கலகலப்பு ” கைத்தலம் “ : எஸ்.சங்கரநாராயணன் சிறுகதைகள்

சுப்ரபாரதிமணியன்எழுத்தாள நண்பர் எஸ். சங்கர நாராயணன்  மகன் பிரசன்னா திருமணத்திற்கு போக முடியாத வருத்தம் மனதிலிருந்தது. அலுவலகப்பிசாசின் அவஸ்தைதான். அத்திருமண தாம்பூலப் பையில் ஒரு புத்தகம் தந்தது பற்றி பல நண்பர்கள் சொன்னார்கள். அதைப்பற்றி சில பத்திரிக்கைகள் எழுதின. அந்தப் புத்தகம் அவரின்  16 சிறுகதைகள் கொண்ட ” கைத்தலம் ” என்ற புத்தகம்.   சமீபத்தில் இலக்கிய வீதியின்    ” அன்னம் விருது”  வாங்க சென்னை போயிருந்த போது திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் ஞானராஜசேகரன் கையில் பரிசு பெற்ற மகிழ்ச்சியை கூட்டியது சங்கரநாரயணன் அந்தப்புத்தக பிரதியைப் பரிசளித்தது. அக்கதைகளை ஒரே மூச்சில் படித்து முடித்த போது மூன்று மாதம் இதை படிக்காமல் போய் விட்ட குறை, திருமண வைபவத்திற்குப்  போகாத குறையை விட  உறுத்தியது. அமர்க்களமான கதைகள் . அபாரமான நகைச்சுவை. புத்தகமெங்கும் நிறைந்திருந்தது. கல்யாண வீட்டின் நல்ல விருந்து போல. . சில பிரசுரமாகாத கதைகளும் பல பிரசுரமான முன்பே படித்து ரசித்த கதைகளுமான தொகுப்பு அது.  இதில் பெண் யாதுமாகி நிற்கிறாள். தாயாய் , சினேகிதியாய், காத்லியாய், குருவாய்  என்று. இப்படி பெண்ணை பெருந்தன்மையுடன் பார்ப்பதற்கு எவ்வளவு முதிர்ச்சி வேண்டும். திருமணத்தை ஒட்டி நடைபெறும் பெண்பார்த்தல், கல்யாண ஏற்பாடுகள், மூகூர்த்த கால சடங்குகள், சச்சரவுகள், குடும்ப போட்டோக்கள் எடுத்துக் கொள்வது, குலதெய்வம் கோவிலுக்குப் போவது, சொந்தங்கள் தரும் மகிழ்ச்சி, சங்கடங்கள் எல்லாம் உள்ளடக்கிய கதைகள் இவை. பெண் பார்க்கும் படலம் முதலே பெண்ணுள் ஆக்கிரமிக்கும் உணர்வுகளை துல்லியமாக்க் காட்டுகிறார். ஊமைப் பெண்ணாக இருந்தாலும் அவள் திடமாக நின்று கணவனுக்கு காவலாளி ஆகிறாள்.  ஜாதீயத்தீ பலரை பலி கொள்கிறது. அம்மாக்களின் பெருமைகளுக்கும்,  தியாயங்களுக்கும் குறைவேயில்லை.கோபத்தை அணிகலனாய் அணிந்து கொள்ளும் ஆண்கள், பொறுமையை அணிந்து கொள்ளும் பெண்கள் என்று உறவுகளில் விதவிதமாய் இருக்கிறார்கள். உறவுகளுக்கு மத்தியில் கிண்டல்கள் மலிந்திருப்பது போல் எஸ். ச வின். உரைநடையில் நகைச்சுவை மலிந்தும் , மிளிர்ந்து கிடக்கிறது.சில உதாரணங்கள்: ஊறுகாய் குலுக்கல் போல்/,பூனை மியாவ் என கோரிக்கை வைக்கும் சாப்பிடுவது உப்புமாவாக இருந்தால் சேமியாவ்./ பீடிக்கு தாஜ் பீடி கவர்னர் பீடி என்றெல்லாம் மகாப் பெயர் வைக்கிறார்கள். எந்த கவர்னர் பீடி குடிக்கிறார் தெரியவில்லை./    

 “ திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் “  கதையில்-  படத்தில் கற்பழிப்பு காட்சிகளில் விதவிதமாய் நடந்து கொள்பவனை ஒரு கதாநாயகி திருமணம் செய்து கொள்கிற அதிசயத்தை வாய் விட்டுப் படித்து வாய் விட்டு சிரிக்க வைக்கிறார். எந்தப்பத்திரிக்கையிலும் பிரசுரமாகாத கதை இது.  நெஞ்சில் பனிக்கத்தியைச் சொருகுவது போல் மனதை உறைய வைக்கும் கதைகளும் உண்டு. “ புல்லின் நிழல்  “ அதிலொன்று. மாநகர ரயில்கள் தாமதவாவதில் அனேக காரணங்கள். அப்படி தாமதமாகவே வீடு சேரும் ஒரு பெண் மன்நிலை பிறழ்ந்த ஒரு பெண்ணை அரவணைக்கும் கதை அது.

சடங்குகள் விலாவாரியாய் சொல்லப்படுகின்றன. அவற்றில் இருக்கும் கசடுகளைக் காட்டுவதில் ஒரு பகுத்தறிவு பார்வை வந்து விடுகிறது. இசையைப் பற்றிய ஏகப்பட்ட பிரஸ்தாபங்கள், ரசிப்புகள். தெலுங்கு பேசும் கதாபாத்திரங்கள் இந்த கலகலப்பில் அதிகம் கலந்து கொள்கிறார்கள்.       ” அந்தரங்கத்தைப் பேணுதல் காற்றில் அலையும் சுடரை கைக்குள் பேணுதல் போல “ என்று  ஒளிந்து கொண்டிரூக்கும் தாய் என்ற கதையில் சொல்கிறார். மற்றவர்களின் அந்தரங்கத்தை ஊடுருவி எழுதப்பட்ட இக்கதைகளில் பேணப்படும் நாகரீகம் நேர்த்தியானது. 11 நாவல்கள், 25 சிறுகதைத்தொகுப்புகள் என்று எழுதிக்  கொட்டிக்குவித்திருக்கும் சங்கரநாராயணின் உரைநடையில் இருக்கும் வேகம், நகைச்சுவை கல்யாண விருந்து போல் சுவையானது. கல்யாண மண்டப கலகலப்பு கொண்டது.

     மொழிக்கு வணக்கம் சொல்லும் “ சொல்லங்காடி “ பதிப்பக வெளியீடு  ( 9677053933 ) இது. கல்யாணப்பரிசு திரைப்படத்தில் எழுத்தாளப் பாத்திரத்தை மையமிட்டு நகைச்சுவை அமர்க்களப்படுத்திய கே.ஏ. தங்கவேலுக்கு ஓர் எழுத்தாளனின் இல்லத்து கல்யாணப் பரிசாக சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது  . கடைசி அட்டையில்  இப்படி.:

 ” எழுத்தாளன் நாட்டின் முதுகெலும்புன்னேன் தட்டினாம் பாரு ”

“ உங்களையா “

subrabharathi@gmail.com