சோழியனின் ‘கறுப்பு ஜூலை 1983’ பற்றிச் சில வார்த்தைகள் …

1983 கலவரக் காட்சி (பொரளை). இப்புகைப்படத்தை எடுத்தவர் 'அத்த' என்னும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சிங்களப் பத்திரிகை நிறுவனத்திற்காகப் பணிபுரிந்தவரான சந்திரகுப்த அமரசிங்க என்னும் சிங்களவராகும். இவரே பொரளையில் தமிழர் ஒருவரைச் சிங்களக் காடையர்கள் நிர்வாணமாக்கிக் கொல்லும் காட்சியினையும் புகைப்படமாக எடுத்தவர்.சோழியனின் கருப்பு ஜூலை 1983 பற்றிய கட்டுரை, குறிப்பாக இராமகிருஷ்ண மண்டபத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றிய அவரது நினைவு கூர்தல் , அன்றைய நினைவுகளை மீண்டுமெழுப்பின. உண்மையில் காடையர்கள் உள்ளே நுழைந்ததும், உள்ளே அகப்பட்டிருந்த மக்களெல்லோரும் ஒவ்வொரு மாடியாக , மொட்டை மாடி வரைக்கும் ஓடி ஒளிந்தார்கள். சிலர் பல்வேறு மாடிகளிலுள்ள குளியலறைகள் / மலசலகூடங்களிற்குள்ளும் ஒளிந்தார்கள். மொட்டை மாடி வரையில் சென்றவர்களைத் துரத்தியபடி காடையர்கள் தொடர்ந்தும் முன்னேறி வந்தார்கள். மொட்டை மாடியை அடைந்தவர்களுக்கு வேறெங்கும் செல்வதற்கு வழியில்லை. அங்கிருந்த தண்ணீர் தாங்கிகளுக்கும், தளத்திற்குமிடையிலிருந்த இடைவெளிக்குள் பெண்கள், குழந்தைகள் புகுந்துகொண்டார்கள். ஏனையவர்கள் மொட்டை மாடியில் நீட்டிக்கொண்டிருந்த ‘காங்ரீட்’ தூண்களின் பின்னால் தங்களை மறைப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்கள்.

இவ்விதமான சூழலில் மொட்டை மாடிக்கு வந்து எட்டிப் பார்த்த காடையனொருவன் ‘உத்தா இன்னவா’ என்று கத்தியது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அதன் பின்னர் காடையர்கள் சிலர் மொட்டை மாடியை நோக்கிய படிக்கட்டினருகில் காவலாக நின்று கொள்ள, ஒவ்வொருவராக கீழுறங்கத் தொடங்கினோம். அவ்விதம் இறங்கும் பொழுது இறங்கியவர்கள் கைகளில் வைத்திருந்த உடமைகளை, பணத்தையெல்லாம் அக்காடையர்கள் பிடுங்கிக் கொண்டார்கள். ஒரு தமிழர் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை வைத்திருந்தவர் , அவற்றை இழந்தார்.

அச்சமயம் இராமகிருஷ்ண மண்டபத்தின் வெளியில், இராமகிருஷ்ண வீதியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பொலிஸார், காடையர்கள் சிலர் மண்டபத்தை எரிப்பதற்கு முயன்றதைக் கண்டபொழுது உள் இறங்கினார்கள். உடனே காடையர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறினார்கள். அதன் பின்னரும் காடையர்கள் வீதிகளில் குழுமி நின்றார்கள். இந்நிலையில் மண்டபத்தில் அகப்பட்டிருந்த மக்களில் சிலர் அருகிலிருந்த வீதிக்கப்பால் அமைந்திருந்த ‘இராமகிருஷ்ண மிஷன்’ சுவாமிகளின் இல்லத்தினுள் தஞ்சமடைந்தார்கள். அவ்விதம் தஞ்சமடைந்தவர்களில் நானும் ஒருவன். இதற்கிடையில் என்னுடனிருந்த நண்பன் இராமகிருஷ்ண மண்டபத்திற்குள் அகப்பட்டுக்கொண்டான். சுவாமிகளின் இல்லத்திலிருந்து மண்டபத்திற்குள் மாலை வரையில் செல்ல முடியாதவாறு காடையர்கள் இடையிலிருந்த வீதியில் நின்று கொண்டார்கள். ஒரு சமயம் சுவாமிகளின் இல்லத்திற்குள்ளும் புகுவதற்கு காடையர்கள் முயன்றார்கள். இச்சமயத்தில்தான் மதகுரு தனது இல்லத்தின் விறாந்தையிலிருந்த சாய்வு நாற்காழியில் அமர்ந்தபடி , தன்னைக் கொன்று விட்டு உள்ளே செல்லுங்கள் என்னும் தோரணையில் அமர்ந்து கொண்டார். அச்சமயம் வீட்டினுள் நுழைவதற்கு முயன்ற காடையர்கள் என்ன நினைத்துக் கொண்டார்களோ , தம் முடிவை மாற்றிக் கொண்டு பின் வாங்கினார்கள். இதனைத்தான் சோழியன் குறிப்பிட்டிருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். காடையர்களில் புத்தமதகுருவும் இருந்திருக்கலாம். அப்போதிருந்த சூழலில், மதகுருவின் இல்லத்தின் ஜன்னலொன்றின் வழியாக சம்பவங்களை அவதானித்துக் கொண்டிருந்த என்னால் காடையர்களைத்தான் அவதானிக்க முடிந்தது. எனது 1983 கலவர அனுபவங்கள் சிலவற்றை எனது ‘அமெரிக்கா (சுவர்களுக்கப்பால்)’ என்னும் நாவலில் அத்தியாயம் மூன்று : சூறாவளி, அத்தியாயம் நான்கு: மதகுருவின் துணிவு’ ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளேன். ‘பதிவுகள்’ தளத்தில் அந்நாவலை முழுமையாக வாசிக்கலாம். இன்னுமொரு நாவல் ‘1983’ கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ சஞ்சிகையில் 10 அத்தியாயங்கள் வரையில் தொடராக வெளிவந்து முடிவு பெறாமலேயே நின்றுபோனது. அதன் பின்னர் நானும் நண்பர்கள் பலரும் – பலர் மொறட்டுவைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள். அவர்களிலொருவரான நண்பர் தர்மகுலராஜா கனடாவில் தற்போது வசிக்கின்றார். கட்டடக்கலைஞரான அவர் இங்கு தனது துறையினை மாற்றி, மின்பொறியியலாளராகப் பணி புரிகின்றார். – அகதி முகாமில் இறுதிவரை தொண்டர்களாகப் பணிபுரிந்ததையும், ‘சிதம்பரம்’  கப்பலில் யாழ்ப்பாணம்  திரும்பியதையும்  மேற்படி சோழியனின் கட்டுரை நினைவு கூரவைத்தது .

இப்பொழுதும் இன்னுமொரு விடயமும் ஞாபகத்திற்கு வருகிறது. அவரொரு மலையகத்தைச் சேர்ந்த பெண்மணி. மருத்துவராகவிருக்க வேண்டும். பெயர் ஞாபகமில்லை. ஆரம்பத்தில் பம்பலபிட்டி இந்துக் கல்லூரியில் அகதிகள் தங்கியிருந்த சமயத்தில், ஆரம்ப நாட்களில் எந்தவித உணவு விநியோகமும் இருந்திருக்கவில்லை. பின்னர் அப்பொழுது கடற்றொழில் அமைச்சராகவிருந்த அத்துலத்முதலி அகதிகளை வந்து பார்த்த அன்றுதான் (கப்பற் கூட்டுத்தாபனத்தாலென்று நினைக்கின்றேன்) உணவுப் பொதிகள் முதன்முறையாக வழங்கப்பட்டன. அன்றைய சூழலில் அகதிகள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதொரு சூழ்நிலையில் இருந்தார்கள். போதாதற்கு அவ்வப்போது காடையர்கள் லொறிகள் போன்ற வாகனங்களில் முகாமைச் சுற்றியுள்ள வீதிகளால வந்து வந்து நோட்டமிட்டுச் சென்று கொண்டிருந்தார்கள். எந்நேரமும் அகதி முகாமுக்குள்ளும் புகுந்து விடலாமென்ற நிலை. குறிப்பாக கொழும்பில் புலிகள் வந்து விட்டதாக வதந்திகள் கிளம்பிய அன்று, தத்தமது இருப்பிடங்களுக்குச் சென்ற அகதிகள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அன்றைய தினம் முகாமைச் சுற்றிக் காடையரின் நடமாட்டமும் அதிகமாகவிருந்தது. அத்தகைய சூழலில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அகதி முகாமுக்கு அமைச்சர்கள் வரும்பொழுது சிலர் உணர்ச்சிவசப்பட்டுக் கூக்குரலிட்டு எதிர்ப்பினைத் தெரிவிக்க முயன்றார்கள். அந்த நேரத்தில் அந்தப் பெண்மணியின் உறுதியான வேண்டுகொளூக்குச் செவிமடுத்து அமைதி திரும்பியது. அதன் மூலம் ஏற்படவிருந்த எதிர்விளைவுகள் தடுக்கப்பட்டன. அகதிகளுக்கு அந்தப் பெண்மணி அதுவரையில் ஆற்றிய தன்னலம் கருதாத சேவையின் காரணமாக அகதிகள் அனனவரும் அவர்மேல் பெரிதும் மதிப்பு வைத்திருந்தார்கள்; அவரது சொல்லுக்குக் கட்டுப்படுபவர்களாகவுமிருந்தார்கள். பின்னர்தான் தெரியவந்தது மேற்படி சம்பவம் நிகழ்ந்த அன்று காலைதான், அவரது கணவர் கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சமயம் இறந்திருக்கின்ற விசயம். அதனை மறைத்து வைத்துக் கொண்டு, அந்த மலையகப் பெண்மணி அகதிகளுக்கு ஆற்றிய பணியினை உண்மையிலேயே பாராட்டத்தான் வேண்டும்.

பின்னர் பெரும்பாலான அகதிகள் பம்பலபிட்டி சரஸ்வதி மண்டபத்திற்கு மாற்றப்பட்டு அதுவே பிரதான அகதி முகாமாக விளங்கியது. அங்கு சந்தித்த அகதிகள் பலரின் அனுபவங்கள் நெஞ்சை உலுக்குவன. அதில் ஒரு சிறுமியின் அனுபவம் பயங்கரமானது. அச்சிறுமிக்குப் பன்னிரண்டு வயதுதானிருக்க வேண்டும். நுகேகொடையில் வசித்து வந்த குடும்பம். தகப்பன் ஒரு பொறியிலாளர். கலவரத்தில் முழுக் குடும்பமும் கண் முன்னாலேயே படுகொலை செய்யப்பட்டதைப் பார்த்து, எப்படியோ தப்பிப் பிழைத்து, வந்திருக்கின்ற சிறுமி. சம்பவங்கள் மிகவும் விரைவாக நடந்து முடிந்திருந்த சூழலில், விளைவுகளின் யதார்த்தத்தை, தீவிரத்தை கிரகித்துக் கொள்ள முடியாத மனப்போக்குடன் விளங்கினாள்.

அங்கிருந்த அகதிகள் பல்வேறு சமூகப் பின்னணியிலிருந்து வந்திருந்தவர்கள். குறிப்பாகக் கொழும்பிலேயே வாழ்ந்து வந்த தமிழர்கள் பலர் முதன் முறையாக அகதிகளாக வந்திருந்தார்கள். ஆரம்பத்தில் முகாம் வாழ்க்கை அவர்களால் தாங்க முடியாததாகவிருந்தது. அங்கு இவ்விதம் ப்லவேறு சமூகப் பின்னணியிலிருந்து வந்திருந்த அகதிகள் நடந்து கொண்ட விதம் பற்றிய விமர்சனமும் சோழியனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது பற்றி முழுநீளக் கட்டுரையொன்றையே எழுதலாம்.

இவை போன்ற 1983 கலவரம் பற்றிய பல்வேறு நினைவுகளையும் சோழியனின் மேற்படி கட்டுரை எழுப்பி விட்டன. 1983 ஜூலை தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றின் முக்கியமானதொரு திருப்புமுனையென்றால் முள்ளிவாய்க்கால் மே 2009 இன்னுமொரு திருப்புமுனை. சோழியனின் கட்டுரையில் கலவரக் காலத்தில் உதவி புரிந்த சிங்களவர்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. காமினி அம்மீமனவின் ( Gamini Akmeemana )  ‘கறுப்பு ஜூலை 1983 ஏற்படுத்திய மன அதிர்ச்சியினைப் பிடித்துக்கொண்ட புகைப்படம்’ ( The photograph that captured the trauma of Black July 1983 ) என்னும் கட்டுரையில் கறுப்பு ஜூலையின் மிகவும் முக்கியமான புகைப்படமான தமிழரொருவர் காடையர்களால நிர்வாணமாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுவதற்குமுன்பு நிலவிய நிலைமையினைப் பிரதிபலிக்கும் புகைப்படத்தினை எடுத்த சிங்களவரான ‘சந்திரகுப்த அமரசிங்க’ வைப் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘அத்த’ என்னும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சிங்களச் செய்திப்பத்திரிகைக்காகப் பணியாற்றிய அவரது பணி போற்றுதற்குரியது. கறுப்பு ஜூலை 1983இல் பொரளையில் நடைபெற்ற கலவரக் காட்சிகளைப் பிரதிபலிக்கும் அவரது புகைப்படங்கள் வரலாற்று ஆவணங்கள். முள்ளிவாய்க்கால் படுகொலைகளைச் சித்திரிக்கும், யுத்தகுற்றங்களுக்கு ஆதாரங்களாக விளங்கும் காணொளிக் காட்சிகளை வழங்கியவர்களும் சிங்களவர்களேயென்பதையும் இச்சமயத்தில் நினைவு கூர்வது நல்லது.

அண்மைக்காலமாக பல சிங்கள எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்விமான்களெனப் பலர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி, யுத்த அகதிகள் பற்றி , மனப்பூர்வமாக வேதனைப்பட்டு கட்டுரைகள் எழுதிவருவதைப் பார்க்கின்றோம். இவையெல்லாம் தமிழ் மக்கள் சிங்கள முற்போக்குச் சக்திகளுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளை உள்வாங்கிய, மனித நேயம்மிக்க சிங்கள மக்களுடன், மனித உரிமைகளுக்காகப் பாரபட்சமற்றுக் குரல் கொடுக்கும் சிங்கள அமைப்புகள், ஊடகங்கள், மற்றும் பத்திரிகையாளர்களுடன் இணைந்து தமது உரிமைக்கான அரசியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கின்றன.

ngiri2704@rogers.com