13 ஆவது திருத்த சட்டத்தைத் திருத்துவது இன்னொரு வாக்குறுதி மீறல்

13 ஆவது திருத்த சட்டத்தைத் திருத்துவது   இன்னொரு வாக்குறுதி மீறல் சிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும்  தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது.  இலங்கையின் யாப்பில் கொண்டுவரப்படவுள்ள  உச்தேச 13 ஆவது சட்டதிருத்தம் –  இன்று சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பரவல் மூலம் வழங்கப்பட்டுள்ள  ஒரே சலுகை – இந்த வாக்குறுதி மீறல்களுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. ஒருவிதத்தில் இந்த மீறல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க வாக்குறுதி மீறல் அரசியல் தீர்வு தொடர்பானது. சிறீலங்கா அரசு பல ஆண்டுகளாக  அதிகாரப் பரவலாக்கல் முறைமையின் கீழ் அதிகாரம் சிறீலங்காவில் வாழும் எல்லா மக்களுக்கும்  இடையில்  ஒப்புரவான முறையில் பகிர்ந்தளிக்கப்படும் என வாக்களித்திருந்தது.  அய்க்கிய நாடுகள் அவையின்  செயலாளர் நாயகம் அவர்களோடு சேர்ந்து சனாதிபதி இராசபக்சே போர் முடிந்த மே 2009 இல் விடுத்த கூட்டறிக்கையில் அரசியல் தீர்வு தொடர்பாகப் பல உறுதிமொழிகளை வழங்கி இருந்தார். அதில் “13 ஆவது சட்ட திருத்தம்  நடைமுறைப்  படுத்தப்படும்” என்பது ஒன்றாகும்.

போர் முடியு முன்னர் அனைத்துக் கட்சி  சார்பாளர்கள் குழு (அகசாகு) மற்றும் அகசாகு க்கு உதவியாக சனாதிபதியால் யூலை 11, 2006 இல் நியமிக்கப்பட்ட பன்முக வல்லுநர் குழுவின் தொடக்கக்  கூட்டத்தில் கலந்து கொண்டு சனாதிபதி உரையாற்றும் போது:

“People in their own localities must take charge of their destiny and control their politico-economic environment. … In sum, any solution needs to as a matter of urgency devolve power for people to take charge of their own destiny. … Any solution must be seen as one that stretches to the maximum possible devolution without sacrificing the sovereignty of the country given the background of the conflict.”

“சொந்த  இடங்களில் வாழும் உள்ளுர் மக்கள் தங்கள்  தங்களது தலைவிதியைத் தீர்மானிக்கவும் அரசியல் – பொருண்மிய சூழலைத் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள  வேண்டும்…..  விளக்கமாகச் சொன்னால்  எந்தவொரு தீர்வும் விரைவாக மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து அவர்கள் தங்களது தலைவிதியைத் தங்கள் கையில் எடுப்பதற்கு வழிகோல வேண்டும் ….. இனச் சிக்கலுக்குரிய தீர்வானது மோதலின் பின்னணியில் நாட்டின் இறைமையைப் பலிகொடாதவாறு  சாத்தியமான உச்சகட்ட அதிகாரப் பரவலாக்கல் ஆக இருக்க வேண்டும்” என்றார்.

மார்ச்சு 2009 இல் அய்க்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 10 ஆவது அமர்வில் சிறீலங்கா சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் மகிந்த சமரசிங்கி சனாதிபதி கொடுத்த வாக்குறுதியை மீள் வலியுறுத்திப் பேசினார்.

“எங்களது தேசிய சிக்கல்களில் இனச் சிக்கலே பல சகாப்தங்களாக பேசுபொருளாக இருந்து வருகிறது. அதனைத் தீர்ப்பதற்கு அரசியல் தீர்வு தேவைப்படுகிறது. … அனைத்துக் கட்சி  சார்பாளர்கள் குழு செய்த பரிந்துரையின் அடிப்படையில் 1987 இல் கொண்டுவரப்பட்ட யாப்பில் செய்யப்பட்ட 13 ஆவது திருத்த சட்டத்தைத் தக்க முறையில் நடைமுறைப்படுத்த முடிந்துள்ளது.”

மே 2011 இல் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரீஸ் புது தில்லிக்குப் போயிருந்த போது இந்திய வெளியுறவு அமைச்சரோடு சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்கள். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

“….. சிறீலங்கா அரசுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தையை விரைவு படுத்தி உருப்படியான முன்னேற்றம் காண வேண்டும் என்பதில் சிறீலங்கா அரசின் ஈடுபாட்டை  சிறீலங்காவின் வெளியுறவு அமைச்சர் உறுதிசெய்தார். 13 ஆவது சட்ட திருத்தத்திற்கு மேலாக ஒரு தீர்வுப் பொதியைக் கொண்டுவருவது நல்லிணக்கத்துக்கு வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்” என்றார்.

2012 சனவரி மாதத்தில் சனாதிபதி இராசபக்சேயைச் சந்தித்த பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அமைச்சர் ஜி.எல். பீரீசோடு  சேர்ந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் பேசும் போது:

” ஒரு அரசியல் தீர்வை எட்டுமுகமாக 13 ஆவது சட்ட திருத்தம் முழுதாக நடைமுறைப் படுத்தப்படும் என்ற உறுதிமொழியை சிறீலங்கா அரசு பல தடவைகள் எமக்கு வழங்கியுள்ளது.  ஒரு உருப்படியான அரசியல் பகிர்வை எட்டுவதற்கு  13 ஆவது சட்ட திருத்தத்துக்கு மேலாகவும் செயல்படத் தயார் எனவும்  சிறீலங்கா தெரிவித்துள்ளது.  எனவே நாங்கள்  பேச்சுவார்த்தை தொடர்பாக விரைவானதும் உருப்படியானதும் ஆன அணுகுமுறையை  எதிர்பார்க்கிறோம்.”

இந்திய அரசுக்கு கொடுக்கப்பட்ட முதல் வாக்குறுதி இதுவல்ல. டிசெம்பர் 25 இல் இந்திய வெளியுறவுப் பேச்சாளர் கூறியதாவது:

நாடாளுமன்றம் மாகாணசபைப் பட்டியலில் உள்ள பொருள்கள் பற்றி சட்டம் இயற்ற முனையும் போது இன்றைய  13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு மிதமான பாதுகாப்பே உள்ளது.  விதி 154 (ஜி) (3) மகாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட பொருள்கள் பற்றி அனைத்து மாகாண சபைகளது ஒப்புதல் பெறாது மத்திய அரசு சட்டம் இயற்ற விரும்பினால் அதனைத் தடுக்கும்  விதியாகும்.  ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணசபைகள் முன்மொழியப்பட்ட சட்டவரைவுக்கு ஒப்புதல் அளிக்காது விட்டால்  மத்திய அரசு அந்த சட்ட வரைவை சாதாரண பெரும்பான்மையோடு நிறைவேற்றலாம். அப்படி நிறைவேற்றும் போது  அந்தச் சட்டம் சம்மதம் கொடுத்த மாகாண சபைகளுக்கு மட்டும் பொருந்தி வரும். அல்லது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்கோடு அந்தச் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டால் அந்தச் சட்டம் முழு நாட்டுக்கும் பொருந்தி வரும்.  இந்தப் பாதுகாப்பை நீக்குவதற்கு அரசு எடுக்கும் முன்மொழிவு 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் செய்யப்பட்டுள்ள அதிகாரப்  பகிர்வைப் பொருள் அற்றதாக்கிவிடும்.  காரணம் மத்திய அரசு  எந்த நேரத்திலும் மாகாணசபைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள எல்லா  அதிகாரங்களையும் சதாராண பெரும்பான்மையோடு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

“சிறீலங்கா கடந்த காலத்தில் ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கான தனது ஈடுபாடு பற்றிய உறுதிமொழிகளைப்  பலதடவைகள் எங்களுக்கு வழங்கியுள்ளது…..அவை சிறீலங்காவின் யாப்பில் காணப்படும்  13 ஆவது சட்ட திருத்தம் முழுதாக நடைமுறைப் படுத்தப்படும் என்ற உறுதிமொழிகளாகும்.  மேலும் ஒரு பொருள்பொதிந்த அதிகாரப் பகிர்வைச் செய்வதற்கும் மற்றும் மெய்யான  நல்லிணக்கத்தை எட்டுவதற்கும்  13 ஆவது சட்ட திருத்தத்துக்கு மேலாகவும் செயல்படத் தயார் எனத் தெரிவிக்கப்பட்டது.” 

இந்த அரசு 13 ஆவது சட்ட திருத்தத்தை முழுதுமாக நடைமுறைப்படுத்தி ஒரு பொருள்பொதிந்த அரசியல் தீர்வு எட்டப்படும் என்ற வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டது. 13 ஆவது சட்ட திருத்தத்துக்கு மேலாக அதிகாரங்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியைக்  காப்பாற்றவும் அரசு தவறிவிட்டது. மிக வெட்கக் கேடான முறையில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக வழங்கப்பட்ட குறைவான  சலுகைகளைக் கூடக் களைவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கிறது.  அரசு முன்மொழிய நினைக்கும் திருத்தங்கள் இரண்டு விதத்தில் பெரும்பான்மை ஆதிக்க மனப் போக்குடையது. முதலாவதாக  பெரும்பான்மையினரது விருப்பத்தை – பெரும்பான்மை மாகாணசபைகள்  ஒத்துக் கொண்டால் –  சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் மாகாண சபைக்குரிய பட்டியலில் காணப்படும் பொருள்கள் பற்றிய  சட்டத்தை இயற்றலாம். இப்படிச் செய்வதன் மூலம்  பெரும்பான்மை மாகாணசபைகள் வேறொரு மாகாணசபை மீது தமது ஆதிக்கத்தை செலுத்த வழி வகுக்கிறது. இரண்டாவதாக நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை விருப்பத்தை ஒரு குறிப்பிட்ட மாகாணசபை மீது திணிக்கிறது. நாடாளுமன்றம் சிறப்புப் பெரும்பான்மை இல்லாது சாதாரண பெரும்பான்மையின் அடிப்படையில் சட்டம் இயற்ற வழிவகுக்கிறது. ஒரு சட்ட வரைவுபற்றி பெரும்பான்மை மாகாண சபைகள் ஒத்துப் போகாவிட்டால் மட்டுமே சிறப்புப் பெரும்பான்மை தேவைப்படும்.

இற்றை நாள் மட்டும் அமைதியை வென்றெடுப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையைத்தானும் அரசு எடுக்க முயற்சிக்கவில்லை. மாறாகப்  போரில் வெற்றி பெற்றால் போதும் என அரசு செயல்படுகிறது.  இந்தத் தோல்வி ‘போரை வென்று’ அதன் மூலம் கிடைக்கும் ஆதாயங்களை பொருளற்றதாக ஆக்கிவிடும்.

சொற்களைவிடச்  செயல்கள் உரத்துக் கேட்கும்  என்பதை சிறீலங்கா அரசு கட்டாயம் உணர்ந்து கொள்ள வேண்டும். இது வரை – பொருள்நிறைந்த தீர்வுக்கு வேண்டிய மெய்யான விருப்பம் என்கின்ற போது அரசின் செயல்கள் சொற்களை மூழ்கடித்துவிட்டன. )

athangav@sympatico.ca