உ.வே.சா, தமிழ்த்தாத்தா ஆகும் முன்பே
உயர்தொண்டு நாவலரும் தாமோ தரரும்
தேவையென்று அருந்தமிழில் வளர்த்துக் காத்த
செந்தமிழின் நூலகத்தை எரித்தார் யாழில்..!
சோவாரித் தமிங்கிலிசில் சூறையிட்டார்
சுதந்திரமாய் மொழிக்கொலையும் செய்திட் டாரே..!
நாவார நாணமின்றி தமிழில் சொல்வார்
நம்தமிழ்க்கும் அமுதென்று பேரும் உண்டே..!
காடுவெட்டி நிலந்திருத்தி வளத்தை ஆக்கும்
கையுடைய தமிழரின்று கைகால் அற்றார்
கூடுவிட்டு உயிர்பிரிந்தார் வலைஞர் மக்கள்
கொண்டவழி தப்பினோரைச் சுட்டுக் கொன்றார்
கேடுகெட்ட இந்தியத்தில் தமிழர் தம்மை
கிறுக்கரென்றே நினைக்கின்றார் அவரை மாற்ற
பாடுபடும் கூட்டமின்று சிதறிப் போச்சே…
பைந்தமிழ்க்கு அமுதென்றுபேரும்ஆச்சே…!
கேரளத்தில் ஆந்திரத்தில் குடகில் இன்று
கேடுதன்னைச் செய்தார்கள் தமிழர் மீதே
யாருமிங்கு கேட்பதற்கு நாதி யில்லை..,
யாவருமே ஏமாந்தோம் ; வா(ழ்)க்கை விற்றோம்..!
ஓர்மையுடன் ஒன்றுபட்டால் உயர்வே உண்டு…
ஓங்கிடும்பார் தமிழுணர்வு அயர்வை வென்று…!
சீர்பெறவே புத்துலகு சமைப்போம் நாளை….
செந்தமிழை அமுது என்போம் அந்தவேளை..!