மெல்பனில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்திய இலக்கிய அரங்கு! அசோகனின் வைத்தியசாலை நாவல் வெளியீட்டில் முருகபூபதியின் உரை:

1_ashokanin_vaiththiyasalai.jpg - 10.28 Kbமுருகபூபதிஎழுத்தாளரும் சமூகப்பணியாளரும்   விலங்கு  மருத்துவருமான நடேசனின்   புதிய நாவல்   அசோகனின்   வைத்திய  சாலை – வண்ணாத்திக்குளம்   நாவலின்   சிங்கள   மொழிபெயர்ப்பு  சமணல வெவ  மற்றும்    உனையே   மயல் கொண்டு  நாவலின்  ஆங்கில மொழிபெயர்ப்பு Lost In You   ஆகிய   மூன்று   நூல்களினதும் விமர்சன  அரங்கு  அண்மையில்  (04-05-2014)  மெல்பனில்    இலங்கை சமூகங்களின்  கழகத்தின்   ஏற்பாட்டில்    அதன்   தலைவர்  திரு. பந்து திஸாநாயக்கா   அவர்களின்   தலைமையில்   நடந்தது. தமிழ்  சிங்கள முஸ்லிம்  மற்றும்   அவுஸ்திரேலியா   வெள்ளை இனத்தவர்களும்   கலந்து   சிறப்பித்த   இந்நிகழ்வில்   விக்ரோரியா மாநில   பாராளுமன்ற உறுப்பினர்கள்   ஜூட்  பெரேரா  –  லிஸ்பீட்டி – மூத்த  பத்திரிகையாளர்   மகிந்தபாலா  –  சிங்கள  எழுத்தாளர்  குருப்பு ஆங்கில   பத்தி  எழுத்தாளர் மொல்ரிஜ் –   எழுத்தாளர்  முருகபூபதி ஆகியோர்    உரையாற்றினர்.   நடேசன்   ஏற்புரை  வழங்கினார். நிகழ்வின்  இறுதியில்   கலந்துரையாடலும்  தேநீர் விருந்தும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்   எழுத்தாளர்  முருகபூபதி   நிகழ்த்திய   உரை: இன   நல்லிணக்கம்   குறித்து   பேசப்படும்  இக்காலத்தில்   இங்கு   நாம் அனைவரும்   ஒன்றுகூடியிருப்பது  மிக்க   மகிழ்ச்சியைத்தருகிறது. அதற்குக்காரணம்  –   இலங்கையை   பூர்வீகமாகக்கொண்ட  தமிழ்   சிங்கள  முஸ்லிம்    மற்றும்   பறங்கி   (  Burgher  )   சகோதர  இனத்தவர்களும்  அவுஸ்திரேலியா   அன்பர்களும்   இன்று   இங்கு   ஒன்று  கூடியிருக்கிறார்கள்.

இப்படியொரு   நிகழ்ச்சியை   இங்கு    நடத்தும்    இலங்கை   சமூகங்களின்   கழகத்திற்கும்   அதன்   ஸ்தாபகர்    நண்பர்    திரு. பந்து திஸாநாயக்கா  அவர்களுக்கும்      நன்றி   தெரிவிப்பதில்   மகிழ்ச்சியடைகின்றோம்.

மெல்பனில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்திய இலக்கிய அரங்கு! அசோகனின்  வைத்தியசாலை   நாவல்  வெளியீட்டில் முருகபூபதியின் உரை

இன்று   நடைபெறும்  நூல்   விமர்சன   அரங்கில்  நண்பர்  நடேசனின்   மூன்று   நூல்கள்    அறிமுகமாகின்றன.   மூன்று   மொழிகளில் வெளியாகின்றன.   நான்   அறிமுகப்படுத்திப்பேசவுள்ள   அசோகனின் வைத்தியசாலை    மாத்திரம்    இன்னமும்   சிங்கள   ஆங்கில  மொழிகளுக்கு  பெயர்க்கப்படவில்லை.    அதே  போன்று   உனையே மயல் கொண்டு  (Lost in you )   நாவலின்   சிங்கள  மொழிபெயர்ப்பும்   வெளியாகவில்லை.

அசோகன்   என்பவர்  யார்   என்பது   உங்கள்    அனைவருக்கும்   தெரியும்.    இந்தியாவில்   பல  நூறு  ஆண்டுகளுக்கு   முன்னர்   அரசாட்சி  செய்த மன்னன்.

நாடு  பிடிக்கும்  ஆசை   அலெக்ஸாண்டருக்கும்  நெப்போலியனுக்கும் ஹிட்லருக்கும்   இருந்தது  போன்றே    அசோகனுக்கும்   கலிங்கம்  என்ற நாட்டை பிடிக்கும்   ஆவல்   இருந்தது.    அந்த   மன்னன்  அந்தப்போரின்  வெற்றியை    மனதளவிலும்கூட   கொண்டாட   முடியாமல்  மக்களின்    உயிரிழப்பு    குறித்து   ஆழ்ந்த    கவலையடைந்து   புத்தமதத்தை    தழுவி   அன்பு மார்க்கத்தை  போதிக்க     முன்வந்ததுடன்    இலங்கைக்கு    தனது   மகள் சங்கமித்தையையும்   அரச   மரக்கிளையுடன்    அனுப்பிவைத்தார்.

அந்த   அசோகன்தான்   உலகிலேயே   முதலாவது   மிருகங்களுக்கான வைத்தியசாலையை    உருவாக்கிய    முன்னோடி. ந்த   ஒரு   விலங்கும்   பிராணியும்   நோயுற்றால்    அதற்கு  உரிய  சிகிச்சை அளித்து    காப்பாற்றவேண்டும்   என்ற   உயர்ந்த   நோக்கம்   அவர்   பின்பற்றிய    அன்பு   மார்க்கத்திலிருந்து   தோன்றியது.

விலங்குகளும்   மற்றும்   பிராணிகள்    உயிரினங்களும் மனிதர்களைப்போன்று   வாய்பேச    முடியாத   ஜீவன்கள்.  இந்தச்செய்தியை    நடேசன்   தனது   மூன்றாவது  நாவல்  அசோகனின் வைத்தியசாலையில்   மிகவும்    அழுத்தமாகப்  பதிவு   செய்கின்றார். இந்நாவல்   முதலில்   கனடாவிலிருந்து    வெளியாகும்    பதிவுகள்   இணைய  இதழில்   தொடராக  வெளியானது.   அந்தப்பதிவுகள்   இணைய  இதழின் ஆசிரியர்   கிரிதரன்    அவர்களுக்கும்   இச்சந்தர்ப்பத்தில்   எமது மகிழ்ச்சியையும்    பாராட்டுக்களையும்    நன்றியையும்   தெரிவிக்கின்றேன்.

இந்நாவல்   நூலுருவமாகும் பொழுதே   அதனை   ஒப்பு  (Proof  Reading) நோக்கியிருக்கின்றேன்.

நிறையப் பாத்திரங்கள்  இந்நாவலில்   வருகின்றன.   சுமார்   30   பாத்திரங்கள்    இருக்கலாம்.    ருஷ்ய   இலக்கியமேதை   லியோ   ரோல்ஸ்ரோயின் உலகப்புகழ்பெற்ற   போரும்   சமாதானமும்   நாவலில்    ஆயிரத்துக்கும் மேற்பட்ட   கதாபாத்திரங்கள்   வருகிறார்கள். அசோகனின்   வைத்தியசாலையில்   கொலிங்வூட்   என்ற   ஒரு    பூணையும் மிக    முக்கியமான   பாத்திரமாக    வருகிறது. நானூறு   பக்கங்கள்   கொண்ட    இந்நாவலை    எழுதி   முடிப்பதற்கு நடேசனுக்கு –  சுமார்  மூன்று   வருடகாலம்    எடுத்ததாகச்சொன்னார். இந்த   நாவலை   படிக்கும்  பொழுது   ஒரு   ஆங்கில   நாவலை   படிக்கும் உணர்வுதான்   எனக்கு   ஏற்பட்டது.   இந்த   நாவலை   முன்பு   பதிவுகளில் தொடர்ந்து    படிக்காத    ஒரு   வாசகன்    முழுநாவலாக    இவ்வாறு   நூல் வடிவத்தில்    முதல்   தடவையாக   படிக்க   நேர்ந்தால்   ஆங்கில    நாவலின் தமிழ்    மொழிபெயர்ப்புத்தான்    இந்நூல்   என்ற   முடிவுக்கும்   வரலாம்.

மெல்பனில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்திய இலக்கிய அரங்கு! அசோகனின்  வைத்தியசாலை   நாவல்  வெளியீட்டில் முருகபூபதியின்    உரை:

நான்    இதனைப்படித்தபொழுது   நடேசன்   ஆங்கிலத்தில்   சிந்தித்து ஆங்கிலத்தில்    கற்பனை    செய்து   தமிழில்    எழுதியிருக்கிறாரோ    என்றும் நினைத்தேன்.

சில    அத்தியாயங்கள்    தனித்தனி    சிறுகதைகளுக்கு   அல்லது குறுநாவலுக்குரியது    போன்ற   தோற்றத்தையும்    காண்பிக்கின்றன. குறிப்பாக  Sharan  என்ற     பாத்திரம்.  அவளது   கதை    வித்தியாசமானது.    அவள் சம்பந்தப்பட்ட   அத்தியாயங்களை    படித்தபொழுது   ஆங்கில     த்ரில்லர் படங்களை    பார்த்தது   போன்ற   உணர்வு   எனக்கு  ஏற்பட்டது.

அதுபோன்று   மற்றுமொரு   பாத்திரம்   பழைய   சாமான்கள்    பழைய வெற்று    மதுப்போத்தல்கள்    முதலானவற்றை   தனது  வீடு    நிரம்பவும் சேகரித்துவைத்து    இருந்து  –   அநாதரவாக    மரணிக்கும்    ஒரு   பாத்திரம்.

நடேசன்    இந்நாவலில்   எம்மை  –   நாம்    முன்னர்    பார்த்தறியாத உலகத்திற்கு    அழைத்துச்செல்கின்றார்.   தமிழில்   படைப்பு    இலக்கியத்திற்கு    இது   புதிய   வரவு.    புதிய    அறிமுகம்.    அதாவது    எம்மில் எத்தனைபேர்    மருத்துவமனைகளில்   இருக்கும்   சவ   அறைகள்   பற்றி  இலக்கியத்தில்    அறிமுகப்படுத்தியிருக்கின்றோம்.

இந்த   உலகில்   பிறந்த   அனைவருமே   ஒருநாள்   இறப்பது    நிச்சயம்தான். ஆனால் –   இறந்தபிறகு   என்ன    நடக்கும்  என்பதை  மற்றவர்களின் மரணச்சடங்கில்தான்   நாம்   பார்க்கின்றோம்.

விலங்குகள்   பிராணிகளின்   சவ அறை   எப்படி    இருக்கும்?  நடேசனின் நாவல்   அது   பற்றியும்   பேசுகிறது.    பதட்டத்துடனும்   அதிர்வுடனும்   அந்த    அத்தியாயங்களை    படித்தேன்.

முற்றிலும்   புதிய  களம்  இந்த   நாவலில்   விரிகிறது.    நாம் பார்க்கத்தவறிய  –  பார்க்கத்தயங்கும் –   பேசத்தயங்கும்  செயல்படுத்துவதற்கு   அஞ்சும்   பல   பக்கங்கள்    இந்நாவலில் திரைப்படக்காட்சிகளாக    வருகின்றன.

பல  பாத்திரங்கள்   வந்த பொழுதும்    ஒரே  ஒரு   தமிழ்ப்பாத்திரம்    சிவநாதன் சுந்தரம்பிள்ளை   மாத்திரம்தான்.    அவனது    மனைவி    பிள்ளைகள்   இந்நாவலில்   இரண்டாம்    பட்சம்தான்.

காலோஸ்  சேரம்   என்ற  மற்றும்   ஒரு   மிருகவைத்தியர்   மிகவும் சுவாரஸ்யமான    பாத்திரம்.    எனக்கு   அவர்    சம்பந்தப்பட்ட அத்தியாயங்களை   படித்தபொழுது   சமீபத்தில்   மறைந்த   இந்தியாவின் பிரபல   –  புகழ்பூத்த   பத்திரிகையாளர்    இலஸ்ரேட்டட்  வீக்கிலியின்  பிரதம ஆசிரியர்   குஷ்வந்   சிங்தான்    நினைவுக்கு   வந்தார்.

குஷ்வந்த் சிங்   மிகவும்   உற்சாகமான   சுவாரஸ்யமான  மனிதர்.   அவர் பாலியல்    விடயங்களையும்    வெளிப்படையாகவே    பேசுபவர்    எழுதுபவர். அதில்   அவரிடம்   ஒரு    நேர்மையும்    இருந்தது.   இந்நாவலின்   கார்லோஸ் சேரம்   பல   இடங்களில்    எம்மை    வாய்விட்டு   சிரிக்கவைக்கின்றார்.

இதற்கு   மேலும்   இந்நாவல்  பற்றி   நான்   பேசினால்   வாசிக்கப்போகும்  உங்களின்   ஆவலில்   நான்   குறுக்கிட்டவனாகிவிடுவேன். இறுதியாக  சில   கருத்துக்களையும்    சொல்லிவிடுகின்றேன்.

ஓடுவது    எப்படி   என்று  சொல்லிக்கொடுக்கும்   முடவன்தான்  விமர்சகன் என்று    ஒரு    ஆங்கிலப்பழமொழி   இருக்கிறது. முடவன்    ஓடமாட்டான்.    ஆனால்    எப்படி    ஓடவேண்டும்   என்று   இருந்த இடத்திலேயே    இருந்து    சொல்லிக்கொண்டிருப்பான். இலக்கிய    விமர்சனங்களும்  சில   சந்தர்ப்பங்களில்    அவ்வாறு    அமைந்து விடுவது   தவிர்க்க முடியாதது.

letchumananm@gmail.com