அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைகள் பற்றிய அறிமுகம்

முனைவர் மு. பழனியப்பன் ,இணைப்பேராசிரியர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டைகவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த இராமாவதாரம் என்ற கம்பராமாயணத்திற்கு நல்ல உரை ஒன்று மறுபதிப்பாகித் தற்போது வந்துள்ளது.  தமிழ் வளர்த்துப் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1955 ஆம் ஆண்டில் கம்பராமாயணத்திற்கு ஒரு நல்ல உரையை பதினான்குத் தொகுதிகளில் வழங்கியது. இந்த உரை உருவாக்கத்திற்குச் சொல்லின் செல்வர் ரா. பி . சேதுப்பிள்ளை, இராவ் சாகிப் மு. இராகவையங்கார், பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம், பேராசிரியர் கோ. சுப்பிரமணியப் பிள்ளை, பேராசிரியர் லெ. ப. கரு இராமநாதன் செட்டியார், பேராசிரியர் அ. சிதம்பரநாதன், திரு. பி.ஸ்ரீ ஆச்சாரியா, திரு நீ. கந்தசாமிப்பிள்ளை, பால்நாடார் திரு மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, திரு. பு.ரா. புருஷோத்தமநாயுடு முதலியோர் பங்காற்றியுள்ளனர். இதன் முலமே அந்த உரையின் மேன்மையைப் புரிந்துக் கொள்ள இயலும்.  இந்த உரை முல பாடலை முதலில் பதச்சேர்க்கையாக முல நூல் வடிவிலேயே தருகின்றது. இதற்கு அடுத்ததாக பாடலைப் பதம் பிரித்து அனைவரும் படிக்கும் வகையில் தருகின்றது. இப்பாடலுக்கு பாடற் பொருள் தொடர்ந்து தரப்படுகிறது. இவற்றுடன் வினைமுடிபுகள், அருஞ்சொற்பொருள், பதவுரை, கருத்துரை, ஒப்புமைப் பகுதி, விசேடக் குறிப்பு, இலக்கணக் குறிப்புகள் முதலாயின தரப்பெறுகின்றன.

 

     குறிப்பாக வால்மீகியில் இருந்து கம்பன் மாறுபடும் இடங்கள், கம்பன் எவ்வாறு மாறுபடுகிறான் என்பதை உணர்த்தும் உரையாகவும் இது செய்யப் பெற்றுள்ளது.
   
      மொத்தம் பதினான்கு தொகுதிகளாக விரிந்துள்ள இந்த உரை நூல் தமிழர்க்கு மீண்டும் கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை.

     உரையின் வளமையை உணர பல பக்கங்கள் தேவை என்றாலும் சில பகுதிகளை இக்கட்டுரை தர முற்படுகிறது. சுந்தர காண்டத்திற்கு அதன் பெயர்க் காரணம் தொட்டு அதன் முன்னுரையாக விரிந்துள்ள கீழ் காணும் பகுதி இவ்வுரையின் மேன்மையைத் தொட்டுக் காட்டும்.

    இராமாவதாரமாகிய பெருங்காப்பியத்துள் சுந்தர காண்டம் ஐந்தாவது பெரும்பிரிவாகும். இது பதினான்கு படலங்களாகிய சிறுபிரிவில் சற்று ஏறத்தாழ 1350 பாடல்களில் முற்றுப் பெற்று விளங்குவது.

    வான்மீகி முனிவர் இயற்றியருளிய வடமொழி இராமாயண சுந்தர காண்டமோ 68 சருக்கங்களில் 2800 சுலோகங்களால் முற்றுப் பெற்றுள்ளது.

    …..

    சுந்தர காண்டம் என்பது நுவல் பொருள் பற்றி வந்த பெயராகும். அது சுந்தரத்தைக் கூறும் காண்டம் என விரியும். சுந்தரம்  அழகு. காண்டம்  நூலின் பெரும் பிரிவு.

    சுந்தரம் என்பது உலக நூன்முறையால் இக்காப்பிய நாயகியாகிய சீதாபிராட்டியின் திருமேனியழகினையும், குணநலன்களையும் உணர்த்தி நின்றது. இக்காவிய நாயகனான இராமபிரானுடைய திருமேனியழகினையும் ஆன்ம குணங்களையும் உணர்த்தி நின்றது எனலும் ஆகும்.

    அறிவுனூன் முறையால் சுந்தரம் என்பது இறைவனிணையடிக் கீழிருந்து இயற்றும் பணியிழந்து பிறவிச்சிறையுழந்து நொந்த உயிர்த்தொகை உய்யும் பொருட்டு இலங்கையுள் அசோகவனத்துச் சிறையிருந்த பேறு தருவிக்குமவளாகிய பிராட்டியின் பெருமையினையும், உயிர்களின் குற்றம் கண்டு அவற்றைக் கைவிடாது காக்கவிரையும் இறைவன் பெருங்கருணையினையும் இறைவனைப் பிரிந்து உலகியலால் வெதும்பிய உயிரை இறைவனிடம் சேர்ப்பிக்கும் ஒரு பெருங்குரவனுடைய மாண்பினையும் உணர்த்தி நிற்கும் என்பர் பெரியோர்.

    இனி வடநூலார் முறைப்படி பிரிந்த தலைவனும் தலைவியும் ஆகியோர் நிலை (விப்ரலம்பசிருங்காரம்) பேசுதலானும் அந்நிலை அழகுடையதாகவும் சுவை விளைவிப்பதாகவும் இருத்தலானும் இராமபிரானும் சீதா பிராட்டியுமாகிய இருவரது பிரிவுநிலை பேசும் இக்காண்டம் சுந்தர காண்டமாயிற்று என்பாரும் உளர்.

    சுந்தரன் என்பது அநுமன் பெயர்களுள் ஒன்று எனக் கொண்டு அவன் செயல் விரித்தலின் இது சுந்தரகாண்டமாயிற்று என்பர் ஒரு சாரார்.

    மற்றும் சிலர் சுந்தரம் என்பது இனிமையைச் சுட்டுவதாகக் கொண்டு, இனிமையாகிய (சுந்தரமாகிய காண்டம்) என்று கூறுவர்.

இக்கூற்றுள் இனிமைப் பொருட்கு இக்காண்டத்தோடு மட்டும் ஒரு தனிச்சிறப்பான இயைபு புலப்பட்டமையாலும் அவ்வினிமை பிற காண்டங்களுடனும் இயைபுடையதாதற்குத் தடையில்லாமையாலும் இக்கூற்று நுவல் பொருள் பற்றிப் பிற காண்டங்கட்கும் வழங்கும் பொது வழக்கொடு மாறு கொள்ளுதலானும் பொருந்துவதாயில்லை.

    எனவே சுந்தரம் என்பதற்கு அழகு என்று பொருள் கொண்டு முற்பட விரித்த விளக்கமே பல்லாற்றானும் இயைபுடையதாகும்.

    இவ்வாறு சுந்தர காண்டத்திற்குப் பெயர் விளக்கம் காண இவ்வுரை பெரிதும் முயன்று ஒரு முடிவை இறுதியாக்கியுள்ளது.

    மேலும் சுந்தரகாண்டத்தை நாடகப் பாங்குடையது என்று இவ்வுரை எடுத்துரைக்கின்றது. அதாவது நாடகத்திற்கு உரிய ஐந்து பகுதிகளான, முகம், பிரதிமுகம்,கருப்பம், விளைவு, துய்த்தல் என்பன சுந்தர காண்டத்துள் உள்ளன என்று சான்றோடு விளங்கும் இவ்வுரை கம்பனைக் கற்போர் நெஞ்சில் இருத்தச் செய்வதாக நிலைக்கின்றது.

    பல்லாயிரம் பக்கங்களில் கம்பனை, இராமனை, தமிழை நிலைநிறுத்தும் இந்த நூல்களை வாங்கித் தமிழ் உலகம் மேன்மையடைய வேண்டும். தமிழகத் தமிழாசிரியர்கள் அனைவரும் வாங்கினாலே பல்கலைக்கழகம் அச்சடித்த பிரதிகள் போதாமல் போய்விடும். கல்லூரிகள், பள்ளிகள் நூலகங்களில் வாங்கிச் சேர்த்தால் இன்னும் பன்னூறு பிரதிகள் அச்சிடப்பட வேண்டும். கம்பன் கழகங்கள் முன்வந்து வாங்கினால் இன்னமும் இதன் தேவை அதிகமாகும்.

    அயலக, இந்தியத் தமிழர்கள் விரும்பி வாங்குவதற்காக இதன் விலையில் இருபத்தைந்து விழுக்காடு சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது. ருபாய் ஆறாயிரத்து ஐநூறு விலையுள்ள இந்தப் புத்தகத்தைத் தற்போது இருப்பத்தைந்து விழுக்காடு குறைத்து ருபாய் நான்காயிரத்துஎண்ணூற்று எழுபத்தைந்துக்கு வாங்கிடலாம். நூல்களை வாங்கும் திறன் மிக்க அனைவரும் அணுக வேண்டிய முகவரி அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெளியீட்டுத்துறை, அண்ணாமலை நகர், சிதம்பரம்.

M.Palaniappan muppalam2006@gmail.com
manidal.blogspot.com