மரங்கொத்திப் புத்தகங்கள்

அவுஸ்திரேலிய பத்திரிகையான த ஏஜ் (The Age) வார இதழ்  கலைப் பகுதியில் சினிமா மற்றும் புத்தகங்களின் விமர்சனங்கள் இடம்பெறும். அந்தப் பகுதியில் ஒவ்வொரு வாரமும் அதிக விற்பனையில் உள்ள புத்தகத்தின் பெயர் இடம் பெறும். கடந்த இரண்டு வருடங்களாக அவுஸ்திரேலியாவில் அதிக தொகையில் விற்பனையான புத்தகங்களின்  பட்டியலில் முதல் மூன்று இடத்தையும் பெற்றபடி இருந்தது சுவீடிஸ் மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி மாற்றப்பட்ட மூன்று நாவல்கள்;. இந்த மூன்று நாவல்களும் ஒருவரால் எழுதப்பட்டது. வெளிநாட்டு புத்தக வரிசையில் அமெரிக்க அல்லது பிரித்தானிய புத்தகங்கள் மட்டுமே நான் அறிந்தவரையில் கடந்த 20 வருடங்களும் அவுஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையாகின்றன. வேறு மொழியில் வந்த நாவல் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் முன்னணியில் இருப்பது  ஒரு புதுமையான விடயம்.

The Girl with the Dragon Tattoo
The Girl who played with fire
The Girl who  kicked  the hornets’ nest
BY STIEG LARSSON

வாசிப்பதற்கு ஆவல் கொண்டு வாங்க நினைத்துவிட்டு  இந்த நிலையில் இந்த மூன்று புத்தகங்களின் கனதியையும் விலையையம் பார்த்து பின்பு சிறிது யோசிப்பேன். வாங்கினால் வாசிப்பேனா அல்லது இடையில் விக்கிரம் சேத்தின் சூட்டபிள் போய் (( Vikram Seth-A Suitable Boy) அரைவாசியில் விட்டது போல் இவற்றையும் இடையில் நிறுத்திவிடுவேனோ என நினைத்துப் பார்ப்பேன். ஓவ்வொரு புத்தகமும் சராசரி 550 பக்கங்களுக்கு மேல் உள்ளவை. புத்தகக் கடைகளில் எட்டிப் பார்த்துவிட்டு விலகிச் செல்வேன். பின்பு மூன்று நாவல்களும்  நியூஸ் பிரிண்டில் மலிவு விலையில் ஒன்றாக வந்தபோது  சிறிது கவரப்பட்டாலும் நேரமின்மையால் சுவிஸ் சொக்கிலேட்டை பார்த்து விலகிச் செல்லும் நீரிழிவு வியாதிக்காரர் போல் விலகினேன்.

கடந்த வருடம் தொழில் முறை மாநாடு நிமித்தம் ஜெனிவா செல்லக் கிடைத்த சந்தர்ப்பத்தை  ஐரோப்பிய விடுமுறையாக மாற்றியபோது பயணத் துணையாக இருக்கட்டும் என மெல்பன் விமான நிலையத்தில் உள்ள புத்தக சாலையில் வாங்குவதற்கு கையை வைத்த போது முதல் நாவலில்  சினிமாவாக எடுக்;கப்பட்டதாக  எழுதி இருந்தது. வாசிக்கத் தொடங்கியபின் கீழே வைக்க முடியவில்லை. இளம் வயதில் இருந்த போது மட்டுமே இரவு நேரத்தில் தொடர்ச்சியாக விடியும் வரை வாசிப்பது வழக்கம். அதன் பின் பல்கலைக் கழகம் வேலை அத்துடன்  தொலைக்காட்சி என்பவற்றால் அதிக நேரம் தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் விடை பெற்றுக்கொண்டது. முப்பது வருடங்களுக்குப் பின் இரவுகள் விழித்திருந்து அதிகாலை வரை வாசித்தவை இந்த நாவல்கள்தான்.

பாரிஸ் இலண்டன்  என விமானத்திலும் பின்பு யூரோ இரயிலில் பயணம் செய்த  போது வாசிப்பதற்கு நேரம் இலகுவாக இருந்தது. கடந்த வருடத்தில் இலங்கைக்கு இரண்டு முறை சென்ற பயணத்தில் மற்ற இரண்டு நாவல்களையும்; வாசித்து முடித்தேன். இந்த மூன்று நாவல்களும் என்; மனதில் மிக ஆழமாக பதிந்து அந்தக் கதாபாத்திரங்கள் உயிரோட்டமாக மனதில் உலாவின.  பாத்திரங்கள் உறவினர் நண்பர்கள் போல் நினைவில் வந்து போனார்கள். அந்தப்பாத்திரங்கள் என்கரம்பற்றி சுவீடனின் பல நகரங்களில் உள்ள தெருக்கள் வழியே என்னை அழைத்து சென்றன. அங்குள்ள வீடுகளிலும்  கோடைகால கபின் என்னும் விடுமுறை இல்லங்களிலும் வாழ்ந்தது போன்ற அனுபவம் ஏற்பட்டது.

தற்கால சமூகத்தில் சாதாரணமாக காணும் பாத்திர படைப்புக்கு அப்பால் நிகழ் காலத்தில் பத்திரிகை மற்றும் மகசீன்  நடத்துவது சம்பந்தமாக மிகவும் ஆழமாக விவரிக்கப்பட்டிருந்தது. இதில் பத்திரிகையாளராக எப்படி சில ‘டொக்கியூமென்ற்’களை எடுப்பது இதன் மூலம்  குற்றம் செய்தவர் தப்பித்துப் போக இருந்தவரை மீண்டும் மாட்டவும் குற்றமற்றவரை   தப்பவும்வைக்க பத்திரிகையாளரால்முடியம் என்பதை எனது சொந்த அனுபவத்தில் பார்த்ததால் இந்த நாவல் என்னை மிகவும் கவர்ந்தது. சில ஆண்டுகளிற்கு முன்பு மெல்பனில் கோயில் ஒன்றை நடத்தியவர்கள் கோயிலின் கணக்கு விபரம் இருந்த அறையை எரித்து விட்டு கோயில் புரோகிதரை அந்த நேரத்தில் அவரது ‘பாஸ்போட்’டை எரிக்கச் சொல்லி விட்டு (பாஸ்போட்டை எரித்தால் அகதி அந்தஸ்த்து கிடைக்கும் என ஆசையை துண்டி) அவரை மாட்டி விட்டார்கள். இந்த விடயத்தில் நான் ஆசிரியராக இருந்த உதயம் பத்திரிகையின் சிறிய அளவு ‘இன்வெஸ்ரிகேச’னால் புரோகிதர் வெளியேவர முடிந்தது. இதைவிட இந்த நாவலில் வரும் மாதாந்த பத்திரிகையான  மலினியம் வெளிவருவதை சுவிடிஸ் இரகசிய இராணுவ பொலிஸின் ஒரு பகுதியினர் தடைசெய்யமுயற்சிக்கின்றர். அவுஸ்திரேலியாவிலும் ஒரு குழுவினர் (நமது நாட்டைச் சேர்ந்தவர்கள்) இப்படியான முயற்சியில் இறங்கி இருந்தார்கள்.

சுவீடனைச் சேர்ந்த பத்திரிகையாளர் எழுதிய இந்த நாவல்கள் அவர் மரணித்த பின்புதான் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்த நாவல்கள் மூன்றும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பானவை. மத்திய வயதான பத்திரிகையாளர் செல்வந்த குடும்பத்தில் காணாமல் போன இளம் பெண்ணை  முப்பது வருடங்களுக்கு பின் தேடுவதற்கு அழைக்கப்;படுகிறார். அவருக்குத் துணையாக பன்னிரண்டு வயதில் ஒருவரை கொலை செய்ய முயற்சித்ததற்காக மனநல வைத்திய சாலையில் இருந்த இளம் பெண்  செல்கிறாள். இரண்டாவது நாவல் அந்தப் பெண்ணை கொலை செய்யத் திரியும் பாதாளக் குழு. மூன்றாவது அந்தப் பெண் அதில் இருந்து தப்புவதற்கு பத்திரிகையாளர் உதவுவது இது ஒரு ஆழமான இலக்கிய நாவல் வகை இல்லாத போதும் பத்திரிகைத்துறையை மிக ஆழமாக அலசும் வேளையில் தற்போதைய நிலையில் முக்கிய விடயமான கணினியில் திருடுவது(Computer Hacking)  ஐரோப்பாவில் முக்கியாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து இளம் பெண்களை விபசாரத்துக்கு கடத்துவது மற்றும் கொலை செய்வது இதைத் தவிர மேற்கு நாட்டு அரசாங்கங்கள் சோவியத் -அமெரிக்க பனிப்போரில் எப்படி தனிமனித சுதந்திரங்களை காலில் போட்டு மிதித்தார்கள் என்பதும் முக்கிய விடயங்களாக வருகின்றன. ‘இன்வெஸ்ரிகேற் ஜேர்னலிசம்’ என்பது என்னவென்று புரிய வைக்கிறது. இந்த நாவல்கள் பலகாலம் தீவிரமான  ஆராய்ச்சியின் பின்பு படைக்கப்பட்டுள்ளது.

இந்த நாவல்களை எப்படிப் படமெடுத்தார்கள் என்பதை அறிய முதல் இரண்டையும் குறும் வெட்டில் பார்த்தேன். சுவீடிஸ் மொழியில் எடுக்கப்பட்டு ஆங்கில மொழியில் ‘டப்’ பண்ணியது. நாவல்களின் நூற்றில் ஒரு மடங்கு கூட முதல் இரு படங்களில்  வாய்க்கவில்லை இறுதிப்படத்தை தியேட்டரில் பார்த்தபோது எனக்குப்பொச்சம் தீர்ந்தது.

விமர்சகர்கள் திறனாய்வாளர்கள் எந்த விதமான அலகுகளை வைத்து ஒரு படைப்பு நல்லது என தீர்மானிக்கிறார்களோ தெரியாது. நான் புத்தகங்களை மூன்று வகையாக பிரிப்பது வழக்கம். முதலாவது வாசிக்கவே முடியாத புத்தகங்கள். இரண்டாவது வாசிக்கும் போது தொடர்ச்சியாக வாசிக்கத்தூண்டும் புத்தகங்கள்.  ஆனால் வாசித்து முடிந்ததும் மறந்து விடும் தன்மைகொண்டவை. முன்றாவது வகையறாக்கள்,  வாசிக்கத் தூண்டுவதுடன்  வாசித்தபின் பலகாலம் நினைவாக இருப்பவை.  இந்த மூன்றாவது வகைப்  புத்தகங்கள் என்னைப்பொறுத்தவரை வாசிக்கும் போது மனதை மரங்கொத்தி பறவையின் அலகுகள் போல் நம்மைக் கோதி உணர்வு ரீதியில் ஒரு புதிய உலகத்;துக்கு எம்மை அழைத்துச் செல்கின்றன. அத்துடன் புத்தகத்தை படித்து மூடிய பின்னும் நிழல் போல் அதில் வரும் சம்பவங்களும் பாத்திரங்களும் தொடர்ந்து வந்தால் அதுவே சிறந்த படைப்பு எனச் சொல்லவைக்கும்.

uthayam@optusnet.com.au