வானொலி ஊடகங்களின் நீட்சியும் நேயர்களின் வகிபாகமும்

எழில்வேந்தன்அண்மையில் எனது ஊடக நண்பர் ஒருவரின் நூல்வெளியீடொன்று மெல்பேனில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட இலக்கிய நண்பர் ஒருவர் “வானொலிகள் நகரவில்லை” என்ற குற்றச்சாட்டை வெளிப்படையாக மேடையில் தெரிவித்ததாக நண்பர்கள் கூறக்கேட்டேன். நகரவில்லையெனில் அது பக்க வாட்டிலா அல்லது மேல்நோக்கியா என அவரேதும் கூறினாரா என அவர்களிடம் நான்  பதிலுக்குக்  கேட்டேன். அண்மைக்காலமாக வானொலி ஊடகத்தைச் சாராத பல அன்பர்கள் பொத்தாம்பொதுவில் இவ்வாறான குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் முன்வைத்து வருகின்றனர். கடந்த சுமார் 4 தசாப்த காலமாக வானொலி மற்றும் தொலக்காட்சித் துறையில் ஈடுபட்டு வருகின்ற ஒருவன் என்ற ரீதியில் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் கூறவேண்டிய கடப்பாடு எனக்கு இருப்பதாக உணர்கிறேன். இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களின் அளவுகோல் எது என்ற கேள்வி என் முன்னே வந்து நிற்கின்றது. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தே இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுகின்றன என்ற ஓர் அடிப்படை உண்மையையும் நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. வானொலி தொடர்பான இந்தக் குற்றச்சாட்டுகள் எழுவதற்கான  பின்னணி என்ன என்பதை நாம் முதலில் பார்க்கவேண்டியுள்ளது.

புலம்பெயர்ந்த நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட வானொலிகளின் பின்னணிகள் எவையெனப் பார்க்கும்போது அடிப்படையில் அவற்றை ஆரம்பித்தவர்கள் இவற்றை ஒரு வர்த்தக முயற்சியாகவே ஆரம்பித்தனர் எனத் தெரிகிறது. பணம் பண்ணவேண்டும் அல்லது புகழடையவேண்டுமென்ற ஓர் ஆதார நோக்கையே கொண்டு ஆரம்பிக்கப்பட்டவையாக இந்த வானொலிகளை நான் காண்கிறேன். பலசரக்குகளை விற்கும்  பல்பொருள் அங்காடிக்கும் அல்லது ஸ்பைஸ் ஷொப்பிற்கும் வானொலி நிலையத்திற்குமிடையில் இவற்றை ஆரம்பித்தவர்கள் பெரிய வித்தியாசத்தைக்காண்பிப்பதாக எனக்குத் தெரியவில்லை. வானொலி தொடர்பான அரைகுறை அறிவுடையவர்கள் அல்லது பகுதிநேரமாக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டவர்கள் அல்லது வேறு இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு அவற்றின்மூலம் புகழடைய முடியாதவர்கள் என பலதரப்பட்டவர்கள் வானொலிகளை ஆரம்பித்து அல்லது அவற்றில் இணைந்து தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை வெளிக்காட்டும் சாதனமாக அவற்றைப் பயன்படுத்தினர், பயன்படுத்திவருகின்றனர்,  ஏன் வானொலியில் பிறந்தநாள் வாழ்த்து மரண அறிவித்தல் கொடுப்பதற்காக இலங்கை வானொலிப் படிகளை மிதித்தவர்கள்கூட பின்னர் இலங்கை வானொலி புகழ்.. இன்னார் எனக் கூச்சமின்றிக் கூறியே ஒலிபரப்பு நிலையங்களை ஆரம்பித்த சோகமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.  இன்று பல ஒலிபரப்பு நிலையங்கள் இவ்வாறு ஒலிபரப்புப் பயிற்சியற்றவர்களால் நடத்தப்படுவது கவலைக்குரியதே.

இப்படி சிறுதொழில் முயற்சிகளாக உருவான வானொலிகளை வைத்துக்கொண்டு வானொலி என்றால் இப்படித்தான் இருக்குமென்ற ஒரு கருதுகோளின் அடிப்படையில் வானொலிகள் முன்னோக்கி நகரவில்லையென குற்றஞ்சுமத்துவது ஏற்புடையதா என்ற கேள்வியை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

வானொலி  என்ற ஊடகம் அறிவூட்டல், தகவல் தருதல், களிப்பூட்டல் என்ற மூன்று அடிப்படை நோக்கங்களைக் கொண்டவை என்ற கருதுகோள் ஒரு காலத்தில் சொல்லப்பட்டது. உலகளாவிய சில வானொலிகள் இந்தப் பாரம்பரியக் கருதுகோள்களின் அடிப்படையிலேயே இன்றைக்கும் இயங்குகின்றன. ஆனால், இன்று வானொலி Infotainment என்ற தகவல்சார் களிப்பூட்டல் என்ற புதிய கருதுகோளுடன் இயங்கத்துவங்கியுள்ளது. அதுவே மக்களைப் பெரிதும் கவர்ந்துமுள்ளது. ஒருகாலத்தில் களிப்பூட்டலுக்காக பொது மகன் ஒருவன் வானொலியையே நம்பியிருந்த நிலை மாறி இன்று தொழில்நுட்ப வளர்ச்சிகாரணமாக உள்ளங்கையிலேயே ஓராயிரம் பொழுதுபோக்கு அம்சங்களைக் காவித்திரிகிற நிலையை நாம் எட்டிவிட்டோம். எனவே இன்று வெறுமனே பொழுதுபோக்கிற்காக வானொலியைச் செவிமடுக்கும் நிலையில் மக்கள் இல்லை. ஆனால், குறிப்பாக தமிழ் வானொலிகள் இன்றைக்கும் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தப்படுவது கவலைதருகிறது. அதுவும் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் டொலருக்கும் பவுன்சுக்கும் ஆலாய்ப் பறந்துகொண்டிருக்கும் இந்தச்சூழலில் எமது பெரும்பான்மையான வானொலிகளின் நேயர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்தால் குறிப்பாக அவர்கள் மூத்த பிரஜைகளாகவே உள்ளனர் என்ற உண்மைவெளிவருகிறது.  புலம்பெயர் தேசங்களில், வளர்ந்தவர்கள் பணந்தேடி ஓடிக்கொண்டே இருக்கவும், இளந்தலை முறையினர் தமிழைப் பேசவே தயங்குகின்ற ஒரு சூழலிலும் எங்களது நேயர்களில் பெரும்பான்மையானோர் மூத்த பிரஜைகளாகவே உள்ளனர் என்ற நிதர்சனத்தை நாங்கள் ஒதுக்கிவிட முடியாது. எனவே இந்த வானொலிகள் பெரும்பாலும் மூத்த பிரஜைகளை இலக்குவைத்து அவர்களை திருப்திப்படுத்தவும் மகிழ்ச்சிப்படுத்தவும் உரையாடவும்  தமது நிகழ்ச்சிகளை வடிவமைத்துக்கொள்கின்றன. யுத்த சூழ்நிலையால் புலம்பெயர்ந்து வாழும் மூத்த பிரஜைகள் சமூகத்தினர் தமது வீடு, சமூகம், அரசியல் ரீதியான அழுத்தங்களையும் உளைச்சல்களையும் தீர்க்கும்  வடிகால்களாக இந்த வானொலிகளைப் பயன்படுத்துவது வானொலிகளை ஒரு பழங்கால சூழ்நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது என்ற உண்மையை நாம் ஒத்துக்கொள்ளவே வேண்டியுள்ளது.

இதற்குமப்பால் எமது தமிழர்களுக்கேயுரிய போட்டி பொறாமைத் தன்மை காரணமாக போட்டி வானொலிகள் உருவாவதும் அதன் காரணமாக புகைச்சல்கள் ஏற்படுவதும் இவற்றின் விளைவாக ஒருவரை ஒருவர் எவ்வளவு தரக்குறைவாக வசைபாடமுடியுமோ அவ்வளவுக்கு வசைபாடுவதும் எல்லாநாடுகளிலும் தொடர்கின்றன. குறிப்பிட்டளவு தமிழ் மக்கள் வாழும் புலம்பெயர் தேசங்களில் தம்மைச் சந்தைப்படுத்த இந்த வானொலி நிலையங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அவர்களது நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்துவதில் காட்டப்படுவதில்லை என்ற கவலைக்குரிய செய்தியையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இந்தப் பின்னணியில் வைத்து வானொலி ஊடகம் நீட்சிபெற்றுள்ளதா என்ற கேள்வியை நாம் அலசவேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். உலகளாவிய ரீதியில் இலங்கைத் தமிழ் வானொலிகளுக்கும் அவற்றின் ஒலிபரப்பாளர்களுக்குமுள்ள மதிப்பும் மரியாதையும் இன்றும் தொடர்ந்தவண்ணமேயுள்ளன, உலகளாவிய ரீதியில்  – பீபீசீ தமிழ் சேவை உட்பட – பல தமிழ் வானொலிகளை ஆரம்பித்தவர்கள் இலங்கை ஒலிபரப்பாளர்களே. எனவே ஒப்பீட்டளவில் இலங்கை வானொலிகளை நாம் ஒரு தர நிர்ணயத்திற்கான சான்று மாதிரிகளாக வைத்துக்கொண்டு பார்த்தால் வானொலிகள் இன்று காலத்தின் போக்குக்கேற்ப மரபையும் அனுசரித்து நகர்ந்துகொண்டுள்ளன என்ற உண்மையை நான் இங்கு சொல்வேன். குறிப்பாக ஓராண்டுக்கு முன்னர்தான் நான் இந்த நாட்டுக்குப் புலம்பெயர்ந்தேன் . அதுவரை நான் வானொலியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். எனவே நான் சம்பந்தப்பட்ட சில வானொலி நிகழ்ச்சிகளின் அடிப்படையில் கவனித்த சில விஷயங்களை வைத்து எனது சில அவதானிப்புகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

தினமும் 2 மணிநேரம் பத்திரிகைச் செய்திகளின்மீதான கண்ணோட்ட நிகழ்ச்சி ஒலிபரப்பானபோது மக்கள் ஏனைய வர்த்தக ரீதியிலான, பொழுதுபோக்கான,  வானொலி நிகழ்ச்சிகளை ஒதுக்கிவிட்டு பத்திரிகைச் செய்திக் கண்ணோட்ட நிகழ்ச்சியைக் கேட்குமளவுக்கு சூழ்நிலை மாற்றமடைந்தது. சினிமாப்பாடல்களை ஒலிபரப்புவதோடு நின்றுவிடாமல் அந்தப் பாடல்களிலுள்ள கருத்துகள், சொற்கள், தகவல்கள், தமிழின் சிறப்புகளை கொண்டு வினாக்களை உருவாக்கி நேயர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டபோது அது பலத்த வரவேற்பைப் பெற்றது. விரும்பிக் கேட்கும் சினிமாப்பாடல்களை ஒலிபரப்புவதற்கு முன்னர் ஒலிபரப்ப அதற்குப் பொருத்தமான கவிதைகளை எழுதியனுப்பக்கேட்டபோது கவிதைகள் மலைபோல் குவிந்தன. சட்டத்தை மக்களுக்கு விளக்கும் நோக்குடன் ஒலிபரப்பப்பட்ட ‘நீதியின் பார்வையில்’ என்ற நிகழ்ச்சிக்கு விளம்பர அனுசரணையாளர்கள் தேடிவந்து நிதி உதவி செய்தனர். விவசாயத் தகவல்கள்  முகத்தார் வீடு என்ற நாடகமூலமும், மெல்லிசைப் பாடல்கள் மூலமும் மக்களிடம் எடுத்துச்செல்லப்பட்டன. மக்கள் அவற்றை ரசித்துக் கேட்டதுடன் பயனுமடைந்தார்கள். சிறுவர் நிகழ்ச்சிகளை சிறுவர்கள் மட்டுமன்றி முதியவர்களும் கேட்டுமகிழ்ந்தனர். சிறுதொழில் முயற்சியாளர்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு வெளிநாட்டு முகவர் நிறுவனமொன்று அனுசரணை வழங்கியது. இப்படி வானொலி, சமூகத்தின் சகல தரப்பினரையும் சகல வயதினரையும் அரவணைத்துக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளைப் படைத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை மக்கள் ரசித்துக்கொண்டுமுள்ளனர். 90 இன் நடுப்பகுதியில் இலங்கையில் பணம்படைத்த முதலாளிகள் தங்கள் மற்றுமொரு வர்த்தக முயற்சியாக ஆரம்பித்த தனியார் வானொலிகள்கூட இதன்போக்கையே பின்பற்றிச் செல்வதும் இங்கு குறிப்பிடத்தக்கதே. இவ்வாறு தமது சமூகத்தின் தேவைகளை அறிந்து அதன் வளர்ச்சிக்காக புதிய முயற்சிகளைப் படைக்கும் ஒலிபரப்பாளர்கள் இன்றும் நம் மத்தியில் இருக்கிறார்கள்.

ஆனால், வானொலிகளின் ஒலிபரப்பு 24 மணி நேரமாக விஸ்தரிக்கப்பட்டதுபோல எல்லா ஒலிபரப்பாளர்களின் அறிவு நிலையும் விஸ்தரிக்கப்படவில்லை என்பதே இன்று பலராலும் முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு. அதுமட்டுமன்றி அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் சினிமாப் பாடல்களும் சினிமாத் தகவல்களுமே. அவர்களது அதிகபட்ச வாசிப்பு தமிழக வாராந்தரிகளுடன் மட்டுப்பட்டுவிட்டது. எத்தனையோ பெயர்களுடன் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பானாலும் அத்தனையும் சினிமாப்பாடல்களே. சினிமாப்பாடல்களில்கூட மறைந்துகிடக்கும் நல்ல விஷயங்களைப் பிரித்துத்தர அவர்களுக்குத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் அவர்களை நோக்கி முன்வைக்கப்படுகின்றன. இது ஓரளவு உண்மைதான். உலகளாவிய ரீதியில் தற்போதைய தமிழ் வானொலிச்சூழல் கவலைதரும் ஒன்றாகவே மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை. வானொலிகள் தென் இந்தியத் திரை உலகப் பிரமுகங்களின் பிறந்தநாளை யார் சிறப்பாகக் கொண்டாடுவது என்பதில் போட்டி போட்டுக் கொண்டு செயலாற்றுகின்றன. அவை தென் இந்திய அல்லது இந்தியத் திரைத் தகவல் களஞ்சியங்களாக மாறிவிட்டன. மட்டுமன்றி தென்னிந்தியச் சஞ்சிகைகளின் வாசிப்பு அரங்காகவும் மாற்றம் பெற்றுவிட்டன. மொழி, உச்சரிப்பு, என்பவை தொடர்பான எவ்வித பிரஞ்ஞையுமின்றி, ஒலிபரப்பாளர்கள் தாம் நினைத்ததை நினைத்தபடி பேசிவிட்டுப் போகும் ஒரு நிலை தோன்றிவிட்டது.

ஓர் ஒலிபரப்பாளர் ஒரு பெண் நேயரிடம் “உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?” எனக்கேட்கிறார். நேயரும் “ஒரு பிள்ளை. ஒரே மகன்” என்கிறார். ஒலிபரப்பாளரின் அடுத்த கேள்வி “ உங்களுக்குத் திருமணமாகி விட்டதா?” . கர்ணனின் தாயார் குந்திதேவியுடனா இந்த அறிவிப்பாளர் உரையாடிக்கொண்டிருக்கிறார் என்று எனக்கோ பலத்த சந்தேகம்.. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்வேன்.

எழுவாய் பயனிலை இல்லாத வசனங்களும் பன்மையில் ஆரம்பித்து ஒருமையில் முடியும் வசனங்களும் தாராளமாகவே காற்றலை ஏறுகின்றன. ல, ள, ழ பேதங்கள் கிடையாது. ன, ண, ந வித்தியாசம் தெரியாது. ந் ‘, ‘ற்’ போன்ற எழுத்துக்கள் தமிழில் இருப்பதே சிலருக்குத் தெரியாது. இது இவ்வாறிருக்க குற்றியலுகர, இகரங்கள் பற்றியெல்லாம் இவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பது அதிகப்படி.

இலங்கை இனப் பிரச்சினை எமக்கு எத்தனையோ பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும் இன்று உலகெங்கும் நல்ல தமிழ் ஒலிக்கவும் வழி வகுத்துவிட்டது என்ற உண்மையை நாம் மறப்பதற்கில்லை. ஆனால் அவற்றை நடத்துபவர்கள் அல்லது பணியாற்றுகின்றவர்கள் வானொலிகளின் பண்பை அறியாதவர்களாக இருப்பதே கவலையளிக்கிறது. தமிழ் நாட்டு வானொலிகள் பற்றி நான் ஒன்றுமே கூறவரவில்லை . தமிழ் தொலைக்காட்சிகள்மீது சுமத்தப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் இவர்கள்மீதும் சுமத்தலாமா தெரியவில்லை.

நேயர்களின் பங்களிப்பு அல்லது நேயர்கள் விரும்பிக் கேட்கும் விஷயங்களை ஒலிபரப்பும் நிலைக்குச் சென்றுள்ள ஒலிபரப்பாளர்கள் தங்களின் நிகழ்ச்சியின் தரம்பற்றி அக்கறை கொள்கின்றனரா? இதுதான் இன்று எம்மத்தியில் தொக்கிநிற்கும் ஒருபெரும் கேள்வி. இந்த விஷயத்தில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவது தவிர்க்கமுடியாததொன்றாகிவிடுகிறது. தங்களது நேயர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பும் சில ஒலிபரப்பாளர்கள் நேயர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப செயற்பட வேண்டிய கட்டாயத்துள் தள்ளப்பட்டுவிடுகின்றனர். ஆனால், எனது ஒலி ஒளிபரப்பு அனுபவங்களின் அடிப்படையில் எனக்குத் தெரிந்த ஒரு விஷயம் அல்லது நான் கண்டறிந்த ஒரு விஷயம், நாம் தரமான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினால், விருப்பமில்லாத நேயர்களையும் உங்கள் பக்கம் இழுத்துவிடலாம். நேயர்கள் என்ற குதிரைகளின் கடிவாளம் ஒலிபரப்பாளர்கள் என்ற ஜொக்கிகளின் கைகளிலேயே உள்ளன. சரியாக அவற்றைப் பிடித்துக்கொண்டால் உங்கள் பயணம்  சுலபமாக அமையும். அவுஸ்திரேலியாவை ஒரு மாதிரியாக எடுத்துப் பார்த்தால் இங்கு தமிழில் ஒலிபரப்புச் செய்கின்ற  ஒலிபரப்பாளர்களில் ஒரு சிலர் மட்டும் இலங்கையில் அதிக பட்சமாக பகுதிநேர அறிவிப்பாளர்களாக இருந்துள்ளனர். அந்த அனுபவத்தோடு தாங்கள் தங்கள் மனதுக்குப் பிடித்த சில விஷயங்களையும் சேர்த்துக்கொண்டு புதிய வானொலிக்கலாசாரத்தை உருவாக்கியுள்ளனர். நேயர்கள் இதுதான் வானொலிக் கலாசாரமென நம்பி அப்படியான ஒரு புதிய ஒலிபரப்புச் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு வானொலி நிலையத்தின் உரிமையாளர், தன்னிடம் பணிபுரியும் ஒலிபரப்பாளர்களிடம் “நீங்கள் ஏதேனும் வானலையில் தவறாகக் கூறிவிட்டால் அதற்காக மன்னிப்புக் கோரவேண்டாம். நேயர்கள் இதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள். நீங்களே மன்னிப்புக் கேட்டு ஏன் உங்களை நீங்களே காட்டிக்கொடுக்கவேண்டும்” எனப் புதிய ஒலிபரப்புப் பாடம் நடத்துமளவுக்கு இங்கு அந்தக்கலாசாரம் மாற்றமடைந்துள்ளது.

எனவே இத்தகையோரின் செயற்பாடுகளால் வானொலிகள் நகரவில்லையென்றது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் முன்வைக்கப்படுவது தொடருமென்றே நான் நம்புகிறேன். இவற்றைத் தவிர்ப்பதற்கு வானொலி தொடர்பான முழுமையான அறிவுள்ளவர்களின் செயற்பாடுகள் அறிவூட்டல்கள் புலம்பெயர்தேசத் தமிழ் வானொலிகளுக்குத் தேவையென்ற ஒரு சூழல் உருவாகியுள்ளதை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். 

பாடலுக்கோ இசைக்கோ களிப்பூட்டலுக்கோ முக்கியத்துவமின்றி ஒலிபரப்புச் செய்யலாமா என்று கேட்பீர்கள். கிரிக்கெட் ஆட்டம்பற்றிய நேர்முகவர்ணனையை வானொலியில் 6 மணிநேரம் பாடலின்றியே தொடர்ந்து கேட்பவர்கள் இல்லையா? ‘A Man with the Golden Microphone’, ‘Golden tonsil’ என்றெல்லாம் அழைக்கப்பட்ட John Laws என்ற அவுஸ்திரேலிய ஒலிபரப்பாளரைப்பற்றி இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதே. 2007 நவம்பர் மாதம், தனது 71வது வயதில்  ஓய்வுபெறும் வரை, 54 ஆண்டுகளாக நடத்திவந்த வெறும் பேச்சையே அடிப்படையாகக் கொண்ட (talkback) வானொலி நிகழ்ச்சி, நேயர்கள் மத்தியில் புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சியாகும். அவரின் எல்லா நிகழ்ச்சிகளும் காத்திரமான விடயதானங்களைக் கொண்டவை. 2003ல் ஒலிபரப்பு வாழ்வில் John Laws 50 ஆண்டுகளைப் பூர்த்திசெய்தபோது, அவர் பணியாற்றிய 2UE வானொலி நிலையம் 10,000 அவுஸ்திரேலிய டொலர்  பெறுமதியான தங்கமுலாம் பூசப்பட்ட ஒலிவாங்கியொன்றை அவருக்கு பரிசளித்து மகிழ்ந்தது. இதற்கு முன்னரும் 40 வருட ஒலிபரப்பு வாழ்வைப் பூர்த்தி செய்தபோதும் அவருக்கு இவ்வாறே தங்கமுலாம் பூசப்பட்ட ஒலிவாங்கியொன்று பரிசளிக்கப்பட்டிருந்தது. அவ்வளவு தூரம் அவரது நிகழ்ச்சி புகழ்பெற்றிருந்தது. அதேபோல் அவரது நிகழ்ச்சி, அவர் பணியாற்றிய நிலையத்திற்குப் பெரும் புகழையும், வருமானத்தையும் ஈட்டித்தந்தது.

அமெரிக்காவிலும் ஒரு வானொலி அவரது நிகழ்ச்சியை சமகாலத்தில் பெற்று ஒலிபரப்பியது. இவ்வளவுக்கும் அவர் தன்னை ஓர் ஊடகவியலாளன் என்று அழைத்துக்கொண்டதில்லை. எப்போதும் தன்னை களிப்பூட்டுபவராகவே அறிமுகப்படுத்துவார். அதாவது தனது பேச்சு நிகழ்ச்சி நேயர்களுக்குக் களிப்பூட்டும் என்பதில் அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையிருந்தது. அவுஸ்திரேலியாவிலேயே அதிகூடிய சம்பளம் வாங்கிய ஒலிபரப்பாளர் அவர் என்பது வேறு விஷயம்.

( பிற்குறிப்பு: அவுஸ்திரேலியா கன்பராவில் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் கன்பரா கலை இலக்கிய வட்டமும் இணைந்து அண்மையில் நடத்திய கலை – இலக்கியம் 2016 நிகழ்ச்சியில் நடந்த கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட  உரை )

பதிவுகளுக்கு அனுப்பியவர்: முருகபூபதி – ஆஸ்திரேலியா