – 01

கருத்து வேறுபாடுகளை மறந்து. ஒரு வாசகன் என்ற வகையில் சில எழுத்தாளர்களின் (எனக்குப் பிடித்த) சிறுகதைகளை என் இளம் நண்பர்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

” அணி “

ஒரு காலம் முற்போக்கு எழுத்தாளராக இருந்து பின்னர் எதிரணிக்கு தாவி நற்போக்கு எழுத்தாளராக மாறிய  எஸ்.பொ. வின் கதை இது. அவரது ‘வீ ‘ தொகுப்பில் இக்கதை அடங்கியுள்ளது.  ‘இரத்தம் சிவப்புத்தான் ‘ என்பது போன்ற ஒரு தலைப்பில் ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை மலரில் ‘ இக்கதையை முன்புவாசித்திருந்தேன். புதியதொரு கதை சொல்லும் முறையில் இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சலூன் தொழிலாளியின் வாய் மொழியாக எழுதப்பட்ட இக்கதை இறுதி முத்தாய்ப்பை தவிர்த்து வாசித்தால் மிகச் சிறப்பான கதை என உறுதிப்படுத்துவேன்.!


பிடித்த சிறுகதை – 02

மாகாணசபை வடக்குக் கிழக்கென பிரிபடாத கடைசி வருடம். தமிழ்த் தினவிழா எழுத்தாக்கப் போட்டி நடுவர்களில் நானும் ஒருவன்.  மாகாணப் போட்டி திருகோணமலையில் நடைபெற்றது. கோட்ட மட்டம், வலய மட்டம், பிரதேச மட்டம், மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்றவையே மாகாண மட்டப்போட்டிக்கு தேர்வுக்காக வரும். இதில் வெற்றிபெறுவதே அகில இலங்கைப் போட்டிக்கு சேர்த்துக்கொள்ளப்படும். சிரேஸ்ட பிரிவுக்கானசிறுகதைப் போட்டி,.. எனது பார்வைக்கு வந்த எட்டு மாவட்ட சிறு கதைகளில் ஒன்று இப்படி ஆரம்பித்தது.

 

” யாழ்ப்பாண மாதா மலடி என்று பெயர்
கேளாமல் சத்திரசிகிச்சையோடு பெற்றெடுத்த நொண்டிக் குழந்தை
தொண்டமானாறு…..”

நான் துணுக்குற்றேன். மிகப்பிரசித்தி பெற்ற கதை ஒன்று பல படிகளைத்தாண்டி நடுவர்களினால் மாவட்ட முதலிடத்திற்கு வந்து விட்டது. யாரை நோவேன்.?. எனது ஆட்சேபணை காரணமாக அக்கதை போட்டியிலிருந்து நீக்கப்பட்டது. அக் கதை,..

” ஒருபிடி சோறு .. “

கனக செந்திநாதனால் எழுதப்பட்ட இக்கதை ஈழத்து சிறுகதைகள் தொகுப்பில் இடம் பெற்றது. ருஸ்ய மொழியில்இக்கதை மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. முற்போக்கு எழுத்தாளர்களோடு கருத்துமுரண்பாடுகள்இருந்தபோதும் இறுதிவரை தன் நட்பைப் பேணியவர்.  ” வெறும் பானை ” “விதியின் கை “ஆகிய  நாவல்களின் ஆசிரியர். ‘கரவைக் கவி கந்தப்பனார்’ எனும் புனை பெயருக்குச் சொந்தக்காரர். 1964 ல் கிழக்கு இலங்கை எழுத்தாளர் சங்கம் மட்டக்களப்பில் நடத்திய எழுத்தாளர் மாநாட்டில்
” இரசிகமணி ” பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். இக்கதையை(‘ஒருபிடி சோறு’) ‘யாழ்இலக்கியவட்டம்’ வெளியிட்ட இவரது ” வெண் சங்கு ” தொகுதியில் வாசிக்கமுடியும். நல்ல கதை.!


பிடித்த சிறுகதை – 03

” வானத்து அமரன் வந்தான் காண் வந்தது போல் சென்றான் காண்,…” புதுமைப்பித்தன் எள்ளலோடு குறிப்பிட்டதுபோல் அவருக்கும் அவரது  பித்தனான நமது “ஷா” வுக்கும் நேர்ந்ததுவும் அஃதே.

“பாதிக்குழந்தை”

J.S.C. சித்தி எய்தாத நிலையில் தமிழகம் சென்று அங்கே ‘ஸ்ரார் பிரஸ்சில் ‘ சிற்றூழியராக கடமையாற்றிய போது புதுமைப்பித்தனைக் கண்டு அவரது ஆகர்சத்தால் ‘பித்தன் ‘ என தனக்குப் பெயர்வைத்துக்கொண்ட “ஷா” பின்னர்
இந்தியாவின் பிரிட்டிஸ்ராணுவத்தில் சேர்ந்து இரண்டாம் உலகமகா யுத்த காலத்தில் மத்தியகிழக்கு நாடுகளில் கடமை புரிந்து  இலங்கை (மட்டக்களப்பு) திரும்பினார். இவரது சொந்தப் பெயர்.’ கலந்தர் லெப்பை மீராஷா ‘ என்றும் ‘காதர் முகைதீன் மீரான் ஷா ‘ என்றும் கூறுகிறார்கள். நல்ல வாசகர்கள் அவரைப் ‘பித்தன் ஷா ‘ எனவே அறிந்துள்ளனர்.

தினகரன் பத்திரிகையில் இவரெழுதிய ‘ கலைஞனின் தியாகம் ‘ சிறுகதை பற்றி  எஸ்.டி.சிவநாயகம். “தமிழகத்தில் ஒரு புதுமைப்பித்தன் இறந்துவிட்டார் நமது நாட்டில் ஒரு பித்தன் தோன்றிவிட்டார்.” என சிலாகித்து எழுதினார்.  வறுமை அவரை விட்டு வைக்கவில்லை 90 களில் கம்பகா மாவட்டம் ‘ திகாரிய ‘ அகதி முகாமில் அவர் வாழ்ந்தார். க.பொ.த சாதாரண. முன்னைய பாடத்திட்டத்தில்  இவரது ‘ இருட்டறை ‘ சிறுகதை சேர்க்கப்பட்டிருந்தது. இவரது சிறுகதைகளை தொகுப்பாக்குவதற்கு எஸ். எச் எம் ஜெமீல் ஆர்வமாக இருந்தும் அது கைகூடவில்லை. 1995 ம் ஆண்டு மல்லிகைப் பந்தல் வெளியீடாக டொமினிக் ஜீவாவும்,  மேமன்கவியும் ‘பித்தன் கதைகள் ‘ என்ற  பெயரில் அவரது கதைகளை நூலுருவாக்கி ஒரு காத்திரமான பணியைச் செய்துள்ளனர். அந்த தொகுப்பினை பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்கு கிட்டவில்லை. 2015 தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மபாஸ் சனூன் பித்தன் கதைகளின் தொகுப்பை சிங்களத்தில் வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார் அது வெளிவந்ததாகத்  தெரியவில்லை. ஓர்மமும், அடிபணியாத்தன்மையும் கொண்ட பித்தன் ஷா பணக்காரர்களை அம்பலப்படுத்த தயங்காதவர். எத்தனையோ புரவலர்கள் இருந்தும் அவர் கவனிக்கப்படாமல் போனதுக்கு  இதுவும் ஒரு காரணமாகலாம்.

1952ல் சுதந்திரனில் வெளியான ‘பாதிக்குழந்தை ‘ கதையில் வரும் அபலை சுபைதாவையும்,இரண்டாம் முறை மக்கத்துக்கு செல்லும் சுபைதாவை இந்நிலைக்கு ஆளாக்கிய “உமறு லெப்பை ஹாஜியாரையும். என்னால் மறக்க முடியவில்லை
பித்தன்ஷா வையும்தான். வாசியுங்கள் நண்பர்களே.!


பிடித்த சிறுகதை – 04

அந்தக்காலத்தில் மணியகாரன் என்றால் DRO. மணியகாரன் கந்தோர் என்றால் DRO Office. பின்நாட்களில் அப்பதவி AGA ஆகி பின்னர் DS ஆகிவிட்டது. ஆனாலும் பெரும்பாலோர் DRO என்றும் DRO Office. என்றுமே பாவிக்கின்றனர்.
என்வரையில் ஈழச் சிறுகதை  மூலவர்களில் ஒருவரே நிர்வாக சேவை அதிகாரியாக என்னால் அறியப்பட்டிருந்தார். பின்னர் பல படைப்பாளிகள் அப்பதவிக்குவந்தனர். வந்து கொண்டிருக்கின்றனர்.

” வெள்ளிப் பாதசரம் “

‘இலங்கையர்கோன்’ என அழைக்கப்பட்ட ஈழத்து சிறுகதை மூலவர்கள் மூவரில் ஒருவரான  த.சிவஞானசுந்தரம் 1944 ல்  ஈழ கேசரியில்  எழுதிய கதைதான் இது. யாழ்ப்பாணத்தின் நீர்வளமற்ற சொற்ப  நிலத்தை தம் தளராத முயற்சி ஒன்றினாலே வளம் படுத்தி சீர்செய்யும்  விவசாயியான செல்லையனையும், அவனது மனைவியான நல்லம்மாவின்  ஊடலையும் கூறும் கதை இது. திருமணமாகி மூன்றுமாதங்களேயான  தம்பதிகள் வடமராட்சியின் பிரசித்தி பெற்ற வல்லிபுரக்கோவில் கடைசித் திருவிழாவுக்கு செம்மண் பிரதேசத்திலிருந்து மாட்டு வண்டியில் வல்லை வெளிதாண்டி வருகின்றனர். வந்த இடத்தில் செல்லையன் மனைவிக்குஆசையோடு வாங்கிக்கொடுத்த வெள்ளிப்பாதசரத்தை  அவள் தொலைத்து விடுகிறாள். இதனால் ஏற்படும் ஊடலே இக்கதை.

தனது 46. ஆவது வயதில் 61 ம் ஆண்டில் அகாலமரணமடைந்த ஏழாலையைச் சேர்ந்த இலங்கையர்கோனின் ‘வெள்ளிப்பாதசரம்’ சிறுகதைத் தொகுதி 62 ம் ஆண்டில் வெளிவந்தது.பின்னர் ‘மித்ர’ வெளியீடாகவும் சமீபத்தில மீள் பிரசுரம் செய்யப்பட்டது.
இலங்கையர்கோன் சிறந்த நாடக ஆசிரியரும் கூட.. இவரது நூல்கள்: விதானையார் வீட்டில் (நாடகம்), கொழும்பிலே கந்தையா(நாடகம்), லண்டன் கந்தையா(நாடகம்) மாதவி மடந்தை (மேடை நாடகம்) மிஸ்டர் குகதாசன் (நகைச்சுவை நாடகம்) முதற்காதல்(மொழிபெயர்ப்புநாவல்) வெள்ளிப்பாதசரம் (சிறுகதைகள்).

நான் வடமராட்சியைச் சேர்ந்தவன்.. வல்லிபுரக்கேயில் கொடியேறும்போது “வெள்ளிப்பாதசரம் ” கதை என் நினைவில் தவிர்க்க இயலாது நிறையும். அந்த ரசனை அலாதியானது. வாசியுங்கள் நண்பர்களே.!

[ தொடரும் ]