இரு கவிதைகள்: விழிப்புடன் இருக்க வேண்டும் ! & என்றுமே விரும்பி நான் இருக்கின்றேன் !

- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -மண்ணிலே வாழ்கின்ற மனிதரெல்லாம்  நாளும்
வாய்மையை போற்றியே வாழவேண்டும்  அவர்
கண்ணாலே பார்க்கின்ற காட்சிகளை   என்றும்
கருத்துடன் மனமதில் இருத்த  வேண்டும் !

பெண்மையை பழிக்கின்ற செயல்களை என்றுமே
மண்ணுக்குள் புதைந்திட செய்யவேண்டும் நிதம்
புண்படும் வகையிலே பேசிடும் போக்கினை
புறமெனத் தள்ளியே விடுதல் வேண்டும்  !

அன்புடன்  பேசிடும்  ஆற்றலை  யாவரும்
அகமதில் இருத்திட விரும்ப  வேண்டும்
அறமதை செய்திட  நினைத்திடும் பாங்கினை
அனைவரும் ஏற்றிட  முனைதல் வேண்டும்   !

துட்டராய் இருப்பாரை காணாது  என்றுமே
தூங்காமல் விழிப்புடன் இருத்தல் வேண்டும்
முட்டியே மோதிடும் குணமதை வாழ்க்கையில்
வெட்டியே எறிந்துமே நிற்றல் வேண்டும்   !


2.  என்றுமே விரும்பி நான்  இருக்கின்றேன் !

கற்றிடும் நூல்களால் பெற்றிடும் பயனினை
நற்றுணை என்று நான்
நினைக்கின்றேன்
மற்றவர் முகமதில் மகிழ்ச்சியை
கண்டிட
நித்தமும் விரும்பி நான்
இருக்கின்றேன் !

சொற்களை என்றுமே இனிமையாய்
பேசிட
எண்ணி நான் சொற்களைத்
தேடுவேன்
அடுத்தவர் மனத்தினில் அமர்ந்திடும்
சொற்களால்
அவர் அகம் நிறைந்திட்டால்
மகிழுவேன் !

வேற்றுமை காட்டிடும் சொற்களை
என்றுமே
விரும்பி நான் பார்ப்பது
இல்லையே
சாற்றிடும் அத்தனை சொற்களும்
நாளுமே
சங்கடம் வரா வண்ணம்
வழங்குவேன் !

வள்ளும் தந்திடும் கருத்தினை
நாளுமே
மனம் அதில் இருத்தியே
வாழ்கிறேன்
என்மனம் நிறைந்திடும் கருத்தினை
ஈய்ந்திட
என்றுமே  விரும்பி நான்
இருக்கிறேன் !

jeyaramiyer@yahoo.com.au
Jul. 25 at 10:47 p.m.