பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமாய் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருப்பன சங்க இலக்கியங்கள். தமிழின் செழுமைக்கு மட்டும் சான்றாய் நிற்காது பன்முகப்பதிவுகளைத் தன்னகத்தே கொண்டன இவ்விலக்கியங்கள் என்பது கூடுதல் சிறப்பு. அவற்றிலும் ஒரு காலச் சமூகத்தை அடையாளம் காட்டும் அற்புத இலக்கியங்கள். இதில் காணக்கிடப்பன பல. அவற்றுள் ஒன்று அக்காலத்திய சடங்குமுறைகளும் அதில் பெண்களுக்கான பங்களிப்பும் குறித்தது. பெண்ணியக்கோட்பாடு வேரூன்றி மரமாகி நிற்கும் இக்காலச்சூழலில் ஒவ்வொரு காலத்திய பெண்கள் பற்றிய பதிவுகளை, அவர்களுக்கானச் சமூகச் சூழலை இலக்கியங்களே வெளிப்படுத்தி நிற்கின்றன. அவ்வகையில் சங்ககால இலக்கியங்களில் வழி அறியலாகும் சடங்குகள் குறித்தும் அவற்றுள் பெண்கள் குறித்த சமூகநிலைப்பாடும் இங்கு ஆய்வுக்கு உரியதாகிறது.
சங்ககாலச் சடங்குகள்
வழிபாடுகளும் சகுனங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் மக்களின் வாழ்வில் சங்ககாலம் தொட்டு இயைந்த ஒன்றாக உள்ளமையை இலக்கியங்கள் வழி அறிய முடிகின்றன.
‘அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசையின் வண்டார்ப்ப நெல்லொடு
நாழிகொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெருமுதுபெண்டிர் விரிச்சி நிற்ப’(முல்லைப்பாட்டு 7-11)
என்று முல்லைப்பாட்டு மக்களின் வழிபாடு மற்றும் நம்பிக்கை குறித்துச் சுட்டுகிறது. நெல்லையும் மலரையும் தூவி வழிபட்ட முறைமைகளையும் எந்தவொரு நிகழ்வையும் நிகழ்த்தும் முன்னர் நற்சொல் கேட்டு நடத்தும் நம்பிக்கையையும் பண்டைய மக்கள் வாழ்வில் பின்பற்றியமை குறித்து இவ்வடிகளின் வழி அறியமுடிகின்றது.
இத்தகைய இறைவழிபாட்டுச் சடங்குகளுக்கு நடுவில் நோக்கப்படுவது ‘பெருமுதுபெண்டிர்’ என்பதனையே. நம்பிக்கை சார்ந்த நிகழ்வுகளில் பெண்களின் பங்களிப்பு பெரும்பாலும் இருப்பதனை இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றன. இனக்குழுச் சமூகத்தில் குறிப்பாகச் சடங்குகளே முக்கியத்துவம் பெற்றன. அவையே சமுதாயம் உருவாக்கிய மதிப்புகளை உறுதிசெய்தன. வழிபடுதல், பலிகொடுத்தல், கூடியிருத்தல் என சமூக ஒருங்கிணைப்பை மையமாகக்கொண்ட இனக்குழுச் சமூகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் இருந்தமையை உணரமுடிகின்றது.
இறைவழிபாட்டுச் சடங்கைப் பெண்கள் முன்னின்று நடத்தியமையைத் திருமுருகாற்றுப்படையில் காணமுடிகின்றது. முல்லைப்பாட்டிலும் ‘மலர்களைத் தூவி கைதொழுது விரிச்சி கேட்கப்’ பெருமுது பெண்டிரே நின்றமையும் குறிக்கத்தக்கது. பெண்களை மையமிட்ட இத்தகைய ஏற்பு ஒருபுறம் பதிவிடப்பட அதே சமூகத்தில் சில சடங்குகளில் பெண்கள் விலக்கப்பட்டமையும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெண்களுக்கான சமூக மதிப்பு வரைவிற்குப் பின் இருவேறு நிலைப்பாடுடையதாகின்றன. சமூகத்தில் நிலவிய சடங்குகளில் குடும்பம் சார்ந்த தகுதியே முக்கியத்துவம் பெறுகிறது. மணமான பெண்கள் சடங்குகளில் முன்னிறுத்தப்பட்டுள்ளனர். அதே பெண்கள் கணவன் உடன் இல்லாத சூழலிலோ அல்லது இறந்துபட்டச் சூழலிலோ சமூகத்தில் ஒதுக்கப்பட்ட கொடுமையும் இருந்ததிற்கான சான்றும் இலக்கியங்கள் வழி பெறப்படுகின்றது.
பண்டைத்தமிழர்கள் வாழ்வில் களவு கற்பு என இருவொழுக்கங்களைக் கொண்டுள்ளனர். திருமணம் என்ற சடங்கு இல்லாத இல்வாழ்க்கை குறித்துத் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது. பின் இந்நிலையில் பொய்ம்மையும் வழுவும் தோன்ற சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக உருவாக்கப்பட்டத் திருமணம் என்ற சடங்கு குறித்து இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.
பொருத்தம் பார்த்தல், மணநாள் குறித்தல், பிறருக்கு அறிவித்தல், அலங்கரித்தல், சிறப்பு இறை வழிபாடுகள், மங்கல ஒலி எழுப்புதல் போன்றன திருமணச் சடங்குகளாக விளங்கியதும் இலக்கியங்கள் வழி அறியப்படும் செய்திகளாகும். இத்தகைய மங்கலச் சடங்குகளில் மணமாகிய பெண்கள் ஏற்கப்பட்;டமைக்கு உதாரணமாகத் திருமணச் சடங்குகள் குறித்த அகநானூற்றுப் பாடலைச் சுட்டலாம்.
சமூக ஏற்பு
வாயில் மறுத்த தோழியிடத்துத் தலைவன் தலைமகளைத் தான் கூடி இன்புற்றிருந்த நிகழ்வினை நினைவுபடுத்திக் கூறுவதாக அமைந்த பாடலொன்று
‘உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப நிரைகால்…’(அகம்:86)
எனச்செல்லும் ‘நல்லாவூர் கிழாரின்’ இப்பாடல் திருமணச் சடங்கு முறைகள் குறித்து விரித்துச் சுட்டும் பாடலாகும். திருமணத்திற்கு நல்லநாள் பார்த்தல், பந்தல் அமைத்தல், வந்தோருக்கு உணவு அளித்தல், மாலைகள் சூடி அழகு செய்தல் எனத்தொடங்கி தனியறையில் கூடி மகிழ்ந்தமை வரை அனைத்தும் இப்பாடலுள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சடங்கு முறைகளில் பெண்களுக்கான முக்கியத்துவம் இருந்தமையை
‘கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடுஇல் விழுப் புகழ் நாள் தலைவந்தென
உச்சிக்குடத்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம்;பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ்வயிற்று
வால் இழை மகளிர் நால்வர்கூடி
கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!” என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல்மணம் கழிந்த பின்றை
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேர் இற்கிழத்தி ஆக எனத் தமர் தர’(அகம் 86)
என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன. மணம் செய்து வைக்கத் தகுதிப்பாடுடையவர்களை ‘முதுசெம் பெண்டிர்’ என்றழைத்துள்ளனர். இம் மங்கல மகளிர்கள் தலையில் நிறை நீர்க்குடத்தினைச் சுமந்து அகன்ற கலத்தினை கையிலேந்தி ஒருங்கு கூடவேண்டும். பின்னர் மணச் சடங்கிற்குத் தேவையானவற்றை முறையாக அவர்களே ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துத் தரவேண்டும் என்ற மரபு பின்பற்றப்பட்டுள்ளது.
மேலும் ‘புதல்வற் பயந்த’ மகளிர் நால்வர் கூடி நெல்லையும் மலரையும் தூவி மணமக்களை வாழ்த்த வேண்டும். பின்னர் திருமணச் சடங்குகள் நிறைவு செய்தவுடன் ‘பெருமனைக்கிழத்தி ஆவாய்’ எனத் தலைவனுடன் தலைவியைத் தனியறையுள் கூட்டவேண்டும் என்பது வரையான பதிவுகள் திருமணமான பெண்கள் சடங்குகளில் பெறும் இடத்தைச் சுட்டுகிறது.
இப்பாடல் திருமணமானவர்கள், நீண்ட நாள்கள் கணவனும் மனைவியுமாய் இல்லறத்து வாழ்பவர்கள், புதல்வனைப் பெற்றவர்கள் மங்கல மகளிர் எனப் பெருமதிப்புப்பெற்றமையை உணர்த்துகிறது. இல்லறம் என்பது சமூகத்தில் போற்றப் பெற்றலையும், அவற்றுள் மணமான முதுபெண்டிரே சடங்குகளுக்கு உரியவர்களாக இருத்தலையும் குறிப்பாக புதல்வனைப் பெற்ற பெண்களே முன்னிறுத்தப்பட்டமையும் இங்கு அறியப்படுகிறது.
ஆண்மகனுக்கான முக்கியத்துவம், தந்தைவழிச் சமூக மாற்றம் மற்றும் பெண்கள் நிலையையும் இவ்வடிகள் உணர்த்துகின்றன. அவ்வாறெனில் கணவனை இழந்த பெண்கள், குழந்தைப்பேறு பெறாத பெண்கள், புதல்வனைப் பெறா பெண்கள் இதுபோன்ற நற்சடங்குகளில் விலக்கப்பட்டனரா என்ற வினாவிற்கு நேரடியான விடையில்லாத போதும் சமூகத்தில் அவர்களுக்கான கட்டுப்பாடுகள், சடங்குகள் வரையறுக்கப்பட்டிருந்தமையும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிக்கத்தக்கது.
சமூக மறுப்பு
பெண்களில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவன் இன்றி கைம்மை நோற்றப்பெண்கள் என்ற இருநிலை காணலாம். இப்பெண்கள் இவ்வாறிருக்கவேண்டும் என்ற வரையறைகள் இருந்துள்ளன. இத்தகைய விலக்குதல்களால் வாழ்வினை வெறுத்துக் கூறும் சங்கப்பாடல்கள் சமூகத்தில் மறுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பெண்களின் மனநிலையைச் சுட்டுவதாய் உள்ளன.
கோவலனை நோக்கி ‘போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ என்றுரைக்கும் கண்ணகி அவன் தன்னைவிட்டுச் சென்றமையால்
‘அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும்’
(சிலம்பு:மதுரை:கொலைக்களக்காதை 71-73)
இழந்ததாகக் கூறுவது இங்கு நோக்கத்தக்கது. இது பெண்கள் குறித்த ஒரு சமூகப்பின்னணியைச் சுட்டுகிறது. கைம்பெண்கள் நிலை இதனை விட அவலமானது. மங்கல மகளிர் அல்லர் என்ற மறுப்பு ஒருபுறம் இருக்க அவர்கள் மேற்கொள்ளவேண்டிய கைம்மைச் சடங்குகள் இருப்பதை விட உயிர் நீத்தலே சாலச்சிறந்தது என்ற எண்ணம் தருவனவாக இருந்ததைக் காணமுடிகின்றது.
பூதப்பாண்டியன் இறந்ததும் உயிர் விடத்துணிந்த கோப்பெரும்பெண்டு கைம்மைத்துயர் பற்றிக் குறிப்பிடும் புறநானூற்றுப் பாடலொன்று.
‘அணில் வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடை இடைக் கிடந்த கைபிழி பண்டம்
வெள்எட் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆக
பரற் பெய்பள்ளிப் பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுகதில்ல எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென’(புறம்246)
என்பதாகும். ‘கணவனை இழந்த பெண்கள் பாயின்றிப்படுக்கவேண்டும், உப்பில்லா உணவை உண்ணவேண்டும் போன்ற வரையறைகளைச் சுட்டி இத்தகைய நோன்பால் வருந்தும் பெண்டிராக யாம் இருக்கமாட்டோம்’ என்னும் இக்கூற்று கைம்பெண்களுக்கான துயரையும் சமூகத்தில் அவர்களுக்கான கட்டுப்பாடுகளையும் எடுத்துக்காட்டுகிறது.
இத்தகைய பெண்கள் எங்கும் யாரையும் வாழ்த்தியதாகவோ நல்ல நிகழ்வுகளில் கலந்துகொண்டதாகவோ பதிவுகள் இல்லை என்பதும் குறிக்கத்தக்கது. மேலும் கைம்மையில் இழை, வளை, தொடி களையப்படுதல், மலர்நீக்குதல் போன்ற கைம்மைச் சடங்குகள் பின்பற்றப்பட்டுள்ளமையும் பாடல்கள் வழி அறியப்படுகிறது.
ஒரு புறம் முதுபெண்டிராகவும் மறுபுறம் கைம்பெண்களாகவும் சடங்குகளில் முன்னிறுத்தப்பட்டுள்ளனர். அகநானூறும், புறநானூறும் சங்ககாலத்தில் காணப்பட்ட சடங்குகளுக்கும் அவற்றுள் போற்றப்பட்ட விலக்கப்பட்ட பெண்களுக்கும் சான்று காட்டி நிற்கின்றன.
இனக்குழுச் சமுதாயத்தில் சடங்கே வாழ்க்கையாகவும் வாழ்க்கையே சடங்காகவும் அமைந்தன என்பதும் அச்சடங்குகளே இனக்குழுச் சமுதாயத்தை இயக்கின, இணைத்தன, சமுதாயம் உருவாக்கிய மதிப்புகளை உறுதி செய்தன என்றும் திறனாய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர். அவ்வகையில் சமுதாயத்தில் நிலவிய சடங்குகளைப் பதிவு செய்த சங்க இலக்கியங்கள் அச்சடங்குகளில் பெண்களுக்கான ஏற்பையும் மறுப்பையும் பதிவிட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தந்தைவழிச் சமூக மாற்றம், பெண்கள் மீதான வரையறைகள் கட்டுப்பாடுகள் போன்றனவற்றைப் பதிவிட்ட சங்கஇலக்கியங்களும் புலவர் பெருமக்களும் போற்றுதலுக்குரியவர்கள். இவை சமூகப்பதிவு மட்டுமல்ல சமூக மாற்றம் நோக்கிய மனஉணர்வும் கூட.
துணை நின்றவை:
1. சங்க இலக்கியங்கள்(2004)(மூலமும் உரையும்),நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை
2. அடியார்க்கு நல்லார் உரை,(1920) சிலப்பதிகாரம்(மூலமும் உரையும்),.கமர்ஷியல் அச்சுக்கூடம்,சென்னை.
3. அஜிதா.பி.எஸ்(2009) ‘சரிபாதி பெண்கள் சமமானவர்கள் தானா?’,பாரதி புத்தகாலயம்,சென்னை.
4. அன்னிதாமசு.ஈ(2000) ‘தமிழக மகளிரியல்’உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை.
5. அரங்க மல்லிகா (2009) தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்’, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை
6. உமா சந்திரன்(1984) ‘பெண்ணுக்கு நீதி’ வானதி பதிப்பகம்,சென்னை.
7. கணேசலிங்கன்(2001)’பெண்ணடிமை தீர’,குமரன் பப்ளிசர்ஸ்,சென்னை
8. சுசீலா .எம்.ஏ,(2006)தமிழிலக்கிய வெளியில் பெண் மொழியும் பெண்ணும்’,மீனாட்சி புத்தகநிலையம்,மதுரை.
9. மகா தேவன்.ச, சங்க காலப் பெண்பாற் புலவர்களின் உயரிய ஆளுமைகள், ஆய்வுக் கட்டுரை, இணையத் தரவு,
இணைய முகவரிகள்:
www.keetru.com
tamildigitallibrary.in
www.mahatamil.com.
sumuyogi@gmail.com
* கட்டுரையாளர்: முனைவர் மு.சுதா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3