‘பூநகரான்’ பொன்னம்பலம் குகதாசன் மறைவு!

பூநகரான் என்று கனடியத்தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட பொன்னம்பலம் குகதாசன் மாரடைப்பு காரணமாக மறைந்த செய்தியினைச்சற்று முன்னர்தான் முகநூலின் மூலம் அறிந்துகொண்டேன். ‘பூநகரான்’ குகதாசனின் மறைவு பற்றிய செய்தி எதிர்பாராதது.

உதயன்(கனடா), , சமகளம்.காம், தமிழ்வின்.காம். செய்தி.காம் உட்படப்பல ஊடகங்களில் அரசியற் கட்டுரைகள் எழுதிவந்தவரிவர். குகதாசன் யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர். இவருடனான நேரடியான அறிமுகம் எனக்குக் கனடாவில்தான் ஏற்பட்டது. அப்பொழுது யாழ்இந்துக்கல்லூரிக் கனடாச்சங்கத்தின் வருடாந்தக்கலைவிழா மலருக்கான ஆசிரியப்பொறுப்பிலிருந்தார். அம்மலருக்கான ஆக்கங்கள் வேண்டி என்னுடன் தொடர்புகொண்டபோதுதான் அவரை நேரடியாகச்சந்தித்தேன். அவர் ஆசிரியராகவிருந்தபொழுது வெளியான கலைவிழா மலர்களில் என் படைப்புகளை (கட்டுரை, கவிதை மற்றும் சிறுகதை) ஆகியவற்றை வாங்கிப் பிரசுரித்ததை இத்தருணத்தில் நினைவுகூருகின்றேன். அதன் பின்னர் அவ்வப்போது நிகழ்வுகளில், வழியில் எதிர்பாராமல் ஏற்படும் சந்திப்புகளில் சந்தித்திருக்கின்றேன். எப்பொழுதும் முகத்தில் புன்முறுவலுடன் காட்சியளிக்கும் இவரை இறுதியாக நான் சந்தித்தது கனடாத்தமிழ் எழுத்தாளர் இணைய ஆண்டு மலர் வெளியீட்டு நிகழ்வொன்றுக்குச் சென்றிருந்தபொழுது, அந்நிகழ்வு நடைபெற்ற கனடாச்சிவன் கோவிலில்தான். குகதாசன் மிகுந்த சமயப்பற்று மிக்கவர். அதன் பின்னர் அண்மையில் முகநூல் பக்கத்தில் நட்பு நாடித்தொடர்புகொண்டிருந்தார். இவை பற்றிய நினைவுகளெல்லாம் இத்தருணத்தில் மேலெழுகின்றன. சென்ற வருடம்தான் இவரது கட்டுரைகள் அடங்கிய தொகுதியொன்று ‘வாலி வதை (ஒரு சமகால நோக்கு)’ என்னும் பெயரில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

இத்தருணத்தில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரின் துயரத்திலும் ‘பதிவுகள்’ இணைய இதழும் பங்குகொள்கின்றது.