பயணியின் பார்வையில் (03 & 04)

நிலத்துக்கும்  ஆகாயத்துக்குமிடையில்
அந்தரவெளியில் நீந்திவரும்
பறவைகளை   வரவேற்றுக்கொண்டிருக்கும்
மரங்களுக்குத் தெரியுமா
எந்தப்பறவை
எப்போது   வந்து   எங்கே  அமருமென்று…? –
  கருணாகரன்

முருகபூபதிஇந்தப்பத்தியை   எழுதும்  வேளையில்  சிங்கப்பூரின்  முன்னாள் பிரதமர்   லீ குவான் யூ  மறைந்த  செய்தி  வருகிறது.    அவருக்கு அஞ்சலி  செலுத்திக்கொண்டு  இந்தப்பத்தியை    தொடருகின்றேன். சிங்கப்பூருக்கு    சென்றதும்  மைத்துனர்  விக்னேஸ்வரன்  தனது நண்பர்களுக்கு   எனது  வருகை    பற்றி  அறிவித்தார்.   எமது  இலங்கை    மாணவர்  கல்வி    நிதியம்  தொடர்பான  தகவல்  அமர்வு கலந்துரையாடலுக்காக    அவர்  ஒரு  சந்திப்பை ஒழுங்குசெய்திருந்தார்.

பொதுவாகவே  இலங்கையில்  நீடித்த  போரும் –  இறுதிக்கட்டத்தில் மக்களுக்கு  நேர்ந்த  அழிவுகளும்  தொடர்பாக  மலேசியா,  சிங்கப்பூர் தமிழ்   மக்களிடம்  ஆழ்ந்த  கவலை    இருந்தது.   இம்மக்களில் இலங்கைத்தமிழர்களும்    இடம்பெற்றாலும்,   மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும்    இடையில்  தமிழ்  மக்கள்  தமது  உணர்வுகளை வெளிப்படுத்துவதில்    நிரம்ப  வேறுபாடும்   நீடிக்கிறது. மலேசியாவில்   வதியும்  இந்திய  வம்சாவளியினர்  குறித்த உரிமைப்போராட்டம்    நாம்  நன்கு  அறிந்ததே.   ஆனால்,  சிங்கப்பூரில் அந்த   நிலைமை    இல்லை.    தமிழ்,  ஆங்கிலம்,  சீனம்,  மலாய் மொழிகளுக்கு    அரச  அங்கீகாரம்  வழங்கியவாறு   சிங்கப்பூர்   அரசு இயங்குகிறது. சிங்கப்பூரில்    நின்றவேளையில்  தைப்பூசத்திருவிழா    வெகு கோலாகலமாக    நடந்தது.  அரசின்  அமைச்சர்களும்  கலந்துகொண்டு சிறப்பித்ததை    தொலைக்காட்சியில்  பார்த்தேன்.    மக்களின் பக்திப்பரவசம்    கரைபுரண்டு    ஓடியது. பக்தர்கள்    வேல்  குத்தி  ஆடியவாறு  தமது  ஆழ்ந்த  நம்பிக்கையும் வெளிப்படுத்தினார்கள்.    வருடாந்தம்  நடக்கும்  தைப்பூசத்திருவிழா அங்கு    தொடர்ந்து  கோலாகலமாகவே   கொண்டாடப்படுகிறது. ஆனால்,   சிங்கப்பூரில்  பறவைக்காவடி  தடை செய்யப்பட்டிருப்பதாக அறிந்தேன்.    மனிதன்  தன்னைத்தானே    வருத்துவதை    நகரீக  உலகம்    ஏற்றுக்கொள்ளாது .  ஆனால் –  காலம்    காலமாக  நீடிக்கும் மத  நம்பிக்கையை    தடுப்பதற்கு  சில  நாடுகளின்    அரசுகள் முன்வருவதற்கு   தயக்கம்  காட்டுகின்றன.

ஒரு    காலகட்டத்தில்  சோவியத்தில்  ஆடிப்பாடிக்கொண்டு  வீதி வழியாக    வந்த  ஹரே  ராமா  ஹரே    கிருஷ்ணா   பக்தர்களை பொலிசார்    தடுத்து  நிறுத்தியதாக  தகவல்  வெளியாகியிருக்கிறது. மலேசியாவில்   பறவைக்காவடிகளுக்கு  தடை   இல்லை.   இலங்கை இந்தியாவிலும்   இந்தக்காட்சியை    காணலாம்.   அங்கு  பூ   மிதிப்பு என்ற    பெயரில்  தீமிதிப்பு  திருவிழாக்களுக்கும்  குறைவில்லை. இந்தத்தொடர் பத்தியில்    நீங்கள்  காண்பது  மலேசிய  பறவைக்காவடி காட்சிகள்தான்.

இலங்கை    புறப்படுவதற்கு  முதல்  நாள்  மாலை    சந்திப்புக்கு வருகைதந்த    அன்பர்களுக்கு  இறுதியாக  கடந்த  (2014)   ஆண்டில் எமது    கல்வி    நிதியத்தின்  25    வருட    நிறைவு    வெள்ளிவிழாவை முன்னிட்டு    நாம்    தயாரித்து  காண்பித்த   நிதியத்தின்  தோற்றம் வளர்ச்சி – பணிகள்  தொடர்பாக  பதிவுசெய்த   வீடியோவை காண்பித்தேன்.

புதுக்குடியிருப்பு – விசுவமடு – உடையார்கட்டு முதலான   பிரதேசங்களில்   பெரிதும்  பாதிக்கப்பட்ட  தமது  தந்தைமாரை   இழந்த    குழந்தைகளின்  விண்ணப்பங்களையும்   காண்பித்தேன். அதுவரையில்   அந்தக்குழந்தைகளுக்கு  உதவும்  அன்பர்கள் தெரிவாகியிருக்கவில்லை.   இலங்கை    புறப்படுவதற்கு   சில நாட்களுக்கு    முன்னரே  அந்த  விண்ணப்பங்கள்  தபாலில் வந்துசேர்ந்தன.    இலங்கை    நிகழ்ச்சிகளை   ஒழுங்கு செய்வதிலும் அதற்கான    திகதிகளை    முற்கூட்டியே    தீர்மானிக்கும்  பணிகளில் அந்தச்   சில    நாட்கள்  கழிந்துவிட்டன.
சிங்கப்பூர்    அன்பர்களுக்கு  நிதியத்தின்  பணிகளை    விளக்கி  உதவும் அன்பர்களை  திரட்டிக்கொண்டு  இலங்கை    புறப்பட்டேன்.    எனது இலங்கைப்பயணங்களின்போது    நடத்தவிருக்கும்   நிகழ்ச்சிகளை திட்டமிட்டவாறு    நடத்தி  முடிக்க  இயலுமா    என்ற   பொதுவான கேள்வியை    சில  நிதிய  அன்பர்கள்  கேட்டிருந்தனர்.

இலங்கையில்   சில  பொது    விடயங்களில்  ஈடுபடும்பொழுது  ஏற்படும்    கால தாமதம்  பரகசியமானதே.   வரும்…  ஆனா… வராது… என்னும்    திரைப்பட  வசனத்துக்கு  ஒப்பான  நிலைமை    அங்கு நீடிப்பதும்   பரகசியமானதே.

அவுஸ்திரேலியாவை    விட்டு  புறப்படும்பொழுது  சில    நண்பர்கள் என்னிடம்    ஒரு    கோரிக்கையை    விடுத்திருந்தனர்.    அதாவது இரட்டைக்குடியுரிமை   பற்றி  இலங்கையில்  விசாரித்து தெரிவிக்கும்படி    சொல்லியிருந்தனர்.    இவ்வாறு  சொன்னவர்களில் சில   சிங்கள  நண்பர்களும்   அடக்கம்.

இலங்கையில்  நீடித்த  போரினால்  அதன்  பாதிப்புகளை காரணமாகச்சொல்லி    உலகெங்கும்  இலங்கைத்தமிழர்கள் மட்டுமல்ல,   ஏனைய  இனத்தவர்களும்  புலம்பெயர்ந்தனர். தமிழன்   இல்லாத  நாடுகள்  இல்லை.   ஆனால்    தமிழனுக்கென்று ஒரு    நாடும்  இல்லை.  என்ற  மில்லியன்   டொலர்  (?)   பெறுமதியான கூற்றை    இன்றும்  பலர்   மேடைகளில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். விடுதலைப்புலித்தலைவரின்    தோற்றத்தில்  இருப்பதனால் இலங்கையில்   வாழ  முடியாது  என்று  அகதி  அந்தஸ்து பெற்றவர்களும் –   அல்பிரட்  துரையப்பாவை    நான்தான்  கொன்றேன்    என  சந்தேகிக்கிறார்கள்  என்று  அகதி  அந்தஸ்துக்கு விண்ணப்பித்தவர்களும்    உலகெங்கும்   வாழ்கிறார்கள்.  போர்   நீடித்தால்தான்  நாடு கடத்த  மாட்டார்கள்  என்பதும்   போர் முடிந்து   சமாதானம்  வந்தால்  அனுப்பிவிடுவார்கள்  என்பதும்; புகலிடத்தில்    பேசுபொருளாக  இருந்த  காலத்தை    நாம்   கடந்து வந்தோம்.     இன்றும்  சில  ஐரோப்பிய  நாடுகளில்  வதியும்  தமிழ் மக்கள்    இலங்கைக்குசெல்ல  முடியாமல்,  இந்தியாவுக்கு  உறவுகளை    அழைத்து   சந்தித்து  திரும்பிக்கொண்டு   ஸ்கைப்பில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

எனக்குத்தெரிந்த    சில   இலக்கிய  நண்பர்கள்  தமது  பூர்வீக கிராமங்களை    தொலைத்துவிட்டு  அந்த  நாள்  கனவுகளுடன் வாழ்கின்றனர்.    அவர்களின்  துயரத்தை    அவர்களின்  எழுத்துக்களில் அறியும்பொழுது    மனது  பாரமாக  கனக்கின்றது.  கலங்கியிருக்கின்றேன்.

சில   இலக்கிய  நண்பர்களை    இலங்கை   –  அவுஸ்திரேலியா எழுத்தாளர்    ஒன்று கூடலுக்கு  அழைக்கும்பொழுது    அவர்களின் விசாப்பிரச்சினை    தெரியவருகிறது. அண்மையில்   பிரான்ஸில்  மறைந்த  படைப்பாளி    கி.பி. அரவிந்தன் உட்பட    மேலும்  சிலர்  தாயகத்தை  பல ஆண்டுகளாக பார்க்கவில்லை.    அந்த  வலி  கொடுமையானது. நண்பர்   கவிஞர்  வ.ஐ.ச. ஜெயபாலன்,  தமது  தாயின்  சமாதியில் அஞ்சலி    செலுத்திவிட்டு  அமைதியாக   திரும்பியிருந்தால்  அவரது பெயர்   இணையத்தில்  அடிபட்டிருக்காதுதான்.    அவருக்கு  நடந்த கசப்பான   அனுபவங்களைப்பார்த்தபின்னர்,   செல்லவிருந்த  பலர் தமது    எண்ணத்தை    மாற்றிக்கொண்டனர்.

ராஜபக்க்ஷ    அரசு  மாறினால்  செல்ல  முடியும்  என்று நம்பியிருந்தவர்களுக்கு   அண்மையில்  பிரான்ஸிலிருந்து  சென்ற பகீரதி    என்ற  பெண்ணுக்கு  நேர்ந்த  அனுபவத்தின்    பின்னர்  அந்த நம்பிக்கையும்   போய்விட்டது.    இந்நிலையில்    பிரிட்டனுக்கு அண்மையில்    விஜயம்  செய்து  திரும்பிய  தற்பேதைய  அதிபர் “எவரும்  வரலாம் ”   என்று  நம்பிக்கை    ஊட்டுகின்றார்.    இந்த இலட்சணத்தில்    முன்னாள்  அதிபரின்  தம்பி  அமெரிக்காவில் தங்கியிருக்கிறார்.

தாயகம்   திரும்புவதில்  தமிழருக்கு  மட்டுமல்ல  பெரும்பான்மை இனத்தினருக்கும்    தயக்கம்  இருக்கிறது.   ஆனால் –  காரணங்கள்தான்    வேறு.   இந்நிலையில்  இந்த  இரட்டைக்குடியுரிமை விவகாரம்    வரும்….   ஆனா….. வராது …..என்பது  போல்  இழுபறியில் நீடித்தது.
மரணத்துள்   வாழ்தோம் –   மரணங்கள்  மலிந்த  பூமி  என்றெல்லாம் கவிதை   எழுதியவர்களுக்கும்  தாய்நாட்டை    பார்க்கவேண்டும்  என்ற  நியாயமான  ஏக்கம்  இருக்காதா…?  இன்று  இலங்கையில் உருவாக்கப்பட்டிருக்கும்    நல்லாட்சிக்கான  தேசிய  சபை   இதுபற்றி ஆழமாக   சிந்தித்து  நடவடிக்கை   எடுக்கவேண்டும்.

எனக்கு   இச்சந்தர்ப்பத்தில்  ஜெயகாந்தன்  பற்றிய  ஒரு    செய்தி நினைவுக்கு    வருகிறது.    மூத்த  பத்திரிகையாளர்  எஸ். எம். கார்மேகம்,  ஒரு தடவை    ஜெயகாந்தனை    சென்னை ஆழ்வார்பேட்டையில்    ஜெயகாந்தனின்  அலுவலகமாக  இயங்கிய  அந்த    மேல்மாடியில்  சந்தித்தபொழுது   இலங்கைக்கு   வருமாறு அழைப்புவிடுத்தார். உடனே  ஜெயகாந்தன், ”  நான்  எனது  எல்லைகளுக்கு  அப்பால் செல்ல    மாட்டேன் ”  என்றாராம்.    உடனே,   கார்மேகம்  எல்லை என்று   எதனைச்சொல்கிறீர்கள்.   இந்த  நான்கு  சுவர்  கட்டிடத்தையா அல்லது    சென்னையையா…? அல்லது    தமிழ்நாட்டையா…?    அல்லது இந்தியாவையா…? இந்தக்கேள்வியை    ஜெயகாந்தன்  எதிர்பார்த்திருக்கமாட்டார். உடனே    சுதாகரித்துக்கொண்டு, ”  மனிதன்  சுதந்திரமானவன். அவனுக்கு  எங்கு    செல்வதற்கும்  உரிமை    இருக்கிறது.   இந்த  விஸா  நடைமுறையில்லாத  உலகத்திற்காக  நான் காத்திருக்கின்றேன்.    அத்தகைய  ஒரு  உலகம்  உருவானதன்  பின்னர்  நான்  புறப்படுவேன்.”  என்றாராம்.ஆனால்  –  ஜெயகாந்தன்  அதன்  பின்னர்  சிங்கப்பூருக்கும் சோவியத்துக்கும்    அமெரிக்காவுக்கும்  சென்று    வந்தார்.   தமது அனுபவங்களையும்   பதிவுசெய்தார். ஆனால் –   இதுபற்றி  தற்பொழுது  ஜெயகாந்தனிடம் கேட்டால்,…  ” தான் கொட்டாவி    விடும்பொழுது  படத்தை எடுத்துவிட்டு , அதனைக்காண்பித்து  ஜே.கே.   எப்பொழுதும்  கொட்டாவி    விடுபவர் ”  என்று  எவரும்  சொன்னால்  அதற்கு நான் என்ன    செய்வது….?  என்று   பஞ்ச்  டயலக்  சொல்லலாம். எனினும்    ஜெயகாந்தனின்  சுதந்திரம்  என்ற  அந்தக்  கருத்து அர்த்தமுள்ளது.    ஆழமாக  சிந்திக்கவைப்பது.    பயங்கரவாதிகளும் போதை   வஸ்து  கடத்தல்காரர்களும்  இல்லாத  உலகெங்கும்  போர் இல்லாத  ஆக்கிரமிப்பு  அற்ற – ஏற்ற  தாழ்வற்ற  சமதர்ம  சமுதாயம் இருந்தால்   எல்லைகள்    பற்றிய  வரைபடம்  அவசியம் இல்லைத்தான். சமதர்மம்   இல்லாமல்  மற்ற  எல்லா    அநியாயங்களும் நீடிக்கும்பொழுது    தேசங்கள்  தம்மைத்தாம்  பாதுகாக்க  காலத்துக்குக் காலம்    குடிவரவு – குடியகல்வு  சட்டங்களை    மாற்றிக்கொண்டுதானே இருக்கும்.

சிங்கப்பூரிலிருந்து    இலங்கை    சென்று  நீர்கொழும்பு  வந்த பொழுது இரவு    ஒரு  மணியும்  கடந்துவிட்டது.   மடிக்கணனியில் மின்னஞ்சலைப்பார்த்தபொழுது    எனக்கு  நன்கு தெரிந்த  ஒரு சிங்களச்சகோதரி    அனுப்பியிருந்த  மின்னஞ்சலில்  விரைவில் இரட்டைக்குடியுரிமை    வழங்கவிருப்பதாக  செய்தி வெளியாகியிருப்பதாகவும்    இதுபற்றிய  தகவலை    தங்களுக்கு தருகிறேன்.    என்றும்  எழுதியிருந்தார்.

அந்தச்சகோதரி  நிதியமைச்சில்  முக்கியமான  பொறுப்பில்  இருப்பவர்.    அவர்  அவுஸ்திரேலியா  உட்பட  பல  நாடுகளுக்கும் வந்து    திரும்பியவர்.   எமது  குடும்பத்தில்  ஒருவர்.   அத்துடன்  சுனாமி காலத்தில்   அவுஸ்திரேலியாவிலிருந்து  எடுத்துச்சென்ற நிவாரணப்பொருட்களின்   கொள்கலனை    மீட்டு  எடுப்பதற்கு  அன்று பல    வழிகளிலும்  உதவியவர்.    அச்சமயம்  சந்திரிக்காவின் பதவிக்காலம். அவர்    தகவல்  தந்தால் குறித்த  செய்தியில்  உண்மை    இருக்கும் என   நம்பி  அவுஸ்திரேலியாவில்  வாழ்ந்தவாறு  இலங்கையில் இரட்டைக்குடியுரிமையை    எதிர்பார்த்து  காத்திருக்கும்  அன்பர்கள் சிலருக்கு    அந்த  மின்னஞ்சலை    அனுப்பினேன். என்ன    அண்ணா   வந்து  உடையும்  மாற்றாமல்  கம்பியூட்டருக்குள் போய்விட்டீர்களே ….? என்று  கவலைப்பட்டாள்  தங்கை. நான்   அப்போது  எனது  அவுஸ்திரேலியா  நேரத்தைச்சொன்னேன்.

 ”  எனக்கு    பொழுது  விடிந்துவிட்டது.”


 பயணியின் பார்வையில் (04) : புகலிடத்தமிழருக்கு  பிரபாகரன்  வாழ்ந்தும்  நன்மை   செய்தார்  மறைந்தும்  நன்மை    செய்தார்

                                                                                              
விழுதுவிட்டுகிளையெறிந்துவேர்கொண்டவாழ்வு
வேறுவேறாய்ப்பெயரஇருப்பிழந்தோர்
இப்போதுஎந்தக்காடோகரம்பையோ
முள்விளையும்பாலையோ
போக்கறியாவாழ்வின்பொறிதளத்தைநோக்கியோ
போகின்றார்அவரின்உளப்பொருமலைஆரறிவார்
  சு. வில்வரெத்தினம்

முருகபூபதிஇனி   இந்த  அண்ணன்  அதிகாலையே    எழுந்து  அட்டகாசம்தான் செய்யப்போகிறார்  என்ற  கவலையுடன்  என்னை   உபசரித்தாள் தங்கை. ஆமாம்… அதுதான்  உண்மை.    நான்   மீண்டும்  ஒரு  மாதம்  கழித்து அவுஸ்திரேலியா   திரும்பும்  வரையில்  நடந்ததும்  அதுதான்.  தினமும்  அதிகாலை   2.30  மணிக்கு  அலார்ம்  வைத்தது போன்று எனது   துயில்  களைந்தது.   அதுவே வழக்கமானது. அவுஸ்திரேலியாவும்    அண்டை    நாடுகள்  சிலவும்தான்  உலகில் முதலில்    விழித்துக்கொள்ளும்   தேசங்கள். உலகில்   முதலில்  விழித்துக்கொள்ளும்  தேசமாக  அவுஸ்திரேலியா இருப்பதனால்தானோ  228   வருட காலத்தில்   அபரிமிதமாக முன்னேறியிருக்கிறது   என்றும்  அடிக்கடி  நான் நினைத்துக்கொள்வதுண்டு. அகதி  அந்தஸ்து – தற்காலிக  வதிவிட  அனுமதி –  நிரந்தர குடியுரிமை என்றெல்லாம்   முன்பொரு  காலத்தில்  ஆழ்ந்து  யோசித்தவர்கள் இலங்கையில்  போர்    முடிந்த  பின்னர்  இரட்டைக்குடியுரிமை  பற்றி  ஆழ்ந்து    யோசிக்கிறார்கள்.  காலம்  எவ்வளவு  வேகமாக மாறிவிடுகிறது. இதிலும்  ஒரு  முரண்நகை    இருக்கிறது. முன்னர்    வெளிநாட்டில்  குடியுரிமை    பெறுவதற்கும்  பிரபாகரன் தேவைப்பட்டார்.    இன்று  பிரபாகரன்  இல்லாத  நாட்டில் இரட்டைக்குடியுரிமை தேவைப்படுகிறது.  எப்படியோ    இவை இரண்டுக்கும்    வேலுப்பிள்ளை    பிரபாகரன்    காரணமாக இருந்துவிட்டார்.  ஆனால் –  அவர்தான்  பாவம்.   அவர்  மறைவின்  பின்னர்  அவருக்கு அந்தியேட்டிக்கிரியை   நடத்தவும்  நினைவஞ்சலிக்கூட்டம்  நடத்தவும் இந்த    உலகில்  நாதியில்லாமல்  போய்விட்டது.   ஆனால் – நான் எனது    பங்கிற்கு  2009  ஆம்  ஆண்டு   மே மாதம்  முழுவதும்  வீட்டில் பிரபாகரனுக்காக    மட்டுமல்ல  முள்ளிவாய்க்காலில்  மறைந்த அனைத்து    உயிர்களுக்காகவும்  விளக்கேற்றி –  மெழுகுவர்த்தி கொளுத்தி    அஞ்சலி  செலுத்தினேன்.  இது  சத்தியம்.

பின்னர்  2010  ஜனவரியில்    இலங்கை    சென்று    போரில் பாதிக்கப்பட்டவர்களை    குறிப்பாக  குழந்தைகளையும்  அவர்களின் விதவைத்தாய்மார்களையும்    சந்தித்தேன்.  அவர்களை   சந்திக்க சந்தர்ப்பம்    கிடைத்ததும்,  போர்   முடிந்ததால்  கிட்டிய  பாக்கியம்தான். அதன்பிறகு   வருடம்தோறும்  அவர்களை பார்க்கச்சென்றுகொண்டிருக்கின்றேன்.

எனக்கும்  இரட்டைக்குடியுரிமை  இருந்தால்  இந்தப்பணிக்கு  மேலும் உதவியாக   இருக்கும்  எனவும்  கருதுகின்றேன்.    அவ்வாறு சொல்வதற்கும்  காரணம்  இருக்கிறது.   தற்பொழுது  இலங்கை செல்லும்    வெளிநாட்டினர் –  வெளிநாட்டில்  குடியுரிமை   பெற்றவர்கள்    அனைவரும்  விஸாவுக்கு  விண்ணப்பிக்கவேண்டும். ஒரு  மாத  காலம்  விஸா.   அவுஸ்திரேலியர்களுக்கு  அதற்கான கட்டணம்  38   அவுஸ்திரேலியன்    வெள்ளிகள்  நாற்பது  சதம்.    ஒரு மாதகாலம்    முடிவதற்குள்  திரும்பிவிடவேண்டும்.   மேலும்  சில நாட்கள்    நிற்பதாயின் –  கொழும்பு  புஞ்சிபொரளையில்  அமைந்துள்ள இலங்கையின்    குடிவரவு -குடியகல்வு    திணைக்களம்  சென்று  ஒரு படிவம்  நிரப்பி  கடவுச்சீட்டுக்கு  வழங்கும்  இரண்டு    படத்துடன் கட்டணம்    செலுத்தி  விஸாவை   புதுப்பிக்க வேண்டும்.   ஒரு வாரத்திற்கும்   அதுதான்  கட்டணம்  ஒரு  மாதத்திற்கும்  அதுதான் கட்டணம்.

மேலதிக    நாட்கள்  (Over stay)   நின்றுவிட்டு  கட்டுநாயக்கா   விமான நிலையம்    வந்தால்  அந்தக்கட்டணத்தை  செலுத்தாமல்  மீண்டும் விமானம்  ஏற  முடியாது.

இனிச்சொல்லுங்கள்….

இலங்கைத்  தாயகம்  என்போன்ற    வெளிநாட்டுக்குடியுரிமை பெற்றவர்களுக்கு  இரவல்  தாய்நாடுதானே.   இந்தத் தலைப்பில் ஈழத்தின்  மூத்த  படைப்பாளி  ( அமரர் )  செ. யோகநாதன்  ஒரு நாவலும்    எழுதியிருக்கிறார். கடந்த   வருடம்  இறுதியில்  அவுஸ்திரேலியாவுக்கு  வருகை   தந்த கம்பன்  கழகம்  ஸ்தாபகர்  கம்பவாரிதி   ஒரு  சொற்பொழிவில் சொன்ன  சுவாரஸ்யமான  தகவல்  நினைவுக்கு  வருகிறது. அவர்   வெள்ளவத்தையில்  தெருவால்  செல்லும்பொழுது  எதிர்ப்பட்ட ஒரு    பெரியவர்  தன்னிடம்  வந்து ”  இன்று  நான்   மிகவும் மகிழ்ச்சியாக  இருக்கிறேன்  அய்யா… ஏன்  தெரியுமா…? எனது மகனுக்கு   வெளிநாட்டில்  அகதி  அந்தஸ்து  கிடைத்துவிட்டதாம். இன்றுதான்    கோல்  எடுத்துச்சொன்னான் ”  என்று  உள்ளம் பூரிக்கச்சொன்னாராம் .கம்பவாரிதி  ஜெயராஜ்  நினைத்தாராம்  கிடைத்திருப்பது  அகதி  என்ற அடையாளம். அதனை   ஒரு  அந்தஸ்தாகவே  இந்தப் பெரியவர் சொல்கிறாரே… இதனை   கம்பவாரிதி  அன்று  மேடையில்  சொன்னபொழுது  நான் இப்படி   யோசித்தேன்.   அந்தப்பெரியவரின்  மகன்  ஒரு  நாளைக்கு நிரந்தர    வதிவிட  அனுமதி  அல்லது  குடியுரிமை   எப்போது கிடைக்கும்   என  யோசிப்பான்.    கிடைத்து  சில  வருடங்களில்  இனி எப்பொழுது    இரட்டைக்குடியுரிமை    கிடைக்கும்  என  யோசிப்பான். யோசிப்பதற்கா  எதுவும்  இல்லை. தாய்,   தாய்மொழி,   தாயகம்  இவற்றை  எந்த  ஒரு  மனிதனாலும் மறக்க    முடியாது.    சொர்க்கமே  என்றாலும்  அது  நம்நாட்டைப்போல வருமா…?    என்ற  பாடல்  அர்த்தமுள்ளதுதான்.

பிரேமதாசா   காலத்தில்  யாழ்ப்பாணத்தில்  மலக்குண்டு  பொழிந்தது இராணுவம்.    அவர்களின்  மலம்  எங்கள்  தலையில்  விழுந்தது. அத்தகைய   நாட்டுக்கு  நான்    திரும்பிச்  செல்ல  வேண்டுமா…?  என்று எனது    இலக்கிய  நண்பர்  ஜே.கே. ஜெயக்குமாரன்   தமது  படைப்பில் எழுதியிருந்தார்.   அவரது  கோபம்  நியாயமானது.   அவருக்கு  நான் பின்வரும்    பதிலை    எழுதியிருக்கின்றேன்.  மண்ணை   விட்டுச்செல்ல   விரும்பாதவர்கள்.    அந்த   வேரைப்பிடுங்கி  எறிந்துவிட்டு    வெளியேறினால்    மரம்போன்று    பட்டுப்போய்விடுமோ  என்று   அஞ்சுபவர்கள்.   அவர்களுக்காக  சிறு  துரும்பையாவது   அசைப்பதற்கு தனது  தாயகத்தை    ஜே.கே. வெறுக்காதிருத்தல் வேண்டும்  என்பது   அடியேனின்   தாழ்மையான   வேண்டுகோள்.

ராஜபக்க்ஷ    காலத்திலிருந்து  இந்த  இரட்டைக்குடியுரிமை   விவகாரம் தொடர்ச்சியாக  இணையத்தளங்களில் –  ஊடகங்களில்  பேசப்பட்டது. அதனை    வழங்கும்  தீர்மானம்  கோத்தபாயவிடம்  இருப்பதாகவும் சொல்லப்பட்டது.    தற்பொழுது  அதே  கோத்தபாயவுக்கு  வெளிநாடு செல்லத்தடை    என்றும்  அதே   இணையங்கள்  எழுதுகின்றன.   அவர் அமெரிக்காவில்   இரட்டைக்குடியுரிமை  வைத்திருந்தாலும்  அதுதான்    நிலைமை.   விமல்   வீரவன்சவின்  மனைவி  ஒன்றுக்கு மேற்பட்ட   கடவுச்சீட்டும் –  இராஜ தந்திரிகளுக்குரிய  விசேட கடவுச்சீட்டும்   வைத்திருந்து  கைதாகி  பின்னர்  பிணையில்  செல்ல அனுமதிக்கப்பட்ட    செய்திகளையும்  இணையத்தில்  பார்க்கின்றோம்.
இந்த   இரட்டைக்குடியுரிமை   இலகுவாக  கிடைக்கவிருந்த  ஒரு நல்ல  சந்தர்ப்பத்தை    நானும்  ஆறு  வருடங்களுக்கு  முன்னர் இழந்திருக்கின்றேன்.   அந்தச்சந்தர்ப்பம்   போர்  முடிவடைவதற்கு  சில மாதங்களுக்கு    முன்னர்  வந்தது.   எனது  மனைவி    அதற்கு விண்ணப்பித்து   அந்த  ஆண்டு  கிடைத்தது.   அதற்காக  மனைவி  பல   ஆவணங்களை    சமர்ப்பித்திருந்தாள்.   எனது  பெயரையும்  அதில் இணைக்க   விரும்பினாள்.  நான்  அசட்டையாக  இருந்தேன்.   போர் முடியாத    தேசத்தின்  இரட்டைக்குடியுரிமை  எதற்கு…? என்று அலட்சியம்    செய்தேன்.  ஆனால்,  சரியாக  ஒரு  மாத  காலத்துள் போர்    முடிவுக்கு  வந்தது. 

பாதிக்கப்பட்ட  மக்களின்  வாழ்வாதாரத்துக்கான  போர்  தொடங்கியது. அதற்கு  முன்னர்  ஒரு  சந்தர்ப்பம்  2005   இல்   வந்தது. 2004 இறுதியில்    நிகழ்ந்த  சுனாமி  கடற்கோள்  அநர்த்தத்தின்  பின்னர் இரண்டு    கொள்கலன்களில்  நிவாரணப்பொருட்கள்  எடுத்துச்சென்ற காலம்.    பணிகள்  முடிய  ஒரு  மாதத்திற்கும்   மேல்  கால  அவகாசம் தேவைப்பட்டது.    கடவுச்சீட்டை    எடுத்துக்கொண்டு  அச்சமயம் பம்பலப்பிட்டியில்   இருந்த  குடிவரவு – குடியகல்வு  திணைக்களம் சென்று  படிவம்   பூர்த்தி  செய்துவிட்டு  வரிசையில்  நிற்கின்றேன். எதிர்பாராதவிதமாக  எனக்கு  நன்கு  தெரிந்த  ஒரு  நண்பர்  அங்கு வந்தார்.    அவர்  அப்பொழுது  ஒரு  அமைச்சரின்  மக்கள்  தொடர்பாளர்.    என்னைக்கண்டுவிட்டு  என்னை    உடனடியாகவே  ஒரு அறைக்குள்    அழைத்துச்சென்று  ஒரு  அதிகாரியை அறிமுகப்படுத்தினார் .  அவர்  ஒரு  பிரதி  ஆணையாளர்.   அவரும் ஆசனம்    தந்து  இன்முகத்துடன்  உரையாற்றினார்.   எனது  நண்பரும் என்னை  பத்திரிகையாளன்,   எழுத்தாளன்  இரண்டு  முறை   சாகித்திய விருது    பெற்றவன்  என்றெல்லாம்  எனது  அனுமதியில்லாமலேயே சொல்லத்தொடங்கிவிட்டார். உடனே   அந்த  அதிகாரி ” ஏன்  இப்படி  மேலதிகமாக  நிற்பதற்கு அனுமதி   கேட்டு  வீணாக  அலைகிறீர்கள்….? உடனே இரட்டைக்குடியுரிமைக்கு  விண்ணப்பியுங்கள்.”  என்று  ஆலோசனை சொன்னார்.

மனைவி   உடன்  வரவில்லை.   அவுஸ்திரேலியா  சென்று மனைவியுடன்    ஆலோசித்துவிட்டு  ஆவன  செய்கின்றேன்  என்றேன்.    என்னை    மேலும்   காத்திருக்கச்செய்யாமல்  எனக்கு மேலதிகமாக   ஒரு  மாதம்  நிற்பதற்கு  விஸா   அனுமதியை வழங்கினார். அவுஸ்திரேலியா    திரும்பியதும்  இந்தத் தகவலை மனைவிக்குச்சொன்னேன்.    மனைவி    உஷாரடைந்தாள்.  அவள் எதிர்பார்த்தது    கிடைத்தது. என்னிடம்    அதனைக்காண்பித்தபொழுது ”  வழிகாட்டி  மரங்கள் நகர்வதில்லை ”  என்று   பஞ்ச்  டயலக்தான்  என்னால்    உதிர்க்க முடிந்தது. வரும்… ஆனா… வராது…  என்று  எங்களையெல்லாம்  இந்த இரட்டைக்குடியுரிமை    விவகாரம்  பாடாய்படுத்துகிறது.   எதற்கும் நேரில்    சென்று  விசாரித்து  வருவோம்  என்று  எண்ணி  ஒருநாள் வேளைக்கே   கொழும்பு  புறப்பட்டேன். புஞ்சிபொரளைக்குச்சென்று    குடிவரவு – குடியகல்வு  திணைக்களத்தின் படிகளில்   ஏறினேன்.  அப்பப்பா… என்ன  கூட்டம்.   மனிதர்களுடன் உராயாமல்  நகர  முடியாது.  லிஃப்ட்டில்  மக்கள்  முண்டியடித்து ஏறினார்கள்.    இவ்வேளையில்  புகலிடம்  பெற்ற  நாட்டுக்கும் தயாகத்துக்கும்    இடையே    நீடிக்கும்  ஒற்றுமை    வேற்றுமைகளை மனம்    அசைபோடுவது  தவிர்க்கமுடியாதுதான். என்ன    இருந்தாலும்  எங்கள்  தாய்நாடு.   இன்னும்  வளர்முகநாடு. வளரவேண்டும்.    நிருவாகக்கட்டமைப்பும்  மாறவேண்டும்.   ஆனால் அந்தத்திணைக்களத்தை   நம்பி  பலர்  வெளியே  வாழ்கின்றனர். திணைக்களத்தினுள்    பெற்றுக்கொள்ள  வேண்டிய  படிவங்களை விற்பனை    செய்து  வருவாய்  தேடுகின்றனர்.  சிலர்  இலகுவாக கடவுச்சீட்டுக்களை    பெற்றுக்கொள்ளும்  உபாயங்கள் தெரிந்துவைத்திருக்கின்றனர். பணம்   இருந்தால் யாவும் சாத்தியம். கண்ணதாசன்   பாடல் நினைவுக்கு வருகிறது.

புத்தியுள்ள  மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.
வெற்றிபெற்ற    மனிதரெல்லாம்  புத்திசாலியில்லை.

ஒருவாறு    மாடிகளில்   ஏறி  வெளிநாட்டுப்பிரஜைகள் பிரிவுக்குச்சென்றேன்.   அங்கும்  காத்திருப்பு.  எனது  முறை   வந்ததும் ஒரு    அலுவலரிடம்  இரட்டைக்குடியுரிமை  பற்றிக்கேட்டேன்.   அவர் என்னை   ஏற  இறங்கப்பார்த்துவிட்டு  பவ்வியமாக  பதில்  தந்தார். ” உங்களைப்போல்     வெளிநாட்டுக்குச்சென்ற  பல இலங்கையர்கள் இங்கு    வரும்பொழுது  சிறிது  காலமாக  இந்தக்கேள்வியைத்தான் கேட்கின்றனர்.    பத்திரிகைகள்   மற்றும்  இணைய ஊடகங்களிலெல்லாம்  செய்தி  வருவது  எமக்கும்  தெரியும். பாராளுமன்றத்தில்   பேசினார்கள்  என்றெல்லாம்  செய்திகள்  வந்தன.    ஆனால்… இன்னும்   அரச   வர்த்தமானியில்   (Gazette)  வெளியாகவில்லை.    வந்தபின்னர்  எமது  இணையத்தளம்  பார்த்து நீங்கள்   Download   செய்து   விண்ணப்பத்தை  பூர்த்தி  செய்து சமர்ப்பிக்கலாம்.    அதுவரையில்  பொறுத்திருங்கள். ”  என்றார்   அந்த அலுவலர். அவர்    தந்த  செய்தியை  வீடு   திரும்பியதும்  எனது  நண்பர்களுக்கு மின்னஞ்சலில்   பரவவிட்டேன்.  அதன்  பிறகும்  சில  நாட்கள் வரும்….ஆனா…வராது…. பல்லவிதான். இந்தப்பத்தியை    எழுதிக்கொண்டிருக்கும்பொழுது இரட்டைக்குடியுரிமைக்கு    விண்ணப்பிக்கலாம் –  அதற்கான நிபந்தனைகள்    என்று  ஒரு  செய்தி  வருகிறது.  அதன் பிறகு  அரசு இரட்டைக் குடியுரிமையை    வழங்கத்தயாராகிவிட்டது.  இதுதான் அதற்கான   கட்டணம்  என்ற  செய்தி  வருகிறது. வரும்…. ஆனா… வந்துவிட்டது ….என்று  இனியாவது  நாம் ஆறுதல்கொள்வோமா….?

 [தொடரும்]

letchumananm@gmail.com