குறுநாவல்: ‘பிள்ளைக்காதல்’

வ.ந.கிரிதரனின் குறுநாவல்: 'பிள்ளைக் காதல்'1.ஸ்கார்பரோ நூலகக் கிளையொன்றில் பன்மொழிப் பிரிவினில் தமிழ் நூல்களைத் தேடிக்கொண்டிருந்த பானுமதியின் கவனத்தை “பானு” என்ற வியப்புடன் கூடிய ஆண் குரலொன்று கலைத்துவிடவே குரல் வந்த திசையினை நோக்கித் திரும்பினாள். அவளால் நம்பவே முடியவேயில்லை. எதிரிலிருந்தவன் சேகரனேதான். எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவனை அவள் சந்திக்கின்றாள். குறைந்தது இருபத்தைந்து வருடங்களாகவாவதிருக்கும். காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடி விட்டது. நாட்டு நிலைமை காரணமாகப் புலம்பெயர்ந்து வந்தது நேற்றுத்தான் போலிருக்கிறது. அதற்குள் இத்தனை வருடங்கள் கழிந்தோடி விட்டனவா! வியப்பு நீங்காதவளாக அவனை நோக்கிச் சில கணங்கள் பேச்சற்று நின்றாள் பானுமதி.

சேகரன்தான் மீண்டும் அவளது கவனத்தைத் திருப்பினான்: ” என்ன பானு. அப்படியே சிலையாய் நின்று விட்டீர். நம்ப முடியவில்லையா?”

அதற்கு அவள் “நம்பத்தான் முடியவில்லை சேகரன். நம்பத்தான் முடியவில்லை. பதினெட்டு வயதிலை கடைசியாகச் சந்தித்தபோது நீங்கள் எப்படியிருந்தீர்களோ அந்த உருவம்தான் இன்னும் என்ற நினைவிலை இருக்குது. ஆனால் இங்கை பார்த்தால் நாற்பது வயதிலை சத்தியராஜைப் போல ஒரு தோற்றத்திலை இருக்கிறியள்” என்றாள்.

அதைக் கேட்டதும் அவன் பலமாக ஒருமுறை சத்தம்போட்டுச் சிரித்தான். நூலகத்திலிருந்த ஒரு சிலர் அவர்களைத் திரும்பிப் பார்த்தனர். தனது தொனியினைச் சிறிது குறைத்தவனாக “நீர் மட்டுமென்னவாம். நமபவே முடியவில்லை. மாமிமார் மாதிரியொரு தோற்றத்திலை. ஆனால் அந்த அழகு மட்டும் இன்னும் குறைந்து விடவேயில்லை” என்றவன் “வாரும் வெளியிலை போய்க் கதைப்போம். ‘லைப்ரரி’க்குள்ளையிருந்து கதைப்பது சரியில்லை” என்றான்.

அவளுக்கும் அவன் கூறுவது சரியாகப் பட்டது. “அருகிலைதான் ‘டிம் ஹோர்ட்டன்’ இருக்குது. கோப்பி குடித்துக்கொண்டு கதைக்கலாம்” இருவருமாக நூலகத்தை விட்டு வெளியில் வந்தவர்களாக அருகிலிருந்த ‘டிம் ஹோர்ட்டனு’க்குள் நுழைந்தார்கள். கோப்பி வாங்கிக்கொண்டு இருவரும் ஒரு மூலையில், சிறிது அமைதியிலாழ்ந்திருந்த திக்கில் சென்றமர்ந்தனர்.

2.

சேகரனே பேச்சினை ஆரம்பித்தான்: ” நான் கனவிலைக் கூட எதிர்பார்க்கவேயில்லை இப்பிடி இங்கை சந்திப்பேனென்று” அதற்கு அவளும் “நானும்தான் சேகரன்” என்று கூறிவிட்டு அமைதியிலாழ்ந்தாள்.

இருவரும் சிறிது நேரம் அமைதியிலாழ்ந்தனர். இவ்விதமான சந்தர்ப்பங்களில் இவ்விதமானதோர் அமைதியும் தேவையாகத்தானிருக்கிறது. இருவரது நினைவுகளும் அவர்களது அன்றைய காலகட்டத்தைநோக்கி விரைந்தன. பழைய ஞாபகங்களை இருவரது உள்ளங்களும் சிறிது அசைபோட்டன.

கனவுகளே வாழ்க்கையாக ஓடிக்கொண்டிருந்த ‘டீன் ஏஜ்’ வயதுப் பருவம். யாழ் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவளோ யாழ் இந்து மகளிர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். தினமும் அவன் பாடசாலை செல்லும் சமயங்களில் அவள் எதிர்ப்படுவாள்.

இரட்டைப் பின்னல்கள் மார்பிலாடிக்கொண்டிருக்க, தலை நிலம் பார்க்க, ஆடி அசைந்து அவள் செல்லும் காலைகள் அவன் வாழ்க்கையின் இனிமையைக் கூட்டின. மாநிறம். ஆனால் அழகான கரு விழிகள் அவளுக்கு. இவ்விதமாக காலைப் பொழுதுகளில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தபடியே காலமும் கழிந்து கொண்டிருந்தது. வீதியில் அவளுடன் கதைப்பதைக் கண்டால் கதை கட்டிவிடும் சமூகம்.

அவளுடன் கதைப்பதற்கு மனது விரும்பினாலும் அதற்குத் தடைபோட்டுக்கொண்டான். அவளும் அவனைக் காணும் சமயங்கள் ஒருமுறையாவது அவனைப் பார்க்கத் தவறுவதேயில்லை. பார்த்த அந்த ஒரு கணத்திற்குள்ளேயே முழுமையாக அவனை உள்வாங்கிக் கொண்டவளைப்போல் அடுத்தகணமே தலையைக் குனிந்துகொண்டு நடந்துவிடுவாள். ஆடி அசைந்து ஒருவித ஒயிலுடன் அவள் செல்வதைப் பார்த்துக்கொண்டே பாடசாலை செல்வான் அவன்.

அன்றைய காலகட்டத்தில் அவனுக்கு மிகவும் பிடித்தமான பாடலொன்றிருந்தது. ‘வாழ்க்கைப் படகு’ படத்தில் வரும் பி.பி. ஸ்ரீனிவாசின் குரலிலொழிக்கும் பாடலது.

“நேற்றுவரை நீ யாரோ? நான் யாரோ? இன்று முதல் நீ வேறோ? நான் வேறோ?” இந்த வரிகளும் தொடர்ந்து வரும்

“உன்னை நான் பார்க்கும்போது
மண்ணை நீ பார்க்கின்றாயே.
விண்ணை நான் பார்க்கும்போது
என்னை நீ பார்க்கின்றாயே”

என்னும் வரிகளும் அவனுக்கு மிகவும் பிடித்தவையாகவிருந்தன. அந்தப் பதின்ம வயதுப் பருவத்தை அவனது நண்பர்கள் கோழி கூவும் பருவம் என்று அடிக்கடி கூறிச் சிரித்துக்கொள்வார்கள். உண்மையில் இந்தப் பிறப்பின் ஒவ்வொருவரது வாழ்விலும் இந்தப் பதின்ம வயதுப் பருவமும் , அப்பருவத்தில் விளையும் முதற்காதலும் மிகவும் முக்கியமானவை. பெரும்பாலும் இந்த முதற்காதல் வெற்றியில் முடிவதில்லை. ஆனால் அந்த அனுபவம் முக்கியமானது. காதலின் மகத்துவத்தை உணர்த்தும் மகத்தான அனுபவம். மாகவி பாரதியையும் இந்த முதற்காதல் விட்டுவைக்கவில்லை. இந்தவிடயத்தில் அவன் ஒரு படி மேல். ஒன்பது வயதிலேயே பிள்ளைக்காதல் வயப்பட்டவனவன். அவனைப்பொறுத்தவரையில் பிள்ளைக்காதல் மகத்தானது. வயது முற்றிய பின்னர் உருவாகும் காதல்தான் மாசுடையது. அதனால்தான் அவன் ‘வயது முற்றிய பின்னுறு காதலே மாசுடைத்தது, தெய்விக மன்றுகாண்’ என்று பாடுகிறான். இந்த முதற்காதலைப் பொறுத்தவரையில் வெற்றி தோல்வி முக்கியமில்லை. அந்த அனுபவம்தான் முக்கியமானது. வாழ்க்கை முழுவதும் கூடவே வந்து அவ்வப்போது தலைகாட்டுவது. உண்மையில் மாசு மறுவற்ற பருவத்தில் தோன்றுவதால் மாசுமறுவற்றது.

இவ்விதமாக ஒருவரையொருவர் ஓரக்கண்களால் பார்த்து, ஏங்கி, கனவு கண்டு , வெந்து, வதங்கிக்கொண்டு காலம் கடந்து கொண்டிருக்கையில் அவர்களது வாழ்க்கையில் நல்லதொரு சந்தர்ப்பம் தோன்றியது. பத்தாவது வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் சமயம் இருவருமே சுந்தரமூர்த்தி வாத்தியாரிடம் ஆங்கிலப் பாடம் டியூசன் எடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இருவருக்குமே இந்தச் சந்தர்ப்பம் மிகவும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. அதிகாலையில் ஐந்து மணிக்கு ஆரம்பமாகும் டியூசன். தொலைவில் காற்றில் பெருமாள் கோவிலிலிருந்து கேட்கும் எம்.எஸ்.சின் சுப்பிரதபாதத்தைக் கேட்டபடியே அவன் நேரத்துடனேயே டியூசன் வகுப்புக்குச் செல்வான். அவளும் நேரத்துடனேயே வந்துவிடுவாள். மற்றவர்கள் வருவதற்கிடையில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை இருவருமே நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். மனம் விட்டும் கதைத்துக் கொள்வார்கள். இவ்விதமாகச் சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் திடீரென ஒரு முறிவு. அவளது தந்தையார் ஸ்டேசன் மாஸ்ட்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். வவுனியாவுக்கு மாற்றலாகிப் போகவே அவளும் சென்று விட்டாள். சிறிது காலம் வாடிக் கிடந்தான். தாடி கூட வளர்க்க ஆரம்பித்தான். அதன் பின்னர் சிறிது சிறிதாகத் தன்னை தேற்றிக் கொண்டு தன் வாழ்க்கையில் கவனம் செலுத்ததொடங்கி விட்டான். அதன் பின்னர் காலம்தான் எவ்வளவு விரைவாகச் சென்று விட்டது. அதன் பிறகு அவனுக்கு அவளைக் காணும் சந்தர்ப்பமே ஏற்படவில்லை. அவனது வாழ்க்கையிலும் பல மாற்றங்கள். அவளது வாழ்க்கையிலும்தான். நாட்டு நிலைமைகளும் சதி செய்து விடவே இருவருக்கும் சந்திக்கும் வாய்ப்பே ஏற்படவில்லை. இருந்த போதும் அவனால் ஒருபோதுமே அவளை நினைவிலிருந்து அகற்ற முடியவில்லை. இத்தனை வருடங்களுக்குப் பின்னர் இன்னுமொரு மண்ணில் இவ்விதமாகச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவு மகிழ்ச்சியாகவிருக்கிறது.

3.

அவனே மீண்டும் அமைதியைக் கலைத்தபடி உரையாடலைத் தொடர்ந்தான்: “பானு எப்படியிருக்கிறீர்? ”

அதற்கு அவள் “நான் நல்லாய்த்தானிருக்கிறன். எனக்குக் கிடைத்த புருஷனும் என்னை நல்லாய்ப் புரிஞ்சு கொண்ட நல்ல மனுசன். அது சரி நீங்களெப்படி? கல்யாணமெல்லாம் எப்படி?” என்றாள்.

“என் நிலையும் அப்படித்தான். என் மனதை நன்கு புரிந்துகொண்ட மனைவி. பத்து வயசிலை ஒரு மகள். வாழ்க்கை நல்லாத்தான் ஓடிக்கொண்டிருக்கு பானு”

அவளுக்கு அவனது பதில் மகிழ்ச்சியைத் தந்தது. அந்த மகிழ்ச்சி குரலிலும் தொனிக்க ” சேகரன். உண்மையிலேயே உங்களுடைய நிலைமையினனைக் கேட்கச் சந்தோசமாகத்தானிருக்கு. ஒரு நாள் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் எங்களுடைய வீட்டுக்கு வரவேண்டும். வருவீங்களா சேகரன்?” என்று கேட்டாள்.

“கட்டாயம் வருகிறன். அதே மாதிரி ஒரு நாளைக்கு நீரும் உம்முடைய ஹஸ்பண்டைக் கூட்டிக்கொண்டு எங்களுடைய வீட்டுக்கும் வரவேண்டும். என்ன சொல்லுகிறீர் பானு?” என்று அவனும் பதிலுக்குக் கேட்டான்.

அதற்கு பானு “கட்டாயம் சேகரன். கட்டாயம்” என்றாள்.

சிறிது நேரம் அவர்களுக்கிடையில் ஒருவித மெளனம் நிலவியது. சேகரனே அந்த தற்காலிக மெளனத்தைக் கலைத்தான்.

“பானு. உம்மிடம் ஒரு விசயம் கேட்க வேண்டுமென்றி கனகாலமாக நினைத்துக் கொண்டிருந்தேன். . இப்ப அதுக்குச் சந்தர்ப்பம் வந்திருக்கு. உமக்கு இப்பவும் அந்தக் காலம் ஞாபகத்திலை இருக்குதுதானே.. அல்லது மறந்து விட்டீரா?”

அதைக் கேட்டதும் ஒருகணம் பானு சிரித்து விட்டாள். அத்துடன் “என்ன சேகரன். அதை எப்படி மறக்க முடியும். எந்தவிதக் கள்ளங் கரவுமில்லாத பருவமல்லவா?” என்று கூறவும் செய்தாள்.

“எவ்வளவு இனிமையாகக் காலம் போய்க்கொண்டிருந்தது. அப்ப நீர் மட்டும் திடீரென்று இடம் மாறிப் போயிருக்காவிட்டால்..”

“நீங்கள் சொல்லுறதும் சரிதான். திடீரென்று அப்பாவுக்கு வவுனியாவுக்கு ட்ரான்ஸ்பர் வந்து போயிருக்காவிட்டால் எங்களுடைய வாழ்க்கை எப்படியெல்லாம் போயிருக்குமோ?”

“உண்மைதான் பானு. அது சரி பானு. அதுக்குப் பிறகு ஒருமுறையாவது உமக்கு என்னைச் சந்திக்க வேண்டுமென்று நினைப்பே வரவேயில்லையா?”

“முதலிலை கொஞ்ச காலத்துக்குக் கஷ்ட்டமாகத்தானிருதிச்சுது. பிறகு கால ஓட்டத்திலை வளர வளர எல்லாமே ‘நார்மலு’க்கு வந்திட்டுது. இப்பிடி எல்லோருக்குமே பால்ய காலத்திலை அனுபவங்கள் வாறது பொதுவான விசயம் என்று பட்டது. சேகரன் சேரனின் ‘ஆட்டோகிராப்’ படம் பார்த்தீர்கள்தானே. அதைப் பார்த்தபோது மீண்டும் பழைய சம்பவங்களெல்லாம் ஞாபகத்திலை வந்தது. நீங்கள் அந்தப் படம் பார்த்தனீங்கள்தானே.. ”

“ஓமோம். நானும் பார்த்தனான்தான். ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலையும் நடக்கிறதைத்தானே அவரும் அப்படியே படத்திலை காட்டியிருக்கிறார். அதனாலைதான் அந்தப் படம் அந்த மாதிரி வெற்றி அடைஞ்சிருக்க வேண்டும்”

இவ்விதமாக அவர்களுக்கிடையில் அன்றைய உரையாடல் அமைந்திருந்தது. அதன் பிறகு மீண்டும் விரைவில் அவரவர் குடும்பத்தவருடன் சந்திப்பதாக முடிவு செய்து பிரிந்தார்கள். அவ்விதம் பிரிந்தபொழுது ஒருவருக்கொருவர் தங்களது மின்னஞ்சல்முகவரிகளையும் மாற்றிக் கொண்டார்கள். அப்பொழுது அவன் அவளிடம் கூறினான்: “பானு. அன்றைக்கு மட்டும் இப்ப இருக்கிறதைப் போலை இண்டர்நெட் மட்டும் இருந்திருந்தால் எங்களுக்கிடையில் ஏற்பட்ட பிரிவு ஏற்பட்டிருக்காதல்லவா?”

அவனது குரலில் தொனித்த ஏக்கத்தைக் கண்டு அவளது மனம் ஒருகணம் சங்கடப்பட்டது. “அப்பிடி நடந்ததும் ஒரு விதத்திலை நல்லதுதானே. இல்லா விட்டால் உங்களுக்கோ அல்லது எனக்கோ இப்பிடியொரு நல்ல துணை அமைந்திருக்குமா?”
என்று பதிலுக்கு அவ்ள கூறிச் சமாளித்தாள்.

4.

அன்றிரவு படுக்கையில் கணவன் ராமச்சந்திரனுடன் தனித்திருந்தபோது பானுவுக்கு அன்று சேகரனைச் சந்தித்தது ஞாபகத்திற்கு வந்தது. “ராம். ஒரு விசயம் தெரியுமே. இன்றைக்கு நான் சேகரனைச் சந்தித்தனான்”

“யாரு? உம்முடைய பால்யகாலத்து சிநேகிதன் சேகரனா?”

“ஓம் . அந்த சேகரன் தான். அவரும் இப்ப இங்கை கனடாவிலைதான் இருக்கிறார். மனுசி பிள்ளையுமாக நல்லாத்தானிருக்கிறார். நான் கனவிலை கூட நினைக்கவில்லை அவரை இங்கை இப்படி சந்திப்பேனென்று.”

“கன காலத்துக்குப் பிறகு சந்தித்திருக்கிறீர். ஒரு நாளைக்கு அவரைக் குடும்பமாகக் கூட்டி வாறதுதானே”

“அவரும் எங்களை தங்களது வீட்டிற்கு குடும்பமாக வரச்சொல்லி அழைப்பு விட்டிருக்கின்றார்?”

அவளது கணவன் ராமசந்திரன் தகவற் தொழில் நுட்பத் துறையில் புராஜக்ட் மானேஜராக பிரபல நிறுவனமொன்றில் பணி புரிந்து கொண்டிருந்தான். மிகுந்த பரந்த மனப்பான்மையும், அறிவும் வாய்ந்தவன. அதிகமாக வாசிப்பதில் ஆர்வமுள்ளவன். அவனது வாசிப்பும் அவனது விசாலமான பரந்த மனப்பான்மைக்கொரு காரணம். மனைவி தனது பால்யகாலத்து சிநேகிதனைச் சந்தித்த விசயத்தைக் கூறியபோது எந்தவிதத் தவறாகவும் அவனால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதனையிட்டு மிகவும் மகிழ்ச்சியே அடைந்தான். அவள் ஏற்கனவே திருமணமான புதிதில் தனது கடந்த காலக் கனவுகள் பற்றியெல்லாம் அவனுக்குக் கூறியிருந்தாள். அவளது அந்த ஒளிவு மறைவற்ற தன்மை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத விடயம்தானென்பது அவனது கருத்து.

5.

நாட்கள் சில ஓடி மறைந்தன. பானு வேலை தேடுவதில் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தாள். ஏற்கனவே செய்து கொண்டிருந்த வேலை போய் வேலையின்மைக்கான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றாள். இன்னும் சில வாரங்களில் அதுவும் நின்று விடும். அதற்கிடையில் இன்னுமொரு வேலையை எடுக்க வேண்டும். ஏற்கனவே செய்து கொண்டிருந்த ‘டாடா என்ரி’ வேலையைத்தான்தேடிக்கொண்டிருந்தாள். அன்றும் ஒரு காலைப் பொழுது. ராமச்சந்திரன் வேலைக்குச் சென்று விட்டான். பானு இணையத்தில் வேலை தேடிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுதுதான் ஓரதிசயம் நிகழ்ந்தது. வழக்கம்போல் அன்று வந்திருந்த மின்னஞ்சல்களை ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு வந்திருந்த மின்னஞ்சலொன்று ஆச்சரியத்தைத் தந்தது. சேகரனின் மின்னஞ்சல்தான். அதில் அவன் பின்வருமாறு எழுதியிருந்தான்:

– பானு. நான் நினைக்கவேயில்லை உம்மை மீண்டும் சந்திப்பேனென்று. உம்மை அனறைக்குப் பார்த்தபோது எப்படி சந்தோசமாக இருந்தது தெரியுமா? அதை வார்த்தைகளாலை விபரிக்கவே முடியாது. உண்மையைக் கூறப்போனால் அந்த வயதிலை நீர் பிரிஞ்சு போனபோது நான் எப்படியெல்லாம் கஷ்ட்டப்பட்டேன் தெரியுமா? என்னாலை நித்திரை கொள்ளக் கூட முடியவில்லை. தாடியும், மீசையுமாக எவ்வளவு காலம் திரிந்திருப்பேன் தெரியுமா? எப்படியாவது நீர் என்னை ஒருமுறையாவது தொடர்பு கொள்வீரென்று நினைத்துக் கொண்டேயிருந்தன். அந்த அளவுக்கு உம்மை நான் ஆழமாக விரும்பிக் கொண்டிருந்தேன். இத்தனை வருசமாக உம்மை எண்ணாமல் ஒரு நாளையும் நான் கழித்ததேயில்லை தெரியுமா? நான் மனதின் வலிமையை அதிகமாக நம்புறவன். என்னையும் மீறி உம்முடைய நினைவு ஒவ்வொரு நாளும் வந்ததிலிருந்து நீரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டடிருந்தீரென்று நான் நினைக்கிறன். இல்லாவிட்டால் இவ்வளவு தூரத்துக்கு உமது நினைவு அடிக்கடி வந்து வந்து என்னைக் கஷ்டப்படுத்தியிருக்க முடியாதென்று நினைக்கிறன். உண்மையைச் சொல்லும். இவ்வளவு காலத்திலை என்னைப்போல்தானே நீரும் என்னை ஒவ்வொருநாளும் நினைத்துக் கொண்டிருந்தீர்? –

இவ்விதமாக அவனது மின்னஞ்சல் அமைந்திருந்தது. அவளுக்கு அவனை நினைக்க நினைக்க பாவமாகவிருந்தது. அவள் சில கணங்கள் தன் கடந்த கால வாழ்வை எண்ணிப் பார்த்தாள். அவளது இளமைப் பருவத்தில் அவனைப் பிரிந்து போன சமயத்தில் சில காலம் அவனது நினைவு மனதில் அவ்வப்போது வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. காலப்போக்கில் அதுவும் மங்கி மறைந்து விட்டது. அதன்பிறகு அவள் வாழ்க்கையோட்டத்தில் அவனை மறந்தே போய் விட்டாள். எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கும் சாதாரணமானதொரு சம்பவமாக மட்டுமே அவள் அதனைக் கருதினாள். அதைவிட அதற்கு அவள் எதுவுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை. ஆனால் அவனது இந்த மின்னஞ்சலைப் பார்த்தால் அவன் அவளது நினைவால் இவ்வளவு காலமும் வருந்திக் கொண்டிருப்பதாக அல்லவா தெரிகிறது. ஒரு நாளைக் கூட தன்னைப் பற்றி நினைக்காமல் கழிக்க முடியவில்லை என்றல்லவா எழுதியிருக்கின்றான். இவ்வளவு தூரமா அவன் தன்னை விரும்பிக் கொண்டிருக்கின்றான்? அது மட்டுமா , நானும் அவனைப் போல் ஒவ்வொரு நாளும் அவனை நினைத்துக் கொண்டிருந்தேன் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறான். அவன் தன்னை விரும்பிய அளவுக்குத் தான் அவனை விரும்பவில்லையோ என்று தனக்குள் எண்ணிக் கொண்டாள். அவ்விதம் விரும்பியிருந்தால் அவளும் அல்லவா அவனைப்போல் அவனை அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். இந்நிலையில் சேகரனின் மின்னஞ்சலுக்குப் பதிலாகத் தான் அவனை அவ்வாறு நினைக்கவில்லையென்று எழுதினால் எப்படியிருக்கும்? அவன் எவ்வளவுக்கு வேதனை படக்கூடும். இந்த நினைவு தோன்றியதும் அவள் ஒரு முடிவு செய்து கொண்டாள். அதாவது உடனே சேகரனது மின்னஞ்சலுக்குப் பதிலேதும் எழுதுவதில்லை. அன்றிரவு கணவனுடன் இதுபற்றிக் கதைத்து விட்டே பதிலெழுதுவதாகவும் முடிவு செய்தாள். அதன்பிறகே அவளுக்கு நிம்மதியாகவிருந்தது. அதே சமயம் இந்த முதற் காதல் சேகரனை எவ்வளவு தூரம் ஆட்டிப்படைத்து விட்டிருக்கிறது என்றும் பட்டது.

6.

அன்றிரவு வேலை முடிந்து அவளது கணவன் ராமச்சந்திரன் வீடு திரும்பியதும் சந்தர்ப்பத்திற்காக அவள் காத்திருந்தாள். அவன் குளித்து, சாப்பிட்டு, ஓய்வாக இருந்த சமயமாகப் பார்த்து அவனை அணுகினாள்.

“என்னங்க. உங்களைத்தான்..” என்று நிறுத்தியவளை ஏறெடுத்து நோக்கினான் ராமச்சந்திரன். ‘இதென்ன புதுப்பழக்கம்’ என்றெண்ணியவனாக “என்ன பானு. என்ன விசயம். வழக்கத்திற்கு மாறாக இதென்ன புதுப் பழக்கம்” என்றான்.

அதற்குச் சிறிது நேரம் மெளனமாக நின்ற பானுமதி “உங்களுடன் சில விசயங்களைப் பற்றி மனம் விட்டுக் கதைக்க வேண்டும்” என்றாள்.

அதற்கவன் “தாராளமாகக் கதைக்கலாமே” என்றான். “இதுக்கென்ன தயக்கம்” என்றும் மேலும் கூறினான்.

“சந்திரன், இன்றைக்கு எனக்கு ஒரு இமெயில் சேகரனிடமிருந்து வந்திருந்தது?”

“என்னவாம், குடும்பத்தோடை வீட்டுக்கு விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கின்றாரா?”

“அப்படியெல்லாம் ஒன்றூமில்லை. வேண்டுமானால் ஒருமுறை நீங்கள் அவரது கடித்தத்தைப் படித்துப் பாருங்களேன்.”

“நல்லாயிருக்கு. உமக்கு வந்த கடிதத்தை நான் வாசிக்கிறதோ. எனக்கு அதை வாசிக்க வேண்டிய தேவையேயில்லை. நீரே சொல்லும். என்ன விசயம்?”

“சந்திரன், அவரது கடிதத்தைப் பார்த்தால், இவ்வளவு காலமாக அவர் என்னையே நினைத்துக் கொண்டிருருந்திருக்கின்றார் போலிருக்குது. ஒவ்வொரு நாளும் தான் என்னை நினைக்காமல் இருந்ததில்லையாம். நானும் அவரைப் போல் அவரை நினைத்திருக்கிறேனா என்று கேட்டிருக்கின்றார். என்ன பதிலை எழுதுவதென்றுதான் யோசனையாகவிருக்கு, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?”

இவ்விதம் தன் கணவனிடம் பானு கேள்வியொன்றைக் கேட்டுவிட்டு அவனது அதற்கான பதிலுக்காகக் காத்துரின்றாள்.

சிறுது நேர மெளனத்திற்குப் பிறகு ராமச்சந்திரன் பின்வருமாறு பதிலளித்தான்:

“நீரும் அப்படி அவரை நினைச்சிருக்கிறீரா?”

பானுவுக்கு அவனது அந்தக் கேள்வி சிறிது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அந்த ஆத்திரம் குரலில் தொனிக்க “இதென்ன கேள்வி சந்திரன். இவ்வளவு காலமாக என்னோடை வாழ்ந்திருக்கிறியள்.. இப்படியொரு கேள்வியைக் கேட்க உங்களாலை எப்படி முடியிறது?” அடுத்த கணமே தன் ஆத்திரத்தை எண்ணி சிறிது வியந்து கொண்டாள். கணவனின் கேள்வியில் ஆத்திரப்பட என்ன இருக்கிறதென்று பட்டது.

“அப்ப்டியென்றால் பேசாமல் நீர் அப்படி நினைக்கவில்லையென்று எழுதிவிடுவதுதானே.. பிறகென்ன கேள்வி.

“என்ன சந்திரன். உங்களிடம் போய் ‘அட்வைஸ்’ கேட்டேனே?. அவருக்கு அப்படி எழுதினால் அவர் மனது கஷ்ட்டப்படாதா? இத்தனை வருசத்திற்குப் பிறகு சந்தித்திருக்கிறம். அதுதான் யோசிக்கிறன்”

“அப்படியென்றால்.. அதைப் பற்றியே பெரிதாகப் பொருட்படுத்தாத மாதிரி அவரைக் குடும்பத்தினருடன் ஒரு நாளைக்கு எங்கட வீட்டிற்கு வரச்சொல்லி அழைப்பு விடுக்கிறதுதானே?

இவ்விதம் ராமச்சந்திரன் கூறவும் பானுமதிக்கும் அது நல்லதொரு ஆலோசனையாகவே பட்டது. அவ்விதமே சேகரனுக்குப் பதிலுமிட்டாள்.

7.

இன்னுமொரு நாள் வழக்கம்போல் பானு நண்பகற்பொழுதில் இணையத்தின் வாயிலாக வேலை தேடிக்கொண்டிருந்தாள். அப்பொழுது மீண்டும் சேகரன் இணையத்தினூடு எதிர்ப்பட்டான். இம்முறை மைக்ரோசாப்ட்டின் மெசஞ்சர் புறோகிறாமினூடு வந்தான். அவள் அதனை எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவனைத் தவிர்க்கவும் முடியவில்லை. அதனைத் தொடர்ந்து அவனுடன் உரையாட ஆரம்பித்தாள்.

இருவருக்குமிடையில் ஆங்கிலத்தில் நடைபெற்ற உரையாடலின் தமிழ் வடிவம் பின்வருமாறு அமைந்திருந்தது:

பானு: “என்ன சேகரன். நம்பவே முடியவில்லை. நாள் முழுக்க கம்யூட்டரே கதிதானா?”

சேகரன்: “பானு, உண்மையைச் சொன்னால்… உம்மைக் கண்ட நாளிலிருந்து ஒரு விதத்தில் நான் நானாகவில்லையென்றுதான் சொல்ல வேண்டும்.”

பானு: “சேகரன், நான் ஒன்று சொல்லுவேன் தவறாக நினைச்சுக்கொள்ளக் கூடாது.அப்பிடி நீங்கள் பிராமிஸ் பண்ணினால் நான் ஒன்று சொல்லுவன்.”

சேகரன்: “என்ன பானு சொல்ல வாறீர்?”

பானு: “நாங்கள் இன்னமும் சின்னப் பிள்ளைகளில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரியான அனுபவங்கள் வாழ்க்கையில் வருவது சாதாரண விசயம்தானே. அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.”

சேகரன்: ” நீர் சொல்லுவது சரிதான். ஆனால் உம்மை இன்னமும் என்னாலை மறக்கவே முடியவில்லை. நான் ஒன்று சொல்லுவன் நீர் கேட்பீரா?”

பானு என்ன சொல்லப்போகின்றானோ என்று எண்ணியவனாக “ம், சொல்லுங்கள்”

சேகரன்: “உண்மையில் நான் ஒரு பெரிய பிழையைச் செய்து போட்டேன். எனக்கும் என் மனுசிக்குமிடையிலை நீர் நினைக்கிறது மாதிரி பெரிய ஒட்டென்று எதுவுமில்லை.”

பானு: “நீர் என்ன சொல்லுறீர் சேகரன்?”

சேகரன்: ” உண்மைதான், நான் ஒரு பெரிய பிழையை விட்டிட்டேன். என்னைத்தான் கட்டுவேனென்று ஒற்றக்காலிலை நின்றுதான் கட்டினவள். அப்படி வந்தவளிடம் முதலிரவிலையே நான் உம்மை விரும்பின விசயத்தையும், உம்மை மறக்க முடியாமலிருக்கிற விசயத்தையும் சொல்லிப் போட்டேன். அன்றிலிருந்து இன்று வரையில் அடிக்கடி எங்களிருவருக்குமிடையில் சண்டை வராமலில்லை”

பானுவுக்கு அது பெரிய அதிர்ச்சியாகவிருந்தது: “சேகரன் நீர் செய்தது பெரிய மட வேலை. நீர் ஏன் அப்படி உம்முடைய மனைவியிடம் சொன்னனீர்? அவவுடைய மனசு எவ்வவு கஷ்ட்டப்பட்டிருக்கும். சே, என்ன ஆளப்பா நீர்?

சேகரன்: “என்ன நான் செய்தது பிழையென்றா நினைக்கிறீர் பானு?”

பானு சிறிது ஆத்திரத்துடன் “பின்னே, நீர் அப்படிச் சொல்லியிருக்கவே கூடாது.”

சேகரன்: “அப்பிடிச் சொல்லுவதன் மூலம் நான் அவளுக்கு உண்மையாக இருக்கத்தான் முயற்சி செய்தேன். அது பிழையா? எழுத்தாளர் டால்ஸ்டாய் கூட அப்படித்தான் தன்னுடைய மனைவியிடம் கூறினவராம்.. ”

பானு: “அப்படிச் சொன்னதால் டால்ஸ்டாய் சாதித்ததுதான் என்ன? கடைசி வரைக்கும் அவரது மனைவி அவரை அதற்காக மன்னிக்கவேயில்லையாம். தெரியுமா? கடைசியில் வயது போன காலத்தில் வீட்டை விட்டே ஓடிப்போய் எங்கோ தொலைவிலை புகைவண்டி நிலையமொன்றின் முன்னால் விழுந்து கிடந்து செத்துப்போனாராம் தெரியுமா?” அடுத்தது எங்களுக்கிடையிலை அப்ப இருந்தது முழுமையான காதலே இல்லை.. அதன் ஆரம்ப கட்டம்தானே. உண்மையான காதலாகவிருந்தால் நான் அவ்வளவு இலேசாக உம்மை மறந்திருப்பேனா?”

சேகரன் சிறிது மெளனத்திற்குப் பிறகு பதிலெழுதினான்: ” பானு நீர் வேண்டுமானால் மறந்திருக்கலாம். ஆனால் .. என்னால் அப்படி இலேசாக மறக்க முடியவில்லையே… இவ்வளவு காலமாக உம்மை ஒவ்வொரு நாளும் நினைத்திருக்கிறேனென்றால் .. அதை நீர் நம்புகிறீரா? இல்லையா?”

பானுவுக்கு அவன் நிலை சிறிது சங்கடத்துடன் கூடிய கவலையினைத் தந்தது.

சேகரன்: “பானு, எனக்கு நீர் ஒரு பிராமிஸ் செய்து தரவேண்டும்..”

பானு: “என்ன ..?”

சேகரன்: “இவ்வளவு காலம் கழிச்சு உம்மை சந்தித்திருக்கிறேன். எங்கடை இருவரது வாழ்க்கையும் வேறு திசைகளில் போய் விட்டது..  இந்த நிலையிலை எங்களுக்கு எங்கட குடும்பம்தான் முதலிலை முக்கியம்..”

பானுவுக்கு அவன் அவ்விதம் எழுதவும் உண்மையிலேயே பெருமிதமாகவிருந்தது: “சேகரன், உங்களை நினைக்கையிலை உண்மையிலை எனக்குப் பெருமையாகத்தான் இருக்குது. யூ ஆர் கிரேட் சேகரன்”

சேகரன்: “தாங்க் யூ பானு. தாங்க் யூ . ஆனா.. ”

பானு: ” என்ன ஆனா.. ”

சேகரன்: “உம்மை நான் இனியும் சந்திக்காமல் கூட இருப்பேன். எத்தனை வருசமென்றாலும். ஆனா.. உம்மை மறந்து மட்டும் என்னால் இருக்க முடியாது. அவ்வளவு தூரத்துக்கு நாளும் பொழுதுமாக உம்மையே நினைத்து, நினைத்து உருகி, கனவு கண்டு என் ஆழ் மனதுக்குள்ளை நீர் போய் குடியிருந்து விட்டீர். இவ்வளவு நாளும் இருந்ததைப் போலை இனியும் நீர் அப்படியே இருந்தி விடுவதாலை யாருக்குமே எந்தவிதப் பாதிப்பும் இல்லையல்லவா?”

பானு அவன் கூறுவதை வாசித்தபடியே அவன் தொடர்ந்தும் என்ன கூறப்போகின்றானோ என்று கணினித் திரையினையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனே தனது ‘சாட்’ உரையாடலை தொடர்ந்துகொண்டிருந்தான்: “இந்தப் பிறப்பில்தான் உம்முடன் சேருவதுக்கு எனக்கு கொடுத்து வைக்கவில்லை. நான் கனவிலை கூட உம்மை திரும்பவும் சந்திப்பனென்று நினைச்சது கூட இல்லை. ஆனால் அப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதுக்கு எங்களைப் படைத்த சக்திக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அதனால்….”

பானு: “அதனால் ..”

சேகரன்: “வாராது வந்த மாமணி போலை நீர் திரும்பவும் என்ற வாழ்க்கையிலை எதிர்ப்பட்டிருக்கிறீர். உம்மை திரும்பவும் இழக்க நான் விரும்பவில்லை.. அதனால்…..”

பானு: “அதனால்….. ”

சேகரன்: “மாததிற்கு ஒருமுறையோ இல்லை வருசத்துக்கு ஒருமுறையோ நான் உம்முடன் இதைப் போலை உரையாடவேண்டும். நீர் உம்முடைய வாழ்க்கையிலை சந்தோசமாக இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை. விருப்பம். வேண்டுதலெல்லாம். அதே சமயம்.. உம்முடன் அவ்வப்போது இப்பிடிக் கதைப்பதால் எனக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். நீர் தான் எனக்கு இந்தப் பிறப்பிலை கிடைக்கவில்லை. இருந்தாலும் இப்பிடியொரு சந்தர்ப்பமாவது உம்முடன் கதைக்க ஏற்படுகிறதே..”

இந்தச் சமயம் பார்த்து ‘பவர் கட்’டாகியது. கணினியும் ‘பவர்’ இழந்து மீண்டும் ‘ஆன்’ ஆகி வலுப்பெற ஆரம்பித்தது.

8.

அன்றிரவு கணவன் ராமச்சந்திரனிடம் தனக்கும், சேகரனுக்குமிடையில் நடைபெற்ற ‘சாட்’ உரையாடல் பற்றியும், அவனது விருப்பம் பற்றியும் குறிப்பிட்டாள் பானுமதி. அதற்குக் கணவன் என்ன கூறப்போகின்றானோ என்று அவனையே ஆவலுடன் நோக்கி நின்றாள்.

ஆனால் ராமச்சந்திரன் உடனே பதிலெதனையும் கூறவில்லை. சிறிது நேரம் மெளனமாகவிருந்தான். வழக்கமாக உடனேயே தன் கருத்துகளைக் கூறும் பழக்கமுள்ள தன் கணவனின் மெளனம் அவளுக்கு சிறிது வியப்பினையும் கூடவே ஒருவித அதிர்ச்சிகரமான உணர்வினையும் தந்தது. அந்த உணர்வுகளுடன் அவள் தன் கணவனைப் பார்த்து “என்ன சந்திரன். பதிலைக் காணோமே” என்று கேட்டாள்.

அதற்கும் சிறிது நேரம் மெளனம் காத்த ராமச்சந்திரன் “பானு, நான் கூறுவதைக் கேட்டு என்னைத் தவறாக எண்ணிவிட மாட்டீரென்று எண்ணுகின்றேன்…” என்றான்.

“என்ன சந்திரன், இவ்வளவு காலம் என்னுடன் வாழ்ந்தபிறகு இப்படியொரு கேள்வியா?”

“எனக்கென்னவோ சேகரன் நடத்தை வரம்பு மீறிப் போவதுபோல் படுகிறது. இளம்பருவத்து உணர்வுகள் இவ்வளவுதூரம் அவனை ஆட்டிப்படைக்கிறது அவ்வளவு நல்லதாக எனக்குப்படவில்லை. இளம்பருவத்துணர்வுகளை இன்னும் அவன் இவ்வளவுதூரம் பீடித்திருப்பது எனக்கு நல்லதாகத்தெரியவில்லை. இந்த நிலையில் தொடர்ந்தும் நீர் சேகரனுடன் பழகுவதைத் தவிர்ப்பதே நல்லதுபோல்படுகிறது”

அவன் இவ்விதம் கூறவும் பானுமதிக்குச் சிறிது ஆத்திரமேற்பட்டது. “என்ன சந்திரன், உங்களுக்கு என்னிடம் நம்பிக்கையில்லையா? என்னை நீங்கள் அறிந்துகொண்டது இவ்வளவுதானா?” என்றவள் அவனுடன் தொடர்ந்தும் பேசப்பிடிக்காமல் போய்த் தனியாகப் படுக்கையில் சாய்ந்துகொண்டாள். அவளைத்தொடர்ந்து வந்த ராமச்சந்திரன் எவ்வளவு கூறியும் அவளால் அவன்மீதான தன் ஊடலைக் கைவிட முடியவில்லை.

இவ்விதம் ஆரம்பித்த அவளுக்கும் அவள் கணவனுக்குமிடையிலான ஊடல் மேலும் சில நாட்களாகத் தொடர ஆரம்பித்தது.

ராமச்சந்திரன் எவ்வளவோ முயற்சி செய்தும் அவள் தன் கோபத்தை மாற்றவேயில்லை. அவனுக்கு பானுவைப் பற்றித் தெரியும். அவளொரு முடிவை எடுத்துக்கொண்டால் அவ்வளவுதான். உடும்புப் பிடியாக அதனைப் பிடித்துக்கொள்வாள். தானாக அந்த முடிவு தவறென்று உணர்ந்துகொள்ளும்வரையில் அவள் தன் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டாள். அதுவரையில் விட்டுப் பிடிப்பதைத்தவிர வேறு வழியில்லை.

9.

நாட்கள் மேலும் சில ஓடி மறைந்தன. பானுமதி கணனிப் பக்கமே செல்லவில்லை. இணையத்தின் வாயிலாக மீண்டும் சேகரன் வந்துவிடுவானேயென்பதும் முக்கியமானதொரு காரணம். இருந்தாலும் ராமச்சந்திரன் தன்மேல் சந்தேகம் கொள்வதுபோன்றதொரு தொனியில் அவ்விதம் கூறியிருக்கக் கூடாதென்று பட்டது. என்னிடம் உண்மையிலேயே சந்தேகம் இல்லாமலிருந்தால் அவன் சேகரனுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டுமென்று கூறியிருப்பானா? சேகரன் என்ன நினைத்தாலும் என்ன? என்னை அவை ஒருபோதுமே பாதிக்கப்போவதில்லையென்பதை ஏன் அவரால் உணர்ந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. அதனைத்தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தான் சேகரனின் மின்னஞ்சல், ‘சாட்’ பற்றியெல்லாம் எந்தவித ஒளிவு மறைவில்லாமல் அவனிடம் கூறிய பின்னரும் கூட அவனாலேன் அவளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உண்மையில் அவன் “பானு, சேகரனின் நிலை தவறானதென்பதை அவனுக்கு விளக்கிப் பிரிவதுதான் நல்லது. அல்லது பிரிவதென்பதுகூட தேவையற்ற ஒன்று. இளம்பருவது உணர்வுகளைப் பெரிதாக எடுத்து வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்ளக்கூடாதென்பதை அவனுக்கு உணர்த்தவேண்டும்” என்று கூறியிருந்தால் அவள் எவ்வளவுதூரம் மகிழ்ந்திருப்பாள்.

10.

அன்று வழக்கம்போல் ராமச்சந்திரன் வேலைக்குப் போய்விட்டிருந்தான். அவர்களுக்கிடையிலான ஊடல் ஆரம்பித்து வாரம் ஒன்றினைக் கடந்து விட்டிருந்தது. அன்று நண்பகல் நீண்ட நாட்களுக்குப் பின் அவளது சிநேகிதி வசந்தா வந்திருந்தாள். அவளுக்கும் அவள் கணவனுக்குமிடையில் இவ்விதமானதொரு ஊடல் ஆரம்பித்திருக்குமிந்த சமயத்தில் வசந்தா வந்திருந்ததும் நல்லதாகவே பட்டது. அவளிடம் மனம் விட்டு தன் நிலைமையினை விபரித்தாள்.

“வசந்தா, எனக்கென்னவென்றால் சந்திரன் இப்படி என்னைச் சந்தேகப்பட்டிருக்கவே கூடாது. அப்படி அவர் சந்தேகம் கொண்டிருப்பதுபோன்ற தொனியில் என்னிடம் அவர் அவ்விதம் கூறியிருக்கக் கூடாது.”

“பானு, எனக்கென்னவென்றால் நீ சொல்வது சரியாகப் படவில்லை. நீ சந்திரனை இவ்வளவு குறைவாக எடை போடுவது அவ்வளவு சரியில்லை.”

“உண்மையிலேயே என்னை அவர் நம்புபவராகவிருந்தால் , நான் அவரிடம் எந்தவித சம்பவங்களையும் மறைக்காமல் கூறியிருந்தும்கூட, அவர் என்னைச் சேகரனுடன் பழகுவதைத் தவிர்க்கும்படி கூறியிருப்பாரா? அதனைத்தான் என்னால் தாங்கமுடியவில்லை. உண்மையில் சேகரன் கூட என்னுடன் இதுவரையில் எல்லைமீறிப் பழகவில்லை. என்னை அவனால் மறக்கமுடியவில்லை என்பதை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தியிருந்தான். இவ்வளவு காலமாக என்னை நினைக்காமல் ஒரு நாளைக் கூட அவன் கழித்ததில்லையென்று கூறியிருந்தான். ‘மாததிற்கு ஒருமுறையோ இல்லை வருசத்துக்கு ஒருமுறையோ நான் உம்முடன் இதைப் போலை உரையாடவேண்டும். நீர் உம்முடைய வாழ்க்கையிலை சந்தோசமாக இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை. விருப்பம். வேண்டுதலெல்லாம். அதே சமயம்.. உம்முடன் அவ்வப்போது இப்பிடிக் கதைப்பதால் எனக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். நீர் தான் எனக்கு இந்தப் பிறப்பிலை கிடைக்கவில்லை. இருந்தாலும் இப்பிடியொரு சந்தர்ப்பமாவது உம்முடன் கதைக்க ஏற்படுகிறதே..’ என்றுதான்

கேட்டிருந்தான். இது பெரிய தவறாக எனக்குப் படவில்லை”

இவ்விதம் பானு கூறவும் அதனைக் கேட்டவண்ணமிருந்த வசந்தா மேலும் சிறிது நேரம் மெளனம் காத்தாள்; பின் கூறினாள்: “நீர் சொல்வது ஒருவிதத்தில் தர்க்கத்திற்குச் சரியாக இருக்கலாம். ஆனால் சேகரனை நினைத்துப் பாரும். அவனை நம்பி அவனது மனைவி, மகள் எல்லோரும் இருக்கிறார்கள். போதாதற்கு சேகரனும் தன் மனைவியிடம் உம்மை விரும்பியதைப் பற்றிக் கூறியிருக்கின்றான். அதன் காரணமாகவே இவ்வளவு வருடங்களாக மனைவியுடன் அவ்வப்போது சண்டை போடுவதாக அவனது வாழ்க்கை போவதாகக் கூறியிருந்தீர். இந்த நிலையில் இந்த நட்பை விட உங்கள் இருவரும் வாழும் திருமண வாழ்க்கைதான் என்னைப் பொறுத்தவரையில் முக்கியமாக எனக்குப் படுகிறது. திருமணம் என்பது அடிப்படையில் ஒருவித சட்டரீதியான ஒப்பந்தமும்கூடத்தான். அந்த ஒப்பந்தம் முறிந்துவிடாமல் இருக்கவேண்டுமானால் இத்தகைய உணர்வுகளின் தாக்கத்திலிருந்தும் சிலநேரங்களில் மீளத்தான் வேண்டும். சேகரன் உம்மை விரும்புவது அவனது உரிமை. அவனது நல்ல வாழ்வுக்காக வேண்டுவது உமது உரிமை. ஆனால் அதே சமயம் சந்திரன் கூறுவதுபோல் இருவரும் பழைய ஞாபகங்களுடன் பழகுவதென்பது எனக்கும் நல்லதாகப் படவில்லை. இருவரும் நண்பர்களாக இருக்கவேண்டுமென்று சேகரன் விரும்பியிருந்தால் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவன் உம்முடன் கதைப்பதால் ஆறுதலாக இருக்குமென்று வேண்டுகின்றான். பழைய உறவின் அடிப்படையில் அந்த வேண்டுகோளை அவன் விடுக்கிறான். அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் ஒன்று கேட்கிறேன். ஒளிவு மறைவில்லாமல் பதில் கூறுவீரா?”

பானு அதற்குச் சம்மதத்திற்கடையாளமாகத் தலையாட்டினாள். வசந்தாவே தொடர்ந்தாள்: “சந்திரன் திடீரென ஒருநாள் வந்து இதே மாதிரியொரு கதையினைக் கூறி, அவரது முன்னாள் காதலியுடன் தொடர்ந்து உறவினைப் பேணப்போவதாகக் கூறினால் ஏற்றுக்கொள்வீரா?”

வசந்தாவின் இந்தக் கேள்வி பானுவைப் பலமாகவே தாக்கியது. ஒருபோதுமே தன்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றுபட்டது. இதுவரை தான் ஏன் அந்தக் கோணதில் சிந்திக்காமல் போய் விட்டோமென்று பட்டது. மனம் இந்த விடயத்தில் தெளிவொன்றை அடைந்ததுபோன்றதொரு உணர்வு ஏற்பட்டது. இணையத் தொழில்நுட்பம் மனிதர்களுக்கிடையிலான எல்லைகளைக் குறுக்கி விட்ட அதே சமயம், உறவுகளுக்கிடையிலும் பல்வேறு வகைகளில் இது போன்ற உறவுச் சிக்கல்களையும் உருவாக்கி விடுவதாகவே அவள் உணர்ந்தாள்.

வசந்தா கூறினாள்: “பானு, பிள்ளைக்காதலென்பது பிள்ளைக்காதலாகவே இருந்து விடவேண்டும். பால்ய காலத்து சம்பவங்களை இன்றைய காலகட்டத்திலிருந்து நினைத்து மகிழ்வதைப்போல், பிள்ளைக் காதலையும் எண்ணி மகிழ்வதுடன் நிறுத்திக்கொள்ளவேண்டும். அந்த காலகட்டத்தில் இதுபோன்ற உறவுகள், உணர்வுகள் ஏற்படுவதெல்லாம் மனிதர்களின் வாழ்க்கை வளர்ச்சியின் பரிணாமப் படிக்கட்டுக்களாகத்தான் கருத வேண்டும்.”

இவ்விதமாக தோழிகளிருவருக்குமிடையில் உரையாடல் நெடுநேரமாக நடந்தது. வசந்தா போய் நெடுநேரமாகியும் பானுவின் சிந்தையில் அவள் கூறிய விடயங்களே ஞாபகத்திற்கு வந்தவண்ணமிருந்தன. ‘பிள்ளைக் காதலை’ப்பற்றி எவ்வளவு இலகுவாக அவள் விளக்கிவிட்டாள். கடந்த ஒரு வாரமாகவே கணவனுடன் ஊடியிருந்ததை எண்ணிப் பார்த்தபோது அது சிறுபிள்ளைத்தனமாகவே பட்டது. அன்று வேலை முடிந்து வரும் கணவனை நினைத்து மனம் ஏங்கத் தொடங்கியது. ஊடலிற்குப் பின் கூடுவதிலிருக்கும் இன்பத்தை எண்ணியவளாகக் காத்திருப்பதிலும் எல்லையற்றதோரின்பம் இருப்பதாகவே பட்டது. முதிர்ந்த காதலின் வெற்றியது.

– யாவும் கற்பனை –

மின்னஞ்சல்: ngiri2704@rogers.com

நன்றி: திண்ணை.காம்