[ மகாஜனாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் பொ.கனகசபாபதி அவர்கள் டிசம்பர் 24.12.2014 அன்று , கனடாவில் காலமானார். அவரது மறைவினையொட்டி, ‘பதிவுகள்’ இணைய இதழின் நவம்பர் 2010 இதழ் 131 இதழில் வெளியான இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. இதனை எழுதியவர் எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி. அதிபர் கனகசபாபதி அவர்கள் கடந்த காலத்தில் தீரம் மிக்க செயல்வீரர்களிலொருவராகவும் இருந்து வந்துள்ளாரென்பதை அவரது முன்னாள் மாணவர்களில் ஒருவரான எழுத்தாளர் கருணாகரமூர்த்தியின் இக்கட்டுரையானது எமக்கு எடுத்துரைக்கின்றது. – பதிவுகள் ]
நீ வாழுங்காலத்தில் கண்டுபிரமித்த இன்னொரு மனிதனைச் சொல்லு என்றால் எனது கைகள் உடனடியாக என் அதிபர். திரு பொ.கனகசபாபதி அவர்கள் இருக்கும் திசையைத்தான் சுட்டும். என் ஆசானிடம் மூன்றே ஆண்டுகள்தான் மாணவனாகப் பயிலும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தாலும் நம் ஆயுள் முழுவதுக்கும் நண்பர்களாக வாழும் பாக்கியதை கொண்டோம். அவர் மானிடசமூகத்துக்கு ஆற்றிய பணிகள் எண்ணற்றவையாயினும் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக எமது புத்தூர் ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரியில் அதிபராகப் பணியாற்றிய காலத்தில் ஆற்றிய தலையாய, வீரம் செறிந்த ஒரு மகத்தான பணியை நினைவுகூர்ந்து போற்றுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
புத்தூர் என்பது கோப்பாய்தொகுதியில் வாதரவத்தை, ஆவரங்கால், நவற்கீரி, ஈவினை, ஏரந்தனை, சிறுப்பிட்டி, அம்போடை, புத்தர்கலட்டி, சொக்கதிடல், அந்திரானை, ஆகிய 10 சிற்றூர்களின் தொகுதியாகும். பத்தூர் என்பதுதான் மருவி புத்தூர் ஆனது என்போரும் உண்டு. அது 1970 களில் 80,000 குடும்பங்கள் வாழ்ந்த ஒரு பெருங்கிராமம். சதுர மைல் ஒன்றுக்கு 6000 குடிகள் என்றவகையில் இலங்கையிலேயே மக்கள் செறிவான கிராமங்களில் அதுவும் ஒன்று. ஒரு ’வகை’யான நிலவுடமை – மேட்டுக்குடி- ஆண்டான் அடிமை சமூக அமைப்பின் பெருந்தொட்டிலும், மாதிரியும் எமது கிராமம். புத்தூரில் எப்போது எந்த தேவதை மண்ணிறங்கிவந்து மேட்டுக்குடியினருக்குப் பட்டயம் எழுதிக்கொடுத்தாளோ தெரியவில்லை. அவ்வூரின் வளமான மண்ணின் பெரும்பகுதி அங்கேயுள்ள மேட்டுக்குடியினருக்கே சொந்தமாக இருந்தது; இருக்கிறது. இதனால் அம்மண்ணில் பிறக்க நேர்ந்த பஞ்சமர்கள் அந்நிலச் சுவாந்தர்களுக்குச் சொந்தமான நிலங்களில் வாழ்ந்து, அவர்களுடைய புலத்தில் அவர்களுக்கே உழைத்துத் தம் வாழ்க்கையை ஓட்டியதால் அவர்களை மீறி எதனையும் செய்யமாட்டாத ஒரு கையறுநிலையில் வாழ்க்கையை ஓட்டினார்கள். தீண்டப்படாதவர்களாக மேட்டுச்சமூகத்தால் கருதப்பட்ட அம்மக்கள் இதனால் கல்வியறிவின்றி வாழ நேரிட்டது. கல்வி அறிவில் குன்றிய அச்சமூகம் தாம் சுரண்டப்படுகிறோம் என்கிற பிரக்ஞை இன்றியே வாழ்வைத் தொடர்ந்ததும் பரிதாபம்.
ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியால் புத்தூர் அடைந்த இலாபங்கள் இரண்டு. அவர்களே 18ம் நூற்றாண்டில் இறுதியில் அங்கு மெதடிஸ்த ஆரோக்கியவாச வைத்தியசாலையையும், அதன் வளாகத்தில் பரி.லூகாஸ் தேவாலயத்தையும், எதிரில் மெதடிஸ்த மிஷனரிப் பாடசாலையும் ஸ்தாபனம் செய்தார்கள். அக்காலத்தில் மெதஸ்த கிறிஸ்தவ திருச்சபையால் மதமாற்றம் செய்யப்பட்ட மக்களையும் , பஞ்சமர்கள் அல்லது இப்போது தலித்துக்கள் என்று சொல்லப்படும் ஒடுக்கப்பட்ட மக்களையும் தமது கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலையில் அவர்கள் சேர்த்துப் பாடங்கள் புகட்டினார்கள். இதனால் மேட்டுக்குடிமக்கள் தம்பிள்ளைகளை அப்பாடசாலைக்கு அனுப்பிப் படிப்பதற்குப் பின்னடித்தார்கள். அப்படியும் அனுப்பப்பட்ட சில பிள்ளைகளுக்கு உட்கார வாங்குமேசைகள் வழங்கப்பட பஞ்சமர் குழந்தைகள் தரையில் தென்னக்கீற்றுக்களில் உட்கார வைக்கப்பட்டனர். பொருளாதார வளங்கொண்ட மேட்டுக்குடியினர் தமது பிள்ளைகளை யாழ்ப்பாணம், பருத்தித்துறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி, சுன்னாகம் ஆகிய நகரங்களுக்கு அனுப்பிக் கல்விபயில வைத்தார்கள்.
19ம் நூற்றாண்டில் தொடக்கப்பகுதியில் இந்நிலையை அவதானித்த, புதுவையூரார் மழவராயர் எனப்படும் புகையிலை வணிகரின் மகன் கந்தையா என்பவருக்கு புத்தூரில் ஒரு பள்ள்ளிக்கூடத்தை உருவாக்கவேண்டும் என்னும் நல்லெண்ணம் தீவிரமாக உருவாகியது. அவர் இன்னும் தில்லைநாதர், பொன்னம்பலம் என்னும் இரு புரவலர்களுடன் சேர்ந்து 1931 இல் ஸ்ரீ சோமாஸ்கந்தா தமிழ்சித்தியாலயம் என்கிற பாடசாலை ஸ்தாபித்தார். இலவசக்கல்வி பயிற்றுவிக்கப்பட்ட அப்பாடசாலையின் ஆரம்பகால முதல்வர்களாக திரு.சுந்தராச்சாரியாரும் அவரைத்தொடர்ந்து திரு. வி.வீரசிங்கம் (ஆனந்தசங்கரியின் தந்தை) அவர்களும் பணியாற்றினர். அவர் ஓய்வுபெற அதிபர் பதவியை ஏற்ற திரு குமாரசுவாமி அவர்கள் தன் வாழ்நாள் உழைப்பு அனைத்தையும் கல்லூரிக்கே அர்ப்பணித்தார். இப்பாடசாலை 1956 இல் அரசினால் சுவீகரிக்கப்பட்டது. தமிழும் ஆங்கிலமும் பயிற்றுமொழிகளாக இருந்த கல்லூரி அதிபர் திரு.சு.குமாரசுவாமி அவர்களின் அரிய உழைப்பினால் 1965 இல் ஸ்ரீ சோமஸ்கந்தாகல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டு அரசின் உதவியுடன் கல்லூரியின் ஆய்வுசாலைகள், நூல்நிலையம் என்பன விஸ்தரிக்கப்பட்டன..
அதிபர் திரு.குமாரசுவாமியின் சிறந்த சேவையினால் கல்விநிலையில் முதல் தரத்தை அடையவும் கல்விக்காக பிற நகரங்களை நாடிய மாணவர்கள் அக்கல்லூரியை நாடலாயினர். நாளடைவில் புத்தூர் மாணவர்களைவிடவும் நீர்வேலி, கோப்பாய், அச்சுவேலி, வசாவிழான், புன்னாலைக்கட்டுவன், மட்டுவிலாகிய அயல்கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் வந்து பயின்று பல்கலைக்கழகங்களினுள்ளும் புகலாயினர். ஆயினும் அவ் அதிபரும் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தா கல்லூரியில் அதன் தர்மகர்த்தாக்களை எதிர்த்துக்கொண்டு பஞ்சமர் குழந்தைகளை அனுமதிக்கத் தயங்கினார். அங்கே நடைமுறைப் படுத்தப்படும் சாதிப்பிரிவினையச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணிய அப்போதைய ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவின் அரசு 1966 இல் சொக்கதிடல் என்னும் பகுதியில் தலித்துக்களுக்காகவே பஞ்சசீல பௌத்த பாடசாலை எனும் ஒரு பௌத்தபாடசாலையை ஆரம்பித்தது. அங்கு மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியப்பணிபுரியக்கூட தலித்துக்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். சிங்களமும் பௌத்தமும் அங்கே ஒரு பாடமாகப் பயிற்றுவிக்கப்பட்டது.
மாவிட்டபுரம் கந்தசுவாமிகோவில் ஆலயப்பிரவேசப்போராட்டம், நிச்சாமம் சாதீயக்கலவரங்கள் துப்பாக்கிச்சூடுகள் அன்ன நிகழ்வுகள் யாப்பாணத்தமிழ்ச்சமூகத்தில் நடந்தேறிமுடிந்தாலும் அவைபற்றிய எந்தச் ஸ்மரணைகளுமற்று புத்தூரின் சாதியச்சமூகம் இயங்கிக்கொண்டிருந்தது ஒரு ஆச்சரியம். புத்தூர் ஸ்ரீசோமாஸ்கந்தா கல்லூரி தொடர்ந்தும் தனது சாதித் தூய்மையையும் பாகுபாட்டையும் கடைப்பிடித்து வருங்கால் 1971 இல் சமத்துவ சமூகசிந்தனையாளரும், சீர்திருத்தவாதியுமான திரு.பொ.கனகசபாபதி அவர்களுக்கு அதன் அதிபராகும் அரிய வாய்ப்புக்கிடைத்தது. இயல்பிலேயே சமத்துவ சிந்தனாவாதியும். புத்தொளிமிக்கதொரு சாத்வீகசமூகத்தை அமைப்பதில் வேட்கையுமுள்ள அதிபருக்கு இந்த நடைமுறை பிடிக்கவில்லை. தான் பதவியேற்றவுடன் முதற்காரியமாக கல்லூரி தருமகர்த்தாக்களின் எதிர்ப்பினையும் மீறிக்கொண்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களைக் கல்லூரியில் சேர்த்தார். அன்றும் இதற்காக அவரை தலித் சமூகத்தினரைத்தவிர வேறேவரும் பாராட்டினார்களில்லை. புதுவை மக்களின் அதிஷ்டம் அதிபர் திரு.பொ.கனகசபாபதி அவர்களும் கல்லூரியின் கல்விமேம்பாட்டில் மிகக்கவனம் செலுத்தினார். இலங்கை மருத்துவக்கல்லூரிக்கு ஸ்ரீசோமாஸ்கந்தகல்லூரியின் முதல் மருத்துவ மாணவியும் அவரது காலத்திலேயே அனுப்பப்பட்டார். மேலும் கல்வியில் செலுத்திய அதே கவனத்தை கல்லூரியின் இதர தேவைகளிலும் செலுத்தினார். பெருகிவரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கல்லூரியின் நிலப்பரப்பும், வகுப்பறைகளின் எண்ணிக்கையும் போதாமல் இருந்தன. வகுப்பறைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், கல்லூரிக்கான நிலப்பரப்பை விஸ்தரிப்பதிலும் தன் முயற்சியைக்குவித்த அதிபர் ஆசிரியர்களையும், பெற்றோர்களையும், மாணவர்களையும் சேர்த்துக்கொண்டு புத்தூரிலும், அதன் சுற்றாடல்களில் உள்ள அனைத்து ஊர்களிலும் ஒவ்வொருவீடுகளுக்கும் கால்நடையாகச் சென்று மக்களுடன் பேசி, கல்லூரியின் தேவையை எடுத்துரைத்து பெருநிதி சேகரித்து கல்லூரியோடு இணைந்தாற்போலிருந்த நிலங்களை வாங்கிப்போதுமான வகுப்பறைகளைக் கட்டுவித்தார். அவரது இன்னவென வகைப்படுத்தமுடியாத ஆயிரம் பணிகளில் முதன்மையாக தலித்து மாணவர்களைச் சேர்த்துக்கொண்ட தீரச்செயல் மானுஷவரலாற்றில் என்றும் அழியாது பதியப்படும். என் அதிபர், என் ஆசான், என் நண்பர் செப்டெம்பர் மாதம் 4ம் தேதி தனது 75 அகவைகளை நிறைவுசெய்கின்றார். தற்போது தான்வதியும் கனடாவிலும் தொடர்ந்து இலக்கியம், கல்வி, சமூகம் சார்ந்ததுறைகளில் ஓய்விலாது இயங்கிக்கொண்டிருக்கும் அம்மாமனிதரைப் பாராட்டுவதிலும், அவரின் மாணவன் என்றுசொல்லிக்கொள்வதிலும், அவர் பாதங்களைப் பணிவதிலும் என்றும் தீராத மகிழ்வடைவேன்.
13.10.2010 பெர்லின்.
karunah08@yahoo.com
நன்றி: நவம்பர் 2010 இதழ் 131