கவிதையெனும் தவளை!

எழுத்தாளர் ஜெயமோகன்[அண்மையில் பதிவுகள் இணைய இதழில் வெளியான ‘பிரமிளின் தவளைக் கவிதை பற்றியதொரு புரிதல்’ என்னும் எனது கட்டுரையில் ‘தவளைக் கவிதை’ பற்றிய எனது புரிதலை எழுதியிருந்தேன். அது பற்றிய ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்திற்கு ஜெயமோகன் அளித்துள்ள பதிற் கடிதம் ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. –  வ.ந.கி -] ஒரு கவிதையை வாசிக்க குறைந்தபட்ச வாசிப்பு அதிகபட்ச வாசிப்பு என இரு தளங்களை உருவாக்கிக்கொள்வது பயனளிக்கும் என்பது என் எண்ணம். குறைந்தபட்ச வாசிப்பு என்பது அந்தக்கவிதை உருவான மொழி-பண்பாட்டுச்சூழலில் கவிதையின் வரிகள் மூலம் பொதுவாக அடையச்சாத்தியமான அர்த்தம். அந்த மொழி-பண்பாட்டுச்சூழலில் உள்ள, கவிதையின் தனிமொழியை கற்பனைமூலம் விரித்து அறியும் பயிற்சி கொண்ட எல்லா கவிதைவாசகர்களும் ஏறத்தாழ அடையக்கூடிய வாசிப்பு அது. ஒரு வகுப்பில், ஒரு விவாதக்கூடத்தில், ஓர் வாசிப்பரங்கில் எப்போதும் அந்த குறைந்தபட்ச வாசிப்பைத்தான் முதலில் முன்வைக்க முடியும். இந்த வரிகள் இவ்வாறெல்லாம் பொருள் அளிக்கின்றன, ஒட்டுமொத்தமாக இக்கவிதை இந்தப் பொருளை, இந்த உணர்வை, இந்த தரிசனத்தை அளிக்கிறது என்று சொல்லலாம். அப்படிச் சொன்னதுமே அதை அங்குள்ள ஒவ்வொருவரும் தாண்ட ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் தனிப்பட்ட வாசிப்பைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அதைத்தான் அதிகபட்ச வாசிப்பு என்கிறேன்.

அப்படி அந்தரங்க வாசிப்பு நிகழ்கையில் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தனித்த அர்த்தங்களை அளிப்பதைக் காணமுடியும்.கவிதை வெவ்வேறு தனிப்பட்ட உணர்ச்சிகளுடனும் தனிப்பட்ட அனுபவங்களுடனும் தொடர்பு கொண்டு விரிவதை உணரமுடியும். வெவ்வேறு கவிதைகளுடன் அக்கவிதையை ஒவ்வொருவரும் இணைத்துக்கொள்வதை காணமுடியும்.

இவ்வாறு அனைவரும் தங்கள் வாசிப்பைச் சொல்லிமுடிக்கையில் அத்தனை வாசிப்பும் சேர்ந்து அந்தக் கவிதையை முன்னகர்த்தி இன்னொரு பொதுஅர்த்தம் நோக்கிக் கொண்டுசென்றிருப்பதைக் காண்போம். அதன்பின் மறுநாள் அதேகவிதையை விவாதிக்க அமர்ந்தால் அந்த முதல்கட்ட குறைநதபட்ச வாசிப்பு முந்தைய நாள் நிகழ்ந்த அதிகபட்ச வாசிப்பின் ஒட்டுமொத்தமாகவே இருக்கும்

இவ்வாறுதான் கவிதைகள் சமூகத்தால் வாசித்து உள்வாங்கப்படுகின்றன. ஒரு கவிதை வெளியான உடனே அதன் வாசிப்பு நிகழ்வதற்கும் சிலவருடங்கள் கழித்து அதன் வாசிப்பு நிகழ்வதற்கும் நடுவே பெரும் வேறுபாடு உள்ளது. ஆரம்பத்தில் முற்றிலும் புரியாதவையாக கருதப்பட்ட பல கவிதைகள் ஒரு தலைமுறைக்காலம் தாண்டியதும் மிக எளிய கவிதைகளாக ஆகிவிடுகின்றன.

இப்படிச் சொல்கிறேன். கற்சுறாவின் வாசிப்பு என்பது அவரது அந்தரங்கமான அதிகப்ட்ச வாசிப்பு. அப்படி வாசிக்கக்கூடாதென்றில்லை. கவிதையில் உள்ள சொற்கள் சொல்லப்படுபவை அல்ல, ‘வந்துவிழுபவை’. அவை ஏன் வந்து விழுந்தன என்று நாம் யோசிப்பது கவிதை வாசிப்பின் ஒரு முக்கியமான கூறுதான்.

உங்கள் வாசிப்பு இன்னொரு அதிகபட்ச வாசிப்பு. உங்களைப்போல இன்னும் பத்துபேர் அமர்ந்திருக்கும் சபையில் இன்னும் பத்துவாசிப்புகள் வெளிவரும். கவிதை அந்த பத்துகோணங்களின் சமரசப்புள்ளியில் தன் அர்த்ததை நிகழ்த்திக்கொண்டிருக்கும். சென்ற இருபதாண்டுக்காலத்தில் முப்பத்திரண்டு கவிதையரங்குகளை நிகழ்த்தியிருக்கிறோம். தமிழிலும் மலையாளத்திலும் உள்ள மிகச்சிறந்த கவிஞர்கள் அமர்ந்து அவர்களின் கவிதைகளை விவாதித்திருக்கிறார்கள். இந்த ‘அர்த்தம்திரளல்’ நிகழ்துவருவதை கண்கூடாகவே கண்டிருக்கிறேன்.

ஆகவே கடைசி அர்த்தம் என ஒன்றில்லை. கவிதை என்பது ஓர் ஆழ்மன எழுச்சி மொழியைச் சந்திக்கும் ஒரு கணம் மட்டுமே. அர்த்தம் மூலம் அது தன்னை நிகழ்த்துவதில்லை, வாசகர்களில் உருவாக்கும் ஆழ்மன எழுச்சி மூலமே நிகழத்துகிறது.

கடைசியாக, இருபதாண்டுகளுக்கு முன் இக்கவிதைபற்றி பிரமிளிடம் பேச நேர்ந்திருக்கிறது. பிரமிள் அன்று தமிழில் ஒலிக்கக்கேட்ட அரைவேக்காட்டு கோட்பாட்டுக்கூச்சல்களைக் கண்டு எரிச்சலுற்று இதை எழுதினதாகச் சொன்னார். நூறும் ஆயிரமும் அறிந்தவன் அசட்டுத்தனமாக ஒன்றில் நிற்கையில் உள்ளுணர்வெனும் ஒன்றை மட்டும் அறிந்தவன் முன்செல்வதைச் சொல்லியிருக்கிறேன் என்றான்

நான் சொன்னேன், இக்கவிதையில் ‘தவளைக் கவிதை’ என்ற சொல்லாட்சி எனக்கு அதிகமாகப் படுகிறது. கவிதையை நீங்கள் இப்படி அர்த்தம்கொள்ளவேண்டும் என்று சொல்வதுபோல் உள்ளது. வெறுமே ’தவளை’ என்று மட்டும் சொன்னாலே போதுமே -என்று

வழக்கம்போல பிரமிள் கடும் சினம் கொண்டு கத்த ஆரம்பித்தார். ‘நீ என்ன பெரிய புடுங்கியா?’ என்ற தரத்தில்.

வழக்கம்போல நான் அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் பெசாமல் நின்றேன்.

அதன் பின் அவரே ‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’ என்றார்

‘புத்தரே’ என்ற சொல் உங்களை மீறி விழுந்தது. எனக்கு அது கவிதையை மீறிய அர்த்ததை அளிக்கிறது. நான் ஆயிரம்காலடிச்சுவடுகள் என்ற ஒரு நாவலை எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஆயுரம் புத்தர்களை காட்டமுயலும் நாவல். [எழுதிமுடிக்காமல் கையில் இருக்கிறது] அதனுடன் இந்தக்கவிதை ஒத்துப்போகிறது- என்றேன்

என்னிடம் அதை விளக்குமாறு பிரமிள் சொன்னார். நான் சொன்னேன், ஆறு வேகமிழக்கும்போது கிளைகளாகப்பிரிவதுபோல புத்தர் புத்தரல்லாமலாகும்போதுதான் நூறாகவும் ஆயிரமாகவும் பிரிகிறார்.தத்துவ புத்தர், ஆசார புத்தர், வழிபாட்டு புத்தர். அத்தனை புத்தர்களும் பிடிக்குச்சிக்குபவர்கள். ஒற்றைப்புத்தர் நழுவிச்சென்றுகொண்டே இருப்பார்.நடையா, தாவலா, பறத்தலா என்று சொல்லமுடியாதபடி- என்று

பிரமிள் ‘அது ஒரு நல்ல வாசிப்பு’ என்றபின் ‘தவளைக் கவிதை என்று சொன்னதலாமட்டும் அப்படி வாசிக்கமுடியாமல் ஆகிறதா என்ன?’ என்றார்.

நான் ‘அது தடையாக இருக்கிறது’ என்றேன்.

பிரமிள் ‘எந்தக் கவிதையிலும் கவிதைவாசகன் சில சொற்களை தன்னையறியாமலேயே நீக்கம்செய்துகொண்டுதான் வாசிக்கிறான்’ என்றார். ‘கவிதையை நல்ல வாசகன் திரும்பச்சொல்லும்போது நுட்பமான ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கும்…சொற்கள் இடம் மாறியிருக்கும். வேறு சொல் வந்து சேர்ந்திருக்கும். கண்டிப்பாக சில சொற்கள் இல்லாமலாகியிருக்கும்’

அதற்கு உடனே ஒரு உவமை சொன்னார். அதுதான் பிரமிள். ஹென்றி ஷாரியரின் பாப்பில்யான் நாவலில் அலுமினியக்குழாய்களில் பணம் வைத்து மலக்குடலுக்குள் செருகுவார்கள். இரண்டு மூன்று குழாய்கள். ஆனால் வெளியே எடுக்கும்போது எப்போதும் உள்ளே போன வரிசைமுறை மாறியிருக்கும். அதைப்போலத்தான். உள்ளே சென்ற கவிதை அங்கே அவனுக்குள் கிடந்து புரள்கிறது, மாறுகிறது.

நான் கேட்டேன் ‘வாசகன் கவிதையில் சொற்களைச் சேர்ப்பதுண்டா?’ .

‘சேர்த்தால் அவனைச் செருப்பாலடிக்கவேண்டும்’ என்றார் பிரமிள்

ஜெ

http://www.jeyamohan.in/?p=37243