தன் பாடல்களைத் தானே எழுதி, நடித்து, பாடி, தயாரித்து, கிட்டார் இசைக்கருவியினையும் வாசித்து சாதனை புரிந்த பாடகர் கிராமி விருதுகளை, ஆஸ்கார் விருதினை எனப்பல்வகை விருதுகளையும் பெற்றவர் மட்டுமல்லர் சமுதாயப்பிரக்ஞை மிக்க கலைஞரும் கூட. Rolling Stone சஞ்சிகை இவரை உலகின் சிறந்த கிட்டார் வாத்தியக்கருவியை வாசிப்பதில் 33ஆவது இடத்தில் வைத்துப்புகழாரம் சூட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. எண்பதுகளில் தனது இசைக்குழுவுக்கு ‘புரட்சி’ (Revolution) என்னும் பெயரினையிட்டுத் தன் இசைப்பயணத்தைத்தொடர்ந்தவர் பிரின்ஸ். அக்காலகட்டத்தில் வெளியான இவரது ‘ஆல்பமா’ன ‘Purple Rain’ , பின் அதே பெயரில் வெளியான ‘திரைப்படம்’ என்பவை இவரது கலையுலகப்பயணத்தின் சாதனைகள். இத்திரைப்படத்துக்காகவே அவர் ஆஸ்கார் விருதினையும் பெற்றவர். அண்மையில் பால்டிமோர் நகரில் காவற்துறையினரின் பாதுகாப்பிலிருந்த கறுப்பின இளைஞரின் மரணத்துக்குக் குரல் கொடுப்பதற்காகவும், அதனைத்தொடர்ந்து அங்கு வெடித்த ஆர்ப்பாட்டங்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதற்காகவும் ‘பால்டிமோர்’ என்னும் பாடலை வெளியிட்டு ஆதரவு தெரிவித்தவர் பிரின்ஸ். சமுதாயப்பிரக்ஞையுள்ள கலைஞன் பிரின்ஸின் மறைவு பெரியதோர் இழப்பே. அவருக்கு எம் அஞ்சலி! அவரைப்பற்றிய விரிவான தகவல்களைக்கீழுள்ள விக்கிபீடியா இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.