பிரசவத்திலும் உலகச்சாதனை படைக்கும் பெண்கள்

- நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -இப்பூவுலகில் மனித இனப் பெருக்கத்தில் மிகப் பாரிய பொறுப்பை ஏற்றுச் செயற்பட்டு நிற்பவர்கள் தன்னலங் கருதாப் பிறர் நலங்கருதும் பெண்குலத்தினர் ஆவர். அவர்கள்தான் பத்து மாதம் கருவைத் தம் வயிற்றில் சுமந்து பாதுகாத்துப் பிள்ளைச் செல்வங்களைப் பெற்றுத் தந்து உலகை நிலைநாட்டி நிற்கின்றனர். இது ஓர் அளப்பரிய சேவையாகும். பெண்களின் உடல் அமைப்பு அதற்கு ஏதுவாய் அமைந்துள்ளது. ஆண்களால் இதைச் செய்ய முடியாது. ஆனாலும் பெண்கள் கருவறையில் குழந்தை உருவாவதற்கு ஆண்கள்தான் உயிர் விந்துக்களைக் கொடுத்துதவுகின்றனர். இத்துடன் அவர்கள் உயிர் கொடுக்கும் வேலை முடிவடைந்து விடுகின்றது.   தற்பொழுது உலகில் எழுநூற்றியொரு (701) கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரையும் பெற்றுத் தந்த பெருமை பெண்குலத்தாரைச் சாரும். பெண்கள் எல்லாரும் தாய்மை அடைவதையே விரும்புவர். அது அவர்கள் சுபாவம். திருமணம் ஆகியதும் பெண்கள,; குழந்தை வேண்டுமென்று திட்டம் தீட்டித் தொழிலில் இறங்கி விடுவர். அதிலும் வெற்றி காண்பது அவர்கள்தான். பிள்ளைப் பேறற்ர பெண்களை ‘மலடி’ என்று பட்டஞ் சூட்டி மகிழ்வர் மனித குலத்தார். “தாயறியாத சூல் உண்டோ? ” என்பது பழமொழியாகும். “பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த, மக்கட்பேறு அல்லபிற.” (குறள் 61) என்று பெண்நிலை முற்றும் அறிந்த திருவள்ளுவர் மக்கட்பேற்றின் பெருமை பற்றித் திருக்குறளில் பேசுகின்றார்.

குழந்தைச் செல்வம்

பெண்கள் இயற்கையாக ஒரு சூலில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுப்பது வழக்கம். எனினும் சில வேளைகளில் மிக அரிதாக ஒரு சிலர் ஒரே சூலில்  மூன்று அல்லது நான்கு குழந்தைகளைப் பெறும் வாய்ப்பும் உண்டு. இதற்குமேல் ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என்ற ரீதியில் குழந்தைகளைப் பெறுவதாயின் அவர்கள் செயற்கைக் கருவூட்டுக் குழந்தை முறையை நாடவேண்டும். அதே நேரம் குசேலருக்கும் சுசீலைக்கும் இருபத்தேழு (27) பிள்ளைகள் இருந்தனரென்றும் படித்திருக்கின்றோம். இன்னும் திருதராட்டிரன,; காந்தாரியையும் அவளின் பத்துச் சகோதரிகளையும் மணம் முடித்து நூற்றொரு (101) பிள்ளைகளைப் பெற்றுள்ளதையும் மகாபாரதத்தில் காண்கின்றோம். எனினும் மேற் கூறிய குசேலர், திருதராட்டிரன் ஆகிய இருவருக்கும் பிறந்த பிள்ளைகளில் எவராவது ஒரே சூலில் பல குழந்தைகளாகப் பிறந்துள்ளனரா? என்பது தெளிவற்ற நிலையில் உள்ளது.

முழுதொத்த மூவர்

ஒரே பிரசவத்தில் முழுதொத்த மூன்று குழந்தைகளைப் பெறும் நிகழ்வு ஐந்து இலட்சத்தில் (5,00,000) ஒன்றாகத்தான் இருக்கும் என்பது அறிவியற் கூற்றாகும். இவர்கள் உருவத்திலும்; ஒரே மாதிரியாய்த்தான் இருப்பார்கள். எனவே இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாய் அமைந்து விடுகின்றது எவருக்கும்.

உலகச் சாதனை

இனி ஒரே சூலில் பல குழந்தைகள் பிறந்த ஒரு சில நிகழ்வுகளின் விவரம் பற்றிக் காண்போம்.

1. ஒரு கனடிய பெண்மணிக்கு 12-08-2007 அன்று நான்கு (04) குழந்தைகள் பிறந்துள்ளன.
2. ஓர் அமெரிக்கப் பெண்மணி 31-07-2007 அன்று மூன்று (03) பெண் குழந்தைகளையும், இரண்டு (02) ஆண் குழந்தைகளையும் ஒருமித்து ஐந்து (05) குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
3. அமெரிக்காவில் 06-10-2008 அன்று ஆறு (06) குழந்தைகளை ஒரு பெண்மணி பெற்றெடுத்தார்.
4. எகிப்திய நாட்டுப் பெண்மணி ஒருவர் 16-08-2008 அன்று நான்கு (04) ஆண் குழந்தைகள், மூன்று (03) பெண் குழந்தைகள் ஆகிய ஏழு (07) குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
5. அமெரிக்காவில் ஒரு பெண் எட்;டுப் (08) பிள்ளைகளை 1998ஆம் ஆண்டில் பெற்றெடுத்துள்ளாள்.
6. அமெரிக்க நாட்டில் கலிவோனியா நகரிலுள்ள ஒரு பெண்மணி 26-01-2009 அன்று எட்டுக் (08) குழந்தைகளைப் பெற்றுத் தாயானாள்.
7. மெக்சிக்கோ நாட்டுப் பெண்மணி ஒருவர் 20-05-2012 அன்று ஆறு (06) பெண் குழந்தைகள், மூன்று (03) ஆண் குழந்தைகள் ஆகிய ஒன்பது (09) குழந்தைகளைப் பெற்ற பெருமையை நிலைநாட்டியுள்ளாள்.
8. குசராத்தைச் சேர்ந்த ஓர் இந்தியப் பெண்மணி 11-11-2011 அன்று பதினொரு (11) ஆண் குழந்தைகளைப் பெற்று இதற்குமுன் நிலைத்திருந்த சாதனையை முறியடித்துப் புதியதொரு உலகச் சாதனையைப் படைத்துள்ளார். இவை செயற்கைக் கருவூட்டு முறைப்படி பிறந்த குழந்தைகளாகும். இதற்குரிய படம் ஒன்றை மேலே தந்துள்ளோம். இதில் முக்கிய ஒரு குறிப்பு:- குழந்தைகள் பிறந்த நாள், மாதம், ஆண்டு, பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை யாவும் பதினொன்றாய் (11) அமைந்துள்ளமை ஒரு சிறப்பாகும்.

குழந்தையின் தோற்றுவாய்

ஒரே சூலில் பல குழந்தைகள்

ஆண், பெண் உடலுறவின்போது ஆண் பாய்ச்சும் விந்து உயிரணுக்களில் ஒன்று பெண்ணின் முட்டை ஒன்றுடன் கலந்திணைந்து பெண் உடலில் சினைப்படுத்தப்பட்டு அந்த முட்டைக் கருவுயிர்  கருப்பையில் தங்கிச் சத்துள்ள உணவைத் தாயிடமிருந்து பெற்று வளர்ந்து முதிர்நிலையடைந்ததும் முப்பத்தெட்டாவது (38) வாரத்தில் ஒரு குழந்தையாய்ப் பிறக்கின்றது. பெண் முட்டையின் விட்டம் அண்ணளவாக 0.12 மி.மீ. ஆகும். ஒரு விந்து உயிரணு ஒரு முட்டையின் வெளித்தோலைத் துளைத்துக் கொண்டு உள் சென்றதும் அத் தோலானது கடினம் அடைந்துவிடும். எனவே மற்றைய விந்து உயிரணுக்கள் இந்த முட்டையின் தோலைத் துளைத்துக் கொண்டு உட்செல்லமாட்டா. இது ஒரு சூலில் ஒரு குழந்தையை இயற்கையாகப் பெற்றெடுக்கும் முறையாகும்.

ஒரே சூலில் பல குழந்தைகள்

இனி ஒரே சூலில் பல குழந்தைகள் பிறக்கும் முறைகளையும் காண்போம். ஒரே சூலில் பல முட்டைகள் ஒரே நேரத்தில் சினைப்படுமாயின் பல குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு உள்ளது. நாலு குழந்தைகள் பிறப்பதாயின் ஒரே நேரத்தில் நாலு  முட்டைகளுடன் விந்தணுக்கள் சேர்ந்து சினைப்படல் வேண்டும். அல்லது ஒரு முட்டை நாலாகப் பிரிந்து அவை நான்கும் கருவுற வேண்டும். இன்னும் இரு முட்டைகள் இவ்விரண்டாகப் பிரிந்து அவை நான்கும் சினைப்படல் வேண்டும்.

சக்தி வாய்ந்த மருந்து, வேதிமுறைச் செயற்பாடு ஆகியவற்றால் கரு முட்டைகளை அதிகரிக்கச் செய்து ஐ.வி.எவ் ; (IVF= In Vitro Fertilization)    முறையில் செயற்கைக் கருவூட்டுக் குழந்தைகள் (வுநளவ வுரடிந டீயடிநைள)  மூலம் ஐந்து (05) முதல் பதினைந்து (15) வரையிலான குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கு வைத்திய அறிவியல்துறை துணைபுரிகின்றது. இப்படியான குழந்தைகள் முதிர்வு நிலை எய்துமுன் பிறப்பதனால,; அதிகமான குழந்தைகள் பிறந்தவுடனும், சில மணித்தியாலங்களின் பின்பும் இறந்து விடுகின்றன.  இதன் காரணத்தையும் சற்றுக் கவனிப்போம்.

சாதாரணமான ஒரு குழந்தை 38 வாரத்திலும், இரணைக் குழந்தைகள் 36 வாரத்திலும், முக் குழந்தைகள் 32 வாரத்திலும், ஐந்து குழந்தைகள் 30 வாரத்திலும் பிறக்கின்றன என்பது வைத்திய நிபுணர்களின் கூற்றாகும். இவ்வாறான இடைவெளிதான் இக் குழந்தைகளின் இறப்புக்குக் கூற்றன் ஆகின்றான். மேலும் இக் குழந்தைகளின் எடை மிகக் குறைந்திருப்பதும் ஒரு காரணமாகும்.

இக் கட்டுரை முழுவதும் பெண்கள் விடயம்தான் பேசப்பட்டுள்ளன. அவர்கள் குழந்தைப் பேற்றின் பொழுது படும் துன்பங்கள் அளப்பரியவை. பிள்ளைப்பேறு மறு பிறப்பென்பர். ஆனாலும் அவர்கள் அதைச் சிரித்த முகத்துடன் ஏற்கின்றனர். உலக மக்கள் அனைவரும் பெண்கள் கையிற்றான் உள்ளனர். அவர்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் ஆற்றும் அளப்பரிய சேவையை நாம் மெச்சிப் பாராட்டிப் புகழ்ந்து வாழ்த்திப் போற்றுவோமாக!     

wijey@talktalk.net

 

( பதினொரு குழந்தைகளுடன் வைத்திய நிபுணர்கள்)