முனைவர் சு.துரைக்குமரனை வாழ்த்துகிறோம்! ‘தமிழ் இணைய இதழ்கள்’ பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்!

முனைவர் சு.துரைக்குமரனை வாழ்த்துகிறோம்! 'தமிழ் இணைய இதழ்கள்' பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்!தமிழகத்திலிருந்து திரு.சு.துரைக்குமரன் அவர்கள் கடிதமெழுதியிருந்தார். அதில் ‘தமிழ் இணைய இதழ்கள்’ பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள செய்தியினை எம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் நல்லதொரு கவிஞர் கூட. பதிவுகள், திண்ணை போன்ற இணைய இதழ்கள் மற்றும் அச்சு ஊடக இதழ்களிலும் அவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் இணைய இதழ்கள், இணைய இதழ்களில் வெளிவந்த படைப்புகள் போன்றவற்றை மையமாக வைத்து மாணவர்கள் தங்கள் ஆய்வுகளை ஆற்றுவது கணித்தமிழுக்குக் கிடைத்த வெற்றியென்றே கூறவேண்டும். இச்சமயத்தில் இணையத்தில் வந்த எனது சிறுகதைகளை மையமாக வைத்து ஒருவர் M.Phil  பட்டப் படிப்புக்கான ஆய்வுக் கட்டுரையினைச் சமர்ப்பித்திருந்த விடயத்தை நினைவு கூருகின்றேன். இது வரவேற்கத்தக்க முயற்சி. திறனாய்வாளர்கள், ஆய்வாளர்களென்று அறியப்பட்ட பலர் தங்களுக்குக் கிடைக்கும் நூலுருப் பெற்ற ஒரு சில படைப்புகளை மையமாக வைத்தே ஆய்வுகள் செய்வார்கள். இவ்வகையான ஆய்வுகளோ , திறனாய்வுகளோ பூரணமானதல்ல. நூலுருப் பெறாத எத்தனையோ நூற்றுக்கணக்கில் படைப்புகள் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணைய இதழ்களில் சிதறிக்கிடக்கும்போது, தேடுவதற்குச் சோம்பல்பட்டு, கிடைக்கும் ஒரு சில நூல்களை மையமாக வைத்து, பூரணமான ஆய்வு, அல்லது திறனாய்வு என்னும் பாங்கில் அவர்கள் படைக்கும் ஆய்வுகளுக்கு மத்தியில் தமிழகப் பல்கலைக்கழகங்களில் இது போன்ற ஆய்வுகளை முன்னெடுக்கும் மாணவர்களும், அவர்களை ஊக்குவிக்கும் பேராசிரியர்களும் பாராட்டுதற்குரியவர்கள்.

‘இணைய இதழ்கள்’ பற்றி ஆய்வு செய்து முனைர் பட்டம் பெற்ற துரைக்குமரனின் ஆய்வானது கணித்தமிழின் ஓரங்கமான இணைய இதழ்களின் முக்கியத்துவத்தையும், பங்களிப்பினையும் வெளிப்படுத்தும். இணைய இதழ்களில் வெளிவரும் படைப்புகளை மையமாக வைத்து எதிர்காலத்தில் மேலும் பல ஆய்வுகளும், திறனாய்வுகளும் பெருகட்டுமென்றும் இத்தருணத்தில் பதிவுகள் வாழ்த்துகிறது.

தான் முனைவர் பெற்ற தகவலினை முனைவர் துரைக்குமரன் எம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்பகிர்தலை நாமும் எம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அத்துடன் மீண்டுமொருமுறை அவரை வாழ்த்துகின்றோம். அவரது கடிதம் கீழே:


‘அன்புள்ள பதிவுகள் இதழ் ஆசிரியருக்கு வணக்கம். தங்கள் இதழ் உட்பட “தமிழ் இணைய இதழ்கள்“ என்ற தலைப்பில் ஆய்வு செய்துவந்த நான் வாய்மொழித் தேர்வு முடிந்து முனைவர் பட்டம் பெற்றுவிட்டேன் என்பதனை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆய்வுக்கு உதவிய தங்களுக்கும் தங்கள் இதழுக்கும் பிற இதழ்களுக்கும் இதன் மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. ஆய்வுக்கட்டுரையினை விரைவில் அனுப்பி வைக்கிறேன். நன்றி.’