மதுமிதா: வணக்கம் ஜெயந்தி சங்கர், ஆங்கிலத்தின் நீங்கள் எழுதிய சிறுகதைகள் அண்மையில் நூலாக்கம் பெற்றது குறித்து அறிகிறேன். வாழ்த்துக்கள்.
ஜெயந்தி சங்கர்: நன்றி மதுமிதா. Dangling Gandhi என்ற நூல் 2019ல்பிரசுரம் கண்டிருக்கிறது. 2011ல் எழுதி உள்ளூர் Ceriph இதழில் பிரசுரமான ஒரு கதை தவிர மற்ற 11 கதைகளுமே கடந்த நான்காண்டுகளில் எழுதப்பட்டவை.
மதுமிதா: நல்லது, தமிழில் சிறுகதை, குறுநாவல், நாவல் என்று பல வடிவங்களிலும் இருபது வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறீர்கள். ஆங்கில சிறுகதைகளை எழுதும் விருப்பம் எப்போது எப்படி உங்களுக்குள் எழுந்தது?
ஜெயந்தி சங்கர்: சுமார் இருபத்தோரு ஆண்டுகள் தமிழில் எழுதிய பின்னர் 2016 முதல் ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதத் தொடங்கியிருக்கிறேன். முதலில் 1995ல் எழுதத் தொடங்கியபோதே ஈராண்டுகளுக்கு இரு மொழிகளிலுமே எழுதினேன். எனினும், ஒரு கட்டத்தில் என்னதிது ஏதேனும் ஒன்றில் கவனம் செலுத்தலாமே என்றெண்ணியதன் பயனாய் தமிழைத் தேர்ந்தெடுத்தேன்.
அசோகமித்ரன் உள்ளிட்ட மதிப்பிற்குரிய சில மூத்த தமிழ் எழுத்தாளர்கள் சீக்கிரமே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்து இறுதிவரை தமிழிலேயே எழுதி வந்தனர் என்பது நமக்கெல்லாம் தெரியும், இல்லையா? எந்தத் திட்டமும் இல்லாமலே எனக்கு அப்படியே தலைகீழாக நடந்துள்ளது.
சீக்கிரமே ஆங்கிலத்துக்கு வந்துவிடுவேன் என்றே எண்ணியிருந்தேன் அப்போது. ஆனால், நான் நினைத்ததைவிட தமிழ் என்னை நீண்டகாலம் தக்கவைத்துக் கொண்டது. தாமதமாகவேனும் ஆங்கிலத்திற்கு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
மதுமிதா: ஆங்கில சிறுகதைகளுக்கான வாசகர்கள் உங்களுக்கு முற்றிலும் புதிதானவர்களாகவேதான் இருப்பார்கள். ஏதேனும் முக்கிய விமர்சனங்களை முன் வைத்த வாசகர் யாரும் இருக்கிறார்களா?
ஜெயந்தி சங்கர்: நூல் பிரசுரமாகும் முன்னரே என்னுடைய ஆங்கிலச் சிறுகதைகளை பத்து பேர் வாசித்திருந்தனர்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாசித்தனர். பெரும்பாலும் இவர்களுக்கு எந்த வழிகாட்டுதலும் தேவையிருக்கவில்லை.
கரு, உத்தி, வடிவம் ஆகிய அனைத்திலும் மிகவும் புதுமையான கதைகளாக இதுவரை தாங்கள் வாசித்ததிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வாசிப்பு அனுபவத்தைத் தந்ததாக கூறினார்கள்.
மதுமிதா: ஆங்கிலத்தில் நாவல் எழுதும் எண்ணம் உள்ளதா?
ஜெயந்தி சங்கர்: தற்போது ஆங்கிலத்தில் முழுநீள நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். புனைவில் அதிகமும் பேசப்படாத புராதனமானதொரு விஷயத்தைத் தொடும் இந்தநாவல் சமகாலக் கதையையும் பேசும். 2018லேயே எழுதி முடித்திருக்க வேண்டியது. ஆனால், பல்வேறு காரணங்களால் தாமதமானது. எப்படியும் 2019 இறுதியில் எழுதி முடிப்பேன். 2020 அல்லது 2021ல் நூலாகலாம் என்று எதிர்பார்க்கிறேன்.
மதுமிதா: இத்தனை வருடங்களாக தமிழில் இயங்கி வரும் நீங்கள் ஆங்கிலத்தில் படைப்புகளை அளித்திருந்தால் வாசகர்களிடையே இன்னும் ரீச் அதிகமாக இருந்திருக்கும் என்று நினைத்திருக்கிறீர்களா?
ஜெயந்தி சங்கர்: அவ்வாறு நினைத்ததே இல்லை. தமிழில் எழுதியதும், தொடர்ந்து தமிழில் இயங்கி வந்ததும் என்றென்றைக்குமே எனக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியது. இன்னும் சொல்லப்போனால் தமிழில்தானே எனக்கான உறுதியான அடித்தளம் அமைந்தது?
முதல் ஆங்கிலச் சிறுகதை தொகுதி இப்போது அழுத்தமாக வரக்காரணமே அந்த அடித்தளம் எனக்களித்த நம்பிக்கையும் அனுபவமும்தான்.
கதை சொல்லல், வடிவ சோதனைகள், உத்திகள் எல்லாம் எனக்கு ஏற்கெனவே பரிச்சயம். மொழிதான் வேறு. காட்சிகளாகவும் ஒலிகளாகவுமே யோக்கிறவள் நான். அரிதாகவே சொற்களால் யோசிப்பேன். அப்போது அதிகமும் ஆங்கிலத்தில் யோசிப்பது வழக்கமாகப் படிந்துள்ளது. தமிழில் புனைகையில் கவனமாக தமிழில் யோசிக்க என் மூளையைப் பழக்கிய நினைவுகள் வருகின்றன.
தற்காலத்தில் எந்த மொழியிலுமே வாசகப் பரப்பை விரிவாக்குவது ஒன்றும் அத்தனை எளிதல்ல. ’ ரீச் அதிகமாக ’ செய்வதற்கு பலரும் பெருமுயற்சி எடுப்பதையெல்லாம் ஊடகங்களில் தொடர்ந்து பார்க்கிறேன். ஆங்கிலத்தில் எழுதினால் அது நடக்கும் என்று நினைப்பதெல்லாம் வெற்று மாயை. அவ்வாறு பலரும் குறிப்பிடுவார்கள். நான் வெறுமன கேட்டுக் கொள்வேன். புரிந்து கொள்பவர்களாக இருந்தால், விளக்குவதற்கு முயல்வேன்.
வேறுபட்ட, பரந்துபட்ட வாசகர்கள் வேண்டுமானால் வாய்க்கலாம். எனினும், அதிகமானோர் வாசிப்பார்கள் என்பதெல்லாம் கிடையாது என்பது எனக்கு பத்தாண்டுக்கு முன்னரே நன்கு தெரியும்.
ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியது முற்றிலும் விருப்பம் சார்ந்தது. அதுபோன்ற நோக்கங்கள் சார்ந்தவை கிடையாது.
மதுமிதா: தமிழ்ச் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தொகுப்பாகk கொண்டுவரும் எண்ணம் எப்போது, எப்படி எழுந்தது?
ஜெயந்தி சங்கர்: Unwinding (and other contemporary Tamil short stories) நூலைச் சொல்கிறீர்கள், இல்லையா? அதுவும் அண்மையில் பிரசுரமான நூல்.
10 நாடுகளிலிருந்து 43 தமிழ்ச் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஏழெட்டு கதைகளை நான் மொழிபெயர்த்திருந்தாலும், அவ்வந்த படைப்பாளிகளின் பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களும் பங்களித்துள்ளனர்.
மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களது ஆக்கத்தில் தொடங்கி அண்மையில் எழுதத் தொடங்கியுள்ள இளம் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வரை இதில் இடம்பெற்றுள்ளன.
வழக்கமாகஎப்போதுமே மொழியாக்கம் மூலம் ஆங்கிலத்துக்குச் செல்லும் எழுத்தாளர்கள் தவிரவும் அற்புதமாக எழுதுபவர்கள் தமிழில் உண்டு. பல்வேறு வகையான இடைவெளிகளை நிரப்பும் வகையில் அமைந்துள்ளது இந்நூல். முன்பு வந்த இது போன்ற ஆங்கில மொழியாக்கத் தொகுப்பு நூலிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் இது.
இந்த நூல் 2011 ஆம் ஆண்டிலேயே ஒரு திட்ட அளவில் மனத்துக்குள் உருப்பெற்ற இத்தொகுப்பு இது என்றபோதிலும் பதிப்பாளர் முடிவாகாமல் நேரத்தைப் போடாதீர்கள் என்று ஓரிரு நண்பர்கள் கொடுத்த அறிவுரையின் பேரில் அப்படியே தூக்கிவைத்தேன்.
மீண்டும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் கையில் எடுத்த போதும் பதிப்பாளர் முடிவாகவில்லை. ஆனால், தொகுப்புப்பணியில் இறங்கினேன். அப்போது பிற மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்பையும் ஏற்றுக் கொள்ளுமாறு இன்னொரு நண்பர் சொன்னதை ஏற்றேன். மாலனின் ஒருங்கிணைப்பால் ஆறேழு நாடுகளிலிருந்து ஆக்கங்கள் கையில் இருந்தது போக, 10 நாடுகளாக மாற்றம் கண்டது.
பதிப்பாளர் தேடியதும், போராடியதும் இறுதியில் அமைந்து நூல் வெளியானது நெடியகதை.
மதுமிதா: இது சிரமமான பணி என்கையில் இதை எப்படி செயல்படுத்தினீர்கள்?
ஜெயந்தி சங்கர்: 50 பேருடன் மின்னஞ்சலில் தொடர்ந்து ஆக்கங்களை தேர்வு செய்ய விவாதம், தேர்வு செய்யப்பெற்ற ஆக்கத்தை நானே மொழிபெயர்ப்பது. படைப்பாளியோடு அதுசார்ந்து விவாதித்து இறுதிப்படுத்துவது. பிற மொழிபெயர்ப்பாளர் செய்ததென்றால், மூலப் பிரதியோடு ஒப்பிட்டு செப்பனிடுவது, பின்னர் ஒட்டுமொத்தமாக எடிட் செய்வது, பிரிண்ட் எடுத்து இன்னொரு முறை எடிட் செய்வது என்று நேரத்தையும் உழைப்பையும் முழுவதும் உறிஞ்சிவிடக்கூடிய பணி இது.
எனினும், செய்து முடித்தபோது ஒருவித திருப்தி ஏற்படவே செய்தது. எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்பில்லாமல் இது சாத்தியமே இல்லை. அவர்கள் அனைவருக்கும் என்றைக்குமே நன்றிக் கடன் பட்டவள் நான். மிகுந்த ஒத்துழைப்பை நல்கியுள்ளனர்.
மதுமிதா: உங்கள் ஆங்கில சிறுகதைகளை நீங்களே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறீங்க. இந்த அனுபவம் எப்படி இருந்தது?
ஜெயந்தி சங்கர்: இது வித்தியாசமான அனுபவம்தான். மிகவும் பிடித்திருந்தது. என்னுடைய சொந்த ஆக்கங்கள் எனும்போது அதிக சுதந்திரமும்கூட இருந்தது. பிறருடையதை மொழியாக்கம் செய்யும்போது இருக்கும் பொறுப்பு சார்ந்த இறுக்கம் எனக்கு இதில் இல்லை.
மற்ற படைப்பாளிகளின் படைப்புகளை மொழியாக்கம் செய்வதைக் காட்டிலும் இதில் சிரமம் குறைவுதான். ஏனெனில், இங்கே மறு உறுதி செய்ய, விவாதத்தில் ஈடுபட என்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதிருக்கவில்லை. மற்றபடி எந்த நூலையும் போலவே இதுவும் நேரத்தையும் உழைப்பையும் எடுத்தது.
ஆங்கிலத்தில் சிறுகதைகளை எழுதியவுடனேயே வாசித்த ஓரிரு நண்பர்கள் ஏன் இவற்றை தமிழில் எழுதவில்லை என்று கேட்டார்கள். இனி ஆங்கிலத்தில் எழுதுவதென்று முடிவெடுத்திருக்கிறேன் என்று கூறினேன். அப்படிப் பேசுகையில் இந்தச் சிறுகதைகள் தமிழிலும் வரலாமே என்று கருத்துரைத்தார்கள்.
ஒரு கதையை மொழியாக்கம் செய்து அனுப்பினார் நண்பர். அந்த மொழியாக்கம் சிறக்கவில்லை என்று பட்டது ஆகவே, நானே ’சங்கரி’ என்ற எனது இல்லப்பெயரில் மொழிபெயர்த்தேன். சிறப்பாகவே வந்திருக்கிறது மொழியாக்கம். இனி, அந்த மொழியாக்க நூலையும் பிரசுரம் செய்ய பதிப்பாளர் பரிசீலனையில் வைத்திருக்கிறார். அடுத்தகட்டத் தகவலுக்காகக் காத்திருக்கிறேன்.
பிரசுரத்துக்கு முன்னரே மொழியாக்க நூலை சில வாசகர்கள் வாசித்தனர். ஆங்கில நூல் வாசகர்களிலிருந்து இவர்கள் முற்றிலும் மாறுபட்டனர். இது நான் எதிர்பாராதது. குறைந்தது இரண்டு முறை வாசிக்காமல் புரியாது என்றவர், இரண்டாவது முறை வாசிக்க வேண்டியிருந்தது என்று கூறியவர், அதற்கு முன்னர் என்னோடு கலந்தாலோசிக்க விரும்பியவரும், கடினமாக இருந்ததாகச் சொன்னவரும், உள்ளே போகவே முடியவில்லை என்று கூறியவரும் தமிழாக்கத்தை வாசித்தவர்களில் உள்ளனர். தமிழ் வாசகவெளிக்கு முற்றிலும் வேறாக உணர்ந்ததாக அனைவருமே கூறினர்.
மதுமிதா: மொழியாக்கம் செய்யும்போது நேரடித் தமிழிலேயே இவற்றை அளித்திருக்கலாம் எனும் எண்ணம் ஏதும் எழுந்ததா?
ஜெயந்தி சங்கர்: இல்லை. ஏனெனில், இனிமேல் ஆங்கிலத்தில் எழுதுவது என்று பிரியப்பட்டு நீண்ட காலமாக நினைத்துக் கொண்டிருந்ததை செயல்படுத்திய நிலையில் எழுதப்பட்ட கதைகள். அவ்வாறு தோன்ற வழியே இல்லை.
மதுமிதா: உங்கள் படைப்பை வேறொருவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்களே. உங்கள் படைப்பை நீங்களே ஏன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவில்லை?
ஜெயந்தி சங்கர்: நான்தான் செய்வதாக இருந்தது. எனினும், அப்போது வேறு முக்கிய பெரிய வேலைகளில் மாட்டிக் கொண்டிருந்தேன். அதனால், இரண்டு பேரும் மிக விரும்பிச் செய்தார்கள். அப்படியாக, தமிழில் முன்னர் நான் எழுதிய புனைகதைகளில் பல ஆங்கில மொழியாக்கத்தில் 2 நூல்களாக வந்தன.
மதுமிதா: உங்கள் தமிழ் படைப்புகளை ஆங்கிலத்தில் நீங்கள் மொழிபெயர்க்காமல், ஆங்கிலத்தில் புதிதாக எழுதி அதைத் தமிழாக்கம் செய்ததற்கு முக்கியக் காரணம் ஏதும் உள்ளதா?
ஜெயந்தி சங்கர்: ஆங்கிலத்தில் எழுதி, அதை மொழியாக்க செய்யவில்லை. இனி ஆங்கிலத்தில் எழுதுவது என்று முடிவெடுத்த பின்னர் அந்தக் கதைகள் எழுதினேன்.
தமிழில் மொழியாக்கம் குறித்து அப்போது யோசிக்கவே இல்லை. சில மாதங்களுக்கு முன்னர்தான் நண்பர்களின் ஆலோசனையின்பேரில் மொழியாக்கமும் நடந்துள்ளது.
மதுமிதா: வெவ்வேறு இலக்கிய விழாக்களில் பங்கேற்கறீங்க. வெளிநாடுகளில் பங்கேற்ற கருத்தரங்க அனுபவங்களைப் பற்றியும் சொல்லுங்களேன்
ஜெயந்தி சங்கர்: நிறைய அனுபவங்களுண்டு என்றபோதிலும் ஒன்றை மட்டும் சொல்கிறேன்.
2018 டிசம்பரின் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்த APWT (Asia Pacific Writers and Translators 2018) என்ற இரண்டு நாள் கருத்தரங்குக்கு அழைத்திருந்தார்கள். அமெரிக்கா, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா, இந்தோனீசியா, சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். விதவிதமான பின்னணி, விதவிதமான எழுத்துலகங்கள் என்று அது முற்றிலும் வேறு அனுபவம்.
நான் பங்கேற்றது இரண்டு panels. அது ஒருபுறமிருக்க, அங்கே நடந்த இன்னொரு கருத்தரங்கில் ஒரு முனைவர் பட்ட மாணவி, இருபத்தைந்து வயதிருக்கும், பெண்ணிய நோக்கில் தான் ஆய்வு செய்து கொண்டிருந்தவற்றைத் தொகுத்தளித்தார். மதுக்கூடம், கேளிக்கைக்கூடம் உள்ளிட்ட பொழுதுபோக்குத் துறையில் பணியாற்றும் பெண்கள் படும் அவலங்கள் பலவற்றைப் புட்டுப்புட்டு வைத்தார். அவரது ஆய்வு முடிகையில் ஒரு நாவலாக எழுதப்போவதாகவும் அதில் வரக்கூடிய சிலவற்றையும்கூடப் பகிர்ந்துகொண்டார். அவர் சொன்ன விதம் எனக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், அவை அனைத்துமே கசக்கும் உண்மைகள்.
இறுதியில் தான் ஒரு முன்னாள் strip dancer என்றும் அந்தத் துறையிலிருந்து மீண்டு வந்து கல்விக்குள் புகுந்தேன் என்று சொன்னார். பதினெட்டு வயதிலிருந்து அந்த வேலை செய்து வந்திருக்கிறார். அவர் தன் கடந்த காலத்தை சொல்வதற்குக் கூசவில்லை, மிக இயல்பாகப் பேசினார். அவருடன் பிறர் எந்த வேற்றுமையும் பாராட்டாமல் பழகினர். என்னிடமும் நட்பு பாராட்டி மின்னஞ்சல் கேட்டு வாங்கிக் கொண்டார்.
நடுத்தர வயதைக் கடந்த இன்னொரு பெண்மணி எழுதி முடித்துள்ள தனது நாவலைப் பற்றி இன்னொரு கருத்தரங்கில் பகிர்ந்துகொண்டார். ஜப்பானியர்கள் ஆஸ்திரேலியாவில் செய்த போர் அராஜகங்களின் போது, இளமையில் அவரது குடும்பம் சிதறி பல திக்குகளில் பிரிந்து போனதையும் தத்தெடுத்து தன்னை வளர்த்த குடும்பத்தில் தான் எவ்வாறு ஒன்றிப்போனார் என்பதையும் அவர் தனது குடும்பத்தினரை, குறிப்பாக ராணுவத்தில் பணியாற்றிய தன் தந்தையைத் தேடியதையுமே நாவலாக்கியுள்ளார். யாரையுமே அவரால் கண்டுபிடிக்க முடியாமல் போனதாம்.
நாவலாசிரியர்கள் சரி, ஆனால் நாவல்களே உயிரோடு என் முன்னால் அமர்ந்து உரையாடிய அந்த சம்பவங்கள் என் மனத்தை உலுக்கின.
மதுமிதா:’நாவல்களே உயிரோடு என் முன்னால் அமர்ந்து உரையாடிய அந்த சம்பவங்கள்’ என்ன அழகான வார்த்தைப் பிரயோகம்! இன்னொரு முக்கியமான சம்பவத்தைப் பற்றி சொல்லுங்களேன்.
ஜெயந்தி சங்கர்: பீகாரில் கிஷன்கஞ் என்ற ஊரில் 2016ல் Seemanchal International Literary festival நடந்தது. அதற்கு அழைக்கப்பட்டிருந்தேன். பல்வேறு நாடுகளிலிருந்து எழுத்தாளர்கள் பங்கேற்ற இரண்டு நாள் கருத்தரங்கம் அது. பங்கேற்றது இரண்டு panelகளில் பங்கேற்றேன். அதனையடுத்து இரண்டு நாட்களுக்கு எங்களையெல்லாம் டார்ஜிலிங் அழௌத்துப் போனார்கள்.
பெண்ணியம் சார்ந்த கருத்தரங்க மேடையில் நாங்கள் பேசிய போது அங்கே பார்வையாளர்களில் இருந்த 14, 15 வயது சிறுமிகள்/மாணவிகள் கேட்ட கேள்விகள் நான் சற்றும் எதிர்பாராதவை. ”17, 19 வயதாகும் முன்னரே திருமணம் பேசுகிறார்களே, அதை நான் எப்படி எதிர்கொள்வது?”, “மிக நன்றாகப் படித்து மாநில அளவில் ரேங் எடுத்தாலும் 17 வயதிலேயே திருமணம் முடித்து விடத் துடிக்கும் பெற்றோருடன் எங்களால் போராட முடியவில்லை,” “என்னுடைய பேற்றோருக்கு என்னுடைய வாதம் புரிகிறது. ஆனால், சமூகத்துக்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்று தான் தெரிவதில்லை.”
தெளிவாக, மிக அறிவுக்கூர்மையோடு அந்த சிறுமிகள் பேசும் போது அவர்களது சொற்களில் இருந்த சோகமும் கோபமும் அறிவுத்தெரிப்பும் என்னை பிரமிக்க வைத்தன. ஒருவித இயலாமைதோய்ந்த குரலில், “பெண்ணியம் பேசும் நீங்கள் எங்களுக்கு வழிகாட்டுங்களேன்,” என்றதும் எனக்கு பளேரென்று அறை வாங்கிய ஓர் உணர்வு.
கருத்தரங்கம் முடித்த இரண்டாம் நாள் இறுதியில் எம் எல் ஏ, எம் பி, மந்திரி என்று யார் யாரோ அடங்கிய அந்த ஊரின் முக்கியப் பிரமுகர்கள் குழு ஒன்று எங்களையெல்லாம் சந்தித்து உரையாடியது. எனக்கு இந்தி தெரிந்ததால், பங்கேற்பதில் எனக்கு பிரச்சினை இருக்கவில்லை.
அப்போது அவர்கள் எங்களிடம் பேசிய பல்வேறு விஷயங்களில் முக்கியமானது சுற்றுப்புற கிராமங்களில் விளையும் காய்,கனிகள் பற்றியது. அந்த விவசாயிகள் முன்பெல்லாம் எப்படி தண்ணீருக்கு தனியான கவனங்கள் எடுத்ததில்லை, தற்காலத்தில் எடுக்க வேண்டியுள்ளது, அவர்கள் சந்திக்கும் பிற சிரமங்கள் என்று பலவும் பகிர்ந்துகொண்டார்கள். “விவசாயிகளுக்கு அவர்கள் பயிரிடுவதெல்லாம் ஆர்கானிக் என்று கூடத் தெரிவதில்லை, மேடம். நிறுவனங்கள் இன்னும் இவர்களை மொட்டையடிக்க ஆரம்பிக்கவில்லை,” என்றபோது ஆர்கானிக் என்ற பெயரில் நகரங்களில் உலாவும் வணிக அசுரன் இன்னமும் கால் பதிக்காத உள்ளடங்கிய பகுதிகள் இருப்பதை அறிந்து ஆச்சரியமேற்பட்டது.
மதுமிதா:புனைவுகளை ருசிக்கிறீங்க. அதில் ஆழ்ந்து பயணிக்க விரும்பறீங்க. உங்களுக்குள் புனைவு என்ன மாயத்தை செய்கின்றது? அதன் ஜாலங்களை எப்படியெல்லாம் ரசிக்கிறீங்க? புனைவு என்பதற்கு எப்படி என்ன விளக்கம் சொல்லுவீங்க?
ஜெயந்தி சங்கர்: இன்றிரவு கண்ட கனவின் தொடர்ச்சியாக நாளை இரவு காண்பதை நம்மில் பலர் அனுபவித்திருப்போம். அதே போல புனைவுவெளியில் தொடர்ச்சியை, தொடர்பறுதலையும், பிறழ்வுகளையும், விநோதங்களையும் கண்டபடியே நான் உருவாக்கும் புனைவுவெளியில் நான் உலாவியபடி இருப்பது எப்போதுமே நடப்பது. அதிலிருந்து திரண்டு மேலெழுந்து புனைவுகளாக உருவாவது அரிதாகவே நடக்கிறது. என்னுடைய புனைவுவெளி எனக்கான உலகம்.
என்னுடைய புனைவுவெளியை நன்கு புரிந்துவைத்துள்ள எனக்கு இன்னொரு நாவலாசிரியரின் ஆக்கத்தின் மூலமாக அவரது புனைவு வெளிக்குள் புகுந்து பார்க்க முடிகிறது. அந்த நாவலையும், அதனைக்கடந்தும்கூட. அவர் தன்னுடைய உலகை எவ்வாறு படைத்திருக்கிறாரா என்றறிய முடிகிறது. அவரது அடுத்த ஆக்கம் வரும்போது அவர் அவரது அதே புனைவுலகை எவ்வாறெல்லாம் சிதைத்தோ அலங்கரித்தோ உருமாற்றியுள்ளார் என்று என்னால் அறிய முடிகிறது.
ஒற்றை வாழ்க்கை போதாமல் பல்லாயிரம் வாழ்க்கைகளை வாழத் துடிக்கும் மனித மனம் ஓயாமல் செய்வதுதான் இதெல்லாமே.
மதுமிதா: ஆங்கில சிறுகதை எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள், அவர்களுடைய படைப்புகள் பற்றி சொல்லுங்களேன்?
ஜெயந்தி சங்கர்: நிறையபேரை வாசிக்கிறேன். சென்னையில் வளர்ந்த எழுத்தாளர் Manu Joseph எழுதிய Miss Laila, Armed and Dangerous, Serious men, The Illicit Happiness of Other People ஆகிய மூன்று நாவல்களையும் வாசித்திருக்கிறேன்.
The Illicit Happiness of Other People சென்னையில் நடக்கிறது. மனப்பிறழ்வு கொண்ட ஒரு காட்டூன் ஓவியக்கலைஞன் தற்கொலை செய்துகொண்டது ஏன் எவ்வாறு என்று ஆராயும் கதையினூடாக அவனது குடும்பத்தினர், நண்பர்களின் மனவெளிகளும் நெய்யப்படுகின்றன. முதல் பக்கம் முதல் இறுதிவரை அவனது தற்கொலைக்கான காரணத்தைச் சொல்லிவிடாமலே நூல்பிடித்தாபோல நம்மையும் இழுத்துச் சொல்வதை வாசிப்பது ஓர் அனுபவம். சென்னையையும் சென்னை நடுத்தர வர்க்க வாழ்க்கையையும் அழகாக எளிமையாகக் காட்டியிருப்பார்.
Miss Laila, Armed and Dangerous மும்பையில் ஒரு கட்டடம் இடிந்து விழுவதையும் இன்னொரு தீவிரவாதத் தாக்குதல் திட்டத்தை இணைத்து, பல்வேறு திருப்பங்களோடு விறுவிறுவென்று நகரும் புதுவகை கதைசொல்லல்.
சட்டென்று நினைவில் வருகிற மற்றவர்கள் Amit Chaudhuri, Ruth Prawer Jhabvala, Yan Ge, Meena Kandasamy. இவர்களுடைய புனைவுகள், கதைசொல்லலில் அவர்கள் நடத்தும் பரிட்சார்த்தங்கள் பலவும் என்னை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
மதுமிதா: சிறுகதை எழுதுவது எப்படி என்று பயிலரங்கம் நடத்துறீங்க? அந்த அனுபவத்தை சொல்லுங்க? அதை தனி புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறீர்களா?
ஜெயந்தி சங்கர்: சில மணிநேரம் நீளும், அரைநாள், ஒருநாள், இரண்டு நாள் சிறுகதை எழுதும் பயிலரங்கங்கள் என்னிடம் கேட்கும் அமைப்பின் சார்பில் நடத்தியிருக்கிறேன். அதேபோல ஓராண்டுக்கு மாதந்தோறும் ஒருதடவை சந்தித்து, மற்ற நேரங்களில் மின்னஞ்சல்களில் கலந்துரையாடி நடத்திய பயிலரங்கும் நடத்தியிருக்கிறேன்.
என்னதான் வழிகாட்டினாலும் கூட எந்த அற்புதமும் நிகழ்ந்துவிடுவதில்லை என்பதுதான் நான் புரிந்துகொண்டது. அவரவர் தொடர்ந்து எழுதிப் பழகுவதில் கிடைக்கும் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். என்னைப்போன்ற பலரும் அப்படி முன்னேறியவர்கள். எனக்கு ஒருவருமே வழிகாட்டியதில்லை.
அவற்றையெல்லாம் புத்தகமாக வெளியிடும் எண்ணம் என்னிடம் கண்டிப்பாக இல்லை.
மதுமிதா: புகைப்படங்கள் ஏன் எடுக்கறதில்லை? அது நினைவுகூர சிறந்த சாதனமா இருக்குமே? வெளிநாட்டுப் பயண அனுபவங்களை நூலாகத் தொகுக்கும் எண்ணம் உள்ளதா?
ஜெயந்தி சங்கர்: இல்லை. அப்படித்தொகுக்கும் எண்ணங்கள் என்னில் இல்லை. ஆங்கில மொழியினூடாக புனைவுகளின் சாத்தியங்களைக் கண்டறியவே என்னிடம் ஆர்வமும் நேரமும் உண்டு. அதே நேரத்தில் வாய்ப்பேற்படும் போது, கேட்கப்படும்போது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுதான் வருகிறேன். எனினும், நானே ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் புகைப்படங்கள்கூடப் போடுவதில்லை. இயல்பாகவே நான் அப்படிதான் இருக்கிறேன். பயணத்தில்போது அனைத்துப் புலன்களும் சூழலோடு ஒன்றி, ஒருவித பரவசத்தில் ஆழ்ந்துவிடுவதை உணர்ந்திருக்கிறேன். புகைப்படங்கள் எடுப்பதில் கவனம் சிதறும்போது அந்தப் பரவசம் குன்றும் என்றே தோன்றும் எனக்கு. அனுபவம் பற்றி கேள்வியாகக் கேட்கப்படுகையில், யோசித்து அவ்வனுபவங்களை நினைவடுக்குகளிலிருந்து மீட்டெடுத்துதான் பதில் சொல்கிறேன். அது பெரிய சிக்கலாக இருந்ததில்லை. புகைப்படங்கள் எடுக்காமலே கடந்த பயணங்களும் நிகழ்வுகளும் என் வாழ்க்கையில் அதிகம். இன்னும் சொல்லப்போனால், கூட்டங்களில், நிகழ்வுகளில், பயணம் செல்கையில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இப்போதுதான் மெதுவாகக் கற்றுக் கொண்டு வருகிறேன். ஆனாலும், உடன் இருப்பவர்கள் எடுத்தாலோ, எடுத்துக்கொள்ளும்படி ஊக்குவித்தாலோ சட்டென்று அந்தச் சிந்தனை வருகிறதே தவிர தானே எனக்குள் அச்சிந்தனை வராது நழுவும் சந்தர்ப்பங்களே அதிகமிருக்கின்றன.
மதுமிதா: பலநாடுகளுக்கும் போயிருக்கிறீங்க, சீனப் படைப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை அளித்த உங்களுக்கு சீனாவுக்குப் போக வேண்டும் என்னும் எண்ணம் உள்ளதா?
ஜெயந்தி சங்கர்: சீனாவுக்குச் செல்ல நெடுங்காலமாகவே என்னில் ஆர்வமுண்டு. ஓரளவுக்கு சுற்றிப் பார்க்கவே ஒருமாதகாலமாவது வேண்டியிருக்கும். உணவு உள்ளிட்ட சில சில்லறைக் காரணங்கள் என்னை பயமுறுத்துகின்றன என்றபோதிலும் எனது விருப்பவிழைவுப் பட்டியலில் அது உண்டு.
சீனப் பெருஞ்சுவர் நான் காணவிரும்பும் ஒரு முக்கிய சுற்றுலாத்தலங்களுள் ஒன்று. பல்லாண்டுகளுக்கு முன்னர் அதுசார்ந்த கட்டுரை ஒன்றை வரைகையில் சில சீனர்கள், சில சிங்கப்பூரர்களோடு ஆய்வு நோக்கில் உரையாடினேன். ஒவ்வொருவரும் அதனைக் கண்ட விதமும், அதுகுறித்து உணர்ந்தவிதமும் மிகவும் சுவாரசியமாக இருந்தது. இங்கிருந்து சீனா சென்று வந்த சிங்கப்பூரரான ஒரு சீன இளம் பெண், “அசர வைக்கும் அழகு, மனிதனின் ஆற்றலுக்கு ஓர் ஆச்சரிய சாட்சி,” என்றெல்லாம் பரவசப்பட்டாள். ”கடந்த காலச் சீன மூளையின் முட்டாள்த்தனம். ஆக்கிரமிப்பைத் தடுக்கவென்று ஏற்படுத்தப்பட்ட மனித, பிற வளங்களின் விரையம். ஆக்கிரமிப்பை அவ்வளவு எளிதில் தடுத்து விடவா முடியும்?” என்றெல்லாம் பெய்ஜிங்கிலிருந்து வந்து இங்கே பணியாற்றிய ஓர் இளைஞர் பொரிந்துதள்ளினார். அப்போதிலிருந்தே பெருஞ்சுவர் அனுபவம் வேண்டுமென்ற ஆசை இருந்தபடியே தான் இருக்கிறது.
கன்ஃப்யூஷியஸ் பிறந்த இடமான ’லு’வுக்கு சென்று சுற்றிப் பார்க்க ஆர்வமுண்டு. எத்தனை நவீனமடைந்தபோதிலும் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வகுத்தளித்த அறநெறிகளின் அடிப்படையிலேயே சிந்திக்கும் வெவ்வேறு நாட்டு சீனர்களை தொடர்ந்து அவதானித்து வருகிறேன். பெண்ணுக்கு அச்சமூகத்தில் தொடர்ந்து நடந்த அத்தனை ஒடுக்குமுறைகளுக்கும் கீழ்மைக்கும் அறிந்தோ அறியாமலோ அதே கன்ஃப்யூஷியஸ்தான் அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் என்பதை கடந்தும்கூட அவர் தவிர்க்கமுடியாத ஒரு சிந்தனாவாதி, ஓர் அறிஞர்.
மதுமிதா: ஓவியமும் சிற்பக் கலையும் உங்கள் விருப்பமாக இருக்கின்றன. அதையொட்டிய பயண அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்
ஜெயந்தி சங்கர்: ஓவியம், குறிப்பாக சிற்பங்களை ஓவியங்களாக்குவது மனத்துக்கு மிகுந்த ஆனந்தத்தை அளிக்கிறது. சிறுவயது முதலே சிற்பங்களை எவ்வளவு தூரம் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறேன் என்பதை இப்போது ஓவியங்களாய் தீட்டுகையில் புரிந்துகொள்கிறேன்.
சென்னையில் சீரிய முறையில் இயங்கி வரும் THT குழுவினருடன் மரபுச் சுற்றுலாக்களில் பங்கேற்று வருகிறேன். அங்குள்ள அறிஞர்களின் உரைகளிலிருந்து தொன்மைகள், சிற்பக்கலை, கட்டடக்கலை போன்றவை குறித்து நிறையவே தெரிந்துகொள்கிறேன்.
அந்தக்குழுவைச் சேர்ந்த சிவசங்கர் பாபு அவர்கள் முதன்முதலில் 2017ஆம் ஆண்டு இறுதியில் மகாபலிபுரம் பகீரதன் தவம் சிற்பத்தை வண்ணத்தில் உருவாக்கும் திட்டத்தை சொன்னார். அத்துடன் திருச்சி ராக்ஃபோர்ட்டில் இருக்கும் கங்காதரர் சுவர்சிற்பம் குறித்தும் சொன்னார். இரண்டையும் பெரிதாக செய்யலாம் என்று அவர் கூறியபோது பென்சிலில் சுயமாய் ஓவியம் பயிலத் தொடங்கி ஓராண்டு கூட ஆகியிருக்கவில்லை. இருந்தபோதிலும் குழந்தையின் ஆர்வத்தோடு முயல்வேன் என்று சொல்லியிருந்தேன்.
வாட்டர்கலரில் அதிகமும் ஈடுபாடும் விருப்பமும் எனக்குள் இருந்ததை உணர்திருந்த காரணத்தால், வாட்டர்கலரிலேயே செய்ய முடிவெடுத்து பெரிய வாட்டர்கலர் காகிதம் வாங்கிக் கொண்டு வந்தேன்.
டிசம்பர் மாதம் முழுவதும் இந்த இரண்டையும் செய்து முடித்தேன். இரண்டையும் சிற்பத்திலிருந்து அதிகமாக மாற்றிவிடாமல் வண்ணமயமான சிற்பங்களாக உருவாக்கியிருந்தது எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது.
அதனைத் தொடந்து நடராஜா, ஹொஸ்லா ‘தர்பண சுந்தரி’, பெரிய கணபதி, அர்த்தநாரிஸ்வரர், பார்வதிசமேத சிவன், மத்தியபிரதேச (டியோகர்) சிற்பங்களான வராஹா, விஷ்ணு போன்ற பல்வேறு சிற்பங்களை சிற்பங்களாகவே இரட்டை வண்ணங்கள் அல்லது பல வண்ணங்கள் என்று விதவிதமாக முயன்றபடி இருக்கிறேன். கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.
மதுமிதா: 200மதுமிதா: 2 க்கும் மேற்பட்ட ஓவியங்களை வைத்து நடத்திய ஓவியக் கண்காட்சியில் நீங்கள் இன்னும் புதிதாக கற்றுக்கொண்ட விஷயம் என்ன?
ஜெயந்தி சங்கர்: கண்காட்சி என்பதற்கான முன்னேற்பாடுகள் மிக ஆயாசமளிப்பவை, ஓவியம் தீட்டுவதில் கிடைக்கும் பேரானந்தத்தை மறக்கவைக்கக்கூடியவை என்று புரிந்துகொண்டேன்.
நூல்கள் வெளியீட்டு விழாக்களில் என்றைக்குமே எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருப்பதைப் போலவே இதிலும் எனக்கு ஏற்பட்டது.
எனினும், நூல் வெளியீடும் கண்காட்சியும் தவிர்க்கமுடியாமல் போனால் அவற்றுக்குத் தயாராவதில் எனக்குப் பிரச்சனையில்லை; எனினும், ஏனோ அவை எனக்கு ஒருபோதும் உவகையளிப்பதில்லை.
மதுமிதா: எழுத்துப் பயணமும் ஓவியப் பயணமும் ஒன்றுகொன்று அதனதன் வளர்ச்சியில் மட்டுமல்ல உங்கள் எண்ணவோட்டங்களில் நிகழும் மாற்றங்களுக்கு உறுதுணையாக உள்ளனவா?
ஜெயந்தி சங்கர்: என்னவோட்டங்களில் பல மாற்றங்களை வாசிப்பும் படைப்பாக்கமும் தொடர்ந்து கொடுத்து வருகிறது. ஓவியப்பயணத்தின் ஆரம்ப நிலையில் இருக்கும் எனக்கு அது தரும் தியானத்தின்போதானது போன்ற மனக்குவிப்பு கொடுக்கும் பேரானந்த அனுபவம்தான் அரிய வரமாகின்றது.
மதுமிதா: முதல் புத்தக வெளியீடுக்கும் இப்போது ஊசலாடும் காந்தி புத்தகம் முடித்த பிறகான மனநிலையிலும் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள்? எழுத்தின் முதிர்ச்சியை, வெவ்வேறு கோணங்களில் எழுதுவதை எப்படி உணர்கிறீர்கள்?
ஜெயந்தி சங்கர்: முதல் ஈராண்டுகளுக்கு அச்சில் நூல்களைக் காண்கையில் குழந்தைத் தனமான பரவசம் ஏற்பட்டதுண்டு.
இப்போதெல்லாம் படைப்பாக்கம் ஒன்றில் மட்டுமே எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. மற்றபடி நூல் வெளியீடுகளில் பெரிய பிடிப்பில்லை. எனினும், நூல்களை வாசகர்கள் வரை கொண்டு செல்லத் தவறிய ஆண்டுகளை இன்றைக்கு நினைத்துக் கொள்கிறேன். அதுசார்ந்து, இந்த நூல்களுக்காவது ஏதேனும் செய்ய முனைய வேண்டும் என எண்ணுகிறேன்.
மதுமிதா: தலைப்பாக ’ஊசலாடும் காந்தி’ என்று பெயரை எப்படி தேர்ந்தெடுத்தீங்க? உலகம் முழுவதுமான காந்தி குறித்த படைப்புகளில் இந்தத் தலைப்பு தனித்துவமாக உள்ளதே?
ஜெயந்தி சங்கர்: ’ஊசலாடும் காந்தி’ தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையின் தலைப்பு. அதில் காந்தி ஒரு படிமமாக மட்டுமே வருகிறார். அதை நூலின் தலைப்பாக எடுத்ததற்குக் காரணம் காந்தியமும் அகிம்சையும் இன்றைய உலகில் பல்வேறு குழப்பங்களுக்கும் திரிப்புகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதோடு பல முக்கிய விவாதங்களுக்கு வழிவிடுகின்றன. அத்துடன் இந்நூலின் பாதிக் கதைகள் காந்தியின் காலகட்டத்தில் நடந்த சம்பவங்களாக, அப்போது வாழ்ந்தவர்களைக் காட்டக்கூடியன. எனினும், அவர்கள் வாழ்க்கையில் காந்தி வருவதில்லை.
மதுமிதா: படைப்புகளையும் படைப்பாளர்களையும் படைப்பு வேறு படைப்பாளி வேறு என்று தனித்தனியாகத்தான் பார்க்க வேண்டுமா?
ஜெயந்தி சங்கர்: என் வரையில், ஒரு வாசகியாக ஒருவரது படைப்பு முக்கியத்துவம் பெறும் அளவுக்கு எனக்குள் அந்தப் படைப்பாளி முக்கியத்துவம் பெறுவதில்லை. படைப்பாளியின் மீது அடிப்படை மதிப்பும் மரியாதையும் எப்போதுமே இருக்கும். எனினும், படைப்பின் மேன்மை படைப்பாளியின் மீது எனக்கிருக்கும் அந்த மதிப்பையும் மரியாதையையும் கூட்டவோ குறைக்கவோ செய்வதில்லை. அது வேறு அவர் வேறு தான் எனக்கு எப்போதுமே.
மதுமிதா: உங்கள் நட்புலகம் இலக்கியம் சார்ந்தும் உள்ளதா?
ஜெயந்தி சங்கர்: இலக்கியம் சார்ந்த நட்பு வட்டம் விரிந்தபடியேதான் இருக்கிறது. தற்போது ஆங்கிலத்தில் வாசிக்கும் தமிழரல்லாதோர் கொண்ட பல்லின, உலகெங்கிலுமான, எண்ணற்ற நண்பர்கள். பெரும்பாலும் மின்னஞ்சல் நட்பு.
மதுமிதா: உரையாடல்கள் புதிய அனுபவங்களை அளிக்கின்றனவா? அல்லது பிரச்சினைகளை வளர்க்கின்றனவா?
ஜெயந்தி சங்கர்: உரையாடல்கள் கண்டிப்பாக சிந்தனைத் தளத்தில் ஆரோக்கிய நிலையில் வைத்திருக்க உதவும் என்றே நம்புகிறேன். யாருடன் உரையாடல் என்பது முக்கியமாகிறது. அகங்காரங்கள் குறிக்கிடாத விவாதங்கள் அமைவதே வரம்தான்.
என் வரையில், அதிக மேதமை இருக்குமிடத்தில் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் வாய்மூடிக் கேட்கவும் செயற்கையாக மேதமை வரவழைத்துக் கொள்ளுமிடத்தில் சக்தி விரையமாக்க வேண்டாமென்று வாய்மூடி கவனிக்கவும் செய்கிறேன்.
மதுமிதா: நேர்காணல்கள் என்ன விதமான தரிசனங்களை அளிக்கின்றன? தமிழ் ஆங்கிலம் இரண்டிலும்தான் கேட்கிறேன். காணொளி நேர்காணல்களையும் இதில் சொல்கிறேன்.
ஜெயந்தி சங்கர்: நான் அறிந்தவரை பிரதி, ஒலி, ஒளி என்று எந்தமாதிரியான நேர்காணலும் படைப்பாளி பிரதி வழியாகப் பேசியதைத் தவிர்த்து படைப்பியக்கம் சார்ந்து பேச, மற்றவற்றை சொல்லக் கூடிய வாய்ப்பாகப் பார்க்கிறேன். நூல் வெளியீட்டை ஓட்டியோ அல்லாமலோ அமையலாம். எளிமையாகச் சொல்வதென்றால் படைப்பை அறிந்த, அறியவிரும்பும் வாசகன் படைப்பாளியையும் கொஞ்சம் அறிந்துகொள்ளலாம்.
மதுமிதா: இலக்கிய அரசியல் அல்லது இலக்கிய சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
ஜெயந்தி சங்கர்: சிலவேளைகளில் அரசியல்களில் சிக்காமல் இருக்க முடியாமல் போகிறது. அதொன்றும் இயல்புக்குப் புறம்பானதல்ல. எனினும், முடிந்தவரை தவிர்க்கவே விரும்புவேன். இலக்கிய அரசியல் என்றில்லை, நட்பில், குடும்பத்தில், உறவுகளில் என்று எங்கேயுமேதான். அதற்கு முக்கியக் காரணம் அதில் என் நேரமும் சக்தியும் விரையமாகும் என்பதுதான். அதைக் கடந்தும் அரசியல் என்னைத் தேடி வருவதுண்டு. இப்போதெல்லாம் சட்டென்று உணர்ந்து பட்டென்று கைநீட்டி சினேகமாய் அதற்கு விடையும் கொடுத்து விடப் பழகி வருகிறேன்.
ஆனால், விமர்சனங்களில் எடுத்துக் கொள்வதை எடுத்துக் கொள்ள என்றும் தவறவே மாட்டேன். அது என் மேம்பாட்டுக்கு இன்றியமையாதது என்று நன்கறிவேன். அதே நேரத்தில், அழிவுபூர்வமான அநியாய விமர்சனங்கள் ஏற்படுத்தும் தற்காலிக வருத்ததை, சினத்தை ஆக்கபூர்வமாகத் திருப்புவது என் இயல்பு. இவை இரண்டையும் பின்பற்றுவதை நீண்டகாலமாகவே செய்து வருகிறேன்.
மதுமிதா: இலக்கிய உலகில் குழு அரசியல், இலக்கிய அரசியல் என்று இருப்பதாக சொல்லப்படுவது உண்மைதானா… இதனால் நேரடியாக ஏதேனும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறீங்களா? முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள் ஜெ.
ஜெயந்தி சங்கர்: கண்டிப்பாக இலக்கிய உலகிலும் குழுமனப்பான்மை குழு அரசியல் போன்றவை இருக்கின்றது. இலக்கிய உலகில் உள்ளவர்களும் மனிதர்கள் தானே, ஆகவே இதை இயல்பாகத் தான் பார்க்கிறேன். எனினும், இந்தக் குழு அரசியல் எல்லை கடந்து அழிவை நோக்கித் திருப்பிவிடப் படுகையில் மிகுந்த வருத்தமேற்படும். அதுபோன்ற சமயங்களில், மனக்குவிப்பை, நேரத்தை, ஆற்றலையும் வீணாக்க நேரலாம் என்று தோன்றும். ஆகவே, என் வரையில், குழுமனப்பான்மையிலிருந்தும் குழு அரசியலிலிருந்தும் விலகியே இருக்க விரும்புகிறேன்.
விளக்கிச் சொல்வது, விளக்கி எழுதுவது எனக்கு ஆயாசத்தை ஏற்படுத்தும். முன்முடிவுகளோடு இயங்குவோரிடம் என்ன சொல்லி என்ன பயன் என்ன விளக்கி என்ன பயன் என்ற இயலாமையும் ஏற்படுவதுண்டு. முன்முடிவுகளோடு பேசுவோரிடமும் எழுதுவோரிடமும் எனக்கு ஒருவித ஒவ்வாமை இருந்தபடியே இருக்கும். அதுவும் அந்த முன்முடிவுகள் ஒரு தனிநபர் அல்லது குழுவின் கெட்டிப்பட்டு கடினப்பட்ட கருதுபொருளாக இருப்பதையும் உணரமுடியும். இதையெல்லாம் தெரிந்துகொள்ளவே எனக்குப் பல்லாண்டுகளாகின.
அதைக் கடந்தும் குழு அரசியல், இலக்கிய அரசியலில் என் தலை உருள்வதுண்டு. என் கவனத்துக்கு வந்தவை ஒரு பங்கு என்றால், என் கவனத்து வராமல் காலம் கடந்து, என் காதை எட்டுபவை பன்மடங்கு. சூடடங்கி ஒருவித புனைவுகலந்த வடிவமாக அது இருக்கும். இதுபோன்றவற்றின் பட்டியல் மிக நீளம்.
இன்னொரு படைப்பாளியைத் தூக்கிவிட அவருடன் அவருக்கிணையாக பயிலரங்கு நடத்தவென்று என்னை அழைப்பதும் போன இடத்தில் விதவிதாமக அவமதிப்பதும், எனது ஆக்கங்களைக் குறித்துப் பேச ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லி அழைத்துவிட்டு கூடியிருந்து சில விஷயங்களை செயல்படுத்தி உள்ளூர குரூரமாக மகிழ்வதும் என்று நிறையவே பார்த்தாச்சு.
ஒன்றை மட்டும் சற்றே விரிவாகப் பகிர்கிறேன்.
என்னை முதன்மை கதாபாத்திரமாக வைத்து எள்ளி நடையாடி, எழுதப்பெற்ற ஒரு நாடகம் கோலாலம்பூரில் அரங்கேற்றப்பட்ட விஷயம் என் காதை எட்டுகையில் ஓராண்டு ஆகியிருந்தது.
கையெல்லாம் தோசைமாவு வழிய பேனா பிடிக்கிறாள், நூலகமே கதியெனக் கிடக்கிறாள், வைரத்தோடு மினுக்கும் காதுடையவள், அந்தணகுலத்தில் பிறந்தவள், விடாமல் எழுத்துலகில் இயங்குபவள் என்றெல்லாம் உருவாக்கப்பெற்றிருந்த அந்த கதாபாத்திரத்தை நானுமே ரசித்திருப்பேன். வாய்ப்பு நழுவிப்போனது. அந்த நிகழ்வுக்கு சென்று வந்து இரண்டு உள்ளூர் பெரியவர்கள் கமுக்கமாக இருந்ததும் புரிந்தது. என்காதை எட்டியிருக்கும் என்று கருதியிருக்கலாம்.
என்னை அடிப்படையாகக் கொண்டு அவர் உருவாக்கிய கதாபாத்திரத்தைச் சுற்றி ஒரு நாடகம். இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று பலநேரம் நான் அடக்கமுடியாமல் சிரித்ததுண்டு. எத்தனை கதாபாத்திரங்களை உருவாக்கியிருப்பேன், நானே கதாபாத்திரமானது இந்த ஒரே முறைதான். ஆகவே வரலாற்றுப் புகழ்மிக்க சம்பவம் அது.
நாட ஆசிரியராக நான் மதிக்கும், ஒருபோதும் நான் சந்தித்தே இராத, உலகளவில் புகழ் பெற்ற, தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவருக்கு உள்ளூரில் அந்த நாடகத்தை அரங்கேற்றுவதில் என்ன பிரச்சினை என்று இதுநாள் எனக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய கருவில் அவர் உருவாக்கிய சில நாடகங்கள் உள்ளூரில் அரசாங்கத்தாலேயே தடை செய்யப்பட்டன. அதெற்கெல்லாம் அசராத ஆசாமி. நான் மூலையில் இருந்துகொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பிள்ளைப்பூச்சி என்று அவருக்குத் தெரியவில்லை பாவம். பேசிப் பழகியிருந்தால் தெரிந்திருக்கும். செவிவழிச் செய்திகள், உள்ளுர் மூத்த எழுத்தாள மாதந்தோறும் கொண்டுபோகும் செய்திகள் வாயிலாக மட்டுமே எழுத்துலகை அறிந்து வைத்திருந்தார் போல.
படைப்பாளியை மனத்திலிருந்து விலக்கி விட்டு படைப்பைப் பார்க்கப் பழகவேண்டும் வாசகர்கள் என்று போகுமிடமெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். எனினும், படைப்பாளியை வைத்தே புரிந்துகொள்ள்ள, விமர்சிக்கிறார்கள். அதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம் போல. இந்த திருதிராஷ்டர்களை என்ன செய்வது? திருதிராஷ்டிரர்கள் மலிந்துபோன காலமாயிற்றே.
மதுமிதா: உங்களது அடுத்த இலக்கிய, ஓவிய படைப்பு, பயணம் என்று ஏதேனும் இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறீர்களா?
ஜெயந்தி சங்கர்: இந்த இருபத்தைந்தாண்டு காலமாக தொடர்ந்து இலக்கியம், கலைகளில் பயணப்பட்டதைப் போலவே இனியும் எந்தப்பெரிய நிர்ணயமோ திட்டமோ எதிர்பார்ப்போ இல்லாமலே இயங்குவேன் என்றே படுகிறது. எழுதுமொழி ஆங்கிலம் என்றும் பழகுகோல் தூரிகை என மனம் விரும்பி இயல்பாய் ஏற்றுள்ள நிலையில் இரண்டிலுமே எனது கற்றலுக்கான அகண்ட வெளி மிகுந்த உற்சாகமளிக்கிறது. அதுவே எனக்குள் ஒருவித சுவாரசியத்தை கொண்டு வருகிறது.
மதுமிதா: உங்கள் பயணம் மன நிறைவுடன் தொடரட்டும், வாழ்த்துகள்.
ஜெயந்தி சங்கர்: மிக்க நன்றி, வணக்கம்.
* jeyanthisankar28@gmail.com