[ பதிவுகள் ஜூன் 2004 இதழ் 54 இதழில் வெளியான கட்டுரை.-] இன்று பெண்மொழி, பெண்களின் எழுத்து என்பன பரவலாகப் பேசப்படுகிறது. அவை குறித்த சர்ச்சைகளும், விவாதங்களும் பரவலாக இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் மைதிலியின் ‘இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்’ என்ற நு¡ல் வெளிவந்திருக்கிறது. சல்மாவின் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ மாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி’ மற்றும் குட்டிரேவதியின் ‘முலைகள்’ தொகுப்பைத் தொடர்ந்து பெண்களின் வெளிப்படையான எழுத்துத் தொடர்பாய் சர்ச்சைகள் வெகுசன ஊடகங்களிலும் சிற்றிதழ்களிலும் இடம்பெற்று வருகிறது. அடக்குமுறை சார்ந்த வாழ்வின் வலியைச் சொல்லும் சல்மாவின் ‘ஒப்பந்தம்’ என்ற கவிதையில் கூட
‘எல்லா அறிதல்களுடனும்
விரிகிறதென் யோனி’
என்ற இறுதி வரிகளையே பத்திரிகைகளில் எடுத்துப் போட்டிருந்தார்கள். அதனு¡டாக சர்ச்சையில் குளிர்காயும் ஒரு வியாபாரத் தன்மைதான் தென்படுகிறது. ‘காமத்துப்பால் கவிதைகள்’ என்ற தலைப்பில் இந்தியா ருடே எடுத்துப் போட்டிருக்கிறது. இவற்றிலெல்லாம் மிகுந்த அக்கறையுடன் ஊடகங்கள் செயற்ப்பட்டு வருகின்றன. ‘முலைகள்’ போன்ற பெண்களின் தொகுப்புக்களுக்கான விமர்சனங்களைப் பார்க்கையில், முலைகள் யோனி போன்றவைகள் ஆண்களுக்குச் சொந்தமானது போலவும் அவர்கள்தான் அதைப்பற்றி எழுத முடியும் என்பது போலவும் இருக்கிறது. சமகால சூழல் இப்படியிருக்க, ஈழத்தில், தொண்ணு¡றுகளிலேயே வெளிப்படைத் தன்மை கொண்ட கவிதைகளை மைதிலி எழுதியுள்ளார்.
‘எல்லாம் முடிந்து
அமைதியாய் து¡ங்குகிறான் அருகே
என் இத்தனை நாளைய
காதலும் கனிவும்
இதந்தரு மென்னுணர்வுகளும்
பொங்கியெழுந்த குறியின்முன்
ஒழுகிக் கிடக்கிறது
கட்டிலின் கீழே’
(பொருள், பக்-42)
‘இப்போது எஞ்சியிருப்பது
களைப்படைந்த முகம்
குறிதேடியலையும் கண்களால்
சலிப்படைந்துபோன
சிறுமென் இதயம்
யோனி முலைகளற்ற பெண்ணை
யாரும் காதல் கொள்வாரா?’
(தினந்தோறும், பக-65)
‘கோபம்
உன் குறியைச்
சூம்பவைத்து விடுகிறது’
(பின்னரும், பக்-62)
போன்ற கவிதை வரிகளை எந்த வலிந்தெழுதும் தொனியுமற்று 1989-91களில் எழுதியுள்ளார். மைதிலியின், 2001, 2002, 2003 இல் எழுதிய இறுதி மூன்று கவிதைகள் மட்டுமே புலம்பெயர்வுக்குப் பின் எழுதப்பட்டுள்ளது. மற்றைய முப்பத்தி எட்டுக் கவிதைகளும் ஈழத்தில் எழுதப்பட்டு, பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் வெளியாகியுள்ளன. மைதிலி, மைதிலி அருளையாவாகவும் கொற்றவை என்ற புனைபெயரிலும், கவிதைகள் எழுதியவர். விடுதலைப் போராட்டம், பெண்விடுதலை போன்றவை நேரடியாக விவாதிக்கப்பட்ட சூழலில் இருந்து வந்தவர். ரஸ்ய எழுத்துக்களில் கொண்ட ஈடுபாடும் பரவலான வாசிப்புமே இவரது படைப்பாளுமையை வளர்த்திருக்கிறது. நல்ல வாசிப்பும் தேடலும் இவரது கவிதைகளை நேர்த்தியாகவும் இறுக்கமாகவும் கட்டி இருக்கிறது. ரஸ்ய இலக்கியங்களில் குறிப்பாக அனா அகமத்தோவாவின் தாக்கம் இவரது கவிதைகளில் தெரிகிறது.
‘அது உண்மைதான
எனக்குத்தெரியும
உறவுகள் சாசுவதமானவையல்ல’
என்ற மைதிலியின் வரிகளும்
‘அது உண்மையல்ல,
உனக்கு இணை யாருமில்லை’
என்ற அகமத்தோவாவின் வரியும் ஒத்திருக்கின்றன.
1988 இல் திசையில் எழுதிய கவிதைகளில் உள்ள மொழி ஆளுமையும், கவித்துவமும் 2003 இல் எழுதிய கவிதைகளிலும் இருக்கிறது. பல பெண் கவிஞர்கள் எழுதாது போய் விட்ட சூழலில் இவர் தொடர்ந்தும் அதே ஆளுமையோடு இயங்குகிறார்.
உரிய காலத்தில் பதிப்பிக்காமல் போனதால் இத் தொகுப்பிற்கு உரிய கவனம் பெறாமற் போக வாய்ப்புள்ளது. தமிழகப் பெண் கவிஞர்கள் இன்று எதிர்கொள்ளும் எந்தக் குற்றச்சாட்டுமின்றி தனது கோபம், வருத்தம், தனிமை, போன்ற உணர்வுகளுக்குரிய இயல்புடன் காமத்தையும் எழுதியுள்ளார். இன்று சல்மா, மாலதி மைத்ரி போன்றோரின் படைப்புக்களே பேசப்படுகின்றன. மைதிலியின் தொகுப்பின் தாமதமான வருகையால் இவர்களுக்கு பின்னாலேயே மைதிலி பார்க்கப்படுவார். எனினும் மைதிலி, ஆழியாள், கர்சியா போன்றோர்க்கென ஒரு தனிப்பாணி இருக்கிறது அது எந்த இந்தியக் கவிஞர்களின் பாணியையும் கொண்டிருப்பதில்லை.
நீண்ட ஆண்டுகளின் பின் மிகுந்த கவனக்குறைவுடன் இப் புத்தகம் வந்திருக்கிறது. எழுதிய உடனே எந்தத் திருத்தமுமின்றி பத்திரிகையில் பிரசுரிக்க அனுப்பும் படைப்பாளிகளுள் மைதிலியின் 1988 முதல் 2004 வரையிலான கால இடைவெளி மிக நீண்ட காலம். இதுவே இவரது படைப்பின் பலமும் பலவீனமும் ஆகும். காலச்சுவடு அட்டை மற்றும் அச்சுக் கோர்ப்பில் பாரிய கவனம் இன்றி வெளியிட்டுள்ளது. இது தாமதமாக வெளிவரும் ஒரு படைப்பாளியின் தொகுப்புக்கு கொடுக்க வேண்டிய கவனத்தை குறைத்து, அளவுக்கதிகமான மந்தமான உணர்வை உண்டு பண்ணுகிறது.
மைதிலியின் தலைப்புக்கள் கவிதைகளுக்கு பொருத்தமில்லாது இருக்கிறது. குறிப்பாக ‘பொருள்’ என்று ஒரு கவிதைக்கு தலைப்பிட்டுள்ளார், தலைப்புக்கும் கவிதைக்குமான தொடர்பு இருப்பதாய் தெரியவில்லை. தலைப்புகள் கட்டாயம் போட வேண்டும் என்பதற்காக போடப்பட்டிருக்கிறது. பெண்களின் தொகுப்புக்கான அட்டைப் படத்தைப் பொறுத்தளவில், அதிக கவனமின்றி பெண்குறி மற்றும் மார்பகங்களை அட்டையில் போட்டுவிடுவதோடு, பதிப்பகத்தாரின் வேலை முடிந்துவிடுகிறது. 1984 ம் ஆண்டு எம்.ஏ.நுகமான், அ. யேசுராசா ஆகியோரால் தொகுக்கப்பட்ட ‘பதினொரு ஈழத்துக்கவிஞர்கள்’ என்ற கவிதைத் தொகுப்பில் எல்லோரும் ஆண்களே. பல பெண் படைப்பாளிகளின் வருகையால், இனி வரும் தொகுப்புக்களில் பெண் கவிஞர்களின் படைப்பின்றி ஒரு தொகுப்பு வெளிவரும் என்று தோன்றவில்லை.
பெண்களின் படைப்புக்களும்! அது சார்ந்த விமர்சனங்களும்!
காலச்சுவடில் பிரம்மராஜன் குட்டிரேவதியின் ‘முலைகள்’ தொகுப்புக்கான மதிப்புரையில் (காலச்சுவடு யூலை-கஸ்ட் 2003) எப்படி கவிதை எழுத வேண்டும் என்பது முதல் முலைகள் வெறும் மாறுபட்ட வியர்வைச் சுரப்பி தான் என்றும் அதற்கேன் முக்கியம் என்ற ரீதியில் எழுதியுள்ளார். அவரும் வெகுசன ஊடகங்களும் வெவ்வேறு வகையில் குட்டி ரேவதி அப்படியொரு தலைப்பை தனது தொகுப்புக்கு இட்டதை கேள்விக்குட்படுத்தியிருந்தனர். இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் இல்லாமலே ஆழியாள், ரேவதி, சங்கரி போன்றவர்கள் பாலியல் உறவுசார் கவிதைகளை எழுதியுள்ளார்கள். அவை உரிய கவனத்தை இந்தியாவிலோ வெளிநாடுகளிலோ பெறவில்லை. கவனிப்புக்காக எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளாகவில்லை.
இன்று எல்லா எழுத்தாளர்களும் விரும்பியபடி மற்ற படைப்பாளிகளை பட்டியலிடுகிறார்கள். தெரிந்த சில பெயர்களை பட்டியலிட வேண்டும் என்பதற்காகவே பட்டியலிடகிறார்கள். பட்டியலிடும் போது, குறைந்தபட்சம் ‘இது என் வாசிப்புக்கு உட்பட்டது’ என்பதை தெளிவுபடுத்துவதில்லை. அப்படியொரு அபத்தமான பட்டியலிடலை, தமிழக விமர்சகர், கவிஞர் ராஜமார்த்தாண்டன் (காலச்சுவடு பெண்கள் சிறப்பிதழ்) ஈழத்தின் முக்கிய பெண் கவிஞர்கள் என ஊர்வசி, சங்கரி, ஒளவை போன்றோரைச் சொல்வது¡டாகக் செய்துள்ளார். மொழியாழுமை ஈழத்துப் பெண்கவிஞர்களை விடவும் தமிழக பெண்களுக்கு கை கூடி உள்ளதாக எழுதியுள்ளார். உரிய தேடல் இன்றி இப்படி மேலோட்டமான விமர்சனத்தை(?) வாசிப்பதூடாக ஈழத்துப் படைப்பாளிகள் மற்றும் படைப்புகள் குறித்ததான எவ்வித புரிதலை தமிழக வாசகர்களால் பெற முடியும்.
‘பறத்தல் அதன் சுதந்திரம்’ என்ற (இந்தியா, ஈழம்,மற்றும் புலம்பெயர்) பெண்களின் தொகுப்பில் சிவரமணியின் கவிதையை சன்மார்க்காவின் பெயரில் போட்டுள்ளார்கள். சித்ரலேகா மொளனகுரு ஒவ்வொருமுறையும் சிவரமணியின் கவிதையை, ‘கண்டெடுத்தேன்’ என அடிக்குறிப்பிட்டு தன் ‘பெண்’ சஞ்சிகையில் பிரசுரிப்பது போல் இந்த அயாக்கிரதையும் அவர்களது இலங்கை பெண் கவிஞைகளைப் பற்றிய அக்கறையின்மையையே காட்டுகிறது. இது பற்றி ஆழியாள் (காலச்சுவடு பெண்கள் சிறப்பிதழ் மே-யூன் 2003) விமர்சித்தபோது அதற்கு பதில் தந்த மாலதி மைத்ரி – க்ருசாங்கினி ஆகிய தொகுப்பாசிரியர்கள், தாங்கள் எடுத்துக் கொண்ட புத்தகத்தில் (சொல்லாத சேதிகள்-சிலிக்குயில் வெளியீடு, 1987, இரண்டாம் பதிப்பு) சன்மார்க்காவின் பெயரிலேயே ‘வையகத்தை வெற்றிகொள்ள’ என்ற கவிதை இருப்பதாகவும், கடந்த பதினைந்து ஆண்டுகளாக அப்படித்தான் இருக்கிறது, இந்த ஆள் மாறாட்டம் குறிந்து பதினைந்து ஆண்டுகளாக ஏன் யாருமே பேசவில்லை என்றும் கேட்டிருந்தார்கள். இவை தொகுப்பாசிரியர்களின் பொறுப்பீனத்தையே காட்டுகிறது. ஒரு படைப்பை தங்கள் தொகுப்புக்காக எடுக்கும்போது ஆராய்வது தொகுப்பாசிரியரின் கடமை அதை விடுத்து வந்தவற்றை அப்படியே பிரசுரிப்பது மீள்பிரசுரமே ஒழிய அது தொகுப்பாசிரியர்களின் வேலையில்லை. இவர்கள் இலகுவில் கிடைக்கக் கூடிய தாமரைச்செல்வி பதிப்பகத்தால் வந்த செல்வி சிவரமணி கவிதைகள் என்கிற தொகுப்பில் இருந்து இந்தக் கவிதைகளை எடுத்திருக்கலாம். அதைவிடுத்து 15 வருடங்களிற்கு பின்னோக்கிச் சென்று, எடுத்திருக்க வேண்டியதில்லை. மாலதி மைத்ரி போன்ற படைப்பாளிகளே இப்படி பொறுப்பில்லாது பதிலளிக்கையில் இனி வருபவர்கள் எப்படி எல்லாம் அசட்டையாக இருக்கப் போகிறார்களோ தெரியாது. இது சன்மார்க்காவின் கவிதையா அல்லது சிவரமணியின் கவிதையா என்பது சித்ரலேகா மெளனகுரு, சன்மார்க்கா போன்றவர்களாலேயே தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
பல ஆண் எழுத்தாளர்களுக்கு பெண்களின் எழுத்துக்களை வாசிப்பது விடுப்புப் பார்க்கும் தன்மையாகவே இருக்கிறது. என்ன எழுதியிருக்கிறார்கள், யாரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள், கணவனோடு இருக்கிறார்களா, ஏதாவது பிரச்சனையா, துணை தேடுகிறார்களா? தனித்திருக்கிறார்களா? திருப்தியில்லாமலிக்கிறார்களா? இது போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடித்தான் வாசிக்கிறார்கள், இது படைப்பைவிட அப் படைப்பாளியின் அந்தரங்கத்தை பார்க்க நினைக்கும் அல்ப்பத்தனமான பண்பையே காட்டுகிறது.
அவலட்சணமான
அந்த அறிவுஜீவிப் பெண்ணைப்
புணர்ந்தேன்.
தணிந்தது
அறிவைப் புணரும் வேட்கை
(மகுடேஸ்வரன, யாரோ ஒருத்தியின் நடனம்)
ஒரு ஆண் கவிஞரின் தொகுப்பில், இப்படி ஒரு கவிதை வெளிவந்திருந்தது. இப்படியான வன்முறையான வக்கிரமான ஆணாதிக்க சிந்தனையுள்ள இந்தக் கவிதைகளை எதிர்க்காத இந்தப் படைப்பாளிகள், பெண்கள் தங்கள் உறுப்புக்களைப் பற்றி தாங்களே எழுதும் போது வந்து விடுகிறார்கள். பிரம்மராஜன் அவர்கள் காலச்சுவடு இதழில் எப்படி கவிதை எழுத வேண்டும் என்று குட்டி ரேவதிக்கு பாடம் எடுக்கிறார், இன்னும் கொஞ்சம் மேலே போய் மார்பகங்கள் வெறும் வேர்வைச் சுரப்பிதான் என்று ஒரு உயிரியல் பாடத்தையே தனது மதிப்புரையில் நிகழ்த்துகிறார். இவைகள் பாரபட்சமான தன்மையே காட்டுகிறது. இந்தமாதிரியான விமர்சனங்களை விடுத்து நல்ல ஆரோக்கியமான விமர்சனங்கள் தமிழ் சூழலில் வரவேண்டும். விமர்சனங்கள் வரையறைகளுக்குள் கட்டுப்பட வேண்டியதில்லை.
பதிவுகள் ஜூன் 2004 இதழ் 54