கவிதை: கடவுள்!

- முல்லைஅமுதன்

பொழுதே போகாமல்
உட்கார்ந்திருந்தார் கடவுள்.
பக்தர்களே வரவில்லை..
திருந்திவிட்டார்களா?
அல்லது அவர்களே சாமியாகிவிட்டார்களா?
தலையைப் பிய்த்துக்கொண்டார் கடவுள்.

இரவு
உறங்கலாம் என்று நினைத்த போது
ஒருவன் வந்து ‘சாமி’ என்றான்..
திரும்பிப் பார்த்தார் கடவுள்.
உள்ளுக்குள்
மகிழ்ச்சியாய் இருந்தது கடவுளுக்கு..
ஏன் தாமதம்?
வந்தவனும்
மௌனமாக பதிலின்றி நின்றான்.
வாராமல் விட்டது தவறு.
வந்தால்
தட்சணை தரவேண்டும் என்றுதானே வராமல் போனாய்?
‘தட்சணை’
அழுத்திச் சொன்னது உறைத்தது.

பாவம் நான் செய்யவில்லை..வராமல் இருந்தது தவறு தான்..
வறுமை,குடும்பம்,..இன்னும் ..
உங்களுக்குத் தெரியாததா?
தண்டனை தந்துவிடாதீர்கள். ஐயனே!
புன்னகைத்தபடி,
தனது சூலாயுதத்தைக் கொடுத்தார்..
அவனைக் கொன்று வா..
தண்டனையிலிருந்து தப்பலாம்…
திகைத்தான்.
பின்,விதை
கடவுளே என்றபடி
நடந்தான் என்னைக் கொல்ல..

mullaiamuthan16@gmail.com