புதுச்சேரியில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா!

1_sundaresanar5b.jpg - 11.64 Kbதமிழிசையின் சிறப்புகளைத் தமிழகம் முழுவதும் பாடிப் பரப்பிய இசையறிஞர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். இவர் ஆராய்ச்சியறிஞராகவும், பாடுதுறையில் வல்லுநராகவும் விளங்கியவர். தொல்காப்பியம், சங்க இலக்கியம், காப்பியங்கள், திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், சிற்றிலக்கியங்கள், சித்தர் பாடல்களில் இருந்த தமிழிசைக் கூறுகளை மக்களுக்குச் சிறப்பாக அறிமுகப்படுத்தியவர்.
  
குடந்தை ப. சுந்தரேசனார் கும்பகோணத்தில் வாழ்ந்த பஞ்சநதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோரின் மகனாக 28.05.1914 இல் பிறந்தவர். நான்காம் வகுப்பு வரை கல்வி பயின்றவர். தமிழ், தெலுங்கு, இந்தி, சமற்கிருத மொழிகளை அறிந்தவர். யாழ்நூல் ஆசிரியர் விபுலானந்தரின் மாணவராக இருந்து அடிகளாரின் தமிழிசை குறித்த கண்டுபிடிப்புகளை மக்களுக்கு எடுத்துரைத்தவர். திருவையாறு அரசர் கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையிலும் விரிவுரையாளராக இருந்து மாணவர்களுக்குத் தேவார இசை பயிற்றுவித்த பெருமைக்குரியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அறிஞராகச் சிலகாலம் பணிபுரிந்தவர்.  அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களின் விருப்பப்படி இவர் பஞ்சமரபு என்ற அரிய நூலுக்கு உரை எழுதிய பெருமைக்குரியவர். சைவ, வைணவ இலக்கியங்களில் மிகுந்த புலமையுடைய இவரின் நூற்றாண்டு 28. 04. 2014 முதல் தொடங்க உள்ளது. இவரின் தமிழிசைப் பணியை மக்களுக்கு நினைவுகூரும் வகையில் புதுச்சேரியில் இவரின் நூற்றாண்டு விழாவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க – இந்திய ஒன்றியமும், புதுச்சேரி இலக்கிய வட்டமும் இணைந்து வரும் 17. 05. 2014 சனிக்கிழமை மாலை ஆறு மணிமுதல் செயராம் ஓட்டலில் நடத்துகின்றன.

குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவுக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து தலைமை தாங்குகின்றார். முனைவர் மு.இளங்கோவன் வரவேற்புரையாற்றுகின்றார். முனைவர் அரிமளம் பத்மநாபன் விழா குறித்த நோக்கவுரையாற்ற உள்ளார். மலேசிய இந்தியர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவையின் தேசியத் தலைவர் முனைவர் விக்டர் சுப்பையா, இரா. மதிவாணன் முன்னிலையில் இவ்விழா நடைபெற உள்ளது.

குடந்தை ப. சுந்தரேசனார் குறித்த நினைவுரைகளை வடலூர் ஊரன் அடிகளார், செந்தலை கௌதமன், முனைவர் மு.இளமுருகன், தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இ. அங்கயற்கண்ணி, மலேசியப் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல்துறைத் தலைவர் முனைவர் சு. குமரன், ஆடுதுறை வி. வைத்தியலிங்கம், புலவர் பொ. வேல்சாமி, ஆ. பிழைபொறுத்தான் ஆகியோர் வழங்க உள்ளனர். நிகழ்ச்சிக்கு வருகைதரும் அறிஞர்களுக்கு இந்தியக் கடலோரக் காவல்படையின் கமாண்டன்டு நா. சோமசுந்தரம் சிறுப்புச் செய்கின்றார். குடந்தை ப. சுந்தரேசனாரின் மாணவர் பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் சுந்தரேசனாரின் சிறப்புகளை எடுத்துரைத்துச் சிறப்புரையாற்ற உள்ளார்.

பெறுநர்: செய்தி ஆசிரியர்,
நாளிதழ்கள், இணையதளங்கள், தொலைக்காட்சிகள்
புதுச்சேரி / சென்னை
தொடர்புக்கு: மு.இளங்கோவன், புதுச்சேரி – 605 003. பேசி: 94420 29053


துச்சேரியில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா!

துச்சேரியில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா!

 

muelangovan@gmail.com