காதல் ஒரு குழப்பமான வாழ்க்கை. காதல் பற்றிய குழப்பங்களால் மனநோயாளிகளாக வாழ்பவர்களை எண்ணி முடிக்க முடியாது. காதல் உணர்விற்கு இத்தகைய எதிர்மறை தனிச்சிறப்பும் இருக்கின்றது. இத்தகைய தனிச்சிறப்பை சுட்டிக்காட்டுவதால் எங்களைக் கோபிக்காதீர்கள் காதல் விரும்பிகளே!
சமூகவிஞ்ஞானக் களங்களில் காதலித்து இணைந்தவர்கள் ஏராளம். சமூக மேன்மைக்காக உழைப்பதே இவர்களின் காதலுக்கு இதயத்துடிப்பு. இத்தகைய இதயங்களைப் பற்றிக்கொண்டே காதலின் வரலாறை ஆராயப்போகின்றோம்!
காதலாகி கசிந்து உருகிய பின்பு திருமணம் செய்யாமல் விலகியவர்களும் ஏராளம். காதலித்துத் திருமணம் செய்த பின்பு விவாகரத்துக்கு விரைபவர்களும் ஏராளம்.
திருமணம் செய்த பின்பு காதலர்களாக மலர்பவர்களும் இருக்கிறார்கள். திருமணத்தால் அறிமுகமான பின்பு விவாகரத்துக்கு வழியின்றி சகிப்புத்தனமாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.
பல்வேறு நபர்களிடம் காதல் உறவைக் தொடர்ந்தபின்பு அறிமுகம் இல்லாதவரை திருமணம் செய்பவர்களும் உண்டு. திருமண வாழ்வில் ஈடுபட்டபின்பு பல்வேறு காதலர்களுக்காக ஏங்குபவர்களும் உண்டு. காதலித்தால் கண்டிப்பாக திருமணம் செய்தாக வேண்டுமோ என்பர் நம்மில் சிலர். திருமணம் செய்தவர்கள் மனதார காதல் செய்ய வேண்டுமோ என்பர் இன்னும் சிலர்.
திருமணம் செய்யாவிட்டால் எதற்கு காதலாம் என்று வாதிடுபவர்கள் ஒருபுறம். காதலிக்காவிட்டால் திருமண வாழ்வில் என்ன பலனுண்டு என்று சலித்துக்கொள்பவர்கள் மறுபுறம்.
காதலர்களின் கலப்புத் திருமணம் சமூகவிடுதலையைச் சாதிக்கும் என்கிறார்கள் சமூகப் போராளிகள். காதல் திருமணம் செய்தவர்களை ஆணவப்படுகொலை செய்கிறார்கள் சாதி வெறியர்கள். இத்தனை பெரிய பதட்டங்களுக்கும் குழப்பங்களுக்கும் இடையில் நாம் பேசியாக வேண்டும் காதலர்களே!
காதல் வேறு திருமணம் வேறு என்பதை எப்படி புரிய வைப்பது என முயல்கிறோம். சம்பந்தம் இல்லாத இவற்றை சம்பந்தம் செய்வதற்கு என்ன அவசியம் என்பதை உணர்த்த முயல்கிறோம்.
காதலும் திருமணமும் தோன்றிய கதைகளைப் பேசப் போகிறோம். பழைய வரலாற்றை தேடிப்பேசுவதில் உணர்ச்சிவசப்பட அவசியமில்லை. சரி தவறு என்ற மனநிலையைக் கடந்து உண்மைகளை உணர்வதற்காக முயல்கிறோம்.
நமது பயணம் மனித மூதாதையர்கள் வாழ்ந்த பழைய உலகிலிருந்து தொடங்கப் போகிறது. பழைய வாழ்க்கையிலிருந்து உண்மையைத் தொடரப் போகிறோம். வறண்டு போன கற்பனைகளைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
மனித மூதாதையர் சமூகமாக வாழப் பழகிய காலம். மூளையை ஆயுதமாகக் கொண்டு வாழத்தெடங்கிய பருவம். தற்காப்பிற்கானப் புதிய ஒற்றுமை மலர்ந்திருந்த நேரம். இயல்பூக்கத்தின் பக்குவத்திலேயே கடந்து வந்த வாழ்வில்
சிந்தனையின் கருத்தூக்கம் கருவுற்றிருந்தச் சூழல்.
தாயின் அரவணைப்பில் காட்டுப் பொருட்களைச் சேகரித்துப் பகிர்ந்துண்ட தருணங்கள்… சக்திக்கேற்ப வேட்டைத் தொழிலில் ஈடுபட்டத் தருணங்கள்… பாலுறவு உரிமைக்கு வரையறைகள் கிடையாது! தலைமைக்குரிய தாய்க்கும் வலிமை மிகுந்த ஆணுக்கும் இயல்பூக்கத்தின் பக்குவத்தில் முன்னுரிமை உண்டு. மற்றபடி யார்யார்க்கும் பாலுறவு உண்டு.
சகமனிதர்களின் எண்ணிக்கையே மனித இனத்திற்கு பலம். ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையின் அடிப்படை ஆயுதமாவர்.
ஏனெனில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மூளை ஆவர்.
இயற்கையிடமிருந்து எடுத்துக்கொண்ட ஆயுதங்களில் எதனையும் தேவை முடிந்ததும் எறிந்துவிட முடியும். ஆனால் எறிய முடியாத ஓர் ஆயுதம் எனில் மனிதமூளை மட்டுமே! இயற்கையின் அங்கமாகிய மனித இனத்திற்கு இன்றியமையாத ஆயுதமாக மனிதமூளைத் திகழ்கின்றது. மனித மூளையே மனிதப் பண்பிற்கு அடிப்படை. (புதியவன்.ஜுன்2015:34-35)
சமூக உற்பத்திற்காகவும் தற்காப்பிற்காகவும் கூடி உழைக்கும் உயிரினமாக மனித இனம் படிமலர்ச்சி பெற்றிருக்கிறது.
உழைப்புக் கருவிகள் படிப்படியாய் வலிமையாயின. வாழ்க்கை முறைகள் படிப்படியாய் எளிமையாயின. வசதிகள் மெல்ல மெல்ல வளரத்தொடங்கின. ஓய்வு நேரங்களும் முளைக்கத் தொடங்கின. மனித மூளைகள் புதியத் தேடல்களுக்குப் பழகிக் கொண்டிருந்தன. ஒன்றைத் துல்லியமாக ஆராய்ந்து அறிகின்ற அறிவிற்கு இணையாக ஒன்றை நூறாக கற்பனை செய்கின்ற மன ஆற்றலும் பெருகத் தொடங்கின.
பெண்ணைப் பற்றிய உண்மையும் உண்மையைப் பற்றியக் கற்பனையும் உருவெடுத்திருந்தன.
சகமனிதர்களைப் பெற்றுக்கொடுப்பவள் பெண். பெண் பூப்பெய்துகிறாள், பிறகு தாயாகிறாள். பூப்பெய்தாத எந்தப் பெண்ணும் தாயாகுவதில்லை. பூ என்பது பெண்ணின் பிறப்புறுப்பு. பெய்தல் என்பது ரத்தம் சிந்துதல். பெண் பிறப்புறுப்பு முதலில் ரத்தம் சிந்துதலே பூப்பெய்தல் ஆனது. (தேவிபிரசாத்சட்டோபாத்யாயா,2010:367-368)
இவளால் மக்கள் பெருகுவர் என்று இனப்பெருக்கத் தெய்வம் அறிவித்ததாம்! இனப்பெறுக்கத் தெய்வத்தின் அறிவிப்பு மொழியே ரத்தம் சிந்துதல். ரத்தம் சிந்துகின்ற பெண்ணினம் தெய்வமாகப் போற்றப்பட்டாள். (புதியவன்.7அக்.2019)
பூப்பெய்துவிட்ட பெண் பிள்ளைகளை இனப்பெருக்கத் தெய்வமாகக் கொண்டாடினர். வயிற்றில் கருவுற்ற தாய்மார்களைத் தாய்த்தெய்வமாகக் கொண்டாடினர். பூப்பெய்தல் சடங்கு விழாவும் வளைகாப்பு சடங்கு விழாவும் இங்கிருந்துதான் தொடங்கின.
நவீனத் தமிழகத்தில் இன்றும் தொடர்கின்ற இவ்விழாக்கள் தந்தையதிகாரப் பண்பிற்கு உருமாறியுள்ளன. எனினும், தமிழகத்தின் தொன்மைக்கும் தாய்தலைமையின் எஞ்சிய பண்பிற்கும் இவ்விழாக்களை அடையாளமாகவும் உணரலாம்.
பாலுறவு உரிமையில் முதல்முதலாக வரைமுறைகள் உருவாகத் தொடங்கின. இனப்பெருக்கத் தெய்வத்தின் ரத்தத்தால் அடையாளம் பெற்று பிறந்தவர்கள் தாயைப் புணர்தல் கூடாது என்றொரு சமூகத்தடை உருவானது. அத்தகு புணர்தலை இனப்பெருக்கத் தெய்வத்தையே புணர்தலுக்குச் சமமானதாகக் கருதினர். தாய்க்கும் சேய்களுக்கும் இடையிலான பாலுறவு உரிமைகள் முதன்முதலில் தடைசெய்யப்பட்டன. (எங்கெல்ஸ்.2011(2008):55)
மனித மூதாதையர்களின் முன்னோர்களது பாலுறவு உரிமைக்கு உடல்தகுதிகள் மட்டுமே அவசியப்பட்டன. ஆனால் மனிதர்களுக்குக் கூடுதலாக மனத்தகுதிகளும் அறிவுத்தகுதிகளும் அவசியம் பெறத் தொடங்கின. ஒவ்வொரு மனிதரும் தனது பாலுறவு உரிமையாளர்கள் பற்றிய கருத்துக்களையும் விருப்பங்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தனர். தாயும் சேய்களும் தங்களுக்கு இடையிலான பாலுறவு உரிமையைச் சமூக மதிப்புகளுக்காகத் தியாகம் செய்தனர்.
கருவுறுகின்ற பெண்கள் தெய்வங்களாக மதிக்கப்பெற்றனர். எண்ணற்றத் தாய்த் தெய்வங்கள் உருவாகினர். தாய்த் தெய்வங்கள் பற்றியக் கருத்துக்கள் கூர்மையாக விரிவடைந்தன.
காட்டுப் பொருட்களைக் கச்சிதமாகச் சேகரித்த தாய்தலைமை மனிதர்கள் விவசாயத்தைக் கண்டறிந்தனர். வேட்டையில் வீழ்ந்த விலங்குகளின் குட்டிகளைப் பழகியதால் மந்தைத் தொழிலைக் கண்டறிந்தனர். கற்கருவிகள் மரக்கருவிகள் எல்லாம் மாறி உலோகக் கருவிகளைக் கண்டிருந்தனர்.தேவைக்குப் போதாமையாக பொருள் உற்பத்தி செய்த நிலைமை மாறிதேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்யத் தொடங்கியிருந்தனர். மிஞ்சியப் பொருட்கள் சொத்துக்கள் ஆயின. சொத்துக்களைத் தாய் பராமரித்தாள். (புதியவன்.7அக்.2019)
உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் பாலுறவு உரிமைகள் இயல்பாக இருந்தன. இதற்கும் சமூகத் தடை உருவெடுக்கத் தொடங்கியது. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளின் பாலுறவு உரிமையையும் தாயைப் புணர்தலுக்குச் சமமானதாகக் கருதினர்.
உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் பாலுறவு உரிமைகள் தடைசெய்யப்பட்டன. இந்தச் சமூகத் தடை தூரத்துச் சகோதர சகோதரிகள் வரையிலும் நீட்சி பெற்றது. சமூக மதிப்புகளுக்காகச் சகோதர சகோதரிகள் பாலுறவு உரிமையைத் தியாகம் செய்தனர். (எங்கெல்ஸ்.2011(2008):55)
வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் எல்லா மனிதர்களும் தூரத்துச் சகோதர சகோதரிகளாகவும் தூரத்து தாய் சொந்தம் உடையவர்களாகவும் திகழ்ந்தார்கள். ஒரே கூட்டத்தில் எந்த ஒருவரும் பாலுறவு உரிமையைப் பெற இயலாது போயினர்.
பாலுறவு உரிமைக்காக வேறொரு கூட்டத்தை நாடினர். இருவேறு கூட்டங்கள் உடன்பட்டன.
ஒரு கூட்டத்துப் பெண்கள் மறு கூட்டத்தில் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு கூட்டத்து ஆண்கள் மறு கூட்டத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் பாலுறவு உரிமையாளராக உறவு பெற்றனர். (புதியவன்.7அக்.2019)
உலோகக் கருவிகளால் வலிமை பெற்ற விவசாயமும் மந்தைத் தொழிலும் சொத்துக்களைக் குவித்துக்கொண்டிருந்தன. தாய்தலைமை பராமரித்தச் சொத்துக்களை மற்றொரு கூட்டமும் பங்குபெறும் சூழல் உருவெடுத்திருந்தது. ஓய்வு நேரங்கள் தனிமனிதச் சிந்தனைக்கு வழிவகுத்துத் தந்தன. புதியதலைமுறை உருவாகுதல் பற்றியும் சொத்துக்கள் மீதான உரிமைகள் பற்றியும் சிந்தித்தனர்.
குழந்தைப் பிறப்பிற்கு இனப்பெருக்கத் தெய்வம் காரணமல்ல ஆண்களுடன் புணர்தலே காரணம் என்பதை ஆண்கள் உணர்ந்தனர். கூட்டு உழைப்பிலிருந்து சொத்துக்கள் மலர்கின்றன என்றக் கருத்திற்கு எதிராக ஆண்கள் சிந்திக்கத் தொடங்கினர். சமூக உற்பத்தியில் ஆண்களின் பங்கே அதிகம் என்பதாக வாதிட்டனர். கர்ப்பக் காலங்களிலும் ரத்தப் போக்குக் காலங்களிலும்
பெண்கள் உழைப்பிலிருந்து ஒதுங்கிக்கொள்வதை ஆதாரமாகவும் சொன்னார்கள். சொத்துக்களைக் குவித்த ஆண்கள் தாய் தலைமையை எதிர்க்கத் தொடங்கினர். தாய் தலைமையால் பராமரிக்கப்பட்ட சமூகச்சொத்துக்களை ஆண்கள் தம் அதிகாரத்திற்குள் கவர்ந்திழுத்தனர். தாய் தலைமைக்கு நிகராக தந்தை அதிகாரம் முளைத்தது.
ஆண்டாண்டுகாலம் நீடித்துள்ள தாய்த்தலைமைச் சமூகத்துடன் புதிதாய் முளைத்த ஆணாதிக்கச் சமூகம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது. பெண்களின் சமூக உழைப்பை தாழ்வானதாகக் கருதத் தொடங்கினர் ஆண்கள். (புதியவன்.7அக்.2019)
வளர்ந்து வருகின்ற ஆணாதிக்கச் சூழலும், நிலவுகின்ற பாலுறவு உரிமை முறையும் பெண்களது ரத்தப்போக்கு காலத்திற்கும் கர்ப்பக் காலத்திற்கும் பாதுகாப்பின்னையை உணர்த்துவதாகவே அமைந்தன. ரத்த உறவிற்கு வெளியில் நிலவிய வரைமுறையற்ற பாலுறவு உரிமையைப் பெண்கள் வெறுக்கத் தொடங்கினர்.
ஓய்வு நேரங்கள் நன்கு வளர்ச்சி கண்டிருந்தன. உணவு, உடை, இருப்பிடம், பாலுறவு உரிமை உட்பட யாவற்றிலும் இன்பச் சுவையைக் கூட்டுவதற்கானஅழகியல் உணர்வைவளர்க்கத் தொடங்கியிருந்தனர் மனிதர்கள். பாலுறவு உரிமைக்கு அழகியல் உணர்வாக காதலெனும் பண்பு உருவெடுத்திருந்தது. காதலானது பாலுறவு உரிமைக்கு உடல் தகுதியை மட்டும் முடிவுசெய்யவில்லை.
அக்கறையுள்ள மனிதநேயம், அறிவன்பு, சமூக மரியாதை ஆகியவற்றையும் இலக்காகக் கொண்டிருந்தது.
பெண்கள் தாம் காதலித்த ஆண்களிடம் மட்டுமே பாலுறவு உரிமைக்கு உடன்பட்டனர். எல்லா ஆண்களிடமும் தன்னை ஒப்படைக்க மறுத்தனர். பாலுறவு உரிமைக்கு மனம் ஒத்தக் காதல் வரையறையானது.
பெண்கள் தமது ரத்த உறவிற்கு வெளியிலுள்ள அத்தனை ஆண்களுக்கும் உரிமையானவர்கள் என்றச் சமூக விதியை மாற்றிக்கொண்டார்கள். இதற்காக இனப்பெருக்கத் தெய்வத்திடம் பாவ மன்னிப்பு கேட்கின்ற சடங்கைச் செய்தார்கள்.
அந்தச் சடங்கில் மட்டும் வரைமுறையற்ற பாலுறவில் ஈடுபட்டார்கள். இனப்பெருக்கத் தெய்வத்திற்கு பாவமன்னிப்புக் காணிக்கைகள் வழங்க ஏராளமான செல்வத்தைச் சேகரித்தனர். (எங்கெல்ஸ்.2011(2008):77)
பாலுறவு உரிமைக்காக ஆண்கள் பணத்தைக் கொடுக்க வேண்டியக் கட்டாயமிருந்தது. ஆண்களிடம் பெற்றப் பணத்தை பெண்கள் இனப்பெருக்கத் தெய்வத்திற்கு காணிக்கையாக்கினர். இனப்பெருக்கத் தெய்வத்திற்குச் செய்த பாவமன்னிப்புச் சடங்கே பெண்கள் நிகழ்த்திய முதல் விபச்சாரமாகும். மற்றபடி பெண்களும் ஆண்களும் காதலின் அடிப்படையில் பாலுறவு உரிமையைத் தொடர்ந்தார்கள். (எங்கெல்ஸ்.2011(2008):77)
சொத்துக்களைப் பராமரிக்கும் பொறுப்பை தாய் தலைமைச் சமூகம் பறிகொடுக்கத் தொடங்கியது. பெண்கள் ஒவ்வொருவரும் தன்னை குறிப்பிட்ட ஆண்களிடம் காதலின் அடிப்படையில் ஒப்படைத்துக் கொண்டிருந்தனர். இந்தச் சூழலை ஆணாதிக்கச் சமூகம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியது.
ஒரு பெண் ஒரு ஆணின் சொத்துக்களுக்குக் கட்டுப்பட வேண்டும். அந்த ஆணுடன் மட்டுமே அவள் பாலுறவில் ஈடுபட வேண்டும். அவள் பெற்றெடுக்கும் குழந்தை அவளது கணவனுக்கு உரிமையுடையதாகும். (எங்கெல்ஸ்.2011(2008):86)
அந்தக் குழந்தையே அவனது சொத்துக்களுக்கு வாரிசுரிமை பெற முடியும். ஆணின் சொத்துக்கு நேர்மையான முறையில் வாரிசைப் பெற்றுத்தர வேண்டியது மனைவியின் சமூகக் கடமையாகும். இவ்வாறாக ஆணாதிக்கச் சமூகம் வாதாடியது.
தாய் தலைமைச் சமூகம் ஆணின் சொத்ததிகாரத்திற்கு நிகராக ஈடுகொடுக்க முடியவில்லை. ஆணின் சொத்ததிகாரத்திற்கு வாரிசு பெற்றுத்தருகின்ற உயிரினமாக பெண்கள் முடங்கிப் போனார்கள். பிறக்கும் குழந்தை கணவருக்கு உரிமையாவதால் தாயின் அடையாளங்கள் மறைக்கப்பட்டன. பெண்கள் சகமனிதர்கள் அல்ல. ஆண்களின் சொத்தாக மாறுகின்ற அவல நிலை தொடங்கியது.
பெண்களும் ஆண்களும் காதலில் இணைந்து சுதந்திரமாக வாழ்வதை தந்தை அதிகாரச் சமூகம் மதிப்பதற்குத் தயாராக இல்லை. ஒரு பெண் எந்த ஆணுடன் பாலுறவு உரிமையில் ஈடுபட வேண்டும் என்பதைத் தந்தை அதிகாரச் சமூகமே தீர்மானித்தது.
இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் உருவாகின்ற சமூக அங்கீகாரமே திருமணம் என்றானது.
பாலுறவு உரிமை பற்றிய வரையரை ஒருவர் யாருடன் ஈடுபடக்கூடாது என்பதில் தொடங்கி ஒருவர்யாருடன் ஈடுபடவேண்டும் என்பதாக முடிவடைகிறது.
பெண்கள் தங்களது நேசமிகு காதலர்களுடன் தொடர்ந்து வாழ்ந்தார்கள். ஆயினும் எந்தக் கூட்டத்துப் பெண் எந்தக் கூட்டத்து ஆணிற்குச் சொத்தாக வேண்டும் என்பதை தந்தை அதிகாரச் சமூகத்தின் பெரியோர்கள் ஒன்றுபட்டு முடிவெடுத்தார்கள்.
சமூகத்தில் ஏராளமானத் திருமணங்கள் நிகழத் தொடங்கின. (எங்கெல்ஸ்.2011(2008):108-109)
திருமணமான ஆணும் பெண்ணும் கணவன் மனைவி என்ற உறவைப் பெறுகிறார்கள். ஆயினும் தந்தை அதிகாரச் சமூகத்தால் பெண்களின் சுதந்திரக் காதலை ஒரே மூச்சில் கொன்றுவிட முடியவில்லை. திருமணமானப் பெண்ணின் காதலன்கள் முக்கியமற்றக் கணவர்களான அங்கீகரிக்கப்பட்டார்கள். திருமணமான ஆணின் காதலிகள் முக்கியமற்ற மனைவிகளாக அங்கீகரிக்கப்பட்டார்கள். பெண்களின் சுதந்திரக் காதல் படிப்படியாக அடக்கம் செய்யப்பட்டது.
பெண்களின் சமூகச் செயல்பாடுகள் ஒடுக்கப்பட்டன. பெண்களின் சுதந்திரப் பொருளாதார நலன்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டன. அவள் தனது வாழ்வாதாரங்களுக்காக தந்தையின் சொத்ததிகாரத்திற்குக் கீழ்படிவதைத் தவிற வேறு வழியில்லாத நிலைமை உருவாக்கப்பட்டது. தலைமைப் பண்பில் சிறப்பு பெற்றிருந்தப் பெண்களின் சமூக மதிப்பு தலைகீழாகிப் போனது. அவள் தனது தந்தைக்குக் கீழ்படிந்தவளாகவும், கணவனுக்குக் கீழ்படிந்தவளாகவும், மகனுக்குக் கீழ்படிந்தவளாகவும் வாழ்ந்தாக வேண்டும். அவளது அறிவும் அழகும் உணர்வும் விருப்பங்களும் ஆண்களின் வாரிசுரிமை நலன்களுக்காக முடக்கப்பட்டன.
பெண் மனைவியானதும் அவளது முக்கியமற்றக் கணவர்கள் கள்ளக்காதலர்களாக இடித்துரைக்கப்படுகிறார்கள். ஆண் கணவரானதும் அவனது முக்கியமற்ற மனைவிகள் விபச்சாரிகளாக இடித்துரைக்கப்படுகிறார்கள். இதுவே ஒருதாரத் திருமண முறையின் நிலைமையாகியது.
ஒருதார திருமணமுறை என்பது ஒரு பெண் ஒரு ஆணுக்கு உடைமையாகுதல் ஆகும். இந்தத் திருமண முறையில் கள்ளக்காதல் முறையும் விபச்சார முறையும் தவிர்க்க முடியாமல் பயணம் செய்கின்றன. (எங்கெல்ஸ்.2011(2008):110)
மனித வரலாற்றில் காதலும் திருமணமும் வெவ்வேறு துருவங்கள். தாய்த் தலைமை சமூகத்தில் ஆணாதிக்கப் பண்புகளுக்கு எதிராக பெண்களிடம் தோன்றிய விடுதலை உணர்விலேயே காதல் பிறந்தது. தந்தை அதிகாரச் சமூகத்தில் பெண் விடுதலைக்கு எதிராக ஆண்களிடம் தோன்றிய சொத்தாதிக்க உணர்விலேயே திருமணம் பிறந்தது. தாய்த் தலைமைச் சமூகம் தந்தை அதிகாரச் சமூகத்திடம் சமரசம் பாராட்டத் தொடர்ந்து முயல்கின்றது. காதல் திருமண முயற்சிகள் அனைத்தும் இத்தகைய சமரச முயற்சிகளே ஆகும். இத்தகைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகளைவிட தோல்விகளையே பெரிதும் சந்தித்திருக்கின்றன. ஆயினும் இத்தகைய சமரச முயற்சிகளும், அற்ப வெற்றிகளும், கடுமையானத் தோல்விகளும் முடிந்தபாடில்லை. மேன்மேலும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
வரலாறு என்பது வருங்கால இலக்கிற்குப் பயன்படும் நிகழ்காலப் பாடமாகும். இந்தக் காதலின் வரலாறு காதலர்களுக்கு என்ன பாடத்தை உணர்த்துகின்றது.
பெண் விடுதலை என்பது இயற்கையுடன் நட்பு பாராட்டுதலாகும். ஆணாதிக்கம் என்பது இயற்கையுடன் பகைமை பாராட்டுதலாகும். தாய்தலைமை என்பது இயற்கையின் உருவம். ஆணாதிக்கம் என்பது செயற்கையின் ஆக்கம்.
காதலருடன் இணைந்து வாழ்ந்து புதிய தலைமுறையை உருவாக்க முனைவது பெண் விடுதலையின் விருப்பம் ஆகும்.ஆணிற்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வாரிசை உருவாக்கச் சொல்வது ஆணாதிக்கத்தின் நோக்கம் ஆகும்.
பெண் விடுதலை இல்லாமல் சமூகவிடுதலை சாத்தியமல்ல. எனவே காதல் என்பது சமூகவிடுதலைக்கான பெரும் முயற்சியாகத் திகழ்கின்றது. காதலை திருமணம் என்ற அதிகார இலக்கிற்குள் கண்மூடித்தனமாக இணைப்பது சரியல்ல.
திருமணம் என்ற ஆணாதிக்க வடிவத்தை பெண்விடுதலை இலக்கிற்கு ஏற்றபடி உருமாற்றம் செய்ய வேண்டும். இந்த முயற்சியை மேற்கொள்ளாமல் காதலை திருமணத்துடன் இணைப்பது வீண்முயற்சியாகும்.
திருமணம் என்ற ஆணாதிக்க வடிவமானது சாதிய அதிகாரம், சமய அதிகாரம், இன அதிகாரம், பொருளாதார அதிகாரம், பெண்ணடிமைத்தனம் போன்ற பல்வேறு விசப்பண்புகளை உள்ளடக்கியுள்ளது. இத்தகைய விசப்பண்புகளுக்கு எதிராகச் சகமனிதர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை உடைத்தெறிகின்ற சமத்துவ சமுதாய வடிவில் திருமணத்தை உருமாற்ற வேண்டும்.
மனம் ஒத்தக் காதலர்கள் சமூகப் பாதுகாப்பில் பக்குவப்பட்டு இத்தகையத் திருமண வடிவில் ஒன்றிணைவது அவசியம். இதுதான் சமூக விடுதலை விருப்பத்துடன் எதிர்நோக்கியுள்ள காதல் திருமணமாகும். இத்தகையத் திருமணங்களே காதலின் வரலாற்று வெற்றியைப் பறைசாற்ற முடியும்.
விசப்பண்புடைய திருமண வடிவில் காதலர்கள் ஒன்றிணைவதைக் காதலின் வரலாற்றுத் தோல்வியாகவே கருத முடியும்.
ஏனெனில் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த சமத்துவமற்றச் சமூகத்தை மறுஉருவாக்கம் செய்வதாகவே இத்தகையக் காதல் திருமணங்கள் அமைகின்றன.
நமது சமூகம் சமத்துவமற்ற, இன்பமற்ற, நேர்மையற்ற, அருவெறுப்பானச் சமூகம். இத்தகையச் சமூகத்தைச் சகித்துக்கொண்டு புதியத் தலைமுறைகளை உருவாக்குவது நியாயமல்ல. ஏனெனில் இத்தகைய முயற்சி நமது பாலுறவு இன்பத்திற்காக வருங்காலத் தலைமுறைகளுக்குச் செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகவே அமையும். நாம் பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்குத் துரோகிகளாக வாழ்வதைவிட இணையாளர் வாழ்க்கையைத் தியாகம் செய்துக் காத்திருப்பது எவ்வளவோ நல்லது.
பாலுறவு உரிமை வரைமுறையற்ற ஆரம்ப நிலையிலிருந்து பல மட்டங்களைக் கடந்து வந்துள்ளது. தாய் சேய் பாலுறவு உரிமை தடை, சகோதர சகோதரிகளின் பாலுறவு உரிமை தடை,இருவேறு கூட்டங்களுக்கு இடையில் வரைமுறையற்ற பாலுறவுஉரிமை. பல கணவர் முறை, பல மனைவியர் முறை, இறுதியாக ஒரு பெண்ணும் ஒரு ஆணும் மட்டும் பாலுறவு உரிமையில்இணைந்து வாழ்கின்ற ஒருதார மணமுறை ஆகும். (சிவக்குமார்,கே.2016:177) இந்த நிலையும் கடந்துவிட்டால் என்னவாகும் என்பதை யோசித்துப் பார்க்க முடிகின்றதா?
தனிமனிதர் என்பது சமூகத்தின் கடைசி அலகாகும். சமூகம் என்பது தனிமனிதர்களின் ஒட்டுமொத்தமாகும். சமூகத்தின் கடைசி அலகாகிய ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான பாலுறவு உரிமை உடைந்துபோனால், மீண்டும் புதிய வடிவில் வரைமுறையற்றப் பாலுறவு உரிமை தொடங்கிவிடும். இத்தகைய தொடக்கத்தை உருவாக்குவது நமது நோக்கமல்ல.
இத்தகைய நோக்கம் இருப்பின் காதலர்கள் போராடி ஒன்றிணைவதற்கு அவசியம் இல்லை என்பதை உணர வேண்டும்.
ஏனெனில் பாலுறவு உரிமை பற்றிய நமது பண்பாட்டை உறுதியாக முடிவெடுக்கின்ற கடமை நமக்கு இருக்கின்றது.
பசியும் இனப்பெருக்கமும் மட்டுமே வாழ்க்கை என்ற மிருக நிலையைக் கடந்துவிட்டோம். மனிதரின் சமூக முன்னேற்றம் பல நிலைகளில் வளர்ச்சி பெற்றுள்ளது. எனவே வரைமுறையற்றப் பாலுறவு உரிமை சமூகத்திற்கு அவசியமற்றது.
மனம் ஒத்த ஒரு ஆணும் பெண்ணும் இணையாளர்களாக நீடித்து வாழும் ஒருதார மணமுறையை உறுதிப்படுத்த முடியும்.
இதனை உறுதிப்படுத்துதல் மட்டுமே காதலர்களுக்கு வெற்றியாக அமையும்.
நமது சமூகப் பொருளுற்பத்தி இரும்புக் கருவியைக் கடந்துவிட்டது. இன்று இயந்திரம், கணினி, அறிவியல் தொழில்நுட்பங்கள், உலகமயம் என்பதாக வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இன்றைய லாப வெறிபிடித்துள்ளச் சமூகப் பொருளுற்பத்தியின் அனைத்துப் பொருட்களும் பாலுறவுஉணர்வுகளுடன் அறிமுகம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் காதலர்களின் வெற்றிக்கு மனநிலை மாற்றம் அவசியப்படுகின்றது. ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுறவு உரிமை மீதான ஆர்வம் பலவிதமான உடல்களைச் சுவைப்பதாக இருக்கின்றது. நம் மீது அதிகாரம் செய்கின்ற சொத்ததிகாரச் சமூகம் நம் உணர்வுகளை நுகர்வு வெறியுடன் இணைத்திருக்கின்றது. பசிக்கு உண்ணுதல் என்ற நிலையைக் கடந்து பல்வேறு சுவைகளை ரசிப்பதற்காக உண்ணுதல்என்பதாக மனநிலை திரிந்திருக்கின்றது. இதுதான் நம் மீது அதிகாரம் செய்கின்ற நுகர்வு வெறியாகும்.
பாலுறவு உரிமையும் இத்தகைய நுகர்வு வெறியாகத் தூண்டப்பட்டிருக்கின்றது.
ஆண் ஒரு பெண்ணை உடலழகின் அடிப்படையில் மதிப்பிடுகிறான். பெண்ணும் தனது சுயமரியாதையை உடலழகின் அடிப்படையில் தீர்மானிக்கின்றாள். இத்தகைய மனநிலையானது ஒருவன் ஒருத்தியின் இணையாளர் வாழ்விற்கு எதிரானதாகும். சுதந்திரமானப் பாலுறவு உரிமையை விரும்பி வரவேற்பதாகும்.
உண்மையானக் காதல் சுதந்திரமானப் பாலுறவிற்கு எதிரானதாகும். உண்மையானக் காதலர்களின் வெற்றியை அவர்களது மதிப்பீடுகளிலிருந்து உணர முடியும்.
பெண்கள் தங்களது சுயமரியாதையை உடல் அழகிகளாகக் கருதுவதிலிருந்து மதிப்பிடாமல்சமூக அறிஞர்களாக கருதுவதிலிருந்து மதிப்பிட வேண்டும்.
ஆண்கள் பெண்களை அவர்களது உடலழகிலிருந்துமதிப்பிடாமல் அவர்களது தனித்துவமானப் பண்புகளாகிய சிந்தனை, விருப்பங்கள், சமூக ஆற்றல்கள், திறமைகள் போன்றவற்றிலிருந்து மதிப்பிட வேண்டும். தனது இணையாளரின் ரத்தப் போக்குக் காலங்களிலும் கர்ப்பக் காலங்களிலும் அக்கறையுடன் உடனிருந்து பராமரிக்க வேண்டும். இணையாளர் மீதான நேர்மையானக் காதலுக்காக அவசியப்பட்டக் காலங்களில் பாலுறவு வேட்கைகளைத் தியாகம் செய்ய வேண்டும்.
நமது காதலர்கள் இத்தகைய மதிப்பீடுகளுடன் திருமண வாழ்வில் ஒன்றிணைவது இன்றியமையாத சமூகத் தேவையாகும்.
மனம் விரும்பியக் காதலனை இணையாளராக ஏற்றவளுக்குக் கள்ளக்காதல் முறை அவசியமற்றுப் போகும். ரத்தப்போக்கு மற்றும் கர்ப்பக் காலங்களில் பாலுறவு வேட்கையைத் தியாகம் செய்து இணையாளரைப் பராமரிப்பவனுக்கு விபச்சார முறை அவசியமற்றுப் போகும். கள்ளக்காதல் முறையும் விபச்சார முறையும் சமூகத்திலிருந்து காய்ந்து சருகுகளாக உதிர்ந்துவிடும்.
இணையாளர்களின் பாலுறவு உரிமைக்கும் சமூக லட்சியங்களுக்கும் சுதந்திரமானக் காதல் மட்டுமே ஆதாரமாக இருக்கும்!
காதலர்கள் பெற்றெடுக்கின்ற புதியத்தலைமுறைகளாகிய குழந்தைகள், அடிமைத்தனமற்றப் பொன்னுலகை நிச்சயம் எட்டுவார்கள்!
காதலித்து திருமணம் செய்கின்ற இணையாளர்கள் சமூகவிஞ்ஞான லட்சியங்களைச் சாதிக்காமல் விடமாட்டார்கள். காதலின் வரலாற்று நோக்கம் நிச்சயம் வெல்லும்!
துணை செய்தவை
1. சிவக்குமார்,கே.2016. தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு. முனைவர் பட்ட ஆய்வேடு. புதுச்சேரி : புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம். https://puthiyavansiva.blogspot.com/2016/10/blog-post_79.html
2. சிவக்குமார்,கே. மார்ச் 2014. ஆக்கமும் பெண்ணாலே. புதிய கோடாங்கி. பக். 36-38. https://puthiyavansiva.blogspot.com/2016/06/blog-post_33.html
3. சிவக்குமார்,கே. ஆகஸ்ட் 2016. பழங்குடிகளது ஆழ்மன உணர்நிலையில் தாய்தலைமை சமூகத்தின் எச்சம். உங்கள் நூலகம். பக்.81-85. http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-aug16/31423-2016-09-10-06-55-46
4. புதியவன். ஜுலை 2017. சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகள். புதியகோடாங்கி. பக்.30-33. https://puthiyavansiva.blogspot.com/2017/06/blog-post_89.html
5. புதியவன். 2014. நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம். கோயம்புத்தூர்: முகம் பதிப்பகம். https://puthiyavansiva.blogspot.com/2018/11/blog-post.html
6. புதியவன். மே 2016. காதல் வரலாறு. புதிய கோடாங்கி. பக். 20-25.
https://puthiyavansiva.blogspot.in/2016/06/blog-post_71.html
7. புதியவன். டிசம்பர் 2016. காதலிலிருந்து கடவுள்வரை. புதிய கோடாங்கி. பக். 29-37. https://puthiyavansiva.blogspot.com/2016/11/blog-post.html
8. புதியவன்.மார்ச் 2015. அறிவெனும் பெரும்பசி. ஊடாட்டம் சமூக பண்பாடு அரசியல் பொருளாதார ஆய்விதழ். பக்.40-49. https://puthiyavansiva.blogspot.com/2016/06/blog-post_4.html
9. புதியவன்.ஜுன் 2015. அறிவெனும் பெரும்பசி. புதிய கோடாங்கி. பக். 30-37. https://puthiyavansiva.blogspot.com/2016/06/blog-post_4.html
10. புதியவன். 2018. சாதி ஸ்வாக. https://puthiyavansiva.blogspot.com/2018/01/blog-post_24.html
11. புதியவன். 2019. இந்தியாவில் சாதிகளின் சதி. https://puthiyavansiva.blogspot.com/2019/02/blog-post_18.html
12. புதியவன். 2018. சாதி-ஸ்வாக. https://puthiyavansiva.blogspot.com/2018/01/blog-post_24.html
13. புதியவன். 2019. புராதனம் முதல் சோசலிசம் வரை. https://puthiyavansiva.blogspot.com/2019/05/blog-post_27.html
14. புதியவன். 2019. அகண்ட பாரதத்தின் அகில பாசிசம்: மோடீசம். https://puthiyavansiva.blogspot.com/2019/06/blog-post.html
15. புதியவன். 2017. சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகள். புதிய கோடாங்கி. பக். 29-37. https://puthiyavansiva.blogspot.com/2017/06/blog-post_89.html
16. எங்கெல்ஸ், பிரெடெரிக். 2011(2008). குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
17. எங்கெல்ஸ், பிரெடெரிக். 2008. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம். மதுரை : கருத்து=பட்டறை.
18. எங்கெல்ஸ், பிரெடெரிக். 2012. மனிதக்குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம். சென்னை: பாரதி புத்தகாலயம்.
19. கைலாசபதி, க. 1987(1968). தமிழ் நாவல் இலக்கியம். திறனாய்வுக் கட்டுரைகள். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
20. கைலாசபதி, க.2009(2002). சமூகவியலும் இலக்கியமும். சென்னை: குமரன் பப்ளிகேஷன்ஸ்.
21. கோபட்கந்தி. 2014. சுதந்திரமும் மக்கள் விடுதலையும். கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.
22. சிவத்தம்பி,கா. 2010. நவீனத்துவம்-தமிழ்-பின்நவீனத்துவம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
23. சிவத்தம்பி,கா. 1988(1978). நாவலும் வாழ்க்கையும். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
24. சிவத்தம்பி,கா. 1988. தமிழ் இலக்கிய வரலாறு வரலாறெழுதியல் ஆய்வு. சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
25. சிவத்தம்பி,கா. 2011. தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும். சென்னை: பாவை பதிப்பகம்.
26. சிவத்தம்பி,கா. 2011. இலக்கியமும் கருத்துநிலையும். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
27. ஷாலினி. செப்.2018. இன்றைய சூழலில் ஆண் குழந்தை வளர்ப்பு. https://www.youtube.com/watch?v=em7H68_2j-E
28. ஷாலினி. பிப்.2018. கடவுளை விமர்சிக்கக் கூடாதா? https://www.youtube.com/watch?v=yJhDhV_lkWc
29. ராகுல் சாங்கிருத்யாயன். 2003(1949). வால்காவிலிருந்து கங்கை வரை. சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
30. ராகுல் சாங்கிருத்யாயன். 1999(1946). பொதுவுடைமைதான் என்ன?. சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
31. ஜார்ஜ்தாம்சம். 2002. மனித சமூக சாரம். விழுப்புரம்: சரவணபாலு பதிப்பகம்.
32. ஜார்ஜ்தாம்சம். 2005. மனித சாரம். கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.
33. ஸ்டாலின்,ஜே.வி. 2017.மார்க்சியமும் மொழியியலும். சென்னை: புதுமை பதிப்பகம்.
34. பக்தவத்சல பாரதி. 2003(1990). பண்பாட்டு மானிடவியல். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
35. பக்தவத்சல பாரதி. 2005. மானிடவியல் கோட்பாடுகள். புதுச்சேரி: வல்லினம் பதிப்பகம்.
36. பக்தவத்சல பாரதி. 2014. இலக்கிய மானிடவியல். புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
37. பக்தவத்சல பாரதி. 2002. தமிழர் மானிடவியல். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
38. பக்தவத்சல பாரதி. 2013 (2007). தமிழகப் பழங்குடிகள். புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
39. பொற்கோ- இலக்கிய அறிவியல். http://www.ulakaththamizh.org/JOTSArticle.aspx?id=387
40. மாசேதுங். 1995(1951). கலையும் இலக்கியமும். சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
41. ஸ்டாலின்,ஜே.வி.2013. இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்று பொருள்முதல் வாதமும். சென்னை: கீழைக்காற்று.
42. மருதையன். நவ.2017. மூலதனம்150வது ஆண்டு சிறப்புரை. வினவு: https://www.youtube.com/watch?v=llzgMJLriVk&t=1169s
43. மருதையன். மார்ச்.2019. பாசிசத்தின் இயற்கை கூட்டாளிதான் பா.ஜ.க. வினவு: https://www.youtube.com/watch?v=F2G-tl27Nug
44. பெரியார். 2017. பெரியார் இன்றும் என்றும். கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.
45. (அப்துல்.நவ.2017.தொழில்துறை முதலாளிகள் பிறந்த கதை. புதியஜனநாயகம். பக்.4-12)
46. துரைசண்முகம். ஏப்.2016. யாருக்கான அரசு லெனினோடு பேசு. வினவு: https://www.vinavu.com/2016/04/22/lenin-on-state/
47. தேவிபிரசாத்சட்டோபாத்யாயா (தமிழில் எஸ்.தோதாத்ரி). 2010. உலகாயதம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
48. காதல் (வர்க்கம், சாதி, மதம், ஆணாதிக்கம்) – கீழைக்காற்று பதிப்பகம்.
49. சாதி மறுப்பில் காதல் – அருணன், ச.தமிழ்ச் செல்வன், ஆதவன் தீட்சண்யா. வெளியீடு -த.மு.எ.க.ச.
50. நமக்கான குடும்பம் – ச.தமிழ்ச் செல்வன் – பாரதி புத்தகாலயம்.
puthiyavan1986@gmail.com